200 சதவீத எனர்ஜி கமல்!



புன்சிரிப்பும் பூங்கொத்துகளுமாக வாழ்த்துகளால் நிரம்பியிருக்கிறது ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் அலுவலகம். பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘செவாலியே’ அவருக்குக் கிடைத்திருக்கிறது. கால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஓய்வெடுத்து வந்த கமலுக்கு இந்த விருது பெரும் உற்சாகத்தையும், புத்துணர்வையும் அளித்திருக்கிறது. ‘‘இனி நான் செய்ய வேண்டிய கலை, இலக்கிய பணிக்கான ஊக்கியாகவே இவ்விருதைக் கருதுகிறேன்’’ என கமலும் நெகிழ்ந்திருக்கிறார்.

கடந்த மாதம் தனது அலுவலகத்தின் மாடிப்படியில் இருந்து  இறங்கும்போது கால் தவறி விழுந்ததில் கமலுக்கு கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே பிரபல மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, அறுவை சிகிச்சைக்குப் பின் வீடு  திரும்பிய கமலை திரையுலகினர் நலம் விசாரிக்க விரும்பினார்கள். ‘நான் நலமுடனே இருக்கிறேன். சீக்கிரம் நானே  அனைவரையும் சந்திக்கிறேன்’ என்று சொல்லிவிட்டார் அவர். இந்த இடைவெளியில்தான் செவாலியே விருது! நடிகர்கள் சிவகுமார், பிரபு, சூர்யா, கார்த்தி, இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், ‘தூங்காவனம்’ ராஜேஷ் செல்வா, நடிகர் சங்கம் சார்பில் விஷால் உள்ளிட்ட நிர்வாகிகள் என கோலிவுட்டே திரண்டு வந்து வாழ்த்து பொக்கே கொடுத்தது.

‘‘கமலுக்கு செவாலியே கிடைச்சது சந்தோஷமா இருக்கு. கலைக்காக தங்களை அர்ப்பணித்து வாழ்ந்து வரும் கலைஞர்கள் என உலக அளவில் கணக்கெடுத்தால், நாலு பேர் வருவார்கள். அதில் கமலும் ஒருவர். இந்திய அளவில் பார்த்தால் கமல் மட்டுமே அந்த பெருமைக்குரியவராக இருக்கிறார்’’ - கமலை நேரில் சந்தித்து வாழ்த்திய சந்தோஷத்துடன் பேச ஆரம்பித்தார் சிவகுமார்.

‘‘ஒரு கலைஞனை கலைஞனாக மட்டுமே பார்க்க வேண்டும் என்று எண்ணுபவன் நான். கமலை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரது உழைப்பு, டெடிகேஷன் எல்லாமே உலகறிந்தது. அடிப்படையிலேயே ரொம்பவும் ஸ்ட்ராங் மேன். விழுப்புண்கள் படுவதற்கே பிறந்தவர். அவர் உடலில் காயங்கள் இல்லாத இடமே இல்லைனு சொல்லலாம். வாழ்க்கை ஒரு போர்க்களம்னு சொல்லிட்டு காயம்பட்டதை கண்டுக்காமல் சிரிச்சுக்கிட்டே போயிடுறவர்.

சில மாதங்களுக்கு முன்பு ஒரு விழாவில் நான், மனோரமா, கமல் அனைவரும் கலந்து கொண்டோம். அப்போது கமலிடம் நிறைய விஷயங்கள் மனம்விட்டுப் பேசினேன். அதன்பிறகு இப்போதுதான் பேச சந்தர்ப்பம் வாய்த்தது. அவரது வலது காலில் இரண்டு ஆபரேஷன்கள் செய்துள்ளனர். இப்போது முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறார். அவரிடம் இரண்டு விஷயங்கள் சொன்னேன். ‘உச்சம் தொட்டுவிட்டால் அதன்பின்னால் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்பார்கள்.

இமயமலையை அடைந்தவன் உச்சிக்குப் போய்விட்ட பிறகு, தோழமைக்கு ஆள் இன்றி தனிமைப்படுத்தப்படுவான். நீங்கள் உச்சம் தொட்டவர். ஆனால் தோழமைக்கு நாங்கள் உடனிருக்கிறோம்’ என்றேன். என் மனைவி, மகன்கள் சூர்யா, கார்த்தியுடன்கூட பேச முடியாத விஷயங்களை கமலுடன் பேசி மகிழ்ந்தோம்.’’

‘‘என்ன சொல்கிறார் கமல்?’’
‘‘செவாலியே கிடைத்திருப்பது அவருக்கு ரொம்பவே உற்சாகத்தை அளித்திருக்கிறது. வாழ்த்த வந்த எங்கள் அனைவரையும் எழுந்து வந்து வரவேற்றார். கொஞ்சம் தாங்கித் தாங்கித்தான் நடக்கிறார். ஆனாலும் கால் இப்போது சரியாகிவிட்டது. பாடி பில்டிங் என உடலை முறுக்கி கட்டுக்கோப்பாக வைப்பது, ஹெவி வெயிட் தூக்குவது போன்ற பயிற்சிகளை இனியும் தொடர வேண்டாம் என அவரிடம் சொன்னேன். சிம்பிளான யோகாவை தொடர்ந்து செய்தாலே நூறு வயதுவரை வாழ முடியும் என்றேன். ‘கமலின் சாதனையை கமலே இனி முறியடிக்க முடியாது’ என்று அவரிடம் சொன்னேன். சிரிச்சார்’’ என பொறுமையும், புன்னகையுமாக பகிர்ந்துகொண்டார் சிவகுமார். ‘அவ்வை சண்முகி’, ‘பஞ்சதந்திரம்’, ‘தெனாலி’, ‘தசாவதாரம்’, ‘மன்மதன் அம்பு’ என கமலை வைத்து பல சூப்பர் ஹிட்ஸ் கொடுத்தவர் கே.எஸ்.ரவிக்குமார்.

‘‘கமல் சாருக்கு விருது கிடைச்சதும் அவரை விட மொதல்ல சந்தோஷப்பட்டது நான்தான். ‘தெனாலி’ படத்தின் தயாரிப்பாளர் என் மனைவிதான் என்பதால், கமலை வாழ்த்த அவரும் என்னுடன் வந்திருந்தார். இப்போ அவர் குணமாகிட்டார். கமல் எப்பவுமே ‘நோ பெயின்.. நோ கெயின்’ என்பார். ‘வாழ்க்கையில மேக்ஸிமம் பெயினை நீங்க அனுபவிச்சிட்டீங்க. இனி உங்களுக்கு எல்லாமே கெயின்தான்’னு சொன்னேன். முகம் மலர்ந்து சிரிச்சார்’’ என்கிறார் கே.எஸ்.ரவிக்குமார்.

‘‘கமல் சார் குணமாகிட்டார். செவாலியே விருது அவருக்கு 200 சதவீத எனர்ஜியைக் கொடுத்திருக்கிறது’’ என பேச ஆரம்பிக்கிறார் ‘தூங்காவனம்’ இயக்குநரும் ‘சபாஷ் நாயுடு’ படத்தின் எக்சிக்யூடிவ் புரொட்யூசருமான ராஜேஷ் எம்.செல்வா. ‘‘கமல் சார் ரொம்பவும் மதிக்கற சிவாஜி சாருக்கு கிடைச்ச செவாலியே விருது கமல் சாருக்கும் கிடைச்சதில் சார் ஹேப்பி. விருதுக்கு அப்புறம் சார் ரொம்ப ஆக்டிவ்வாக இருக்கார். ரெகுலர் எக்சர்சைஸை விடாம பண்ணிக்கிட்டிருக்கார். காலுக்கு சின்னச் சின்ன பிசியோதெரபி பண்றார். அவர் ஸ்பீடா ரெக்கவர் ஆவதைப் பார்த்தால், திட்டமிட்ட தேதியை விட, முன்னாடியே ‘சபாஷ் நாயுடு’ படப்பிடிப்புக்கு கிளம்பி விடுவோம்’’ என நம்பிக்கை மின்ன பேசுகிறார் ராஜேஷ்.

‘செவாலியே’ கிடைத்தது பற்றி கமலும் மனம் திறந்திருக்கிறார். ‘‘கலைக் கடற்கரையில் கைம்மண் அளவு அள்ளி விட்ட பெருமை எவ்வளவு சிறுபிள்ளைத்தனமானது என்பதை உணர்கிறேன். வயதில்லாமல் எப்போதும் ஆர்ப்பரிக்கும் கலைக் கடல், இத்தகைய தருணங்களில் கரை மோதி, என் போன்றோர் முகத்தில் தெளித்து பரவச மயக்கம் கலைத்து, உப்பிட்டு பெரும் நினைவை உணரச் செய்கிறது. கை தாங்கி எழுத்தும் கலையும் அறிவித்த பெரும் கூட்டத்துடனே நான் ஏற்ற யாத்திரை இது என்பதை உணர்கிறேன்.

அக்கூட்டத்தில் பெரும்பான்மை தமிழகத்து ரசிகர்கள். என் பெற்றோர் இருந்து பார்க்க முடியாத குறையை என் குடும்பத்தில் எஞ்சிய பெரியோரும், இளையோரும், எனது சிறு வெற்றிக்கும் ஆர்ப்பரிக்கும் ரசிகர் கூட்டமும் போக்கி விடுகிறது’’ என நெகிழ்ந்திருக்கிறார் கமல்! ‘என் தந்தைதான் வலிமையானவர்! தடைகளைத் தாண்டி வருவதில், மற்றும் அதை ஸ்டைலாகச் செய்வதில்...’ என ட்விட்டரில் ஸ்ருதி கொடுத்த பூஸ்ட்டில் இன்னும் உற்சாகமாகியிருக்கிறார் கமல்.

- மை.பாரதிராஜா
அட்டை ஸ்பெஷல் படம்: முத்துக்குமார்
படம் நன்றி: போத்தீஸ்