குங்குமம் ஜங்ஷன்



புத்தகம் அறிமுகம்

நா.முத்துக்குமார் கவிதைகள்

(பட்டாம்பூச்சி பதிப்பகம், அய்யப்பா பிளாட்ஸ், 45/21, இருசப்பா தெரு, விவேகானந்தர் இல்லம், சென்னை-600005. விலை: ரூ.225/-. தொடர்புக்கு: 98410 03366) கவிதையின் அனுபவ உலகத்தை அகம், புறம் என இரண்டாகப் பிரிக்கும் கோடு அத்தனை தெளிவானதல்ல. சமுத்திரமும் நிலமும் சந்திக்கும் கரை போன்றது அது. எளிய கருத்தாக்கங்களுடன் எழுதிய கவிதைகளின் தொகுப்பு. வன்மமோ, புரியாத புதிரோ, புத்தகத்தை மூடிவிட்டு பொருள் தேடிப் புறப்படும் பயணமோ வேண்டியதில்லை. சித்திரம், சித்திரமாய் எழுதிப் போகிறார் நா.முத்துக்குமார். அருமையான நீரோட்டம் மாதிரி படிக்கும்போதே தெளிந்து உணரக்கூடியவை. அடர்த்தியாக, அடுத்தடுத்த பக்கங்களுக்கு தாவிப் போக எந்தத் தடையும் இல்லை. கவிதை எழுதுவது ஒரு கலை; அதைத் தேடிப் போவது அனுபவம். இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது இரண்டுமே சித்திக்கிறது.

டெக் டிக்!

ஜீப்ரானிக்ஸ் நிறுவனம் இளசுகளைக் கவர்வதற்காக புளூடூத் ஸ்பீக்கர் மற்றும் டெலிபோன் மாடலில் வடிவமைக்கப்பட்ட யூஎஃப்ஓ ஸ்பீக்கரை சந்தையில் புதிதாக அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்பீக்கரில் பாடல்கள் ஹோம் தியேட்டர் துல்லியத்தோடு ஒலிக்கின்றன.  பாடல்களைக் கேட்கும்போது இடையில் யாரேனும் போன் செய்தாலும், நம் லேண்ட்லைன் அழைப்பைப் போல எடுத்துப் பேச முடியும். அதிலும் துல்லியம். அனைத்து செல்போன்களுக்கும் பொருந்துமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த ஸ்பீக்கர். புளூடூத் 4.0 தொழில்நுட்பம் மூலம், மிகவும் தெளிவான ஒலியை வழங்குகிறது. 1400mAh பேட்டரியின் திறனில் இயங்குகிறது. நீண்ட நேரம் சார்ஜ் இருக்கும். விலை: ரூ.2999/-

நிகழ்ச்சி மகிழ்ச்சி

‘‘எனக்கும் கேமராவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. ஏ.பி.ஸ்ரீதர் சார் என்னை அழைத்தபோது இந்த மியூசியம் பற்றி பெரிய அபிப்ராயம் எதுவும் இல்லை. ஆனால் வந்து பார்த்ததும் பிரமிக்க வைத்துவிட்டது. பி.சி.ஸ்ரீராம் சார் கேமராவைப் பற்றி சொன்ன தகவல்கள் வியப்பைத் தந்தன. ஒரு கேமராவை வாங்கி புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது’’ என வியந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். ஓவியர் ஸ்ரீதர், தான் சேகரித்து வைத்திருக்கும் அரிய வகை கேமராக்களைக் கொண்டு  சென்னை வி.ஜி.பி. வளாகத்தில் கேமரா மியூசியத்தை உருவாக்கியிருக்கிறார். அதன் திறப்பு விழாவில்தான் சிவகார்த்தி இப்படி மனம் திறந்திருக்கிறார்.

சர்வே

லைசென்ஸ் பெறாத மென்பொருட்களை லட்சக்கணக்கானவர்கள் தங்கள் கம்ப்யூட்டர்களில் பதிவேற்றம் செய்துகொள்வது, சாஃப்ட்வேர் நிறுவனங்களுக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது. இதற்கு அவர்கள் நிர்ணயிக்கும் அநியாய விலையும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. திருட்டு வி.சி.டி போல இதுவும் உலகம் முழுக்க பிரச்னையாக உள்ளது.

உலகிலேயே பைரேடட் சாஃப்ட்வேர்களை அதிகம் பயன்படுத்துவது இந்தோனேஷியர்கள்தான். அங்கு 85 சதவீதம் புழக்கத்தில் இருப்பது இந்த ரகம்தான். ரஷ்யாவில் 64 சதவீதம். இந்தியாவில் 58 சதவீதம். எனினும் பண மதிப்பில் பார்த்தால் அமெரிக்காதான் நம்பர் 1. ‘யோக்கியசிகாமணிகள்’ என நாம் நினைக்கும் நாடுகளிலும் மனிதர்கள் இப்படித்தான். 2015ம் ஆண்டில் பைரேடட் சாஃப்ட்வேர்களால் பண இழப்பு ஏற்படுத்திய டாப் 5 நாடுகள்:

அமெரிக்கா-ரூ.61,129 கோடி  
சீனா-ரூ.58,442 கோடி
இந்தியா-ரூ.18,137 கோடி
பிரான்ஸ்-ரூ.14,106 கோடி
பிரிட்டன்-ரூ.12,763 கோடி

யு டியூப் லைட்

‘நிஜ அமானுஷ்யத்தை (பேய்) நேரில் பார்த்த என்  உண்மையான அனுபவம்’ என்ற டைட்டிலோடு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் திகில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் நடிகர் ‘பரோட்டா’ சூரி. கோவையில் இருந்து பழனி செல்லும் சாலையில் நள்ளிரவு 2.30 மணி அளவில் பேயை நேருக்கு நேராகக் கண்டதாக தன் அனுபவத்தை வீடியோவாக அவர் பதிவிட, அது 5 லட்சம் வியூவைத் தாண்டியிருக்கிறது. 9 ஆயிரம் லைக்ஸ்,  பத்தாயிரம் ஷேர் என ஃபேஸ்புக்கில் வெறும் வாய்ஸ் ஓவரிலேயே அசத்தியிருக்கிறார் சூரி.

‘நீங்க கள்ள ஆட்டம் ஆடுறீங்க. ஒத்துக்க முடியாது. அந்த பேயை முதல்ல இருந்து வரச் சொல்லுங்க’ என வீடியோவைப் பார்த்த ஒருவர் போட்டிருக்கும் கமென்ட்டுக்கே 713 லைக்ஸ் குவிந்திருக்கிறது. ‘பேய் வருவதை அறிந்து முன்கூட்டியே வீடியோ பிடிச்சது அற்புதம்’ என்றும் சிலர் கலாய்த்திருக்கிறார்கள்.

சிற்றிதழ் Talk

ஒரு திரைப்படத்தை உருவாக்கும் பணியில் உங்களுக்கு மிகவும் பிடித்த வேலை எது? எல்லா வேலைகளும் எனக்குப் பிடித்த வேலைதான். குறிப்பாக ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால் அது ஒலிக்கோர்ப்புதான். அங்குதான் வேடிக்கை விநோதங்கள் நிறைய இருக்கிறது.
- (ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் நேர்காணல், ‘அம்ருதா’ இதழில்...)