வள்ளல்



-எஸ்.சுந்தரேசன்

சென்னை - ஐதராபாத் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தோம். என் இருக்கைக்கு எதிரே இருந்த பெரியவர், பணக்காரத் தோரணை உள்ளவர், சட்டென எழுந்து, கம்பார்ட்மென்ட் முழுமைக்கும் கேட்கும்படி பேசினார். ‘‘அஞ்சு வருஷம் முன்னாடி, இதே ரயில், இதே நாள்ல விபத்தாகி என் மகன் இறந்துட்டான். அவன் நினைவா இன்னைக்கு உங்க எல்லோரோட உணவுக்கும் நான் பணம் தர்றேன். கூச்சப்படாம ரயில்வே கேன்டீன்ல வேண்டியதை வாங்கிச் சாப்பிடுங்க!’’ - என்றவர், ஒரு கத்தை நோட்டை எடுத்து கேட்டரிங் சர்வர் கையில் திணித்தார்.
அனைவரும் நெகிழ்ந்து போனார்கள். இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு கொடை வள்ளலா? எனக்குள் வியப்பு!

அதிகாலை ஐந்து மணி... ரயில் ஐதராபாத்தை வந்தடைந்தது. நானும் என் மனைவியும் உடைமைகளை சரிபார்த்தபோது, திடீரென என் மனைவி அலறினாள். ‘‘என்னங்க, என் நகையெல்லாம் வச்சிருந்த ஹேண்ட் பேக்கைக் காணலீங்க!’’ அடுத்தடுத்த இருக்கைகளிலும் அலறல் சத்தங்கள் கேட்கத் தொடங்கின.

எதிர் இருக்கையில் பார்த்தால், அந்தக் கொடை வள்ளல் மாயமாகியிருந்தார். ‘சேச்சே... அவரைப் போய் சந்தேகப்படலாமா? அவராக இருக்காது’. நினைத்தபடியே ரயில்வே போலீசில் புகார் செய்தோம். கேட்பாரற்றுக் கிடந்த கொடை வள்ளலின் கைப்பையை அவர்கள் சோதனை செய்ய, அதில் சில ரூபாய் நோட்டுகள் இருந்தன. அத்தனையும் கள்ள நோட்டுகள்!