பயம்



-கே.அசோகன்

‘‘ராமாயி, கதவை நல்லா மூடிக்கோ! யாரு கதவைத் தட்டினாலும் திறக்காதே!’’ - எச்சரித்து கதவைச் சாத்தினான் நல்லகண்ணு. ‘‘ஏனுங்க, அமாவாசை இருட்டுல எங்கே போறீங்க?’’ ‘‘அமாவாசை இருட்டுதானே, நம்ம தொழிலுக்கு தோதா இருக்கும்! அதான், சந்திரபுரிக்கு போறேன். அங்க போனா, ஏதாச்சும் தேறும்!’’ எனக் கிளம்பினான். ‘‘ஏன்தான் இந்த திருட்டுத் தொழிலோ! வேற ஏதாச்சும் தொழில் செஞ்சு பிழைச்சா, கவுரதையா இருக்கும், அத விட்டுட்டு... திருடிப் பொழைக்கிற இந்த மனுஷனைக் கட்டிக்கிட்டு...’’ என்று அவள் புலம்பப் புலம்ப கிளம்பிவிட்டான் நல்லகண்ணு.

சந்திரபுரியில் நல்ல கும்மிருட்டு. டார்ச் லைட்டடித்து, ஒவ்வொரு வீடாய் நல்லகண்ணு நோட்டமிட்டான். ஒரு வீட்டின் பின் கதவு திறந்திருந்தது. ‘ஆகா, நமக்கு தோதா போச்சு!’ என்றபடியே பக்கத்தில் போனவன், அந்த வீட்டுத் தலைவன் வெளியே வர, சட்டென்று புதரில் ஒளிந்துகொண்டான். ‘‘ராசாத்தி, முன்கதவு, பின்கதவு எல்லாத்தையும் நல்லா மூடிக்கோ. இந்த அமாவாசை இருட்டுதான் நம்ம தொழிலுக்கு தோது. அதனால சூரியபுரிக்கு போறேன். அங்க ஏதாச்சும் தேறும்!’’ - என்றான் அந்த வீட்டுத் தலைவன். ‘ஆஹா! நம்ம வீட்டுப் பின்கதவு திறந்திருந்தா..?’ - பயம் மேலிட, தன் சொந்த ஊரான சூரியபுரிக்கு நடையை எட்டிப் போட்டான் நல்லகண்ணு.