திறமை



-ஜெயா மணாளன்

சிபாரிசு என்றாலே பிடிக்காத மேனேஜிங் டைரக்டர் ராஜசேகர், பிரதீப் தன்னை வேலையில் சேர்த்துக்கொள்வதற்காக நீட்டிய பதினைந்து சிபாரிசுக் கடிதங்களைப் பார்த்ததும் கோபத்தின் உச்சிக்கே போய்விட்டார். ‘‘எனக்கு சிபாரிசுன்னாவே பிடிக்காது. இது எல்லாருக்குமே தெரியும்! எவ்வளவு தைரியம் இருந்தா நீ இத்தனை பேர்கிட்ட சிபாரிசுக் கடிதம் வாங்கிட்டு வந்திருப்பே... வெளியே போ! என் கம்பெனியில திறமை இருக்கிறவங்களுக்குத்தான் வேலை! அடுத்தவங்க லெட்டரைப் பார்த்துட்டு யாருக்கும் வேலை கொடுக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை’’ என்றார் உஷ்ணமாக.

பிரதீப் விடவில்லை. ‘‘சார்! திறமைசாலிகளுக்குத்தான் வேலைனு சொல்ற நீங்க, தயவுசெய்து கொஞ்சம் நிதானமா யோசிச்சுப் பாருங்க. பலதரப்பட்ட பெரிய மனுஷங்ககிட்ட பக்குவமா பேசித்தான் இத்தனைக் கடிதங்களையும் வாங்கியிருக்கேன். தெரியாதவங்களுக்கு யாரும் சிபாரிசு பண்ண மாட்டாங்க. ஆக, முன்னாடியே அவங்ககிட்ட கொஞ்சம் நல்ல பேரும் சம்பாதிச்சு வச்சிருக்கேன். இதுவும் ஒருவகையான திறமைதானே!’’

இப்போது ராஜசேகர் முகத்தில் சிந்தனை முடிச்சுகள். ‘ரெண்டு, மூணு பேர் கிட்ட சிபாரிசுக் கடிதம் வாங்குறதே சிரமம்! அப்படியிருக்க, பதினைஞ்சு பேர்கிட்ட சிபாரிசுக் கடிதம் வாங்க, அசாதாரண திறமை வேண்டும். அது பிரதீப்கிட்ட இருக்கு! அந்தத் திறமையை கம்பெனி வளர்ச்சிக்கு ஏன் பயன்படுத்திக்கக் கூடாது?’ ‘‘பிரதீப்! உன்னை கம்பெனி பி.ஆர்.ஓ.வா அப்பாயின்ட் பண்றேன்!’’ என்றார் ராஜசேகர்.