சமுத்திரக்கனி IN download மனசு



மிகச் சிறந்த நண்பன்
நான்தான். கண்ணாடியில் தினமும் என்னைப் பார்த்துப்பேன். உள்ளுக்குள் இருக்கிறவன் நிறைய என்னிடம் பேசுவான். அவன் ‘தவறு’ன்னு சொன்னதை செஞ்சிட்டு, நான் தடுமாறி நிற்கிறதைப் பார்த்து ‘நான்தான் சொன்னேன்ல’ என்பான். எனக்கு என் மனசு நல்லாத் தெரியும். அவன் சொல்றதை கேட்டுட்டு, அப்படியும் நான் விரும்பினதையே செஞ்சிட்டு அவன் கேலிப் புன்னகையை பார்க்கிறது இருக்கே... கஷ்டம்! அவனை இன்னும் நான் உயிர்ப்போடு வச்சிருக்கேன். அவன் இருக்கிறவரைக்கும் நானும் நல்லா இருப்பேன். தன்னந்தனியா அலைஞ்சு திரியாம, கூட ஒருத்தனை உள்ளேயே வச்சுக்கறதும், அவன் எனக்குத் திடமான நம்பிக்கை கொடுக்கிறதும் நல்ல விஷயம்தானே!



ஆசைப்பட்டு நடக்காத விஷயம்
நடக்காத விஷயத்திற்கு ஆசைப்படவே மாட்டேன். ஆசைப்பட்டது கிடைச்சிருக்கு. நடிக்கணும்னு ஆசைப்பட்டு வந்து, அவமானப்பட்டதெல்லாம் தனிக்கதை. அதையெல்லாம் சொன்னால் புல்லும் புறாவும் தண்ணி குடிக்காது. என் புகைப்படங்களை சுக்குநூறாகக் கிழிச்சு எறிஞ்சிருக்கேன். அப்புறம் சுந்தர் கே. விஜயனைப் பார்க்கப் போய் அவருக்கு என் கையெழுத்துப் பிடிச்சுப் போய் ‘காப்பி ரைட்டிங்கிற்கு வா’ன்னு சொன்னபிறகு நடிக்கற ஆசையும் கைவிட்டுப் போச்சு. அப்புறம் சசிகுமார் 2007ல் ‘நீ நடிகனாக வா’னு கூட்டிட்டுப் போனார். ‘சுப்ரமணியபுரம்’ என்னை வெளியே எடுத்துப் போட்டதில அந்த ஆசையும் நிறைவேறிடுச்சு. நான் நினைச்சு வந்தது, இருக்கற இடம் எல்லாமே போனஸ்தான். நான் மகிழ்ச்சியாக இருக்கேன் அண்ணே!



அதிர்ச்சி
ஸ்வாதியின் மரணம்தான்... வேறு என்ன! இப்படி பெண்களுக்கு  எதிராக பல்கிப் பெருகும் இந்த வன்முறை. ஒரு மாறுதலாக இவர்களுக்கு பொதுமக்களின்  முன்னிலையிலேயே தண்டனை கொடுத்தால் என்ன? ‘யாரோ கொலை செய்கிறார்கள்... யாரோ  சாகிறார்கள்’ என்றா இதை நினைக்க முடிகிறது? பட்டப் பகலில் அவ்வளவு கோபத்துடன்... நாம் என்ன மாதிரி யான சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?

எடுக்க நினைக்கிற சினிமா
இப்பத்தானே அதற்கான வேலைகளைத் தொடங்கியிருக்கோம். அதுக்குத்தானே புரொட்யூசர் ஆனது. பரீட்சைகளை நம்ம பணத்தை வச்சு எழுதிப் பார்த்து பாஸ் ஆவோம்னு நினைச்சிருக்கேன். இப்ப உருவாக்கிக் கொண்டிருக்கிற ‘கிட்ணா’ நான் நினைச்ச மாதிரி வந்தால்... அதுவே நான் எடுக்க நினைச்ச சினிமாதான்.

கேட்க விரும்பும் கேள்வி
நாம்தான் நம்மைப் பார்த்துக் கேட்டுக்கணும். அதுதானே நியாயம்? நம்ம பையன் என்ன படிக்கணும்ங்கிறதைக்கூட பக்கத்து வீட்டுப் பையனைப் பார்த்துதானே முடிவு எடுக்கறோம்? நமக்குள்ளேயே ஆயிரம் கசடுகளை வைத்துக்கொண்டு அடுத்தவரிடம் என்ன கேட்க? ‘காசைக் கொடு, காரியம் நடக்கும்’னு சொல்லிக் கொடுத்து பையனை வெளியே அனுப்புவதே நாம்தானே! தனி மனிதனாக மாற்றத்தை உண்டாக்குவோம். அடுத்த தலைமுறையாவது சரியாக வாழட்டும். இப்ப நம்மளை நாமே கேள்வி கேட்டு தூர் வாரி சரி பண்ணிக்குவோம்.

மறக்கமுடியாத மனிதர்கள்
1987ல் சென்னைக்கு ஓடி வந்தேன். ‘எல்.ஐ.சி. என்ற மூன்றெழுத்துதான் சென்னை’ என புரிந்து வைத்திருந்ததால் இறங்கிட்டேன். ஜெமினி பாலத்திற்கு அடியில் உறங்கியபோது, ஒரு லத்தி என்னைத் தட்டி எழுப்பியது. ஒரு ஏட்டய்யா, ‘என்ன இங்கே படுத்திருக்கே! நீ யார், எதுக்கு வந்தே?’னு வரிசையாக கேள்விகளை எழுப்பினார். அப்பொழுது சினிமாவில் நடிப்பதற்காக வந்த எனக்கு வயது 15. அரை டவுசர் போட்ட என்னை சைக்கிள் கேரியரில் வைத்து ஓட்டி ஸ்டேஷனில் தங்க வைத்து அனுப்பினார். இன்றைக்கு அடையாளம் தொலைத்த அந்த மனிதரை, அவரது அன்பை, மறக்க முடியவில்லை.
 
அடுத்து டி.ஆர். வீட்டுக்குப் போய், அங்கிருந்த வாட்ச்மேனை நண்பராக்கி... அங்கேயே படுத்து உறங்க அனுமதித்த அந்த அனுபவமும் சாந்தமும் கனிந்த அய்யாவை மறக்க முடியவில்லை. அதற்குப் பிறகு கையில் வைத்திருந்த காசு கரைய, விழுப்புரம் வரை திரும்பப் பணம் இருந்தது. எஸ்.எல்.ஹெச் என்ற ஹோட்டலில் வேலை செய்து சம்பாதித்துவிட்டு புறப்பட நினைத்தேன்.

அந்த முதலாளியோ 25 ரூபாய் பணம் கொடுத்து ‘‘வீட்டுக்குப் போய்ச் சேர்’’ என்றார். ‘‘இல்லை... வேலை செய்துதான் சம்பளம் பெறுவேன்’’ என பிடிவாதம் காட்ட... தலையை வருடிவிட்டு ‘அப்படியே போய்ச் சேர்’ என புன்னகைத்தார். அந்த விலையுயர்ந்த புன்னகை முதலாளியை இன்னும் மனதில் இருத்தியிருக்கிறேன்.

சினிமாவைப் புரிந்துகொண்டது
சினிமாவைப் புரிந்துகொள்வதைவிட சினிமா ரசிகனைப் புரிந்துகொள்வது தான் நல்லது. அவனோடு சரியான தொடர்பில் இருப்பதுதான் இங்கே சாலச் சிறந்தது. ‘அப்பா’ எடுத்துவிட்டு சகோதரர்களுக்கு போட்டுக் காண்பித்தேன். அவர்களுக்குப் பெரிதாக நம்பிக்கை இல்லை. நான் இங்கே யாரையும் நம்பலை. படம் எடுக்கும்போது ஒரு உதவியாளரை வச்சு குறிப்பு எடுத்தேன். ‘எங்கே சிரிப்பாங்க? எங்கே கண்ணீர் எட்டிப் பார்க்கும்? கை தட்டுகிற இடங்கள்! யாருக்கும் தெரியாமல் கைக்குட்டையில் ஒத்தியெடுக்கிற இடங்கள்’னு குறிச்சு வச்சோம்.

பின்னாடி அதெல்லாம் நடந்தது. நான் சரியான புரிதலில்தான் இருக்கேன். சினிமாவில் இருக்கிற சில விமர்சகர்கள், இயக்குநர்கள் எங்கோ உச்சாணிக் கொம்பில் இருக்கிறதாக நினைக்கிறார்கள். நான் வாத்தியார் இல்லை. சுலபமாக சினிமாவை புரிஞ்சிக்க ரசிகர்களை உணர்ந்துகொண்டால் போதும்னு தோணுது. எதற்கெடுத்தாலும் வெளிநாட்டு சித்தாந்தங்களை, படங்களை மேற்கோள் காட்டுவது இங்கே வழக்கமாகிடுச்சு.

‘அப்பா’ படத்திற்காக ஐந்தாயிரம் கிலோமீட்டர் பயணம் செய்தேன். சின்னஞ்சிறிய கிராமத்துல 50 பேர் படத்தைப் பார்த்திருந்தால்கூட என்னை ‘அப்பா’னு கூப்பிடுகிற அந்தக் குரல்கள்... இதுதான் சினிமா. ரசிகர்கள் உருவமற்றவர்கள். ஆதியும் அந்தமும் இல்லாதவர்கள். உழைப்பிற்கும், உண்மைக்கும் மரியாதையை அவர்கள் நிச்சயமாகத் தருகிறார்கள்.

காதல் / திருமணம்
விட்டுக் கொடுத்தல் மட்டுமே மகிழ்ச்சிக்கு உத்தரவாதம். திருமணத்தை கடைசிவரை அர்த்தமுள்ளதாக்க அதைத் தவிர வேறு வழியில்லை. எனக்கு அக்கா மகள் ஜெயலட்சுமியோடு திருமணம் ஆகி 16 வருஷம் ஆச்சு. சிறு நெருடல்கள் இருந்தால் கூட அந்த இடங்களை குழந்தைகள் அரி, தியானா இருவரும் அன்பால் நிரப்பி விடுவார்கள். நிபந்தனையற்ற அன்பு எல்லாவற்றையும் சரி செய்யும்.

கற்றுக்கொண்ட பாடம்
இன்னும் கற்றுக்கொண்டே இருப்பதுதான் உண்மை. தினமும் இந்த சமூகம் எனக்கு பாடம் புகட்டுகிறது. குழந்தைகளும் சொல்லித் தருகிறார்கள். இது தொடரும். முடிந்துவிட்டது என யார் சொன்னாலும் உடன்பாடில்லை. மனிதர்கள் மட்டுமே என்னை ஆச்சர்யப்படுத்துகிறார்கள். நண்பர்களை அடையாளம் காண்பது மிகச் சிரமமாக இருக்கிறது. முரண் அதிகம் இருக்கிறது.

முன்பு நண்பர்களாக இருந்தவர்கள், இப்போது அப்படியே இல்லை. படிப்பும், அறிவும், நாகரிகமும் இருக்கிற சமூகத்தில் எனக்கு நண்பர்கள் இப்படி இருக்கிற வாழ்வியலை எப்படிப் புரிந்துகொள்ள? யாராவது மனிதர்களை அறிய எனக்குக் கற்றுக் கொடுத்தால் நல்லது. பி.எஸ்ஸி., சட்டம், I.A.S.க்கு தயாரானது எதுவும் இப்போது பார்க்கும்போது படிப்பாகவும் இல்லை, பாடமாகவும் இல்லை. ஏன்?

மீட்க விரும்பும் இழப்பு
என் தந்தை மற்றும் கனவுலகத் தந்தை கே.பி. சார். அப்பா இறக்கும்போது எனக்கு வயது 15. வாழ்க்கையின் எந்த இழைகளும் புரிபடாத, பிடிபடாத வயசு. நான் எடுத்த ‘அப்பா’, அந்த அப்பாதான். அப்படியே கைபிடித்து அழைத்துப் போனவர். வாழ்க்கையின் பேரன்பை உணர்ந்த இடமும் அவரிடமே! அப்புறம், கே.பி. சார். எனக்கு அம்மா, அப்பா, சகோதரன், குரு என எல்லாமுமாக இருந்திருக்கிறார்.

கொஞ்சுவார்... திட்டுவார்... ஆராதிப்பார். ‘அவர் எனக்கு பக்கபலமாக இருந்தார்’ எனப் புரியவே நாளாகிவிட்டது. கொண்டாடுவதிலும் அவருக்கு இணை கிடையாது. எனது செயலில், நடவடிக்கைகளில், பேச்சில், வேலையில்  ஏதாவது நல்லது தெரிந்தால் அது அவரிடம் கற்றதே! எங்காவது குவாலிட்டியை கண்டுபிடித்தாலும் அதுவும் அவரிடம் பெற்றதே! கிளாஸ் லீடர் மாதிரி என்னை வேலைகளில் விட்டுவிட்டுப் போவார். அவர் இன்னும் இருந்திருக்கலாம். என்னில் பாதியை இழந்தேன். சத்தியம் இது.

- நா.கதிர்வேலன்