இந்தியாவின் முகமது அலி!



சமீபகாலமாக செய்தித்தாள்களிலும் செய்தி சேனல்களிலும் பக்கத்துக்கு பக்கம் விளையாட்டு சாதனைகளே பெருமிதமாக ஆக்கிரமிக்கின்றன. இதில் விஜேந்தர் சிங்கின் சாதனை தனித்துவமானது. அமெச்சூர் குத்துச்சண்டை வீரராக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர், இப்போது தொழில்முறை குத்துச்சண்டை வீரராக மாறி தொடர்ச்சியாக ஏழாவது வெற்றியை இந்த வாரம் பதிவு செய்திருக்கிறார்.



பல நாடுகளில் தொடர்ச்சியாக வென்றவர், இந்திய மண்ணில் பெற்ற முதல் வெற்றி இது! டெல்லியில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் கெர்ரி ஹோப்பை வென்று ஆசிய பசிபிக் டைட்டிலைக் கைப்பற்றி இருக்கிறார். விஜேந்தரைவிட சீனியர் கெர்ரி. இதற்கு முன்பான 6 போட்டியாளர்களையும் நாக் அவுட் முறையில் வீழ்த்திய விஜேந்தர் இம்முறை 10 ரவுண்டு வரை முழுமையாகப் போராடியே வெற்றியை வசப்படுத்த முடிந்தது.

இதன்மூலம் உலகின் டாப் 15 வீரர்கள் பட்டியலில் இணைந்திருக்கிறார். ‘‘ஒலிம்பிக் பதக்கம் போலவே இந்த டைட்டிலும் எனக்கு ஸ்பெஷல். அந்த பதக்கம் வாங்கவில்லை என்றால் இந்த விஜேந்தர் சிங்கை யாருக்குமே தெரிந்திருக்காது. இந்த டைட்டில் இனி உலகின் முன்னணி வீரர்களுடன் மோதும் உத்வேகத்தை எனக்குக் கொடுத்திருக்கிறது’’ என்கிறார் விஜேந்தர். முகமது அலி, மைக் டைசன்களைப் பார்த்து நாம் வாய் பிளந்தோம். அமெரிக்கர்கள் விஜேந்தரைப் பார்த்து பிரமிக்கட்டும்!

- ரெமோ