போகேமான் கோ கேம் போதை!



தமிழக தெருக்களில் அசுரர் வேட்டை

இந்தியாவில் ‘கபாலி’ காய்ச்சல் என்றால், உலகம் முழுக்க ‘போகேமான் கோ’ பாய்ச்சல்தான். மொபைல் கேம் வரலாற்றில் இதுவரை இப்படியொரு மெகா ஹிட்டை யாரும் பார்த்ததில்லை. ‘உலகின் நம்பர் ஒன் டேட்டிங் ஆப் டிண்டரை விட அதிகம் பதிவிறக்கப்பட்ட ஆப்’ என்ற பெருமையை, வெளியிடப்பட்ட பத்தே நாட்களில் பெற்றிருக்கிறது இந்த ஆன்லைன் விளையாட்டு. தினமும் ட்விட்டர் பயன்படுத்துகிறவர்களை விட போகேமான் கோ விளையாடுகிறவர்கள் அதிகம் என்கின்றன புள்ளிவிவரங்கள். அவ்ளோ பெரிய அப்பாடக்கர் கேமா அது?



2000ங்களில் குழந்தைப் பருவம் கண்ட இளைஞர்களுக்கு போகேமான் கேரக்டர்களை அறிமுகப்படுத்தத் தேவையில்லை. அவை அபூர்வ சக்தி படைத்த கற்பனை ஜந்துக்கள். மீன் போலவும் நாய், எலி போன்ற விலங்குகள் போலவும்... ஏன், மனிதனைப் போலவும் கூட போகேமான்கள் உண்டு. ஆனால், கொம்புகள், நீண்ட காதுகள் என எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ் சேர்க்கப்பட்டு கொஞ்சம் அசுரத்தனமாய் காட்சியளிக்கும்.

1990ல் ஜப்பானைச் சேர்ந்த சடோஷி டாஜிரி என்ற கேம் டிசைனர்தான் போகேமான்களை வடிவமைத்தார். அரிய பூச்சி இனங்களைச் சேகரிக்கும் ஹாபி கொண்ட அவர், அந்த பாதிப்பில் 151 விநோத உருவங்களை வரைந்து கொடுத்தார். அந்தக் காலத்து கையடக்க வீடியோ கேம் கருவியான நின்டென்டோவில் போகேமான் விளையாட்டு செம போடு போட்டது. ‘சட்டைப் பைக்குள் வசிக்கும் அரக்கர்கள்’ என்பதுதான் போகேமானுக்கு பொருள். ‘Pocket monsters’ என்பதன் சுருக்கமே pokemon. 1997ல் இந்த விளையாட்டு கார்ட்டூன் கதையாக மாறி, ஜப்பானிய டி.விகளில் வலம் வந்தது. பின், ஆங்கில டப்பிங்கில் உலகெங்கும் வியாபித்து, நம்மூர் குழந்தைகள் வரை ரீச் ஆகிவிட்டது.



சரி, இப்போது போகேமான் கோவுக்கு வருவோம். கூகுள் நிறுவனம் ஏப்ரல் 1 வந்தாலே வருடா வருடம் ஒரு புருடா விடுவது வழக்கம். அதில் ஒன்றாகத்தான் 2014ல் ‘போகேமான் கோ’வின் ஐடியாவை வெளியிட்டது கூகுள். அதாவது, நிஜ உலகில் நமக்குத் தெரியாமல் உலவிக் கொண்டிருக்கும் போகேமான்களை கூகுள் மேப் மூலம் கண்டறியும் ஒரு விசேஷ ஆப். சும்மானாச்சும் சொல்லப்பட்ட இந்தப் பொய்யை மெய்யாக்கினால் என்ன என்று கூகுள் நினைத்ததன் விளைவுதான் ‘போகேமான் கோ’.

கூகுளின் உள்நிறுவனமாகத் துவங்கப்பட்ட நியான்டிக் லேப்ஸ் எனும் நிறுவனம்தான் போகேமான் கோவை உருவாக்கியிருக்கிறது. வெறும் மொபைல் விளையாட்டாக இல்லாமல் நிஜ உலகையும் உள்ளடக்கியிருப்பதுதான் இதன் சிறப்பு. அதனால்தான் ‘இந்தப் பாண்டிய நாடே உனக்கு அடிமையப்பா’ என்ற ரேஞ்சுக்கு பொடிசுகள் இந்த கேமுக்குள் முங்கு நீச்சல் அடிக்கிறார்கள்.

அதெப்படி ஒரு மொபைல் விளையாட்டில் நிஜ வாழ்க்கை இணையும்? - அதுதான் ‘அக்மெண்டட் ரியாலிட்டி’! இந்த விளையாட்டை க்ளிக் செய்த உடனேயே நமக்கென்று ஒரு உருவத்தையும் பெயரையும் கேட்கும். அதன் பிறகு அந்த உருவம்தான் நாம். நாம் இருக்கும் பகுதியை ஜி.பி.எஸ் மூலம் கண்டறிந்து நாம் எங்கே நிற்கிறோம் என்பதை கூகுள் மேப்பில் துல்லியமாக இது காட்டும். நம்மூர் தெருக்களில் இறங்கி நாம் நடக்க நடக்க... மேப் நம்மைப் பின்தொடரும்.

வழியில் தேனாம்பேட்டை சிக்னலிலோ, சைதாப்பேட்டை டர்னிங்கிலோ திடீரென ஒரு போகேமான் வழி மறிக்கும். நம்மிடம் இருக்கும் ‘போகே பந்தை’ அதன் மீது சரியாக வீசினால் அந்தப் பந்துக்குள் அடைபட்டு, அது நம் வசமாகிவிடும். இப்படி 151 வகை போகேமான்களையும் பிடித்து சேகரிப்பதுதான் விளையாட்டு.

ஒவ்வொரு போகேமானை பிடிக்கும்போதும் அதன் வகை மற்றும் வலிமைக்கு ஏற்ப நமக்கு மதிப்பெண்கள் கூடும். நம் வசம் இருக்கும் போகேமான்களுக்கு போர்ப் பயிற்சி கொடுத்து அலர்ட்டாக வைத்துக்கொள்ள வேண்டும். இதற்காகவே இந்த விளையாட்டின்படி நமது சென்னை மேப்பிலேயே ஆங்காங்கே ‘போகே ஜிம்’கள் இருக்கின்றன.

ஜிம்களில் சிவப்பு, மஞ்சள், நீலம் என வெரைட்டிகள் உண்டு. இதில் ஒருவகை ஜிம்மில்தான் நாம் உறுப்பினராக முடியும். வேறு வகை ஜிம்களுக்குள் நுழைந்தால் அங்கிருக்கும் போகேமான்களுடன் நமது போகேமான்கள் சண்டையிட்டு ஜிம்மை நம் வசமாக்க வேண்டும். இதுதவிர, நமது ‘போகே பந்து’களையும் பவர் ஏற்றும் ‘போஷன்’களையும் ஆங்காங்கே உள்ள ‘போகேஸ்டாப்’களில் இலவசமாக சேகரித்துக்கொள்ளலாம்.

ஒவ்வொரு ஊரிலும் பிரபலமான லேண்ட் மார்க்குகள் பலவற்றையும் ‘போகேஸ்டாப்’களாக ஆக்கியிருக்கிறது இந்த விளையாட்டு. உதாரணத்துக்கு சென்னையில் சென்ட்ரல், எக்மோர் ஸ்டேஷன்கள் தொடங்கி சின்னச் சின்ன கோயில்கள் வரை எல்லா முக்கிய இடங்களும் போகேஸ்டாப்கள்தான். இவற்றுக்கு வரும் விளையாட்டுப் பிரியர்களால் பக்கத்து கடைகளில் பிசினஸ் அபாரமாக பிக்கப் ஆகிறது.

இந்த கேம் காய்ச்சல் அதிகமாகி ஆளாளுக்கு மொபைலைப் பார்த்தபடியே தெருத்தெருவாக அலைகிறார்கள். இதில் அக்மெண்டட் ரியாலிட்டி மோடுக்கு மாறி, நமது போன் கேமராவை ஆன் செய்துவிட்டு நடந்தால், ரங்கநாதன் தெரு சந்துமுனையில் இருந்து கூட ஒரு போகேமான் வந்து மிரட்டும். மனிதர்களை அதிக தூரம் நடக்கத் தூண்டுவதால் டாக்டர்களே இந்த கேம் நல்லது எனச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், நெகட்டிவ் நெருடல்களும் இல்லாமல் இல்லை. ‘வீணாப் போறாங்க... இதைத் தடை பண்ணணும்’ என்பது போன்ற புலம்பல்கள் நம்மூரில் இனி நிச்சயம் வரிசை கட்டும். ஆனாலும், இந்த விளையாட்டை வாரியணைத்து விட்டது கேமிங் தலைமுறை!

போகேமான் க்ரைம்!

* ஆபத்தான செல்ஃபிக்கு முயற்சித்து அல்பாயுசில் செத்துப் போனவர்கள் போல, இந்த விளையாட்டால் விபரீதத்தின் விளிம்பைத் தொட்டவர்கள் நிறைய பேர்.
* அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இரண்டு இளைஞர்கள் போகேமான்களைத் துரத்திச் சென்று ஒரு பாறை விளிம்பிலிருந்து விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
* ஃப்ளோரிடாவில் ஒரு வீட்டருகே பதுங்கியிருந்த போகேமான்களைத் தேடிச் சென்ற இரண்டு டீன் ஏஜ் பையன்களை திருடர்கள் என நினைத்து வீட்டுக்காரர் சுட்டுவிட, காயங்களோடு அவர்கள் பிழைத்தார்கள்.
* இங்கிலாந்தின் மான்செஸ்டரில் ஒரு பார்க்குக்கு போகேமான்களைத் தேடிப்போன மூன்று சிறுவர்களிடம் கத்திமுனையில் திருடர்கள் வழிப்பறி செய்தார்கள்.
* நியூசிலாந்தைச் சேர்ந்த ஹோட்டல் ஊழியரான டாம் கர்ரி,  151 போகேமான்களையும் வசப்படுத்துவதற்காக தனது வேலையை ராஜினாமா செய்திருக்கிறார்.

- கோகுலவாச நவநீதன்