குங்குமம் டாக்கீஸ்



* ‘கபாலி’யால் டிரெண்டிங் ஆனது ‘கபாலிடா’, ‘மகிழ்ச்சி’ என்ற வார்த்தைகள் மட்டுமல்ல... சூப்பர்ஸ்டார் அணிந்திருக்கும் அட்டகாசமான ஷர்ட்களும்தான்! இந்தப் படத்தில் ரஜினி அணிந்த பெரும்பாலான ஷர்ட்கள், ராம்ராஜ் நிறுவனத் தயாரிப்பான ‘லினன் பார்க்’ ஷர்ட்கள்தான்! அயர்லாந்து நாட்டின் தட்பவெப்பநிலையில் விளைகிற ஒருவகை செடியின் தண்டிலிருந்து நார் பிரிக்கப்பட்டு, அதை மெல்லிய இழையாக்கி உருவாக்கிய அபூர்வ ஷர்ட்கள் இவை. இதை அணிந்தால் கோடையில் குளுமையையும், குளிர்காலத்தில் இதமான வெம்மையையும் அனுபவிக்கலாம். வெள்ளை மற்றும் பல வண்ணங்களில் கிடைக்கும் லினன் பார்க் ஷர்ட்களுக்கு ரஜினியால் பெரிய மவுசு!     



* சிக்கனமாக, விரைவாக படம் எடுப்பதில் கை தேர்ந்தவர் சுந்தர் சி. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வராமல் டிமிக்கி கொடுப்பதில் அந்தக் கால சிம்புவான கார்த்திக்கை வைத்து ஏழு படங்கள் செய்தவர். இப்போது 200 கோடி பட்ஜெட், பிரமாண்ட படம் என்றவுடன் அமைதியாக உட்கார்ந்து ஸ்கிரிப்ட்டை பொறுமையாக, தெளிவாகத் தயாரித்துக்கொண்டு இருக்கிறார்.

* ‘‘தமிழில் பேசினால் புரிந்துகொள்ள முடியும். ஆனால், பேசக் கற்றுக்கொள்வதுதான் கடினமாக இருக்கிறது!’’ என மனம் திறந்திருக்கிறார் காஜல் அகர்வால்.

* சென்னை சிஷ்யா பள்ளிக்கூட மாணவர்கள் கோட்டையை சுற்றிப் பார்க்கப் போய் முதல்வரைப் பார்த்திருக்கிறார்கள். அப்படிப் பார்த்தவர்
களில், ரஜினியின் பேரனும், தனுஷ்ஷின் மகனுமான யாத்ராவும் ஒருவர். ‘‘அம்மா சாக்லெட் கொடுத்தாங்க’’ என பூரிக்கிறார் யாத்ரா.



* ஜெயம் ரவி படங்களில் மட்டும் நடித்துவந்த அரவிந்த்சாமி, இப்போது அஜித் படத்தில் நடிக்க ஓகே சொல்லியிருக்கிறார். இதிலும் வில்லனா அல்லது அண்ணனா என்பதில் ரகசியம் காக்கிறது யூனிட்!

* ‘‘ஒருத்தியை ஒருவன் விருப்பப்பட்டு பின்தொடர்ந்தாலே அவள் அவனுக்குக் கிடைத்துவிடுவாள் என்ற எண்ணத்தை சினிமாதான் வழங்குகிறது. ஒரு பெண்ணை ஆண் பின்தொடர்ந்தால் அவனை ஹீரோ என்றும், ஒரு ஆணைப் பெண் தொடர்ந்தால் அவளை பேய் என்றும் நினைக்கும் சிந்தனையை இந்த சினிமாதான் வழங்கியிருக்கிறது!’’ என்று விமர்சித்து ட்வீட்டியிருக்கிறார் நடிகர் சித்தார்த்.

* பாலிவுட் நடிகை ரேகாவைப் போல, பட்டுப் புடவை கலெக்‌ஷனில் ஆர்வமாக இருக்கிறார் வித்யா பாலன். சமீபத்தில் மேற்கு வங்காளத்தில் படப்பிடிப்பிற்காகச் சென்ற இடத்தில் ஷாப்பிங் செய்து ஒரு டஜன் பட்டுச் சேலைகள், காட்டன் குர்தாக்கள் வாங்கிக் குவித்திருக்கிறார்.

* இப்போது எல்லா முக்கிய விஷயங்களுக்கும் வியாழக்கிழமையில்தான் முடிவெடுக்கிறார் அஜித். சாய்பாபாவின் பக்தர் என்பதால் இப்படி. முன்பெல்லாம் இல்லாதபடி, இப்போது அவரது ஆபீஸ் வரவேற்பறையில் பாபாவின் சிறு சிலைக்கு முக்கியத்துவம் கூடியிருக்கிறது.

* ஆகஸ்ட் 12ல் தனுஷ்ஷின் ‘தொடரி’, செப்டம்பர் 3ல் விக்ரமின் இருமுகன், அக்டோபர் 7ல் சிவகார்த்தியின் ரெமோ, தீபாவளிக்கு கார்த்தியின் காஷ்மோரா என ஃபிக்ஸ் ஆகிவிட்டார்கள். ‘இடையில் யாரும் வம்புக்கு வராதீங்க’ என்பதுதான் சொல்லும் செய்தி!

* பொங்கலுக்கு சூர்யாவின் ‘எஸ் 3’ வருகிறது. அவ்வப்போது எடிட்டிங்கை முடித்து வருவதால், ஷூட்டிங் முடியும்போது படமும் ரெடியாகிவிடும்.

* அடுத்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்ற செய்திதான் எங்கேயும் பரவியது. ஆனால், அவர் பல்வேறு கெட்டப்புகளில் நடிப்பது மட்டுமே உண்மையாம்.

* யாருமே நம்பவில்லை... ஆனாலும் நடந்திருக்கிறது. சந்தானமும், செல்வராகவனும் ஆறு தடவை சந்தித்துப் பேசினார்கள். கடைசியில் சம்பளம் வரை எல்லாம் முடிவாகி இருவரும் சேர்ந்து படம் செய்கிறார்கள். ஆறு மாதங்களில் படத்தை முடிக்க ப்ளான் போட்டாச்சு. படம் எப்படிப்பட்டது என்பதை மட்டும் சொல்லாமல், சிரித்து வைக்கிறார்கள்.

* கிரவுட் ஃபண்டிங் முறையில் தமிழில் தயாராகும் முதல் திரைப்படம் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’. கன்னடத்தில் ‘லூசியா’ இப்படி வந்து ஹிட் ஆனது. பார்த்திபன் தொடர்ந்து இந்த முறையில் படம் செய்ய முடிவு செய்துவிட்டார்.

* மலையாளத்தில் ஹிட் ஜோடியான மோகன்லால், கவுதமி இணைந்து தெலுங்கில் நடித்த படம் ‘மனமன்தா’. மலையாளம், தமிழ் சேர்த்து மூன்று மொழிகளில் ரெடியாகி வரும் இந்தப் படம், அடுத்த வாரம் ரிலீஸ். தமிழில் ‘நமது’ என டைட்டில் வைத்திருக்கிறார்கள்.

* கார்த்தியுடன் ‘காஷ்மோரா’, ஜீவாவுடன் ‘சங்கிலிபுங்கிலி கதவத்திற’, விஷ்ணுவுடன், ‘மாவீரன் கிட்டு’ என தமிழில் 3 படங்களில் திவ்யா இப்போ பிஸி!

* பாலிவுட் படப்பிடிப்பிற்காக லண்டன் பறந்திருக்கிறார் டாப்ஸி பன்னு.  ‘பிங்க்’, ‘தட்கா’, ‘ஹலி’ என இந்தியில் மூன்று படங்கள் கைவசம் வைத்திருக்கிறது பொண்ணு!

* காதல் செய்து சலித்துவிட்ட சிம்புவுக்கு டி.ஆர் தீவிரமாக பெண் பார்க்கத் தொடங்கிவிட்டார். சிம்புவும் ஓகே சொல்லிவிட்டார். ஜாதகத்துடன் பல ஊர்களுக்கு பயணம் ஆகிறார் டி.ஆர்.

* கன்னடத்தில் ‘ஹெப்புலி’ படத்தில் நடித்துவருகிறார் சுதீப். இதன் ஷூட்டிங் மைசூரில் நடந்தபோது, வயிற்றுப் பிரச்னையினால் பாதிக்கப்பட்டார் சுதீப். இதனால் படப்பிடிப்பை தள்ளிவைத்திருந்தனர். இப்போது மறுபடியும் அதன் ஷூட்டிங் தொடங்கியுள்ளது.