கறுப்பு வலைக்குள் ‘கபாலி’



சினிமாவை லீக் செய்யும் சீக்ரெட் தளங்கள்

‘‘ ‘கபாலி’ படத்துக்கு டிக்கெட் கிடைக்குமா?’’ என விசாரித்துக் கொண்டிருந்தபோது, ‘‘நெட்ல தேடு, ‘கபாலி’ படமே கிடைக்கும்’’ என கிலி ஏற்றியது ஒரு கும்பல். படம் முறைப்படி ரிலீஸ் ஆவதற்கு முன்பாக, சென்சாருக்குப் போன பதிப்பு கோர்ட் தடையைத் தாண்டியும் திருட்டுத்தனமாக வெளியாகிவிட்டது என்ற தகவல் கூட பரபரப்பில்லை. அது டார்க் வெப் தொழில்நுட்பத்தில் பரவுகிறது என்பதும் டார் பிரவுசர் என்ற மென்பொருள் மூலமாக அதைப் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் என்பதும்தான் புதிதாகவும் புதிராகவும் இருந்தது பலருக்கு. அதென்ன டார்க் வெப்? டார் பிரவுசர்?



கிட்டத்தட்ட கறுப்புப் பணம், கள்ள மார்க்கெட் மாதிரிதான் இந்த ‘டார்க் வெப்’ சங்கதியும். இணைய வலைக்குள் இது ஒரு கறுப்பு வலைப் பின்னல். யாரும் யாரையும் அடையாளம் காண முடியாத இருட்டு ஏரியா. பொதுவாக நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு வலைத்தளத்துக்கும் ஒரு ஐ.பி அட்ரஸ்... அதாவது, இணைய முகவரி இருக்கும். ஆனால், இணைய முகவரியே இல்லாமல், இது யார் நடத்தும் வலைத்தளம் என்றே கண்டறிய முடியாமல் ஒரு வலைத்தளத்தை நீங்கள் உருவாக்கிவிட்டால் அதுதான் டார்க் வெப்.

இப்படிப்பட்ட தளங்களை உருவாக்கும் தொழில்நுட்பங்களில் Freenet, I2P, TOR போன்றவை முக்கியமானவை. இதில் TOR மூலம்தான் ‘கபாலி’ உலவ விடப்பட்டதாகத் தகவல்கள் வந்தன. ‘டார் அனானிமிட்டி நெட்வொர்க்’ என்பது உண்மையில் நல்ல நோக்கத்துக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு. ‘இணையத்தில் அடையாளங்கள் இன்றி உலவுவது மனிதனின் உரிமை’ என்பது இவர்கள் கொள்கை. உரிக்க உரிக்க ஒன்றுமே இல்லாத வெங்காயம்தான் இவர்கள் லோகோ.

‘இன்று நாம் இணையத்தில் எதைத் தேடுகிறோம், எந்தெந்த தளங்களுக்குப் போகிறோம்’ என்பதெல்லாம் யாரோ ஒரு வியாபாரியால் கண்காணிக்கப்படுகிறது. எனவேதான் மறு நிமிடமே நாம் தேடிய பொருள் விளம்பரமாக பக்கவாட்டில் வந்து பல்லிளிக்கிறது. இந்தத் தொல்லைக்கு எதிராகத்தான் டார் பிரவுசர் என்ற இலவச உலவியை இவர்கள் உருவாக்கினார்கள்.

இதன் மூலம் இணையத்தைத் தொடர்பு கொண்டால், நாம் எந்த நாட்டில் இருக்கிறோம் என்பதைக் கூட யாராலும் கண்டுபிடிக்க முடியாது. இந்தியாவில் தடை செய்யப்பட்ட பல தளங்களையும் கூட டார் பிரவுசர் மூலம் பார்க்க முடியும். ஐ.பி அட்ரஸை வைத்தெல்லாம் நம்மைக் கண்டுபிடிக்க முடியாது. 7000 ஐ.பி அட்ரஸோடு நம்முடையதையும் கலந்து குழப்பிவிட்டுவிடும் தனிப்பட்ட தொழில்நுட்பம் டார் நெட்வொர்க்கினுடையது.

இதே டார் நெட்வொர்க், சில வலைத்தளங்களையும் அடையாளமற்ற டார்க் வெப் தளங்களாய் மாற்றித் தரும். அப்படிப்பட்ட தளங்கள் வழக்கம் போல .com, .net, என்றெல்லாம் முடியாது. ‘.onion’ என்று முடியும். இவற்றை வேறு எந்த உலவி மூலமாகவும் பார்க்க முடியாது. டார் பிரவுசர்தான் வேண்டும். இந்த ரூட்டில்தான் ‘கபாலி’ கசிந்ததாகச் சொன்னார்கள். நிஜமாகவே இந்த முறையில் வெளியிடப்பட்டால் உலகின் எந்த போலீஸாலும் வெளியிட்ட நபரைப் பிடிக்க முடியாது.

பதிவிறக்கியவர்கள் யாரென்று மட்டுமல்ல... எத்தனை பேர் என்ற விவரம் கூடக் கிடைக்காது. அப்படியொரு கமுக்கமான நெட்வொர்க்.
நல்ல விஷயத்துக்காக உருவாக்கப்பட்ட இந்த டார்க் வெப், தற்போது ஆன்லைன் மோசடி, ஆபாசப் படம் என எல்லாவற்றையும் தாண்டி, போதைப் பொருள் விற்பனைக்குத்தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்பது சோகம். ட்ரக் மாஃபியா லெவலுக்கு மெனக்கெட்டாவது ‘கபாலி’ படத்தை திருட வேண்டும் என்ற நோக்கம், வன்மம்!

- நவநீதன்