இந்தியாவின் அதிவேக ரயில்!



பஸ், ரயில் போன்ற பொதுப் போக்குவரத்து வசதிகள் போதுமான அளவு இல்லாமல் அல்லாடிக் கொண்டிருக்கிறது மிடில் கிளாஸும் அடித்தட்டு வர்க்கமும். மும்பைக்கும் அகமதாபாத்துக்கும் இடையே ஒரு லட்சம் கோடி ரூபாயில் புல்லட் ரயில் விடுவதற்கு திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. ‘தனி ரயில் பாதை அமைத்து சிறப்பு வசதிகள் செய்ய வேண்டிய புல்லட் ரயிலுக்கு பதிலாக, இப்போது இருக்கும் தண்டவாளத்திலேயே வேகமாக ரயில் போகலாம்’ என களமிறங்கி இருக்கிறது, ஸ்பெயின் நாட்டின் டால்கோ நிறுவனம். இந்த நிறுவனத்தின் ரயில், இந்தியாவில் கடந்த வாரம் சோதனை ஓட்டம் செய்யப்பட்டது.



அரதப் பழசான நம் தண்டவாளத்தில் மணிக்கு 180 கி.மீ வேகத்தில் சீறிப் பாய்ந்தது. நம் ரயில் பயணத்தையே புரட்சிகரமாக மாற்றி அமைக்கப் போகிறது இந்த முயற்சி. சீனாவும் ஜப்பானும் அதிவேக புல்லட் ரயில்களில் மோகம் கொண்டிருக்க, ஐரோப்பிய நாடுகள் பலவும் பழமையான தண்டவாளங்களிலேயே அதிகபட்ச வேகத்தில் செல்வதற்கான வழிகளை யோசித்துக்கொண்டிருக்கின்றன.

இதில் முன்னணியில் இருப்பது டால்கோ நிறுவனம். இவர்களின் ‘டால்கோ 250’ என்ற ரயில்தான் இந்தியாவில் சோதனை ஓட்டம் செய்யப்பட்டது. அதிகபட்சமாக மணிக்கு 250 கிலோமீட்டர் வேகத்தில் இவை செல்ல முடியும். மும்பைக்கும் டெல்லிக்கும் இடையிலான தூரம் 1384 கி.மீ. ராஜ்தானி எக்ஸ்பிரஸ் இந்தப் பயணத்துக்கு 17 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது.



இதை இன்னும் குறைத்து, காலையில் ரயில் ஏறும் ஒருவர் மாலையிலோ... மாலையில் மும்பையில் ரயில் பிடிக்கும் ஒருவர், மறுநாள் அதிகாலை தூங்கி எழுந்ததும் டெல்லியில் இறங்குவது போலவோ மாற்றுவதே இலக்கு! ‘‘எங்கள் ரயில் 12 மணி நேரத்தில் இந்த தூரத்தைக் கடக்கும்’’ என்கிறது டால்கோ நிறுவனம்.

‘டால்கோ 250’ ரயில் பெட்டிகள் விசேஷமாக வடிவமைக்கப்பட்டவை. இவற்றின் இரண்டு பக்க சக்கரங்கள் மைய அச்சால் இணைக்கப்பட்டவை அல்ல. இதேபோல ஒரு பெட்டியும் அடுத்த பெட்டியும் உறுதியான முறையில் பிணைக்கப்பட்டவை. இதனால் ரயில் பாதை வளையும் இடங்களில்கூட வேகத்தைக் குறைக்காமல் இவற்றை இயக்க முடியும். இந்திய ரயில் பெட்டிகள் போல இவை இரும்பில் உருவானவை அல்ல; அலுமினியத் தயாரிப்பு என்பதால், இவற்றின் எடை 30 சதவீதம் குறைவு. இதனால் வேகமாகச் செல்ல முடியும். அதோடு இவற்றை இயக்குவதற்கான எரிபொருள் செலவும் 30 சதவீதம் குறையும். இப்போதைய தண்டவாளங்களில் பெரிய மாற்றங்கள் எதையும் செய்யாமலே இவற்றை இயக்க முடியும்.

இந்த ரயிலின் சோதனை ஓட்டம், மதுரா - பல்வால் ரயில் நிலையங்கள் இடையே நடைபெற்றது. டால்கோ ரயில் பெட்டிகளை இந்திய உருவாக்கமான டீசல் எஞ்சினில் பிணைத்து ரயிலை இயக்கினார்கள். 120 கி.மீ. வேகத்தில் துவக்கி, தினம் தினம் வேகத்தை அதிகரித்து, 180 கி.மீ வேகத்திலும் ஓட்டி சாதித்தார்கள். 84 கி.மீ. தூரத்தை 38 நிமிடங்களில் கடந்தது ரயில். இதற்குமுன்பு ‘கட்டிமான் எக்ஸ்பிரஸ்’ என்ற ரயில் மணிக்கு 160 கி.மீ வேகத்தில் சென்றதுதான் இந்தியாவின் வேக சாதனை! அதை ஓவர்டேக் செய்துவிட்டது டால்கோ.

அடுத்து பயணிகளுக்கு பதிலாக மணல் மூட்டைகளை வைத்து, மும்பை - டெல்லி இடையே ‘ரியல் டைம்’ சோதனை ஓட்டம் நிகழப் போகிறது. டால்கோ ரயில் பெட்டிகளில் வசதிகளும் நிறைய. எவ்வளவு வேகம் சென்றாலும் அதிர்வு உள்ளே தெரியாத வடிவமைப்பு, முதுகுவலி தராத இதமான இருக்கை, ஒவ்வொரு இருக்கையிலும் வீடியோ, முக்கியமாக நவீன கழிப்பறை வசதி என விமானப் பயணம் போன்ற சுகம் தரும்.

இந்தப் பெட்டிகளைப் பயன்படுத்தும்போது ரயிலை இயக்கும் செலவும் குறைவதால், கட்டணத்தை சிறிதளவு ஏற்றியே இந்த வசதிகளைத் தர முடியும். இந்திய ரயில்வே இந்தப் பெட்டிகளைப் பயன்படுத்துவதாக இருந்தால், இந்தியாவிலேயே தொழிற்சாலை அமைத்து இவற்றைச் செய்து தர டால்கோ நிறுவனம் ரெடியாக இருக்கிறதாம். வெகு விரைவில் முக்கிய நகரங்களுக்கு இடையே இந்த ரயில் ஓடும் என நம்பலாம்!

தமிழகத்தின் முக்கிய ரயில்கள் டால்கோவுக்கு மாறினால், காலை டிபன் சென்னையில் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பினால் மதிய உணவை மதுரை அல்லது கோவையில் சாப்பிடலாம். மாலை நெல்லையில் கிளம்பினால் இரவு உணவுக்கு சென்னை வந்துவிடலாம்.

- அகஸ்டஸ்