ரகசிய விதிகள்



அட்டகாசத் தொடர் - 18

-சுபா

இன்ஸ்பெக்டர் துரை அரசன் சரேலென்று பொறுமையிழந்தார். சின்னதுரையின் கன்னத்தில் பொறி பறக்க அடித்தார். “எனக்குக் குடும்பமே இந்த போலீஸ் ஸ்டேஷன்தான். நான் நேர்மையா இருந்தா, மொத்தமா இந்த ஸ்டேஷனையே வெடி வெச்சு தகர்ப்பியோ..? அதையும் பார்ப்போம்...”



சின்னதுரை தன் கன்னத்தில் அவர் விரல்கள் விட்டுச் சென்ற தடங்களை வருடிக்கொண்டான். வலியில் தன்னிச்சையாக அவன் கண்களில் நீர் துளிர்த்தாலும், அவன் உதடுகளில் புன்னகை மாறவில்லை. சென்னையின் மைய நரம்பாக ஓடும் அண்ணா சாலை. பரபரப்பான போக்குவரத்து மிகுந்த அந்த மாலை நேரத்தில், ஒரு திரையரங்கை ஒட்டிய அந்த உயரக் கட்டிடத்தின் நான்காவது மாடி. ‘தீபக் டிராவல்ஸ்’ என்று பெயர் எழுதிய கண்ணாடிச் சுவர்களுக்குப் பின்னால், நிசப்தமாக இயங்கிக்கொண்டிருந்தது அந்த அலுவலகம். 

நந்தினி தன் வேலைகளை முடித்துவிட்டு நிமிர்ந்து பார்த்தாள். ‘மணி ஏழு’ என்றது டிஜிட்டல் கடிகாரம். மேஜை மீது இருந்த கடைசிக் காகிதங்களைத் திரட்டினாள். அடுக்கினாள். மேஜை இழுப்பறையில் போட்டாள். பூட்டினாள். ஹேண்ட்பேக்கை எடுத்துக்கொண்டாள். பாத்ரூமில் நுழைந்தாள். கூந்தலை ஒரு முறை சீவிக்கொண்டாள். நெற்றிப் பொட்டை சரி செய்துகொண்டாள். ஈரக் கைக்குட்டையால் கண்களுக்குக் கீழ் துடைத்துக்கொண்டாள். பிம்பத்திடம் புன்னகைத்துவிட்டு, புறப்பட்டாள்.

லிஃப்ட்டில் இறங்கி, வெளிப்பட்டபோது அவளுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. வருகையாளர்கள் காத்திருப்பதற்குப் போடப்பட்டிருந்த சோபாவில் விஜய் அமர்ந்திருந்தான். அவளைப் பார்த்து, “ஹாய்..!” என்றான். படித்துக்கொண்டிருந்த ஆங்கிலப் புத்தகத்தை மூடி வைத்தான். எழுந்தான். அவன் அணிந்திருந்த சிகப்பு நிற காட்டன் டி-ஷர்ட் உடலோடு ஒட்டி அழகூட்டியிருந்தது. நந்தினி புருவங்களைச் சுருக்கினாள். “ஏய், போன்ல நீ என்ன சொன்ன..? நான் தப்பாப் புரிஞ்சிக்கிட்டேனா..?” என்றாள்.

“என்னை வந்து பிக் அப் பண்ணிக்கோன்னு சொன்னேன்..” “அப்புறம் நீ இங்க வந்து வெயிட் பண்ற..?” “ஸாரி... வேலை இல்லாம போரடிச்சுது. வீட்ல உட்கார்ந்து உனக்காக வெயிட் பண்றதுக்கு பதிலா கிளம்பி வரலாமேனு தோணிச்சு!” “புரியுது... என் ஸ்கூட்டர்ல வர உனக்கு பயம்!” “அப்படியில்ல கண்ணம்மா... வேணா என் பைக்கை நீயே ஓட்டு. நான் பின்னால உக்காந்து உன்னைக் கட்டிப் பிடிச்சிட்டு வர்றேன்!” “இப்ப என்ன செய்யச் சொல்றே..?” “உன் ஸ்கூட்டரை இங்கியே விட்டுடு... என் பைக்ல வா!” “நாளைக்கு ஆபீசுக்கு உங்கப்பனா கொண்டு வந்து விடுவான்..?” “இந்த விஷயத்துல எங்கப்பன் போட்டிக்கு வந்தா, அப்பன்னு கூடப் பார்க்காம காலி பண்ணிடுவேன்...” “இந்த மாதிரி பையனுக்கு பயந்துதான் எப்பவோ போய்ச் சேர்ந்துட்டாரு அவரு...”

“நான்தான் வேலை, வெட்டி இல்லாம கெடக்கேனே... காலைல உன்னை பிக் அப் பண்ணி ஆபீஸ்ல கொண்டுவந்து விட மாட்டேனா..?” “இப்படித்தான் பிராமிஸ் பண்ணுவ... நைட்டோட ஏதாவது லாக்கப்புல போய் உக்காந்துருவ...” என்று சொல்லிச் சிரித்தபடியே நந்தினி விஜய்யின் பைக்கில் ஏறிக்கொண்டாள். “வேலையை முடிச்சிட்டியா, பாக்க வரலாமானு நாலு தடவை போன் பண்ணிட்ட... செம மூடா..?” “விஷயம் இருக்கு...” என்றான் விஜய்.

உழைப்பாளர் சிலைக்குப் பின்னால் இருந்த உள்சாலையில் பைக்கைக் கொண்டு நிறுத்தினான் விஜய். மணலில் கால்கள் புதையப் புதைய நடந்தார்கள். “ஏண்டா, பீச்சை விட்டா உனக்கு வேற இடத்துக்குக் கூட்டிட்டுப் போகவே தெரியாதா..?” “தெரியும்... ஆனா, நீ வருவியானு தெரியலையே?” “சொல்லு... எங்கேன்னு சொல்லு! நான் வரேனா, வரலையான்னு பார்ப்போம்...” “தெரிஞ்ச லாட்ஜ் ஒண்ணு இருக்கு... மூணு மணி நேரத்துக்கு ரூம் தர்றாங்க. ‘யாரைக் கூட்டிட்டு வந்தே... உள்ளே என்ன பண்ணினே’னு கேக்கவே மாட்டாங்க. அங்க போலாம் வர்றியா..?”

ஹேண்ட்பேக்காலேயே அவனை ஓங்கி அடித்தாள் நந்தினி. “ராஸ்கல்! ஒண்ணு, உர்... உர்...னு இருப்பே. இல்ல, பேசினா இப்படி நா கூசாமப் பேசுவ...” “நீ மட்டும் என்ன! என்னவோ இந்தப்  பேச்சே பிடிக்காதவ மாதிரி ஹேண்ட்பேக்கைத் தூக்கறியே தவிர, உள்ளுக்குள்ள ரசிச்சுக்கிட்டுதானே இருக்கே..?” “ரசிச்சிட்டு இருக்கேனா, சகிச்சிட்டு இருக்கேனானு இப்ப விவாதம் வேணாம்... கம் டு தி பாயின்ட்!” வெளிச்சமும் இல்லாத, இருட்டும் இல்லாத ஒரு மையமான பகுதியைத் தேர்ந்தெடுத்து அமர்ந்தார்கள். மணியடித்துக்கொண்டு வந்த வண்டியில், ஆளுக்கொரு கோன் ஐஸ்க்ரீம் வாங்கிக்கொண்டார்கள்.

“கல்யாணி மேட்டர் என்னைக் குடைஞ்சிட்டே இருக்கு, நந்தினி! நடராஜர் சிலை திருடு போச்சு... அதே சமயம், கல்யாணி உயிரை விட்டா! ஒரே நாள்ல நடந்ததால ரெண்டு விஷயங்களையும் சம்பந்தப்படுத்தியே போலீஸ் குழப்பிக்குது. சிலைத் திருட்டுல ஈடுபட்டவனுக்கு கல்யாணியோட பர்சனல் லைஃப்லயும் ஏதோ தொடர்பு இருக்குன்னு ஏன் நினைக்கணும்? ரெண்டையும் தனித்தனியாப் பிரிச்சு டீல் பண்ணினாலே, பாதிக் குழப்பம் தீர்ந்துடாது..?”

“இப்ப என்ன சொல்ல வர்றே..?” “கும்பமேளா போயிருந்தபோது, கல்யாணி ‘எம்’னு கிறுக்கிட்டிருந்தானு சொன்னேன் இல்லையா? முரளிதரனா இருக்கும்னு கூப்புட்டு விசாரிச்சேன். அவர் மூஞ்சில அடிச்ச மாதிரி பதில் சொல்லிட்டார்...” “டேய்! ‘எம்’னு எழுதினா, அது அவகூட படுத்தவன் பேராதான் இருக்கும்னு யார்டா உனக்குச் சொன்னது..?” “மனசுல ஏதோ உறுத்திட்டு இருக்கும்போது, கை நம்மை அறியாமலேயே தானா சில விஷயங்களைக் கிறுக்கிட்டிருக்கும் நந்து. கல்யாணி மனசுல உறுத்திட்டிருந்ததுதான் அந்த எம்...” “சரி... முரளிதரன் என்ன சொல்றாரு..?”

“மாங்கா மடையனா இருக்கும். ஏன், எம்.டியா கூட இருக்கலாம்னு போற போக்குல சொல்லிட்டுப் போயிட்டார்...” “இப்ப எம்.டி மேல சந்தேகமா..?” “இல்ல... எம்.டி.யோட லெவலே வேற, நந்தினி! அவர் நினைச்சா மினிஸ்டர் பொண்ணு, பெரிய பிசினஸ்மேன் பொண்ணுங்கனு தொடர்பு வெச்சிக்க முடியும். கல்யாணி ஒரு மிடில் க்ளாஸ் பொண்ணு. பார்க்கறதுக்கு உன்னை மாதிரி அழகாக்கூட இருக்க மாட்டா..”

“சந்தடி சாக்குல ஃபைல்ல இப்படி ஒரு பேப்பரைச் சொருகிடுவியே..?” “எங்க டெலிவிஷன்ல வேலை பார்க்கறவங்கள்ல ‘எம்’ல பேரு ஆரம்பிக்கறவங்களை எல்லாம் மண்டைல போட்டு உருட்டிட்டு இருக்கேன். ஒரு முகமது இருக்கான். ஒரு முகுந்தன் இருக்கான். ஒரு முனுசாமி இருக்கான்...” “நூறு மாங்கா மடையன் இருக்கான்றதை விட்டுட்டியே..? டேய், நான் இப்ப எங்க ஆபீஸ்ல இருக்கறவனையா லவ் பண்ணிட்டுத் திரியறேன்..? கல்யாணியோட ஆளும் வெளில இருக்கலாம் இல்ல..?”

“அப்படியிருந்தா, எனக்கு ஒரு ஓரத்துலயாவது க்ளூ கிடைச்சிருக்குமே..? வேற எந்த விஷயத்திலயும் கல்யாணி இவ்வளவு அழுத்தமா இருந்ததேயில்ல...” “ஒண்ணு செய்வோமா? அவளோட ஃபேஸ்புக் அக்கவுன்ட்ல ‘எம்’னு ஆரம்பிக்கற ஃப்ரெண்ட்ஸ் பேர்லாம் செக் பண்ணலாமா..?” “நல்ல ஐடியாதான்...” என்று அவன் சொல்லிக்கொண்டிருக்கும்போது, நந்தினியின் போன் ஒலித்தது. எண்ணைப் பார்த்தாள். “ஏய், உங்கம்மா போன்..!” “எங்கம்மாவா..? உனக்கு எதுக்கு போன் பண்றாங்க..?” நந்தினி, பச்சை பட்டனை அழுத்தி, “சொல்லுங்கம்மா..” என்றாள்.

“ஏய்..!” என்று எதிர்முனையிலிருந்து கரகரப்பான, மிரட்டலான ஆண் குரல் ஒன்று ஒலித்தது. “விஜய், உங்கம்மா போன்லேர்ந்து யாரோ ஆம்பளை பேசறான்...” என்று சொல்லிவிட்டு, போனில் “ஹலோ... யார் பேசறது..?” என்றாள். “உன் லவ்வருக்கு உயிர் மேல ஆசை இல்லியா..?” “ஹலோ..” என்று இந்த முறை நந்தினி குரலை உயர்த்தினாள். “யார் பேசறது..?” விஜய் தவிப்போடு அவளைப் பார்த்தான்.

“கல்யாணியை யார் கர்ப்பமாக்கினதுனு ஒங்காளு தனியா ஏதோ துப்பறிஞ்சுக்கிட்டு இருக்கான்.. அந்த வேலையை உடனே நிறுத்தச் சொல்லு. இல்லேன்னா, கல்யாணிகிட்டயே நேரடியா விசாரிச்சிக்கட்டும்னு, அவ போன அதே இடத்துக்கு அவனையும் அனுப்பி வெக்க வேண்டியிருக்கும். இது லாஸ்ட் வார்னிங்..!” சட்டென்று எதிர்முனையில் தொடர்பு அறுந்தது. “ஹலோ... ஹலோ...” என்று போனில் இரைந்துவிட்டு, நந்தினி நிமிர்ந்தாள். அந்தக் குரல் தன்னிடம் அதிகாரமாக எச்சரித்த விவரத்தை விஜய்யிடம் சொன்னாள்.

“ஐயோ, அம்மாவுக்கு என்னாச்சு..? அவங்க போன் எப்படி அவன் கிட்ட போச்சு..?” என்று விஜய் பதறினான். தன் போனிலிருந்து தன் அம்மாவின் எண்ணை மறுபடி, மறுபடி முயற்சி செய்தான். போன் ஒலித்துக்கொண்டே இருந்ததே தவிர, யாரும் எடுக்கவில்லை. டிடிங் என்ற ஒலியுடன் அவன் போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. “அம்மா போன்லேர்ந்து மெசேஜ்...” என்று அவசரமாகத் திறந்து பார்த்தான்.

‘எம்-மரகதம்’ என்று ஒற்றை வார்த்தை. விஜய் முகம் வெளிறியது. “நந்து... வா! உடனே வீட்டுக்குப் போய்ப் பார்க்கணும்...” மணல் தெறிக்க இருவரும் கிட்டத்தட்ட ஓடி சாலைக்கு வந்தார்கள். பைக் சீறிக்கொண்டு புறப்பட்டது. வீட்டு வாசலில் பைக்கை சைட் ஸ்டாண்ட் போட்டுவிட்டு, விஜய் அழைப்பு மணியை நிறுத்தாமல் அழுத்தினான். சில விநாடிகளில் கதவு திறந்து மரகதம் அங்கே நின்றாள்.

“அம்மா... உனக்கு ஒண்ணும் இல்லியே..?” “ஏன், எனக்கு என்ன..?” என்று மரகதம் கேட்க, அவர்கள் உள்ளே புயலாக நுழைந்தார்கள். “உன் போன் எங்க..?” “ஓ, கண்டுபிடிச்சிட்டாங்களா..?” “என்னம்மா சொல்ற..?” “இன்னிக்கு பிரதோஷம் இல்ல..? கோயிலுக்குப் போயிருந்தேன். கூட்டமான கூட்டம். தரிசனத்துக்குப் போனபோது, நெரிசல்ல போன் எங்கயோ கை நழுவிப் போயிடுச்சுடா! கோயிலுக்குள்ள போறமேனு சைலன்ட் மோட்ல வேற வெச்சிருந்தேன்.

தேடித் தேடிப் பார்த்தேன். கண்டுபிடிக்க முடியல. அப்புறம், கோயில்ல வாட்ச்மேன் கிட்ட ‘போன் கிடைச்சா, எடுத்து வைங்க. நான் அப்புறம் வந்து வாங்கிக்கறேன்...’னு சொல்லிட்டு வந்தேன்.. அவர்தான் உனக்கு போன் பண்ணிட்டாரோனு நினைச்சேன்...” மரகதம் எந்தப் பதற்றமும் இல்லாமல் பேசப் பேச, விஜய்க்குப் பதற்றம் ஏறியது. “எந்தக் கோயில்..?” “யோகேஸ்வரர் கோயில்டா...” அவர்கள் ஏரியாவில் ஒரு காலனியில் இருந்தது அந்தக் கோயில்.

“சரி, கதவைச் சாத்தி தாழ்ப்பாள் போட்டுக்க... வா, நந்தினி!” மரகதம் குழப்பத்துடன் பார்க்க.. நந்தினியுடன் வேகமாக பைக்கைக் கிளப்பினான். சர்ரென்று புறப்பட்டான். யோகேஸ்வரர் கோயில், அந்தக் காலனி மக்களால் சுமார் எழுபது வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட கோயில். வணங்குபவர்களுக்கு யோகம் கிடைக்கிறது என்று நம்பப்பட்டு, காலனி ஆட்களுக்கு இணையாக பொது மக்களிடமும் பிரசித்தி பெற்று அந்தக் கோயில் விளங்கியது. மரகதம் வழக்கமாக அங்கு போய் வந்ததால், அங்கிருப்பவர்கள் அனைவருக்கும் அவளைத் தெரியும்.

விஜய் வண்டியை நிறுத்திவிட்டு, செக்யூரிட்டியாக நின்றிருந்தவரை அணுகினான். “அம்மாவோட போன் இங்க மிஸ் ஆயிடுச்சுனு சொன்னாங்க...” “ஆமா... இன்னிக்கு சரியான தள்ளுமுள்ளு. கூட்டத்துல போனைத் தவற விட்டுட்டாங்க. கீழ கிடந்ததுனு கொஞ்ச நேரம் முன்னாடிதான் ஆபீஸ்ல யாரோ குடுத்துட்டுப் போனாங்க...” கோயிலின் உள்ளேயே இருந்த அலுவலகத்துக்கு விரைந்தான். தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான். அங்கிருந்தவர் மேஜை இழுப்பறையைத் திறந்து மரகதத்தின் போனை எடுத்துக்கொடுத்தார்.

“இதை யார் குடுத்தாங்க..?” “தரிசனத்துக்கு வந்தவாதான். அந்தம்மா பேர்லாம் கேட்டு வாங்கி வெச்சிருக்கேன். அவா பேரு பவானி. இந்தக் காலனிலதான் இருக்கா. கால்ல ஏதோ இடறுதேனு பார்த்து, எடுத்துண்டுவந்து குடுத்துட்டுப் போனா...” “எத்தனை மணிக்கு..?” “ஒரு பத்து நிமிஷம்தான் ஆகியிருக்கும். அதுக்குள்ள நீங்க வந்துட்டேள்...” “தேங்க்ஸ்...” “நீங்க அன்னதானத்துக்கு ஏதாவது தரேளோ..?” “மாசம் ஒருநாளுக்கான பணம் எங்கம்மா கட்டியிருக்காங்க...” “அத்தனையும் புண்ணியம்...”மீண்டும் நன்றி சொல்லிவிட்டு, அந்த போனை வாங்கிக்கொண்டான்.

வெளியில் வந்ததும், முதல் வேலையாக அதிலிருந்து கடைசியாக டயல் செய்த எண்ணைப் பார்த்தான். நந்தினியின் எண்! “இதை போலீஸ்ல கொண்டு கொடுத்தா, இதில யார் கைரேகை இருக்குனு பார்த்து, யார் கடைசியாகக் கையாண்டதுனு சொல்ல முடியுமில்ல..?” என்றான் விஜய். “போடா மாங்கா மடையா! கூட்டத்துல அம்மாவோட போன் விழுந்ததை யாரோ எடுத்து, பயன்படுத்திட்டு மறுபடியும் கீழ போட்டுட்டுப் போயிருக்காங்க. பத்து, இருபது பேர் காலு மிதிச்சிருக்கும்.

பவானின்னு ஒரு அம்மாவோட கைரேகை, ஆபீஸ்ல இருந்த மாமாவோட கைரேகை, உன் ரேகை, என் ரேகைனு எல்லாத்தையும் கழிச்சிட்டு கண்டுபிடிக்கறது சுலபமில்ல...” “இல்ல நந்து.. நெரிசல்ல தற்செயலா கீழ விழுந்திருக்கும்னு நான் நினைக்கல. யாரோ அம்மாவை வேணும்னே இடிச்சு, போனைத் தட்டிவிட்டிருக்காங்க. திருட்டுத்தனமா உனக்கு போன் பண்ணிட்டு கீழ போட்டிருக்காங்கன்னுதான் தோணுது...” விஜய்யின் குரலில் பீதி சேர்ந்திருந்தது. “ஐயோ, அம்மாவுக்கு என்னாச்சு..? அவங்க போன் எப்படி அவன்கிட்ட போச்சு..?”

(தொடரும்...)
ஓவியம்: அரஸ்