நியூஸ் வே



* திருச்சூர் பூரம் திருவிழா உலகப்புகழ் பெற்றது. வடக்குநாதர் ஆலயத்திலிருந்து யானை மீது அமர்ந்தபடி சுவாமி ஊர்வலம் துவங்கி தெற்கு கோபுரக் கதவுகள் திறக்கும்போது எல்லோரும் பரவசத்தில் கைகூப்பித் தொழுவார்கள். இப்போது கைகளை உயர்த்தி செல்ஃபி எடுக்கிறார்கள். பக்தியின் வரையறைகள் மாறுகின்றனவோ!

* மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் கட்சியும் இடதுசாரிகளும் மம்தா பானர்ஜிக்கு எதிராக கரம் கோர்த்திருக்கிறார்கள். ஆனால் இதில் மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு உடன்பாடு இல்லை போலிருக்கிறது. ‘‘இது கூட்டணி இல்லை. தொகுதிப் பங்கீடு புரிந்துணர்வு ஒப்பந்தம்தான்’’ என அவர் சொல்லி வைக்க, இடதுசாரிக் கட்சிகளின் மாநிலத் தலைவர்கள் இப்போது சமாளிப்பு முயற்சிகளில் பிஸி!



* சிவகார்த்திகேயனும், பஹத் ஃபாசிலும் சேர்ந்து ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்கிறார்கள். உடனே அந்தப் படத்தின் மலையாள உரிமை எக்கச்சக்க விலைக்கு விற்பனையாகிவிட்டது.

* வாட்ஸ்அப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டார் ஹீரோ சந்தானம். ‘‘சின்னதா ஒரு ஸ்டில் போட்டா கூட, எல்லாருமே அதைப் பத்தி விசாரிக்க ஆரம்பிச்சிடுறாங்க. ரிவ்யூ பண்றாங்க... இது வொர்க்கை ரொம்ப பாதிக்குது!’’ என விளக்கம் சொல்கிறார். (உங்க ‘தில்லுக்கு துட்டு’ எப்போ ரிலீஸ்?)

* ‘ஹாரிபாட்டர்’ வரிசையில் ஆரம்ப இரண்டு நாவல்களை எழுதும்போது ஜே.கே.ரௌலிங் அமர்ந்திருந்த நாற்காலி 2 கோடியே 60 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போயிருக்கிறது.

* பேஸ்புக் வழியாக ஒரு கட்சியிலிருந்து விலகிய முதல் பிரமுகர் ஆகியிருக்கிறார், நவ்ஜோத் கவுர் சித்து. கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சித்து வின் மனைவியான இவர், பஞ்சாப் மாநில எம்.எல்.ஏ. ‘கடைசியாக எனது சுமை விலகியது. நான் பாரதிய ஜனதாவிலிருந்து விலகிவிட்டேன்’ என அவர் பேஸ்புக்கில் எழுதிய பதிவுக்கு ஏகப்பட்ட லைக்குகள். ஆனால் அம்மணி முறைப்படி ராஜினாமா கடிதம் கொடுக்கவில்லை என்கிறார்கள் கட்சிக்காரர்கள்.

* ‘இம்சை அரசன்’ இரண்டாவது பாகம் ரெடியாக இருக்கிறது. ஷங்கரும், லைக்காவும் சேர்ந்து தயாரிக்கிறார்கள். சிம்புதேவன் மற்ற நடிகர்களின் சேகரிப்பில் தீவிரமாக இறங்கிவிட்டார். இதுதான் வடிவேலுவின் ரீ என்ட்ரி!

* த்ரிஷாவின் தெலுங்கு த்ரில்லர் ‘நாயகி’யின் ஆடியோ வெளியீடு சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்தது. காஸ்ட்யூம் டிசைனர் ஷரவ்யா வர்மா வடிவமைத்திருந்த உடை, த்ரிஷாவிற்கு எக்கச்சக்க பாராட்டுகளை அள்ளிக் குவித்தது என்றாலும், த்ரிஷாவின் கன்னத்தில் பாலகிருஷ்ணா கொடுத்த முத்தம்தான் ஹைலைட் ஆகிவிட்டது.



* சாகச செல்ஃபி எடுப்பது பலருக்குப் பொழுதுபோக்கு. ஆனால் இனிமேல் இப்படி ரயில்களில் எடுக்க முயற்சிப்பவர்கள் மீது, தற்கொலை முயற்சி அல்லது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்த வழக்கு போட்டு ஒரு வருஷம் சிறையில் அடைக்கப்படலாம். சமீப வாரங்களில் ஓடும் ரயில் முன்பு செல்ஃபி எடுத்துக்கொண்ட நான்கு பேர் விபத்தில் இறந்ததை அடுத்து இந்த அதிரடி முடிவு.

ஓடும் ரயில் முன்பு தண்டவாளங்களிலோ, பிளாட்பாரங்களிலோ, ரயில் பெட்டியின் வாசலிலோ நின்று செல்ஃபி எடுத்தால் போலீஸ் கைது செய்யும். ‘‘இப்படி செல்ஃபி எடுப்பவர்களுக்கு மட்டுமில்லை... அவர்களால் மற்றவர்களுக்கும் ஆபத்து நேர்கிறது’’ என்கிறார்கள் ரயில்வே போலீஸார்.

* மணிரத்னம் ஆரம்பிக்கும் படத்தில் ஹீரோயின்கள் ஒவ்வொருவராக வந்து போகிறார்கள். சாய் பல்லவி காத்திருந்துவிட்டு, வேறு கமிட்மென்ட்கள் வந்து விலக, இப்போது பாலிவுட்டிலிருந்து அதிதி ராவ் என்ட்ரி ஆகியிருக்கிறார்.

* விஜய்சேதுபதி நடிக்கும் ஒரு படத்தில் அவரோடு டி.ஆரும் நடிக்கிறார். வலுவான வில்லன் கேரக்டர் என்கிறார்கள்!

* ‘‘நான் தண்ணீரின் குழந்தை. கடலில் நீச்சல் அடிப்பது பிடிக்கும். சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் ஆழ்கடலில் ஸ்கூபா டைவ் அடித்தது மறக்க முடியாத அனுபவம்!’’ என்கிறார்  ‘லிங்கா’ ஹீரோயின் சோனாக்‌ஷி சின்ஹா. கடலில் டைவ் அடிப்பதற்கான சான்றிதழும் வாங்கி வைத்திருக்கிறார் மேடம்!

* வரி ஏய்ப்பைத் தடுப்பதற்காக டெல்லி மாநில அரசு ஒரு புதுமையைச் செய்தது. மக்கள் ஏதாவது பொருட்களை வாங்கும்போது தரப்படும் பில்களை ஒரு இணையதளத்தில் பதிவேற்றச் சொன்னார்கள். அதை வைத்து, சம்பந்தப்பட்ட கடை முறைப்படி வரியைக் கட்டியதா என கண்டறியலாம். ஆனால் இந்த ஆபரேஷனில் வரி ஏய்ப்பைத் தாண்டி பல விஷயங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. லைசென்ஸ் ரத்து செய்யப்பட்ட பல வணிகர்களும் நூற்றுக்கணக்கான டீலர்களும் தொடர்ந்து வியாபாரம் செய்வது தெரிய வந்திருக்கிறது. அரசுக்கு இது பெரிய ஜாக்பாட்!

* ‘‘நாம ரெண்டு பேரும் ஒரே மாதிரி தோற்றத்தில் இல்லேன்னாலும் நீ என் நிழல்... நீ என் தத்துக் குழந்தையாக இல்லையென்றாலும், நீதான் என் முழு பக்கபலம்...’’ - தன் தங்கை ஷாகுன் பிறந்த நாளில் இப்படி கவிதையாக உருகியிருப்பவர் டாப்ஸி பன்னு!



* தமன்னா திடீர் திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்ற செய்தி பரவ, கொதித்து எழுந்துவிட்டார் அவர். ‘‘இன்னும் 5 வருஷத்திற்கு கல்யாணமே இல்லை’’ என சத்தியம் செய்து புரொடியூஸர்களின் வயிற்றில் பாலை ஊற்றிவிட்டார்.

* சந்தோஷ் நாராயணன் ‘கபாலி’, ‘விஜய் 60’, ‘கொடி’ என மூன்று படங்களுக்கு மட்டுமே இசை அமைக்கிறார். தேடி வரும் எல்லா வாய்ப்புகளையும் ஏற்றுக்கொள்ளாமல் ரொம்ப செலக்டிவ்வாக இருக்கிறார். இசையைப் பற்றி பேச ஒன்றும் இல்லையென பேட்டிகளையும் தவிர்த்துவிடுகிறார்.

* சசிகுமார் தொடர்ந்து நான்கு படங்களில் நடிக்கிறார். பிறகு, தான் வெகு நாட்களாக மெருகேற்றி வைத்திருக்கும் ஸ்கிரிப்ட்டை தயாரிக்கும் பணியில் இறங்குகிறார்.

* தாஜ்மகால் முன்பு நின்று காலத்தால் அழியாத படங்கள் எடுத்துக்கொள்ளவே பலரும் விரும்புவார்கள். இங்கிலாந்து இளவரசர் தம்பதி அப்படி எடுத்துக்கொண்ட படம் இது. இந்திய தொல்லியல் துறை இப்போது தாஜ்மகால் கோபுரங்களில் புனரமைப்பு பணிகளைச் செய்துவருகிறது. இதற்காகக் கட்டிய சாரங்களை, இளவரசர் போட்டோ எடுப்பதற்காக அகற்றச் சொன்னார்கள். ஆனால், ‘‘யாருக்காகவும் அகற்ற முடியாது’’ என கண்டிப்பாகச் சொல்லிவிட்டது தொல்லியல் துறை.

* ‘புதிய நியமம்’ படத்திற்குப் பிறகு கேரளாவில் மம்மூட்டியின் கிராஃப் ஏறியிருக்கிறது. அடுத்த ரிலீஸான அவரது ‘வொயிட்’ படத்தில் செம ஸ்டைலிஷான மம்மூட்டியுடன் பாலிவுட் ஹீரோயின் ஹுமா குரேஷி நடிக்கிறார். லண்டன், ஐரோப்பிய நாடுகளில் ஷூட்டிங் நடந்துள்ளது.

* பிரபுதேவா தயாரித்து நடித்துக் கொண்டிருக்கும் ‘காந்தா’ படம் அவருக்கும், நயனுக்கும் இருந்த பழைய நட்பு பற்றியது என்கிறார்கள். ஒரு சிலர் ‘‘இல்லை... இது வேறு கதை’’ என்கிறார்கள். யூனிட்டில் பிரபுதேவாவிடம் கேட்டால், மர்மப் புன்னகையோடு ‘‘நல்லாயிருக்கீங்களா... பிரதர்?’’ எனக் கேட்டவரிடம் விசாரிக்கிறார்.

* இந்தியில் ரன்தீப் ஹீடாவுடன் நடித்து வரும் ‘தோ லஃப்சான் கி கஹானி’ படத்துக்காக மலேஷியா சென்று வந்திருக்கிறார் காஜல். அதனாலேயே சென்னை நட்சத்திர கிரிக்கெட்டில் பங்கேற்க முடியாமல் போனதாம்!



* ‘என் ஆடு திருடு போகல... யாரோ ஆடு திருடுன மாதிரி கனவு கண்டேன்’ என்ற ரேஞ்சுக்கு அந்தர் பல்டி அடித்திருக்கிறது மத்திய அரசு. ஆம், ‘கோஹினூர் வைரம் திருடப்படவில்லை... பஞ்சாப் ஆட்சியாளர்களால் பிரிட்டனுக்கு அன்பளிப்பாகத் தரப்பட்டது’ என சுப்ரீம் கோர்ட்டில் சொன்னது அரசுத் தரப்பு. இதற்கு பல்வேறு பக்கமிருந்தும் எதிர்ப்புக் குரல்கள் எழவே, ‘அயல்நாட்டு உறவு பாதிக்காமல் கோஹினூரை மோடி ஸ்டைலில் மீட்க முயற்சிப்போம்’ என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

* திருவனந்தபுரம் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் கிரிக்கெட் வீரர் சாந்த், ‘கேரளா உலகின் சிறந்த நகரமாக மாறும்’ என ட்விட்டரில் போட்டது பெரும் சர்ச்சையாகிவிட்டது. ‘கேரளா ஒரு மாநிலம்... நகரமல்ல. முதலில் நீங்கள் பொது அறிவையும் பூகோளத்தையும் படியுங்கள்... அதன் பிறகு பாலிட்டிக்ஸ் படிக்கலாம்’ என கமென்ட்ஸ் வர, கண்ணு மண்ணு தெரியாமல் அத்தனை பேரையும் ப்ளாக் செய்து கொண்டிருக்கிறார் சாந்த்.