ஒரு புதிய நம்பிக்கை!



அனல் காற்று வீசும் வெயிலில் தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கு வரவழைத்து மக்களைக் கொல்லும் பெண் முதலமைச்சர், வறட்சிப் பகுதிகளைப் பார்வையிடப் போன இடத்தில் சிரித்தபடி செல்ஃபி எடுத்துக்கொண்ட பெண் அமைச்சர் என சூடேற்றும் செய்திகளையே படித்துவந்த சூழலில் நம்பிக்கைக் கீற்றாக வெளிப்பட்டிருக்கிறார் ஒரு பெண். அவர், தீபா கர்மாகர். ஆகஸ்ட்டில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் ஜிம்னாஸ்டிக் பிரிவில் பங்கேற்க தகுதி பெற்றிருக்கும் வீராங்கனை.



ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் தங்கம் வென்று, ஒலிம்பிக் தகுதியும் பெற்ற தீபாவின் சாதனை சாதாரணமானது அல்ல! ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவில் ஒலிம்பிக் வரலாற்றில் பங்கேற்கும் முதல் இந்திய வீராங்கனை இவர்தான். உலகப் போட்டி ஒன்றில் தங்கப் பதக்கம் வென்றிருக்கும் முதல் இந்தியரும் இவர்தான்.

திரிபுரா தலைநகர் அகர்தலாவைச் சேர்ந்த 22 வயது தீபா இந்த உயரத்துக்கு சாதாரணமாக வந்துவிடவில்லை. இந்திய விளையாட்டு ஆணையத்தில் பணிபுரியும் அப்பாவின் வற்புறுத்தலால் 6 வயதிலிருந்து ஜிம்னாஸ்டிக் பயிற்சி பெற்றார் தீபா. உடலை வருத்தும் இந்தப் பயிற்சியும் விளையாட்டும் பிடிக்கவில்லை. தீபாவின் பாதங்கள் இயல்பான வளைவுகளோடு இல்லாமல் தட்டையாக இருக்கும். இதனால் சராசரி மனிதர்கள் போல அவரால் குதிக்க முடியாது. ஜிம்னாஸ்டிக்ஸில் ஸ்பிரிங் மூவ்மென்ட் அவசியம். குதிக்க முடியாத ஒருவருக்கு இது கைவராது. இதற்காக தீபா கூடுதல் பயிற்சி எடுக்க நேர்ந்தது.

ஆனால் தேசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றதும், அந்த வெற்றி தந்த ருசியில் ஆர்வம் தானாக வந்தது. யாருக்குமே உந்துதல் கிடைக்க ஒரு வெற்றி தேவைப்படுகிறது. அதன்பின் தினமும் 7 மணி நேரப் பயிற்சியில் முழுமை பெற்றார். ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிக்கு காஸ்ட்லி உபகரணங்கள் தேவை. டெல்லி காமன்வெல்த் போட்டிகளுக்காக பிரான்ஸிலிருந்து வந்த உபகரணங்கள் சும்மா மூலையில் கிடக்க, இவர் வெறுமனே 8 மாதங்கள் பயிற்சி எடுத்தார்.

கடைசி நேரத்தில் ஒரு நல்லிதயம் படைத்த அதிகாரியின் முயற்சியால் அவை தீபாவை சென்றடைந்தன. ஆனாலும் முறையான பயிற்சி இல்லாததால் கடந்த ஆண்டு உலக ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகளில் தீபாவுக்கு பதக்கம் கிடைக்கவில்லை. இப்போதுகூட இரண்டு கோஷ்டிகளாகப் பிரிந்து கிடக்கும் இந்திய ஜிம்னாஸ்டிக் ஃபெடரேஷன், வேண்டா வெறுப்பாகவே தீபாவை தகுதிப் போட்டிக்கு அனுப்பியது.

ஆனாலும், ‘‘இந்தியாவுக்காக பதக்கம் வெல்வதே என் லட்சியம்’’ என்கிறார் தீபா. அவர் போட்டியிடும் ‘ப்ரோடுனோவா வால்ட்’ என்பது அபாயகரமான பிரிவு. இரண்டு முறை டபுள் சமர்சால்ட் அடிக்க வேண்டும். குதிக்கும்போது எகிடுதகிடாக அடிபட்டால், வாழ்க்கையே முடிந்துவிடும். ஆனாலும் இந்த ஆபத்தில் கிடைக்கும் வெற்றி அவருக்கு ருசிக்கிறது. தீபாக்கள்தான் இந்தியாவின் ஆன்மாவை ஜீவிக்க வைத்திருக்கிறார்கள்.

- அகஸ்டஸ்