முதல்முறை வாக்காளர்களின் ஓட்டு யாருக்கு?



‘‘வருங்காலத் தலைமுறையைப் பற்றி துளியளவும் அக்கறையில்லாத ஒரு அரசைத்தான் தமிழகம் 5 ஆண்டுகளாக சுமந்து கொண்டிருந்தது. கல்வித்துறையை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. தொடக்கக்கல்விக்கும் உயர்கல்விக்கும் தனித்தனி அமைச்சர்கள் இருந்தும், அவர்களின் பெயரைக்கூட மாணவர்கள் அறியவில்லை. அந்த அளவிற்கு இருந்தது அவர்களின் செயல்பாடு. மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் கொடுத்த பல வாக்குறுதிகள் காற்றோடு கரைந்து போய்விட்டன. ஒரு சான்றிதழ் வாங்குவது தொடங்கி துணைவேந்தர் பதவி வரை எல்லாவற்றிலும் லஞ்சம், முறைகேடுகள். இளைய சமுதாயத்துக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்திய அ.தி.மு.கவுக்கு முதல்முறை வாக்காளர்கள் நிச்சயம் வாக்களிக்கப் போவதில்லை...’’



- ஆவேசமாகப் பேசுகிறார் மலர்விழி. இந்திய மாணவர் சங்கத்தின் மத்தியக் குழு உறுப்பினர். மலர்விழியின் குரல்தான், தமிழகமெங்கும் உள்ள முதல் தலைமுறை வாக்காளர்களின் குரலாக இருக்கிறது. கல்வி, வேலைவாய்ப்புகளில் நிலவும் மந்தநிலையும், முறைகேடுகளும் இவர்களை மனம் வெதும்பச் செய்திருக்கிறது. மாணவர்களுக்கு ஷூ, சீருடை என பல இலவசங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் கல்வி மட்டும் இலவசமாகக் கிடைக்கவில்லை. தனியார் கல்வி நிறுவனங்களை ஆசீர்வதித்து, அரசு நிறுவனங்களை முடங்கச் செய்கிற அரசின் மீதான கோபத்தை மனதில் சுமந்துகொண்டிருக்கிறார்கள் இந்த இளைஞர்கள்.

‘‘கடந்த 5 ஆண்டு காலம் தமிழகத்தை ஆட்சி செய்த அ.தி.மு.க, உண்மையான நோக்கத்தில் மாணவர்களுக்கு எதையும் செய்யவில்லை. எல்லாவற்றிலும் ஓட்டுக்கணக்கு. கல்வி, வேலை... எல்லாவற்றுக்கும் விலை. எந்தப் பின்புலமும் இல்லாத அடித்தட்டுக் குடும்பத்துப் பிள்ளைகளுக்கு இங்கே எதுவும் கிடைக்காது. அரசுப் பள்ளிகளைக் கண்டு கொள்ளாமல் திட்டமிட்டே புறக்கணித்து தனியார் பள்ளிகளை ஊக்குவித்திருக்கிறார்கள். கல்வி பெரும் செலவு பிடிக்கும் விஷயமாகி விட்டது. பெரிய தொகையை முதலீடு செய்து படிப்பை முடிக்கிற ஒரு மருத்துவரோ, ஆசிரியரோ... எப்படி சமூகத்துக்கு சேவை செய்வார்? அந்தப் பணிகளையும் வணிகமாக்கவே செய்வார்.

மாணவர்கள்தான் தேசத்தின் எதிர்காலம். அக்கறையுள்ள, சமூக நலன் மீது கவனமுள்ள ஒரு அரசு, மாணவர்களைத் தகுதி வாய்ந்தவர்களாக வளர்த்தெடுக்க வேண்டும். அதைச் செய்யாமல், எல்லாவற்றிலும் கட்சி நலன், கட்சிக்காரர்கள் நலனை முன்னிறுத்தி செயல்பட்ட அ.தி.மு.க. அரசை, முதல்முறை வாக்களிக்கும் வாக்காளர்கள் கண்டிப்பாக வீட்டுக்கு அனுப்புவார்கள்’’ என்கிறார் மலர்விழி.

2011 தேர்தலில், ‘பல லட்சம் வேலைகள் புதிதாக உருவாக்கப்படும்’ என வண்ண வண்ணமாக வாக்குறுதிகள் கொடுத்தது அ.தி.மு.க. பால் பண்ணைகளில் 10 லட்சம் பேருக்கு வேலை, தண்ணீர் ஃபேக்டரியில் 5 லட்சம் பேருக்கு வேலை என்றெல்லாம் நம்பிக்கை விதைத்தார்கள். ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில் மின்தடை, பன்னாட்டு கம்பெனிகள் ஓட்டம் காரணமாக பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்ததுதான் மிச்சம். எஞ்சினியரிங் கல்லூரிகளுக்கு கண்மூடித்தனமாக அங்கீகாரம் கொடுத்ததால் லட்சக்கணக்கான மாணவர்கள் படிப்பை முடித்து வெளியில் வருகிறார்கள். பரோட்டா மாஸ்டருக்குக்கூட மாதம் 25 ஆயிரம் சம்பளம் கிடைக்கிறது. எஞ்சினியர்களுக்கு 10 ஆயிரம் சம்பளம் கொடுக்க ஆளில்லை.



‘‘ஆட்சிக்கு வந்ததுமே, பெரும் போராட்டத்துக்கு மத்தியில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வியை முடக்கினார்கள். 100 நாட்கள் மாணவர்கள் புத்தகமே இல்லாமல் பள்ளிக்கூடம் சென்றார்கள். கல்வியில் நிலவுகிற ஏற்றத்தாழ்வுகளை அகற்றி அனைவருக்கும் பொதுவான கல்வியாகக் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வியை முடக்கியதன் மூலம் இவர்களின் முகத்திரை கிழிந்தது. 

மாணவர்களுக்கு இந்த அரசு செய்ததெல்லாம், அவர்களை மதுவின் வாசனையிலேயே ஊறிக் கிடக்கச் செய்ததுதான். மொத்தமுள்ள 7000 டாஸ்மாக் கடைகளில் 3000 கடைகள் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் உள்ளன. தமிழகத்தில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை 2500. ஆனால் இந்தப் பள்ளிகளுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கை 2800. கடந்த 3 ஆண்டுகளில் நிறைய மாணவர்களை குடிகாரர்களாக மாற்றியதுதான் இந்த அரசின் சாதனை.

திருப்பூரில், கோவையில், கரூரில், நாமக்கல்லில் மாணவர்களும் மாணவிகளும் குடித்துவிட்டு விழுந்து கிடந்ததை இந்த நாடே பார்த்து கலங்கியது. மது குடித்த மாணவர்களை சஸ்பெண்ட் செய்தார்கள். பள்ளிக்கு அருகில் மதுக்கடைகளை திறந்து வைத்த இந்த அரசுக்கு என்ன தண்டனை? மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்று கோரி பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 1000 பேர் திரண்டு போராட்டம் நடத்தினார்கள். அவர்களை அடித்து நொறுக்கி 1 மாதம் சிறையில் அடைத்து வதைத்தார்கள். உலகில் வேறெங்கும் இதுமாதிரி கொடூரம், அடக்குமுறை நடக்காது.

‘35 அரசுக் கல்லூரிகளைத் திறந்திருக்கிறோம்’ என்று பெருமை பேசுகிறார்கள். ஆனால் பெரும்பாலான கல்லூரிகளை எங்கே திறந்திருக்கிறார்கள் தெரியுமா? ஆரம்ப சுகாதார நிலையங்களில்... பால்வாடிகளில்... திருவொற்றியூர் கல்லூரி அரசு தொடக்கப்பள்ளியில் திறக்கப்பட்டிருக்கிறது. வேலூரில் கால்நடை மருத்துவமனையில் திறந்திருக்கிறார்கள். ஆய்வுக்கூடங்கள் எல்லாம் அப்புறம், மாணவர்கள் உட்காரக்கூட வசதியில்லை.



கல்வி நிறுவனங்களை கண்காணிக்க எந்த ஏற்பாடும் இல்லை. தனி ராஜ்ஜியத்தைப் போல தனியார் கல்வி நிறுவனங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதன் வெளிப்பாடுதான், கள்ளக்குறிச்சியில் 3 மாணவிகளின் மரணம். கடந்த 5 ஆண்டுகளில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். காவல்துறையின் பதிவுப் புத்தகம் அதற்கு வெவ்வேறு காரணங்களைச் சொல்லலாம். ஆனால், கல்வி நிறுவனங்களின் அராஜகம், கட்டணம் கட்ட முடியாத அவலம் என இதற்கு வெளியில் சொல்லப்படாத பல காரணிகள் இருக்கின்றன.

மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் முற்றிலும் விரோதமாகச் செயல்பட்ட இந்த அரசுக்கு உணர்வுள்ள எந்த இளைஞனும் வாக்களிக்க மாட்டான்...’’ என்று ஆவேசமாகச் சொல்கிறார் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில அமைப்பாளர் கணேசன். ‘‘கல்வித்துறைக்கு பொறுப்பு வகித்த அமைச்சர்கள், கடந்த 5 ஆண்டுகளில் எந்த ஒரு கல்வி நிறுவனத்திற்கேனும் சென்று ஆய்வு செய்திருப்பார்களா? விளையாட்டுத்துறை அமைச்சர் இரவு நேரத்தில் விடுதிக்குப் போய் மாணவிகளின் சட்டையைப் பிடித்து, ‘உங்களுக்கு வீணாக சோறு போட்டுக் கொண்டிருக்கிறோம்’ என்கிறார். அமைச்சர்களால் இங்கே விளைந்தது எதுவுமே இல்லை.

மாலைநேரக் கல்லூரிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இன்னும் ரூ.10 ஆயிரம் சம்பளத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் இங்கு 6000 பள்ளிகளில் கழிவறையே இல்லை என்று மத்திய அரசின் அறிக்கையில் சொல்லப்படுகிறது. அரசுப்பள்ளியில் சரிவர கழிப்பறை கட்டக்கூட முடியாத ஒரு அரசு, மாணவர்களின் எதிர்காலத்துக்கு எதைச் செய்துவிடப் போகிறது..?

பல பள்ளிகளில் ஆய்வகங்களே இல்லை. ஆனால், 4362 ஆய்வக உதவியாளர்களை நியமிக்கப்போவதாகச் சொல்லி தேர்வெல்லாம் நடத்தினார்கள். பிறகு, நேர்காணல் மூலம் பணி நியமனம் செய்வோம் என்றார்கள். நீதிமன்றமே தேர்வை கருத்தில் கொள்ள வேண்டும் என்று தீர்ப்பளித்த பிறகும் எதுவும் நடக்கவில்லை. இந்தப் பணியிடத்துக்கு ரூ.7 லட்சம் வரை கட்சிக்காரர்கள் வசூலித்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. இப்படி எல்லா மட்டத்திலும் முறைகேடுகள் புரையோடிக் கிடக்கின்றன.

இப்படி எல்லா மட்டத்திலும் மக்களை ஏமாற்றி ஓட்டு அறுவடை செய்ய முயலும் அ.தி.மு.க. அரசை இந்தத் தேர்தலில் மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள்’’ என்கிறார் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மாரியப்பன். தமிழகமெங்கும் முதல் முறை வாக்களிக்கும் இளைஞர்களின் மனநிலை இப்படியாகத்தான் இருக்கிறது..!

காற்றில் கரைந்த வாக்குறுதிகள்

கடந்த 2011 தேர்தலில் அதிமுக கொடுத்த வாக்குறுதிகள்

* வறுமைக்கோட்டுக்கும் கீழேயுள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசமாக வழங்கப்படும். இதன்மூலம் புதிதாக 5.6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு.
* புதிதாக ஒரு லட்சம் பேருக்கு போக்கு வரத்துத் துறையில் வேலைவாய்ப்பு. 2015க்குள் 100 பெரிய பால் பண்ணைகள், பால் பதப்படுத்தும் நிலையங்கள், மதிப்புக் கூட்டப்பட்ட பால் பொருட்கள் தயாரிக்கும் சிறு மற்றும் பெரிய தொழிற்சாலைகள் உருவாக்கப்படும். அதன்மூலம் 10 லட்சம் பேருக்கு கிராமப்புறங்களில் சுய வேலைவாய்ப்பு.
* பல்கலைக்கழகங்களை உலகத்தரத்துக்கு உயர்த்த  12 அம்சத் திட்டம்.
* மாணவர்களின் பன்முகத்திறனை ஊக்குவிக்க தனித்திறமை மற்றும் அறிவு சார் வளர்ச்சிக் கழகம் உருவாக்கப்பட்டு அதன்மூலம் பயிற்சிகள் வழங்கி, உடனடி வேலைவாய்ப்பு பெறும் நிலை உருவாக்கப்படும்.
* எஸ்.சி., எஸ்.டி., எம்.பி.சி. மற்றும் சிறுபான்மை சமூக இளைஞர்களுக்கு 25 சதவீத மானியத்தில் தொழில்கடன் வழங்கப்படும். வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படும்.

யாருக்கு ஓட்டு?

சாம், வேலூர்
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களின் மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கான கட்டணத்தை அரசே ஏற்றுக் கொள்வதாக தி.மு.க. அறிவித்துள்ளது. அதற்காகவே என் வாக்கு அவர்களுக்குத்தான்.

ஆகாஷ், ஆற்காடு
மதுக்கடைகளை மூடி, மாணவர்களின் நலனில் அக்கறை காட்டும் கட்சிக்குத்தான் என் வாக்கு.

பரசுராமன், ஆற்காடு
நான் தரப்போகும் முதல் வாக்கு, எதிர்காலத் தலைமுறை மீது அக்கறை கொண்டவர்களுக்குத்தான். நிச்சயம் அ.தி.மு.க.வுக்கு இல்லை.

விக்னேஷ், வளையாம்பட்டு
மாணவ சமுதாயத்துக்கு எந்த கட்சி நல்லது செய்யுமோ அந்தக் கட்சிக்கே எனது முதல் வாக்கை பதிவு செய்வேன்.

கார்த்தி, காமராஜபுரம்
ஏழைகளுக்கு எந்தக் கட்சி நல்லது செய்கிறதோ அந்தக் கட்சிக்கே எனது ஓட்டு.

சரவணன், வாணியம்பாடி.
விவசாயக்கடன் தள்ளுபடி, கல்விக்கடன் தள்ளுபடி, வட்டியில்லா கடன் உதவி செய்ய எந்தக் கட்சி முன் வருகிறதோ அந்தக் கட்சிக்கே எனது ஓட்டு.

தமிழ்ச்செல்வம், திருவண்ணாமலை
இந்த ஆட்சியில் வேலைவாய்ப்பு இல்லாமல் மாணவர்கள் தவிக்கிறார்கள். வேலைவாய்ப்பை மேம்படுத்தும் கட்சிக்கே என் வாக்கு.

ஆர்.சூர்யா, திருவண்ணாமலை
எளிதில் அணுகமுடிந்த முதல்வர், அக்கறை கொண்ட மக்கள் பிரதிநிதி... இதை மனதில் வைத்தே வாக்களிப்பேன். 

நந்தகுமார், செய்யாறு
என் முதல் வாக்கு அ.தி.மு.கவுக்கு இல்லை. லஞ்சமற்ற, ஊழலற்ற, ஆக்கபூர்வமான ஆட்சி அமைப்பவர்களுக்குத்தான்.

நாகார்ஜுன், வேலூர்
படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும், இலவசங்களை ஒழிக்கும் கட்சிக்கே எனது முதல் வாக்கு.

நரேஷ், காட்பாடி
என்னுடைய முதல் ஓட்டை யாருக்கும் விற்க மாட்டேன். தகுதிவாய்ந்த வேட்பாளரைத் தேர்வுசெய்து வாக்களிப்பேன்.

வினோத்குமார், நாமக்கல்
கடந்த 5 ஆண்டுகளில் எங்கள் மாவட்டத்தில் ஒரு தொழிற்சாலை கூட தொடங்கப்படவில்லை. வேலைவாய்ப்பு தேடி, படித்த இளைஞர்கள் வெளி மாநிலங்களுக்குச் செல்கிறார்கள். மாற்றத்தை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

ராஜ்குமார், நாமக்கல்
அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சர்கள் கூட முதல்வரை சந்திக்க முடியாது. மக்களையும் முதல்வர் சந்திப்பது இல்லை. மீண்டும் அதே நிலை தமிழகத்துக்கு வரக்கூடாது.

கிரிதரன், நாமக்கல்
மதுக்கடைகளை மூடுவது பற்றி 5 ஆண்டுகளில் பேசாத முதல்வர், இப்போது படிப்படியாக மூடுவோம் என்கிறார். இதை நம்பத் தயாராக இல்லை.

ரமேஷ், பென்னாகரம்
தமிழக காவல்துறையில் 19 ஆயிரம் காலி இடங்கள் உள்ளன. இதை நிரப்ப அ.தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை. புதிதாக அமைய உள்ள அரசாவது போலீஸ் ஆகக் காத்திருக்கும் எங்களைப் போன்ற இளைஞர்களின் கனவை நனவாக்கட்டும்.

பரசுராமன், சோமனஅள்ளி
பென்னாகரத்தில் தொழிற்பேட்டை வேண்டும் என்று கோரிக்கை விடுத்து ஓய்ந்து விட்டோம். அதை காதில் வாங்கவில்லை அ.தி.மு.க அரசு. இந்தமுறை எங்கள் வாக்கு அ.தி.மு.க.வுக்கு இல்லை.

நரேன், அதகபாடி
தகுதித்தேர்வு மூலம் ஆசிரியர் ஆகிவிடலாம் எனக் காத்திருக்கிறேன். 2 ஆண்டாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தாததால் தற்போது கூலி வேலை செய்து வருகிறேன். புதிதாக அமைய உள்ள ஆட்சியாவது ஆசிரியர் தகுதித் தேர்வை ஆண்டுதோறும் நடத்த வேண்டும்.

சிலம்பரசன், நாராயணபுரம்
லேப் டெக்னீஷியன் போன்ற பல பதவிகளுக்கு லஞ்சம் வாங்கிக்கொண்டு ஆட்களைச் சேர்க்கின்றனர். எங்கள் நம்பிக்கை பொய்த்து விட்டது.

நிஷா, பர்கூர்
நாங்கள் இன்றும் குடிநீருக்காக கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கின்றோம். இப்போது நான் முதன்முதலாக வாக்களிக்கப் போகிறேன். அந்த வாக்கை வீணாக்க விரும்பவில்லை.

பிரபாவதி, ராயக்கோட்டை
அ.தி.மு.க அமைச்சர்கள் பற்றி வருகிற செய்திகள் அதிர வைக்கின்றன. திரும்பவும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள். கண்டிப்பாக அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க மாட்டேன்.

ராஜேஷ்குமார், தண்டேகுப்பம்
வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நாள் ஒன்றுக்கு 20 லிட்டர் வழங்குவோம் என்றார்கள். இப்போது குடிநீரை பாட்டிலில் அடைத்து விற்கிறார்கள். என் முதல் வாக்கு அ.தி.மு.க.வுக்கு அல்ல.

ரிச்சர்டு எட்வின், கிருஷ்ணகிரி
அ.தி.மு.க அமைச்சர்களையோ, எம்எல்ஏக்  களையோ நான் நேரில் பார்த்ததுகூட இல்லை. இப்படியான மக்கள் பிரதிநிதிகள் எங்களுக்குத் தேவையில்லை.

சந்தோஷ், கிருஷ்ணகிரி
படித்த இளைஞர்களுக்கு நிரந்தரமாக எந்த வேலைவாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. இதுபோன்ற அரசு தொடர்ந்தால் எங்களைப் போன்ற இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும்.

பிரியதர்ஷினி, வெலகலஅள்ளி
எல்லா திட்டத்துக்கும் அந்த அம்மா பெயரையே வைத்துக் கொள்கிறார்கள். மக்கள் வரிப்பணத்தைக் கொண்டு உருவாக்கப்படும் திட்டங்களுக்கு அவர்கள் பெயர் வைத்துக் கொள்வது நியாயமா?

முகமது ராசிக், வடசேரி
வெறும் விளம்பர ஆட்சிதான் கடந்த 5 ஆண்டுகளில் நடந்தது. என் முதல் வாக்கு இந்த ஆளுங்கட்சிக்கு அல்ல.

ரகீஷ், வடசேரி
படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் இந்த அரசு எந்த தொழிற்சாலைகளையும் திறக்கவில்லை. அதனால் வரும் தேர்தலில் அ.தி.மு.க.விற்கு வாக்களிக்க மாட்டேன்.

அனுப்பிரியா, நாகர்கோவில்
தமிழகமே மதுவின் பிடியில் உள்ளது. இவ்வளவு காலம் இல்லாமல் இப்போது தமிழக முதல்வருக்கு மதுவிலக்கின் மீது அக்கறை வந்துள்ளது. நாங்கள் ஏமாறத் தயாராக இல்லை.

அனுஷா வளர்மதி, நாகர்கோவில்
தினமும் கொலை, கொள்ளை சம்பவங்கள். எதிர்காலத்தை நினைத்தாலே அச்சமாக இருக்கிறது. ஆக்கபூர்வமான ஒரு அரசால்தான் இந்த நிலையை மாற்றமுடியும்.

கார்த்திக், மீனாட்சிபுரம்
விலைவாசி உயர்வு, மின்கட்டண உயர்வு என அடிமட்ட மக்களை இந்த அரசு வஞ்சித்துள்ளது. நிச்சயம் அ.தி.மு.க.வுக்கு என் வாக்கு இல்லை.

வைகுண்டராஜா, கன்னியாகுமரி
மதுவை தமிழகத்தில் முற்றிலும் ஒழிக்கும் ஆட்சி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ஆட்சி வரவேண்டும்.

ராகவன்,  இடையன்விளை
கல்விக் கடனை ரத்து செய்யும் கட்சியே ஆட்சிக்கு வரவேண்டும்.

காளிமுத்து, வெள்ளையன்தோப்பு
பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஜாதி மதம் இன்றி கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும். இதை நிறைவேற்றும் ஆட்சி மலர வேண்டும்.

ரமேஷ், ஈத்தாமொழி 
படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் ஆட்சி வந்தால் மட்டுமே முன்னேற்றம் ஏற்படும். அதை வாக்குறுதியாக அளித்துள்ள கட்சிக்கே எனது முதல் வாக்கு. 

கார்த்திகா, கன்னியாகுமரி
மதுவிலக்கை உடனே அமல்படுத்தும் ஆட்சி வர வேண்டும். அதை முன்னிறுத்தும் கட்சிக்கே என் முதல் வாக்கு.

சபிஷா, தென்தாமரைக்குளம்
விலைவாசியைக் குறைத்து சாதாரண மக்கள் வாழ்க்கை நடத்த வழி செய்யும் ஆட்சி வர வேண்டும்.

தினேஷ், கோவில்பட்டி
ஏழைகளுக்கு தரமான உயர் கல்வி எட்டாக்கனியாகி விட்டது. விவசாயமும் கண்டு கொள்ளப்படவில்லை. ஆட்சி மாற்றம் வேண்டும்.

ஷேக் காதிர், திருநெல்வேலி
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ேவண்டும். எனவே அ.தி.மு.க.விற்கு வாக்களிக்க விரும்பவில்லை.

அருள் ஜெனிசா, தென்காசி
இலவசங்கள் வேண்டவே வேண்டாம். கல்வித் தகுதிக்கு ஏற்ற வேலைவாய்ப்பை வழங்கவேண்டும். அ.தி.மு.க.விற்கு ஓட்டு போட மாட்டேன்.

அனிதா, பாளையங்கோட்டை
எங்கும், எதிலும் லஞ்சம். இளம் வாக்காளர்கள் வெறுப்படைந்துள்ளோம். லஞ்சம், ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தாவை அமல்படுத்த ேவண்டும். தகுதியை வைத்து நல்ல வேலைவாய்ப்புகளைத் தரும் நல்லவர்களுக்கே வாக்களிப்போம்.

சாமி, கீழப்பாவூர்
வேலை வாய்ப் பின்மை ஒழிய வேண்டும். மாணவர்கள் நலனில் அக்கறை கொண்ட, வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிப்பவர்களுக்கே எனது வாக்கு.

- தினகரன் செய்தியாளர்கள் உதவியுடன்
வெ.நீலகண்டன்