முதல்வர் வேட்பாளர்களை எதிர்க்கும் இளைஞர்கள்!



இந்த வருடமும் இல்லாத அளவுக்கு கேரளாவில் வெயில் சுட்டெரிக்க, தேர்தல் களமும் செம சூடு பிடித்திருக்கிறது. இங்கு நட்சத்திர அந்தஸ்து பெற்றிருக்கும் தொகுதிகள் இரண்டு. ஒன்று, முதல்வர் உம்மன் சாண்டி போட்டியிடும் புதுப்பள்ளி... மற்றொன்று ‘அடுத்த முதல்வர்’ என்று சொல்லப்படும் இடது கம்யூனிஸ்ட் மூத்த தலைவரான வி.எஸ்.அச்சுதானந்தன் போட்டியிடும் மலம்புழா. இந்த இருபெரும் தலைகளையும் எதிர்த்து நிற்பது, முதல்முறையாக தேர்தல் களத்தில் குதித்த இளைஞர்கள் என்பதுதான் ‘எண்டே அம்மே’ பரபரப்பு!

பாலக்காட்டுக்கு ரொம்பப் பக்கத்தில் இருக்கிறது மலம்புழா. இங்கே மூன்று முறை வெற்றி பெற்று நான்காவது முறையாக களத்தில் நிற்கிறார் அச்சுதானந்தன். இவருக்கு 92 வயதாகிறது. இவரை எதிர்த்துப் போட்டியிடுவது வி.எஸ்.ஜோய். காங்கிரஸ் இளைஞர் அணியின் தலைவர். இவருக்கு வயது 29. ஆம், ‘92க்கு போட்டியாக 29’ என செம காயினேஜ் கிடைத்துவிட, இதைப் பேசிப் பேசி மாய்கின்றன கேரள மீடியாக்கள்.



‘‘தோழர் அச்சுதானந்தன் அரசியலிலிருந்து விருப்ப ஓய்வு எடுக்க வேண்டிய காலம் கடந்து எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும். மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டும் அவர் தொகுதி இன்னும் பின்தங்கியே இருக்கிறது!’ என்கிறார் ஜோய். இவர் ஒரு வழக்கறிஞர். ‘‘ஜோய் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். மலம்புழா இடது முன்னணியின் கோட்டை. அச்சுதானந்தன் இடது முன்னணியின் இதயம்... அவர் மலம்புழாவின் பெருமை. அவரது வெற்றி உறுதி!’’ என அதற்கு பதில் சொல்கிறது இடது முன்னணி.

இங்கே இந்தக் கதை என்றால், கோட்டயம் அருகில் உள்ள புதுப்பள்ளியின் நிலவரம் இன்னும் உக்கிரம். இந்தத் தொகுதியின் நிரந்தர எம்.எல்.ஏ என உம்மன் சாண்டியை சொல்லலாம். பத்து முறை இதே மண்ணில் ஜெயித்திருக்கும் ஜாம்பவான். பெரும்பாலான ஞாயிற்றுக் கிழமைகளில் இவரது வீடு தொகுதி மக்களுக்காகத் திறந்தே இருக்கும். உள்ளூர் சர்ச்சில் இடமில்லை என்றால், வெளியே படியில் கூட அமர்ந்துவிடுவார். அத்தனை எளிமை. அதனால் தொகுதியில் எக்கச்சக்க செல்வாக்கு.



அப்படிப்பட்டவரை எதிர்த்து நிற்பது, 26 வயதே ஆன ஜைக் தாமஸ். இடது கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அணித் தலைவர் இவர். கோட்டயம் கல்லூரியில் படித்தபோது நடத்திய மாணவர் போராட்டம் மூலம் இவர் கேரள மக்களிடம் பிரபலம். சர்வதேச உறவுகள் குறித்த முதுநிலை பட்டப்படிப்பை முடித்து, தேர்வு முடிவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஜைக், தேர்தல் முடிவும் தனக்குச் சாதகமாக அமையும் என நம்புகிறார்.

ஏற்கனவே 2011க்கு முன்பு நடந்த இரண்டு தேர்தல்களில், உம்மன் சாண்டியை எதிர்த்து இரண்டு பெண் மாணவத் தலைவிகள் இடது முன்னணி சார்பாகப் போட்டியிட்டு தோற்றுள்ளனர். பெரும்பாலும் பெரும் தலைகளை எதிர்த்து நிற்கும் இளைஞர்களின் நிலை இதுதான். இவர்களும் அதே லிஸ்ட்டில் சேருவார்களா? அல்லது, காமராஜரைத் தோற்கடித்த மாணவர் போல சரித்திரம் பேசும் சாதனை வெற்றியை ருசிப்பார்களா? அதை தேர்தல்தான் சொல்ல வேண்டும்.

ஆரோக்கிய ரகசியம்!

தேர்தலுக்காக தற்போது மலம்புழாவில் வாடகை வீட்டில் வசிக்கும் அச்சுதானந்தனின் ஆரோக்கியம் ஒரு அதிசயம்தான். தினமும்  இரண்டு கி.மீ நடப்பதும், தரமான, அளவான உணவு சாப்பிடுவதும், யோகாவும், மூலிகை மரத்தால் செய்யப்பட்ட கட்டிலில் உறங்குவதும்  இவரது ஆரோக்கிய ரகசியங்கள். எழுந்து நிற்க, படிகள் ஏற இறங்க மட்டும் சில சமயங்களில் பிறர் உதவி தேவைப்படும். பிரசாரக் கூட்டங்களில் நின்று கொண்டுதான் பேசுகிறார். அவரது இரும்புக்குரலில் எந்த மாற்றமும் இல்லை. தேர்தல் சமயத்தில் நிறைய பேசவேண்டியிருப்பதால், மூலிகை சூரணம் சுவைத்து தொண்டையைப் பாதுகாக்கிறார். வெயிலுக்கு மோரும், இளநீரும் மட்டும்தான்.



உம்மன்  சாண்டியை எதிர்த்து இரண்டு பெண் மாணவத் தலைவிகள் இடது முன்னணி சார்பாகப் போட்டியிட்டு தோற்றுள்ளனர். பெரும்பாலும் பெரும் தலைகளை எதிர்த்து நிற்கும் இளைஞர்களின் நிலை இதுதான். இவர்களும் அதே லிஸ்ட்டில் சேருவார்களா?

ரயில் விளம்பரம்!

கேரள தேர்தலில் சம்பிரதாய சுவரொட்டிகள், ஃப்ளெக்ஸ் போர்டுகள், சுவர் விளம்பரங்களைத் தாண்டி, முகநூல், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களிலும் பிரசாரம் செய்து கலக்குகிறார்கள் கேரள  அரசியல்வாதிகள். அனைத்துக்கும் மேலாக இடது முன்னணி, திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு நகரைத் தொட்டுச் செல்லும், ரயில்களில் எல்லாம் தலா மூன்று பெட்டிகளின் வெளிப்புறத்தை  தங்கள் விளம்பரங்களுக்காக வாடகைக்கு எடுத்துள்ளார்கள். இந்த ரயில் விளம்பர ஐடியா கேரளத்தில் செம ஹிட். தொடர்ந்து காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகளும் இதே முயற்சியில் இறங்கப் போகிறார்களாம்!

- பிஸ்மி பரிணாமன்