வணிகர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கிறதா தேர்தல் ஆணையம்?



தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளால் பெரும்பாலான அரசியல் கட்சிகளுக்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. ஆனால் வணிகர்கள் பாடுதான் படு திண்டாட்டமாகி விட்டது. ‘‘சோதனை என்ற பெயரில் தேர்தல் ஆணையம் எங்கள் வாழ்வாதாரத்தையே பறித்து விட்டது’’ என்று குமுறுகிறார்கள் வணிகர்கள்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மார்ச் 4 முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன. முடிவுகள் வெளியாகும் வரை இவை அமலில் இருக்கும். வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் கொடுப்பதைத் தடுக்கும் நோக்கில், உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம்கொண்டு சென்றாலோ, பொருட்கள் கொண்டு சென்றாலோ, பறக்கும் படையினர் கைப்பற்றி கருவூலத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பது அதில் ஒரு விதி.



உரிய ஆவணத்தைக் காட்டிய பிறகு பணத்தையோ, பொருளையோ பெற்றுச் செல்லலாம். இந்த விதிமுறைதான் வணிகர்களை வதைக்கிறது. தற்போது வரை ரூ.10 கோடிக்கு மேல் பறிமுதல் செய்திருக்கிறார்கள். பெரும்பாலானவை சிறு, குறு வியாபாரிகள், அப்பாவி பொதுமக்களுடையது என்று வருந்துகிறார்கள்.

‘‘கன்டெயினரில் போகிறது, பஸ்சில் மூட்டை வருகிறது, தோட்டத்தில் புதைக்கப்பட்டிருக்கிறது என்றெல்லாம் ஆதாரங்களோடு வரும் செய்திகளைக் கண்டுகொள்ளாமல், அரிசி வாங்க, பருப்பு வாங்க ரொக்கம் கொண்டு செல்கிற வணிகர்களையும், மருத்துவத் தேவைக்கும், பிள்ளைகளின் திருமணத்துக்கு பொருட்கள் வாங்கவும் செல்கிற மக்களையும் மறித்து பணத்தைப் பறிக்கிறார்கள் அதிகாரிகள்’’ என்று குற்றம் சாட்டுகிறார்கள். இந்தக் கெடுபிடியால் தமிழகத்தில் சுமார் 30% வணிகம் சரிந்திருப்பதாகவும், தினமும் ரூ.1200 கோடி வரை வர்த்தகம் பாதிப்பதாகவும் கணக்குச் சொல்கிறார்கள் அவர்கள்.

‘‘தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், அதைக் காரணமாக வைத்து வணிகர்களின் வயிற்றில் அடிக்கும் வேலையை தேர்தல் கமிஷன் செய்யக்கூடாது’’ என்கிறார், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலப் பொதுச்செயலாளர் மோகன்.

‘‘பறக்கும்படை அதிகாரிகள் வேடிக்கையான செயலை எல்லாம் செய்கிறார்கள். அண்மையில் வாகனத்தில் கொண்டு போன ஒரு வாத்துக்கூட்டத்தைப் பிடித்து வைத்திருக்கிறார்கள். வாத்து மேய்ப்பவர்கள் வாகனங்களில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு அவற்றை எடுத்துச் செல்வார்கள். அது அவர்களின் வாழ்க்கை முறை. இதற்கு எங்கிருந்து அவர்கள் ரசீது வாங்குவார்கள்?

உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணத்தை வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்து விடுவார்கள் என்ற யூகத்தின் அடிப்படையில்தான் இப்படியான ஒரு விதிமுறையை தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது. ஆனால் இவர்கள், காய்கறி, அரிசி வாகனத்தை எல்லாம் நிறுத்தி மிரட்டுவதும் பிடிப்பதுமாக இருக்கிறார்கள். காய்கறி, அரிசி உள்பட 360 பொருட்களுக்கு வரி இல்லை. அவற்றைக் கொண்டு செல்வதில் அரசுக்கு எந்த நஷ்டமும் இல்லை. ஆனால், பறக்கும் படை அதிகாரிகள் இதையெல்லாம் காது கொடுத்துக்கூட கேட்பதில்லை.

தமிழகத்தில் பெரும்பான்மையாக வணிகம் செய்வது சிறு, குறு வியாபாரிகள்தான். அவர்களை நம்பித்தான் பெரு வணிகங்கள் இருக்கின்றன. ஒரு ஊரில் மளிகைக்கடை வைத்திருக்கும் வியாபாரி, வாரத்தில் அல்லது மாதத்தில் ஒருநாள் ரூ.1 லட்சமோ, 2 லட்சமோ எடுத்துக்கொண்டு பர்ச்சேஸ் செய்யப்போவார். வெவ்வேறு கடைகளில் கொஞ்சம் கொஞ்சம் பொருட்களை வாங்குவார். அதுமாதிரியான வணிகர்களை எல்லாம் பிடித்து பணத்தைப் பறிக்கிறார்கள். இப்படிப் பிடிக்கிற பணத்தில் 10 ரூபாய் நோட்டெல்லாம் இருக்கிறது. பட்டுவாடா செய்கிற பணம் பத்தும் இருபதுமாகவா இருக்கும்..? 

பிடிக்கப்பட்ட பணம் அல்லது பொருளை உரிய ஆவணங்களைக் கொடுத்துவிட்டு திரும்பப் பெறலாம் என்கிறார்கள். ஆனால் உரிய ஆவணம் என்றால் எது என்று வரையறை இல்லை. ஒவ்வொரு அதிகாரியும் ஒவ்வொரு மாதிரி சொல்கிறார்கள். டி.ஆர்.ஓ.விடம் கேட்டால், ‘கலெக்டரிடம் போய்க் கேளுங்கள்’ என்கிறார். கலெக்டர், ‘மூன்று பேர் கொண்ட குழுவிடம் உங்கள் பொருள் போய்ச் சேர்ந்து விட்டது, அவர்களைப் பாருங்கள்’ என்கிறார்.



பில்லைக் கொண்டுபோய்க் கொடுத்தால், ‘பில் ஒரிஜினலா என்று பார்க்க வேண்டும், பில் புக்கை எடுத்து வாருங்கள்’ என்கிறார்கள். அலைய வேண்டியிருக்கிறது. திருடர்களைப் போல நடத்துகிறார்கள். பாமாயில், அரிசி, நெல் என எது வந்தாலும் மடக்கி லாரியைப் பிடித்துவைத்துக் கொள்கிறார்கள். தன் மகளுக்கு திருமணம் செய்ய நகை, உடை வாங்க பணம் கொண்டு வரும் ஒருவர், பலரிடம் கடன் வாங்கியிருப்பார். அல்லது வாழ்நாள் சேமிப்பை எடுத்து வருவார். அதற்கு எந்த பில்லைத் தருவார்..?

இது குறித்து மாநிலத் தேர்தல் ஆணையர் லக்கானி முதல் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி வரை கோரிக்கை விடுத்து ஓய்ந்து விட்டோம். ரூ.50 ஆயிரம் என்கிற வரம்பையாவது 3 லட்சமாக மாற்றுங்கள் என்று கதறி விட்டோம். காது கொடுத்துக் கேட்க மறுக்கிறார்கள். தேர்தல் ஆணையத்தின் நோக்கம் முற்றிலும் திசை மாறிவிட்டது’’ என்கிறார் மோகன்.

வேட்புமனு தாக்கல் செய்த பிறகு டூவீலர்களில் செல்பவர்களையும் சோதனைக்கு உள்ளாக்க இருப்பதாகச் சொல்கிறார்கள் பறக்கும்படை அதிகாரிகள். வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்பவர்களை இனம் கண்டு கைது செய்ய பல்வேறு வழிகள் இருந்தாலும் மீடியாக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக அதிகாரிகள் இப்படிச் செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.

தங்கம், வைர வியாபாரிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சாந்தகுமார், ‘‘தேர்தல் கமிஷன், எவ்விதத்திலும் அரசியலுக்குத் தொடர்பில்லாத அப்பாவி வணிகர்களுக்கு விரோதமாக செயல்படுகிறது’’ என்று குற்றம் சாட்டுகிறார். ‘‘சிறு வியாபாரிகள், நடுத்தர வியாபாரிகள் பணம் வைத்துத்தான் வணிகம் செய்ய முடியும். ஒவ்வொரு கொள்முதலுக்கும் செக்கொடுத்துக் கொண்டிருக்க முடியாது. தமிழகத்தில் நடக்கும் 60 சதவீத வணிகம் அப்படித்தான் நடக்கிறது.

இது அனைவரும் அறிந்த நடைமுறை. பொருள் அல்லது பணத்தைக் கொண்டு செல்லும்போது 5 விதமான ஆவணங்களை நாங்கள் கொண்டு செல்கிறோம். பான் கார்டு, அசோசியேஷன் மெம்பர் கார்டு, டிராவலிங் வவுச்சர், சேல்ஸ் டாக்ஸ் எண், பொருட்களுக்கான மொத்த ரசீது... இதையெல்லாம் வைத்திருந்தாலும் கூட பறிமுதல் செய்கிறார்கள். ஒரு மொத்த நகை வியாபாரி, 20 செயின் கொண்டு செல்வார். ஒரு கடைக்காரரிடம் கொடுத்தால் அவர் அதில் அவருக்குத் தேவையானதைத் தேர்வு செய்வார்.

அப்படித் தேர்வு செய்து வாங்கிய பொருளுக்குத்தான் மொத்த வியாபாரி பில் தருவார். அதுதான் வணிக நடைமுறை. இதைப் புரிந்து கொள்ளும் நிலையில் அதிகாரிகள் இல்லை. 100 கோடி, 1000 கோடி என்றெல்லாம் பல செய்திகள் வருகின்றன. அதில் எல்லாம் கவனம் செலுத்தாமல் அப்பாவி வணிகர்களையும் மக்களையும் மன உளைச்சலுக்கு உள்ளாக்குகிறது தேர்தல் ஆணையம்’’ என்று வருந்துகிறார் சாந்தகுமார்.

சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் சிவ.இளங்கோவிடம் இது குறித்துப் பேசினோம். ‘‘இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு இன்னும் தீவிரமாக வேண்டும்...’’ என்கிறார் அவர். ‘‘பத்தாயிரம் ரூபாய் என்றாலும் அது எந்த வழியில் வந்தது என்று சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் அது அரசுக்குச் சொந்தமாக வேண்டும். இதுதான் நியதி. எல்லாவற்றுக்கும் கணக்கு வேண்டும். சட்டப்படி எந்த வணிகம் நடந்தாலும் ரசீது போட்டுத்தான் செய்ய வேண்டும்.

ரசீது போடாமல் செய்தால் அது வரி ஏய்ப்புக் குற்றம். இந்தியாவில் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு நடப்பதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. மளிகைக்கடை முதல் மெடிக்கல் ஷாப் வரை கம்ப்யூட்டர் வந்துவிட்டது. எல்லாவற்றையும் பில் போட்டு விற்பதில், பில் போட்டு வாங்குவதில் இவர்களுக்கு என்ன பிரச்னை? 90 சதவீதம் வணிகர்கள் சரிவர ரசீது பராமரிப்பதில்லை. அது தவறு. தேர்தல் நேரத்தில் மட்டும் இதுமாதிரியான சோதனைகள் நடத்திவிட்டு பிறகு மறந்துவிடுவது சரியல்ல.

அரசு தொடர்ச்சியாக இதுமாதிரியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அதேநேரம், டிரக், லாரி, ஆம்புலன்ஸ், டேங்கர்கள், ஆம்னி பஸ்களில் எல்லாம் அரசியல்வாதிகள் கோடி கோடியாகக்  கொண்டு செல்லும் பணத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும். இதுமாதிரியான சிறு தொகைகளைப் பிடித்துவிட்டு தங்கள் கடமை முடிந்ததென விட்டுவிடக்கூடாது...’’ என்கிறார் சிவ.இளங்கோ.

அண்மையில் வாகனத்தில் கொண்டு போன ஒரு வாத்துக்கூட்டத்தைப் பிடித்து வைத்திருக்கிறார்கள். வாத்து மேய்ப்பவர்கள் இதற்கு எங்கிருந்து ரசீது வாங்குவார்கள்?

- வெ.நீலகண்டன்