லவ் மேரேஜ்



நேர்மையான வக்கீலைத் தேடி இந்தக் காலத்தில் யார் வருவார்கள். ஆனால், சேகரைத் தேடி அந்த ஆள் வந்தான். ‘‘உனக்கு என்னப்பா பிரச்னை?’’ ‘‘சார்! எனக்கு பூர்வீகம் புதுக்கோட்டை. அங்க பத்து ஏக்கர் நிலம் இருக்கு. லவ் மேரேஜாகிப் போனதால ஊர் பக்கம் போக முடியல! அப்படியும் ஒரு தடவை துணிஞ்சு போய் எனக்கு வரவேண்டிய சொத்தைக் கேட்டேன்.



கல்யாணத்துக்கு மணமேடையில தயாரா இருந்த பொண்ணை கடைசி நேரத்துல கூட்டிட்டு வந்து, ‘லவ் மேரேஜ்’ பண்ணதால ஒரே பொண்ணா இருந்தும் சொத்தைத் தரமாட்டேன்னு அடம் புடிக்கறாங்க. அது கிடைச்சா எப்படியும் வாழ்க்கையில தேறிடுவேன் சார்! நீங்கதான் ஏற்பாடு பண்ணணும்’’ - என்றான் வந்தவன். ‘‘ஓ! உனக்கு லவ் மேரேஜா..? ஆனா, அதுக்காக கல்யாண மேடையில இன்னொருத்தனுக்கு கழுத்தை நீட்ற நேரத்துல பொண்ணை கடத்திட்டு வரலாமா?’’ - கோபமாய்க் கேட்டார் சேகர்.

‘‘அந்தக் கூத்தை ஏன் சார் கேக்கறீங்க? லவ் மேரேஜ் பண்ணினது நான் இல்லை. என் அப்பா. முப்பது வருஷம் முன்னாடி என் அம்மாவை கடத்திக் கொண்டு வந்து கல்யாணம் பண்ணி கஷ்டப்படறாரு!’’ என்றான். சிரிப்பதா, சிடுசிடுப்பதா எனத் தெரியாமல் திகைத்து நின்றார் சேகர்.         

-சுயம் பிரகாஷ்