வேண்டுதல்



வருணை கொஞ்ச நேரமாகக் காணவில்லை. திருச்செந்தூர் கோயிலுக்கு வந்து, சாமி தரிசனம் முடித்துவிட்டு, வெளியில் வந்து சில நிமிடங்கள் கூட ஆகவில்லை. கூட்டத்தில் தொலைந்துவிட்டான். வேணியும் முத்துவும் தவித்துப் போய் விட்டனர். இவ்வளவு பெரிய கூட்டத்தில் எங்கே என்று தேடுவது? பதற்றத்திலும் பயத்திலும், வருண் கிடைத்துவிட்டால் மொட்டை போடுவதாக முருகனுக்கு வேண்டிக்கொண்டனர்.



வேலை இல்லாமல் மிகவும் கஷ்டத்தில் இருந்த வேணிக்கும், முத்துவுக்கும் அதிர்ஷ்டவசமாக ஒரே கம்பெனியில் வேலை உறுதியாகி விட்டது. அதற்கு நன்றி சொல்லவே இந்த திருச்செந்தூர் பயணம். வந்த இடத்தில் இப்படியா ஆகவேண்டும்? நேரம் ஓடிக்கொண்டே இருந்தது... போலீஸார் ஒலிபெருக்கியில் அறிவித்தும் மகன் கிடைக்கவில்லை!

திடீரென ‘‘அம்மா’’ என்றொரு குரல்... வருண் தானே ஓடோடி வந்தான். ‘‘என் செல்லமே’’ என வருணை வாரி அணைத்த இருவரும், உடனடியாக மொட்டை போட்டுக்கொண்டு, வேண்டுதலை நிறைவேற்றிய மகிழ்ச்சியோடு சென்னை திரும்பினர்.மறுநாள், புதிய அலுவலகத்திற்கு பணிக்கு சேர வந்தவர்களை, மேனேஜர் அழைத்தார்.

‘‘சேல்ஸ் ரெப்பா வேலையில சேர வேண்டிய நீங்க இப்படி திடீர்னு மொட்டை போட்டுக்கிட்டு வந்தா எப்படிங்க?’’ என எரிந்து விழுந்தார். திருச்செந்தூர் முருகன் தங்களுக்கு நன்மை செய்தாரா? தீமை செய்தாரா? எனக் குழப்பத்தில் ஆழ்ந்தனர் வேணியும்,
முத்துவும்!      

-ஜி.கவிதா அன்பு