மதன் கார்க்கி IN Download மனசு



கற்ற பாடம்...
அப்பாவை ‘இப்படி’ என கணிக்க முடியாது. என்னை ஒவ்வொரு விடுமுறையிலும் ஒரு பக்கம் கொண்டு போய் விட்டு இருக்கார். ஒரு தடவை லீவுக்கு மெக்கானிக் ஷாப்ல வேலையில் இருந்திருக்கேன். மெடிக்கல் ஷாப்ல மருந்து எடுத்துக் கொடுத்திருக்கேன். மியூசிக் ஷாப்ல கேசட் எடுத்துக் கொடுத்திருக்கேன். ‘‘சாமான்ய மக்கள்கிட்டயிருந்துதான் நமக்கு வாழ்க்கை புரியும்’’னு சொல்வார்.



கடைசியாக அழுதது
என் முதல் காதல் பிரியும்போது. ஆனால், இப்போது அவரைத்தான் திருமணம் செய்திருக்கிறேன். படிக்கும்போதே ஆரம்பித்த காதல்... அவ்வளவு தயங்கி 5 ஆண்டுகளுக்குப் பிறகு நான் வெளிப்படுத்திய காதல்... நான் தூரத்தில் இருக்கப் போய், உரையாடல்கள் சீராக இல்லாமல், அண்மையும் கிடைக்காமல், அவர் ‘இந்த உறவே வேண்டாம்’ என விலகிச் சென்றார். அது 15 வருடங்களுக்கு முன்னால். ஆனால் அப்படியே ஞாபகத்தில்!

அடிக்கடி வரும் கனவு
எனக்கு ஒரே கனவு திருப்பித் திருப்பி வராது. என்னுடைய அன்றைய நாளின் நட்பும், கற்பனையும் சேர்ந்து கலந்தே வரும். வேறு தளத்திற்கு இட்டுப் போகும். மிக நீண்ட கனவெல்லாம் எனக்கு சாத்தியப்பட்டு இருக்கிறது. உள்ளே உள்ளே எனக் கதவுகளைத் திறந்த மாதிரி போய்க்கொண்டே இருக்கிற முற்றுப் பெறாத கனவு கண்டதுண்டு.

ரசிக்கும் எதிரி
உலகத்தில் யாருமே முழுக்க கெட்டவர்கள் இல்லை. எல்லோரும் நல்லவரே என்பதுதான் உண்மை. ஒவ்வொருவரையும், அவர்கள் கோபப்படும்போதோ, சிக்கலான மனநிலைகளில் வெளிப்படும்போதோ ‘அது அவர்கள் சூழ்நிலை... அப்படி வெளிப்பட்டுவிட்டார்கள்’ என்றுதான் நினைப்பேன். எனக்கு சில பேரோடு வேலை செய்யப் பிடிக்கும். சிலபேரோடு வேலை செய்வது எனக்கு கொஞ்சம் கூட சௌகரியமாக இருக்காது. இதுதான் எனக்குத் தெரிந்த வித்தியாசம். மற்றபடி எனக்கு எதிரிகள் கிடையாது!

திருமணம்
எனக்கு பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணத்தில் நம்பிக்கை இல்லை. அரேஞ்ஜ்டு மேரேஜ் எல்லாம் முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும். இதற்கு முன்னாடி நடந்த எல்லா அரேஞ்ஜ்டு மேரேஜும் செல்லாது என சட்டம் கொண்டு வரணும். அவர்களை திரும்பவும் காதலிக்கச் சொல்லி கல்யாணம் செய்து வைக்கலாம்.



மறக்க முடியாத இழப்பு
என் அம்மாவின் அப்பா, முருகேசன் தாத்தா. எனக்கு ரொம்ப இன்ஸ்பிரேஷன். பச்சையப்பன் கல்லூரியின் புகழ்பெற்ற தமிழ்ப் பேராசிரியர். என் கையைப் பிடித்தபடி கூட்டிப் போய், நிறைய பேசி நடந்திருக்கிறார். வயதான பிறகு நான் அவர் கையைப் பிடித்துக்கொண்டே அவருக்குப் பிடித்த இடங்களுக்கு அழைத்துப் போனேன். வாழ்க்கையை அலட்டலே இல்லாமல், கூச்சல் இல்லாமல் போகிற போக்கில் எடுத்துக் கொண்டவர். இப்போது அவர் கூட இருந்திருந்தால் எனக்கு நன்றாக இருந்திருக்கும்.

படிக்கப் போய் விட்டு, வீட்டுப் பிரச்னைகளில் அவரை விட்டு விலகி, பத்து வருடங்களுக்கு மேல் அவரைப் பிரிந்துவிட்டேன். இறுதிக் காலங்களில் அவரோடு இருந்தது எனக்கு இன்னமும் நெகிழ்ச்சி தருவது. ‘சின்னக் குழந்தையா இருக்கும்போது உலகத்தையே ஆச்சர்யமாக பார்க்கிறோம்... வளர்ந்தபிறகு, நம்மைப் பற்றிய நினைவே அதிகமாகி உலகம் மறைந்து போகுது கார்க்கி’னு சொன்ன வார்த்தை... அவர் சொன்ன அதே ஏற்ற இறக்கத்தோடு ஞாபகம் இருக்கு. என் அமைதி அவர்வழி வந்ததுதான்!

லட்சியங்கள்..?
எனக்குக் கனவுகள் மாறிக்கிட்டே இருக்கு. கம்ப்யூட்டர் எஞ்சினியர் ஆகணும்னு ஆசைப்பட்டு, அதற்கு மேலும் ஆசிரியன் ஆகணும்னு கனவு விரிந்து, அதுவும் நடந்தது. திரைத் துறையில் வசனம், பாடல்களுக்கு கவனம் திரும்பியது. அதிலும் ஓர் இடம் பெற்றேன். இப்போ இசைத் துறை ஒரு வீழ்ச்சியை நோக்கி போய்க்கிட்டு இருக்கு. பாடல்களுக்கு முன்பிருந்த மதிப்பு இல்லை. அதற்குத்தான் doopaadoo.com என்ற இசைத்தளம் ஆரம்பிச்சிருக்கோம். இதில் இருக்கிற பாடல்களை இங்கேதான் கேட்கலாம்.

இந்தத் தளத்திற்கு வருகிற பாடல்களை இசையமைப்பாளர், பாடகர், எழுதியவர் யார் எனத் தெரியாமல், ஒரு நடுவர் குழு இருந்து, விமர்சித்து முடிவெடுக்கும், தேர்ந்தெடுக்கும். ஒரு பாட்டு இணையத்தில் பல கோடி ஹிட்ஸ் வாங்கலாம். ஆனால், அதனால் அதை உருவாக்கிய இசையமைப்பாளருக்கும் பாடலாசிரியருக்கும் பாடகருக்கும் என்ன லாபம்? இணைய வருமானத்துக்கும் படைப்பாளிகளுக்கும் பெரிய இடைவெளி இருக்கிறது. இந்த தளத்தில் நாங்கள் விளம்பரம் வாங்கி, அதைப் படைப்பாளிகளிடம் நேரடியாக சேர்க்கிறோம்.

பைரஸிக்கு எதிராக ஒரு ஸ்டெப் எடுத்து வைக்க முடியுமானு இருந்தது. பூனைக்கு மணி கட்டியிருக்கோம். ரஹ்மான், அனிருத், சந்ேதாஷ் நாராயணன், ஹிப்ஹாப்  தமிழானு எல்லாரும் இதற்கு ஆசைப்பட்டு பாடல் கொடுத்திருக்காங்க. சினிமாவில் வராத பாடல், ஒரு நாளைக்கு ஒரு பாடல் ரிலீஸ் பண்ணலாம் என எண்ணம். எம்.எஸ்.வி. இறக்கும் முன் வச்சிட்டுப் போன பயன்படுத்தாத ட்யூன்ஸுக்கு பாடல் எழுதி, அவருக்கே சமர்ப்பணம் செய்திருக்கோம். ராயல்டி அவர் குடும்பத்துக்கே போகுது.

கண்ணதாசன் கவிதைகளுக்கு ரஹ்மானின் சவுண்ட் எஞ்சினியர் இசை அமைச்சு, பிராண்ட் நியூ பாடலாக்கி அந்த ராயல்டியும் கவிஞர் குடும்பத்திற்குப் போகுது. இப்ப பாருங்க, ‘டங்காமாரி’ முதற்கொண்டு ரோகேஷ்னு வடசென்னை கவிஞர் எழுதின மூணு பாடல்களும் செம ஹிட். அதுக்கு சம்பளமா அவருக்கு சில ஆயிரம் கிடைச்சிருக்கும். ஆனா, 1 கோடி ஹிட்டுன்னா முப்பது லட்சம் அவருக்குப் போயிருக்கணும் இல்லையா?

ஒரு பாட்டு இனி நிலம் மாதிரி ஆகிடும். அது பலன் கொடுக்கும். பாடகருக்கு, எழுதியவருக்கு, மியூசிக் போட்டவருக்கு திரும்ப மரியாதையைக் கொண்டு வரணும். இதுக்காக கடந்த ஒரு வருஷமா 40 படங்களுக்கு மேல் தவிர்த்திருக்கேன். ரொம்பவும் தவிர்க்க முடியாத நண்பர்களுக்கு மட்டுமே எழுதுகிறேன். கிட்டத்தட்ட 40 பேர் இந்தத் தளத்துக்காக இரவு, பகல் பார்க்காமல் வேலை செய்யிறாங்க. மிகப் பெரிய தொகை முதலீடு ஆகியிருக்கு. நிறைய நல்லதுகள் நடக்கும். ஒரு பாடலில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அந்தப் பாடல் கேட்கப்படுற ஒவ்வொரு தடவையும் பணம் போய்ச் சேரும். அப்படியே தமிழில் தொடங்கி பிற மொழிகளுக்குத் தாவி, இந்தியா, உலகம்னு பரவ ஆசை. எல்லா பாதைகளும் யாரோ எடுத்து வச்ச முதல் அடியில்தானே ஆரம்பமாகுது!



வாழ்க்கை திட்டமிடப்பட்டதா..?
என்னை என் கனவுகள் எங்கே தூக்கிட்டுப் போகுதோ, அவை கூடவே போயிருக்கேன். ஆஸ்திரேலியாவில் படிப்பு முடிச்சிட்டு திரும்பும்போது யாரும் நம்பலை. யாரும் பொதுவா அங்கேயிருந்து திரும்புவதில்லை. ‘என் மனசு சென்னையில் இருக்கு’னு சொல்லிட்டேன். அப்பா, அம்மா, மனைவி என யார் எதிர்த்தாலும் என் முடிவுகளிலிருந்து பின்வாங்குவதில்லை. சில கொள்கைகள் என்னிடம் உண்டு. உண்மையாக இருக்கணும், யாரையும் ஏமாத்தக் கூடாது. குறிப்பாக, அரசாங்கத்தை ஏமாற்றக் கூடாது. படைப்பாளியா மட்டுமில்லை, தனி மனிதனாவும் என்னை மேம்படுத்தியிருக்கேன்.

அரசாங்கத்தை ஏமாத்தி ஒரு ரூபாய் கூட கறுப்புப் பணம் வாங்கினதில்லை. அப்படிக் கொடுக்க முன்வந்தவங்களின் படங்களை நிராகரிச்சிருக்கேன். இது என் இயல்பு. இந்த ஹானஸ்டியை எங்கே இருந்தாலும் கொண்டு போயிருக்கேன். அடுத்த கனவு என்ன வரப்போகுதோ எனக்குத் தெரியாது. இதைவிட சின்னதா, பெரிதா... எப்படி இருந்தாலும் பிடிச்சிருந்தா அதன் கூடவே போயிடுவேன்.

அதிர்ந்தது..?
‘பாகுபலி’க்கு ஒரு வசனம் எழுதினேன். அது ஒரு சாதியை குறிக்குதுனு வீட்டுக்கு பெட்ரோல் குண்டோட வந்துட்டாங்க. அப்படியெல்லாம் நினைச்சு எழுதவேயில்லை. என் பக்கத்து நியாயம் சொல்லியும் கேட்கலை. சத்தம் போட்டுட்டுத்தான் போனாங்க. எதற்கும் தயாரா இருக்கணும்னு அன்னிக்குத் தெரிஞ்சுக்கிட்டேன்.

- நா.கதிர்வேலன்
படங்கள்: புதூர் சரவணன்