உள்ள(த்)தைச் சொல்கிறோம்



சரணாகதி தத்துவம் வாழ்வியலில் எப்படி உலா வருகிறது? என்பதை, ``சரணாகதியே தத்துவத்தின் ஒரு வெளிப்பாடு’’ என்ற கட்டுரை வாயிலாக அறியமுடிந்தது. குருபக்தி, பதி பக்தி, பயபக்தி, இறைபக்தி இப்படி எல்லாவற்றிலும் சரணாகதி தத்துவம் முன்னின்று தத்தம் கடமைகளை முறையாகச் செய்வதை இந்த கட்டுரை வெளிப்படுத்துகிறது.
- இராம.கண்ணன், திருநெல்வேலி.

புள்ளமங்கை பிரம்மபுரீசுவரர் ஆலயம் சிற்பக்கலையின் கலைக்களஞ்சியமாக ஜொலிக்கிறது என்பதை உணர்ந்தோம்! நெஞ்சை அள்ளும் இவ்வாலயத்தை நேரில் சென்று தரிசிக்க தயாராகிவிட்டேன்!
- கே.எல்.பகவதி, சென்னை.

``வாழ்வு சிறக்க மூன்று வழிகள்’’ என்னும் சிவ.சதீஷ்குமார் எழுதிய கட்டுரையை படித்து, அந்த மூன்று வழிகளை பின்பற்ற ஆயத்தம் ஆகிவிட்டேன். முத்தான செய்திகள். சதீஸ்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
- அரங்க. முத்து மாணிக்கம், கீழ்பென்னாத்தூர்.

``சித்திரை மகளே வருக! சீர் நலம் எல்லாம் தருக!’’ என்று கவிதை நடையில் வரவேற்று, சித்திரைத் திங்களின் தெய்வீக சிறப்புக்களை, முப்பது முத்துக்களாகக் கோர்த்து வழங்கி முத்திரை பதித்து விட்டார், எஸ்.கோகுலாச்சாரி. மேலும், கருட பகவானின் கருணை மிகு லீலைகளை விவரித்த கட்டுரையைப் படித்து முடித்ததும், ஒரு புராண திரைப்படம் பார்த்த பிரமிப்பு ஏற்பட்டது. அடுத்ததாக, ‘தேங்காய்’ ஏதோ சமையலுக்குப் பயன்படும் உணவுப் பொருள் மட்டுமல்ல, உணர்வுப் பூர்வமான பக்தரும், பூஜைக்கும் பயன்படுகின்ற ஒரு ஆன்மிகப் பொருள் என்பதை ``மகத்துவம் நிறைந்த தேங்காய்’’ என்னும் கட்டுரை உணர்த்திவிட்டது.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

அருள் தரும் ஆன்மிகம் சித்திரை பக்தி ஸ்பெஷல் வழங்கிய அனைத்துக் கட்டுரைகளும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்திருந்தன. தமிழ் வருடப் பிறப்பை எவ்வாறு கொண்டாடுவது என்பதையும், சித்திரை மாதப் பண்டிகைகளையும் விரிவாக விளக்கியதற்கு பாராட்டுக்கள்.
- வைஷ்ணவி, சென்னை.

சித்திரை சிறப்பிதழ் பக்தர்களின் நித்திரையை அகற்றி, ஆனந்தம் கொள்ள வைத்துவிட்டது. கூடவே, குரோதி வருட பஞ்சாங்கத்தையும் இலவசமாக வழங்கி வாசகர்களின் இதயத்தில் முத்திரை
பதித்துவிட்டீர்கள்!
- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

மாரியம்மனின் சிறப்புகளை தெளிவாகச் சொல்லி, எங்கெங்கெல்லாம் அம்மன்கோயில் கொண்டு உள்ளாளோ, அத்தனை இடங்களையும் அறிமுகப்படுத்தி; பக்தி பரவசம் அடையச்
செய்துவிட்டீர்கள்!
- கே.பிரபாவதி, கன்னியாகுமரி.

எங்கள் ஊர் செல்வ விநாயகர் கோயில் பற்றி, ``பதினோரு விநாயகர்களின் பரவச தரிசனம்’’ என்னும் இரண்டு பக்க கட்டுரை வெளிவந்தது மிக்க மகிழ்ச்சி. அப்பர் சரணடைந்து முக்தி பெற்ற திருப்புகலூர் திருத்தலம் பற்றியும், 10 நாட்கள் நடக்கும் திருவிழாக்கள் பற்றியும் விரிவாக அறிந்தோம்.
- லட்சுமி சங்கர், வேலூர்.

வருடம் முழுக்கப் பயனாகும் குரோதி வருடப் பஞ்சாங்கத்தை, இலவசமாக வழங்கிய அருள் தரும் ஆன்மிகம் இதழுக்கு நன்றி.
- கீதா, திருச்சி.

இந்த இதழின் அட்டைப்பட தரிசனம் அம்பாளின் அருட்கடாட்சம் என்பதால், ஆன்மிகம் வாசகர்களுக்கு அருளி உள்ள அதிர்ஷ்டம்தான். சித்திரை பக்தி ஸ்பெஷலுக்கு அட்டையே சிறந்த முத்திரை!
- ஆர்.ஜே.கல்யாணி, நெல்லை.