தெய்வச்செயல்



ஒரிசாவில் கடலோரக் கிராமத்தில் வாழ்ந்தவர் அந்த மீனவர். பெயர் ரகு கேவட். அவர் ஏற்கனவே, குரு ஒருவரிடம் தீட்சை பெற்றிருந்தார்; நல்லவர்கள் தொடர்பிலும் நாம சங்கீர்த் தனத்திலும் அவ்வப்போது ஈடுபட்டார். தெய்வ தரிசனத்திற்காக பெரும் ஏக்கம் கொண்டிருந்தார். கடலில் வலை வீசி மீன் பிடித்துக்கொண்டிருந்த ரகுவிற்கு, வரவர மன நிம்மதி இல்லை. மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபாடும் இல்லை; ‘‘நாம் உயிர் வாழ்வதற்காகப் பல உயிர்களைக் கொல்ல வேண்டி இருக்கிறதே!’’ என்ற இரக்கம், ஜீவ காருண்யம்தான் காரணம்.
ரகுவிற்கோ, வேறு தொழில் எதுவும் தெரியாது. ஆகையால், விருப்பம் இல்லாமலேயே அவர் தன் தொழிலைச் செய்துவந்தார். ஒருநாள்... ரகு தன் வழக்கப்படி வலை வீசினார். ஒரு பெரும் மீன் சிக்கியது. அப்போது, ‘‘நாராயணா! காப்பாற்று! நாராயணா! காப்பாற்று!’’ என்ற இனிமையான குரல் கேட்டது. ரகு வியந்தார்; தன்னிடம் அகப்பட்ட அந்த ஒரே மீனை, தண்ணீரிலேயே விட்டு உயிர் பிழைக்கச் செய்தார்.

மீன் உயிர் பிழைத்தது. ‘வெறுங்கை யுடன் வீட்டிற்குப் போனால், குடும்பத்தில் இருப்பவர்களுக்கு என்ன பதில் சொல்வது? உணவுக்கு என்ன வழி?’ என்றெல்லாம், நினைக்கவில்லை ரகு. பேசாமல் இருந்த இடத்திலேயே அமர்ந்து, தியானத்தில் ஆழ்ந்துவிட்டார் அவர். உண்ணாமல் உறங்காமல், தண்ணீர்கூடக் குடிக்காமல், தியானத்தில் இருந்தார் ரகு. நாட்கள் பல கழிந்தன. அவ்வாறு ரகு தியானத்தில் இருந்த நாட்களில், அவர் குடும்பத்திற்கு வேண்டிய உதவிகளை, ஊரார் செய்து வந்தார்கள். இந்த நேரத்தில், தியானம் செய்துகொண்டிருந்த ரகுவுக்கு, பகவான் காட்சியளித்தார்.

ரகுவுக்கு மெய் சிலிர்த்தது; எழுந்து கைகளைக்கூப்பி, ‘‘தெய்வமே! பாக்கியம்! பாக்கியம் எனக்கு! மீன் பிடித்து விற்பதைத்தவிர, வேறு தொழில் எதுவும் தெரியாது எனக்கு. அதே சமயம், உயிர்க் கொலை செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. என்ன செய்வேன்? என் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும்! தெய்வ சிந்தனையிலேயே என் மனம் இருக்க வேண்டும்! என் கடைசிக் காலத்தில், தங்கள் தரிசனம் கிடைக்க வேண்டும்.

அடியேன் வேண்டுவது இதுவே!’’ என வேண்டினார் ரகு. ‘‘அப்படியே நடக்கும். கவலைப் படாதே!’’ என்றார் பகவான்.அதன்பின், ரகு வீடு திரும்பினார். மீன் பிடிக்கும் வலையை அவர்தொடவே இல்லை; அதாவது மீன் பிடிக்கச் செல்லவில்லை. தெய்வ வழிபாட்டிலேயே முழுக்கவனம் செலுத்தினார். அவர் குடும்பத்திற்குத் தேவையான உதவிகளை தொடர்ந்து ஊர் மக்கள் செய்து வந்தார்கள். இதற்கு இடையில்... பூரி ஜெகந்நாதர் கோயிலில் ஓர் அதிசயம் நடந்தது. அங்கே ஜெகந்நாதர் கோயிலில் சுவாமிக்கு எதிரில் ஒரு கண்ணாடி இருக்கும்.

அதில் சுவாமியின் பிரதி பிம்பம் தெரியும். சுவாமிக்கும் கண்ணாடியில் தெரியும் பிம்பத்திற்கும் நடுவில், போக மண்டபத்தில் பிரசாதங்களை வைத்து, நைவேத்தியம் செய்வார் அர்ச்சகர். அன்று அர்ச்சகர் தன் வழக்கப்படி நைவேத்தியம் செய்யத் தொடங்கினார். ஆனால் அன்று, கண்ணாடியில் தெரியும் தெய்வத்தின் பிரதிபிம்பம் தெரியவில்லை. அர்ச்சகருக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் மூலவரைப் பார்த்தார்; மூலவர் இருந்தார்; தெரிந்தார். அர்ச்சகர் திரும்பிக் கண்ணாடியில் பார்த்தார்.

சுவாமியின் பிரதிபிம்பம் தெரியவில்லை; அதிர்ச்சி அடைந்தார். ‘‘நாம் ஏதோ தவறுசெய்துவிட்டோம். அதனால்தான் இப்படி நடக்கிறது’’ என்று தீர்மானித்த அர்ச்சகர் நீராடி, மறுபடியும் பிரசாதங்கள் தயாரித்து எடுத்து வந்தார்; நைவேத்தியமும் செய்தார். ஆனால், கண்ணாடியில் பிம்பம் தெரியவில்லை. குழம்பிப்போன அர்ச்சகர், உடனே மன்னருக்குத் தகவல் அனுப்பினார்.மன்னர் அதிர்ச்சி அடைந்தாரே தவிர, அவருக்கும் காரணம் புரியவில்லை.

அன்று இரவு! அரசரின் கனவில் பூரி ஜெகந்நாதர் காட்சி அளித்தார்; ‘‘மன்னா! வருந்தாதே! இங்கே கோயிலில் மூர்த்தி இருக்கலாம். ஆனால், நான் இல்லை. அதனால்தான், கண்ணாடியில் பிம்பம் தெரியவில்லை. நீங்கள் யாரும் ஒரு தவறும் செய்யவில்லை. ‘‘நான் இப்போது பிபலிசட்டியில் (ரகு இருக்கும் ஊர்) இருக்கிறேன். நீ அங்கு செல்! ரகு எனும் அந்தப் பக்தனை, குடும்பத்தோடு இங்கு அழைத்து வா! நம் கோயிலுக்கு அருகில், அவர்களைக் குடியேற்று! அவர்களின் கடைசிக்காலம் வரை காப்பாற்று! நலம் பெறுவாய் நீ!’’ என்று சொல்லி, மன்னர் கனவிலிருந்து பகவான் மறைந்தார்.

விடிந்ததும் மன்னர் வெகுவேகமாக, ரகுவின் குடிசைக்குப் போனார். அங்கே ரகுவின் குடிசை வாசல், ஓலைக் கதவால் மூடப் பட்டிருந்தது. அதைக் கண்ட அரசர், வெளியே நின்றவாறே குரல் கொடுத்தார். எந்தப் பலனும் இல்லை. சற்று நேரம் கழித்து, ஓலைக் குடிசையின் கதவைக் கொஞ்ச மாகத் திறந்து பார்த்தார் அரசர். குடிசையின் உள்ளே ரகு உணவை எடுத்து, பூரி ஜெகந்நாதருக்குத் தந்துகொண்டிருந்தார். எதிரில் அமர்ந்தபடி, ரகு தந்த உணவைத் தன் கையால் வாங்கி உண்டு கொண்டிருந்தார் பூரி ஜெகந்நாதர்.

அரசர் பிரமித்தார் அவர் கண்களுக்கு ரகு உணவு தருவது தெரிந்தது. எதிரில் அந்த உணவை வாங்கி ஒரு கை உண்பதும் தெரிந்தது. ஆனால் பகவானின் முகம் மட்டும் மன்னரின் கண்களுக்குத் தெரியவில்லை. மன்னர் மலைத்துப் போனார். அவர் சுய உணர்வைப் பெற்ற போது, பகவான் அங்கில்லை. வியந்த மன்னர், கதவை முழுவதுமாகத் திறந்து, உள்ளே நுழைந்தார்; ரகுவின் கால்களில் விழுந்து வணங்கி, ரகுவையும் அவர் குடும்பத்தாரையும் அழைத்துக் கொண்டு, திரும்பி பூரி ஆலயத்தின் அருகில் தென் திசையில் வசதியான ஒரு வீட்டில் வாழச் செய்தார் மன்னர்.

ரகு, பூரித்திருத்தலத்திற்கு வந்து சேர்ந்த அப்போதே, போகமண்டபத்தில் மீண்டும் கண்ணாடியில் பகவானின் பிரதிபிம்பம் காட்சியளித்தது. நைவேத்தியமும் நிறைவேறியது.நல்லது நினைத்தால், யார் மூலமாவது தெய்வம் அதை நிறைவேற்றும் என்பதை நிரூபிக்கும் வரலாறு இது.

பி.என்.பரசுராமன்