முத்துக்கள் முப்பது-இனிதாய் வாழ எல்லாம் தருவான் ஸ்ரீராமன்



ஸ்ரீராம நவமி 17-4-2024

1. நவமியின் சிறப்பு

இந்த ஆண்டு ராமநவமி 2024 புதன்கிழமை பிறக்கிறது. அன்று மாலை 6:54 வரை நவமி இருக்கிறது. பகவானின் அவதார வைபவத்தில் மிக முக்கியம் அவனுடைய நட்சத்திரத்தை விட திதிதான். பகவான் 10 அவதாரங்களை எடுத்தான். அதில் இரண்டு அவதாரங்கள் பூரணமான அவதாரம் என்று போற்றப்படுகிறது. 

ஒன்று ராம அவதாரம். இரண்டு கிருஷ்ண அவதாரம். ராமன் நவமியிலும், கிருஷ்ணன் அஷ்டமியிலும் அவதாரம் செய்தான். இதனால், இந்த இரண்டு திதிகளும் பகவானின் பூரணமான அனுக்கிரகத்தைப் பெற்று ஸ்திதியாகியது. ஸ்ரீராம நவமியில் சிறப்புகள் குறிக்கும். ஸ்ரீராமபிரான் மற்றும் ராமாயணத்தோடு தொடர்புடைய திருத்தலங்கள் குறித்தும், முப்பது முத்துக்கள் தொகுப்பில் காண்போம்.

2. ரகு வம்சம்

ஸ்ரீராமன் அவதரித்த வம்சம் ரகு வம்சம். சூரியனிலிருந்து தொடங்கும் வம்சம் ரகு வம்சம். கட்வாங்கனின் மகன் தீர்த்தபாகு மிகச் சிறந்த ஆட்சி செய்தான். இந்த மன்னனின் மகன் ரகுவின் பெயரால், ரகு வம்சம் என்று அழைக்கப்படுகிறது. காளிதாசன் தன்னிகரற்றதாகக் கருதப்படும் ரகுவம்சம் என்ற அற்புதமான காவியத்தை வடமொழியில் படைத்தான். 

சூரிய குலக் கொழுந்தான ராமருக்கு முன் அந்தக் குலத்தில் பிறந்தவர்களையும் ராமருக்குப் பின் அந்தக் குலத்தில் பிறந்தவர்களைப் பற்றியும் சிறப்பாக எழுதப்பட்ட காவியம் ரகு வம்சம். ராமனுக்கு முன்னும் பின்னும் இருக்கும் 32 அரசர்களைப் பற்றி ரகுவம்சத்தில் காளிதாசர் குறிப்பிடுகிறார். நடு நாயகமாக ராமனின் கதையைச் சொல்கிறார். ராகுவின் மகன் அஜ மகாராஜன். அஜனின் மகன்தான் ராமனின் தந்தையான தசரதன்.

3. திருமாலின் அவதாரம் ராம அவதாரம்

வெகு நாட்களாக குழந்தையில்லாத தசரதன், வசிஷ்டரின் ஆலோசனையின் பெயரில் புத்ர காமேஷ்டி யாகம் செய்தான். அந்த யாகத்தின் பலனாக பகவான் கோசலையின் வயிற்றில் ஸ்ரீராமனாக அவதாரம் செய்தார். அவன் கையாழி (சக்கரம்) கைகேயியின் வயிற்றில் பரதனாக அவதரித்தது. அவரை எப்போதும் பிரியாத ஆதிசேஷனும், பாஞ்சசன்யம் எனும் சங்கும், சுமித்திரையின் வயிற்றில் லட்சுமணனாகவும், சத்ருக்கனனாகவும் அவதாரம் செய்தனர்.

``ஒரு பகல் உலகு எலாம் உதரத்துள்
பொதிந்து,
அரு மறைக்கு உணர்வு அரும் அவனை,
அஞ்சனக்
கரு முகிற் கொழுந்து எழில் காட்டும்
சோதியை,
திரு உறப் பயந்தனள் - திறம் கொள்
கோசலை.’’
 - என்று ராமனின் அவதாரத்தை கம்பன் பாடுகிறார்.

அவர் அவதரித்த விண்மீன் புனர்பூசம். ராசி கடகம் என்பதை
``ஆயிடை, பருவம் வந்து அடைந்த
எல்லையின்,
மா இரு மண்மகள் மகிழ்வின் ஓங்கிட,
வேய் புனர்பூசமும், விண்ணுளோர்களும்,
தூய கற்கடகமும், எழுந்து துள்ளவே’’
 - என்று விவரிக்கிறார் கம்பர்.

4. எப்போது, எப்படிக் கொண்டாட வேண்டும்?

ஸ்ரீராம நவமி இந்த ஆண்டு சித்திரையில் வருகிறது. சில வருடங்களில் பங்குனி மாதத்திலும் வரும். என்ன காரணம் என்றால், பங்குனி மாத அமாவாசைக்கு பிறகு சாந்த்ரமான முறையில் சித்திரை (சைத்ர) மாதம் தொடங்குகிறது. பங்குனி அமாவாசைக்கும், சித்திரை அமாவாசைக்கும் இடைப்பட்ட காலம் சைத்ரமாதம். அதில் வரும் வளர்பிறை நவமி ஸ்ரீராம நவமி.
ஸ்ரீராம நவமி அன்று காலையில் எழுந்து வீட்டை நன்றாக சுத்தம் செய்து, பின் நீராடி, நண்பகலில் ஸ்ரீராமநவமி பூஜை செய்ய வேண்டும். மிக முக்கியமாக பானகம், நீர் மோர் பாயாசம் வடை போன்றவற்றை நிவேதனம் செய்ய வேண்டும். அன்று ராம ஜனன ஸ்லோகமும், பூஜை முடிவில் பட்டாபிஷேக ஸ்லோகமும் பாடி முடிக்க வேண்டும். சிலர் பூஜையில் ராமரின் ஜாதகத்தை வைத்து பூஜிப்பார்கள்.

5. ஏன் வழிபடுகிறோம்?

ஸ்ரீ ராமபிரானின் ஜாதகத்தை வீட்டில் வைத்து வழிபடும் வழக்கம் சிலரிடம் உண்டு. பகவான் ஸ்ரீ ராமபிரானுக்கு ஜாதகமா? என்று நினைக்கலாம். ஆம். ‘‘அஜாயமான பகுதா விஜாயாதே’’ (பிறப்பில்லாதவன் பல படியாக பிறக்கிறான்) என்று வேதவாக்கியம் (புருஷ சூக்தம்) சொல்வது போல, பகவான் மண்ணுய்ய, மண்ணில் மனிசருய்ய அவதாரம் எடுக்கின்றான். 

அப்படி அவதாரம் செய்கின்ற நேரத்தில் எந்தெந்த கிரக நிலைகள் எப்படி இருந்தன என்பதை நம்முடைய முனிவர்கள் பதிவு செய்திருக்கின்றார்கள். காலம் நடையாடும் தேசம் என்று இந்த பூலோகத்தைச் சொல்லுவார்கள். கர்மவினை அதிகரிப்பதும், அந்த கர்மவினை தீர்வதும் இந்த உலகத்தில்தான். அதற்கு காலம் துணை செய்கின்றது. அந்தக் காலத்தை கிரகங்கள் நிர்ணயிப்பதால், ஒவ்வொரு அவதாரத்தின் காலமும் மிகத் துல்லியமாக சொல்லப்பட்டு இருக்கிறது.

6. நம் ஜாதக குறை தீரும்

இந்த ஸ்ரீராமருடைய ஜாதகத்தை வைத்து தினசரி ஸ்ரீராமாயண ஸ்லோகங்களைச் சொல்லி வழிபாடு செய்வதன் மூலம், நம்முடைய கிரக தோஷங்கள் பாதிக்காது. வால்மீகி பகவான் ஸ்ரீராமனின் ஜனனத்தின் போது கிரகங்கள் எப்படி இருந்தன என்பதை விளக்குகின்றார். கடக லக்கனம். லக்கினத்தில் குருவும் சந்திரனும். 

கஜ கேசரியோகம். புனர்பூசம் நான்காம் பாதத்தில் அவதாரம் செய்தார் ராமர். எனவே, சந்திரனுக்கு வர்கோத்தம பலம் கிடைக்கும். அவர் பெயரே ராமச்சந்திரன் அல்லவா. சூரிய குலத்தில் உதித்தவர். அதனால் தந்தையின் வம்ச கௌரவத்தைச் சொல்லும் சூரியன் பத்தாம் இடத்தில் மேஷத்தில் உச்சம். நவமி திதி என்பதால் சூரியனுக்கும் சந்திரனுக்கும் 90 பாகைக்கு மேல் 120 பாகைக்குள் இடைவெளி இருக்கும். அப்படி இருந்தால்தான் நவமிதிதி வரும்.

7. குரு மங்கள யோகம்

சூரியனும் சந்திரனும் ஒருவருக்கு ஒருவர் கேந்திரத்தில் இருக்கும் அமைப்பு மிக அற்புதமான அமைப்பு. தாயாருக்கும் தந்தைக்கும் மிகப் பெரிய கௌரவத்தைத் தேடித் தரும் அமைப்பு என்று சொல்லலாம். அதனால்தான் ராமனை, தசரதராமன் என்று தசரதனைக் குறிப்பிட்டும், கோசலை ராமன் என்று கோசலையை குறிப்பிட்டும் சொல்லுகின்றார்கள். கடக லக்கனம். லக்னத்தில் சந்திரனும் குருவும் இணைந்து இருக்கின்றார்கள். குரு லக்ன கேந்திரத்தில் திக்பலம் பெற்றதோடு உச்சமடைந்திருக்கின்றார்.

அவர் ஏழாம் இடத்தில் உள்ள செவ்வாயைப் பார்ப்பதால், வலிமையான குரு மங்கள யோகம் ஏற்படுகின்றது. எனவே, மகாலட்சுமியான சீதா பிராட்டியார் மனைவியாக அமைந்தார். ஏழாம் இடத்தில் செவ்வாய் இருந்தாலும், சீதா பிராட்டி பொறுமைக்குச் சிகரமாக விளங்கியதற்குக் காரணம், குருவின் பார்வையும் சந்திரனின் பார்வையும் ஆகும். அதனால்தான் எத்தனை கோபம் வந்தாலும் பொறுத்துக் கொண்டாள்.

8. சீதையின் கோபம்

இதை கம்பனின் காவியத்தில் காணலாம். சீதையின் அசோகவனத்துத் துயரைக் கண்டு பொறுக்க முடியாமல் “என் தோள் மீது ஏறிக் கொள்ளுங்கள், உடனே ராமபிரானிடம் சேர்த்து விடுகிறேன் என்று அனுமன் சொன்னபோது சீதை கூறுகிறாள் “அப்பா, ஆஞ்சநேய,’’ என்ன இருந்தாலும் “நீ ஒரு ஆண்மகன்; உன்தோள் மீது ஏறுவது தர்மம் ஆகாது” என்று சொல்லிவிட்டு, என் ஆற்றலினால் இந்த இலங்கை மட்டுமல்ல எல்லா உலகங்களையும் சுடுவேன். ஆனால், அது என் தலைவன் ராமனின் வில்லாற்றலுக்கு இழுக்கு என்று பொறுத்துக் கொண்டிருக்கிறேன்.

``அல்லல் மாக்கள் இலங்கையது ஆகுமோ
எல்லை நீத்த உலகங்கள் யாவும் என்
சொல்லினால் சுடுவேன் அது தூயவன்
வில்லின் ஆற்றற்குமாசு என்று வீசினேன்’’
 - சுந்தர காண்டம், சூளாமணிப் படலம், கம்ப ராமாயணம்.

இதற்குக் காரணம் கடகத்துக்கு ஏழில் செவ்வாய் உச்சம் பெற்றதால் கோபமும். அதை குரு பார்த்ததால், கோபத்தை அடக்கும் பொறுமையும் இருந்ததை ஜாதகம் காட்டுகிறது. நம் ஜாதகங்களில் கிரகங்கள் நம் குணங்களை தீர்மானிக்கும். தெய்வ ஜாதகங்களில் அவர்களின் சுபாவமான குணங்கள் கிரகங்கள் எங்கு நிற்க வேண்டும் என்பதைத் தீர் மானிக்கின்றன. அதனால்தான் தெய்வ ஜாதகங்களும், மஹான்களின் ஜாதகங்களும் வழிபடத்தக்கவையாகின்றன.

9. இதிகாசம் ராமாயணம்

ராமாயணம் மிக மிகப் பழமையான காவியம். ஆதி காவியம். இதிகாசம் என்பார்கள். (இரண்டு இதிகாசங்கள் 1. ராமாயணம், 2. மகாபாரதம்) வான்மீகி ராமாயணம்தான் அசல் ராமாயணம். நாரதர் சொல்லச் சொல்லச் எழுதினார் வான்மீகி. அதன் வடிவத்தைத்தான் நான் தமிழில் எழுதினேன் என்பது கம்பனின் வாக்குமூலம். 

‘‘தேவபாடையில் இக்கதை செய்தவர் மூவர் ஆனவர் தம்முளும் முந்திய நாவினால் உரையின் படி நான் தமிழ்ப் பாவினால் இது உணர்த்திய பண்பு அரோ!” (இதில் மூவர் என்பது வால்மீகி, வசிட்டர், வியாசர் ஆகிய மூவராகும். இதில் வியாசரை நீக்கி போதாயனரைச் சேர்த்து மூவர் என்று கூறுவோரும் உளர்), வடமொழியில் ராமாயணக் கதையைப் பெருங்காவியமாகப் பாடியதில் வான்மீகி, வசிட்டர், வியாசர், போதாயனர் ஆகிய மாமுனிவர்கள் முக்கியமானவர்கள்.

10. இறைவன் ராமன்; வேதம் ராமாயணம்

நாரதர் கூற அதைக் கேட்டு வட மொழியில் (சமஸ்கிருத மொழியில்) வால்மீகி முனிவர் பாடியுள்ள ராமாயணப் பெருங்காவியம் சிறப்பு மிக்க தாகும். மக்களிடையில் மிகவும் பிரபலமாகப் பரவியுள்ளதாகும். கம்பீரமான 24000 சமஸ்கிருத ஸ்லோகங்களைக் கொண்டதாகும். 

24 எழுத்துக் களைக்கொண்ட காயத்ரி மந்திரத்தின் விரிவு வால்மீகியின் ராமாயணம். இறைவன் ராமனாக அவதாரம் செய்தது. இறைவனின் மூச்சுக்காற்றான வேதம் ராமாயணமாக அவதாரம் செய்தது. கம்பராமாயணத்தின் தோற்றத்தைப் பற்றி தனிப்பாடல் ஒன்று இவ்வாறு குறிப்பிடுகிறது.

``நாரணன் விளையாட் டெல்லா நாரத
முனிவன் சொல்ல
வாரணக் கவிதை செய்தா னறிந்து
வான் மீகி யென்பான்
சீரணி சோழநாட்டுத் திருவழுந் தூரு வச்சன்
காரணி கொடையான் கம்பன் றமிழினாற் கவிதை செய்தான்’’.

11. எத்தனை ராமாயணங்கள்?

பெரும்பாலும் வால்மீகி ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டுதான் எல்லா ஆசாரியார்களும் உரை விளக்கம் அளித்திருக்கிறார்கள். ஆயினும், ராமாயணத்தின் சுவை அறிந்த பலரும் ராமாயணத்தை பல்வேறு மொழிகளில் இயற்றியிருக்கின்றார்கள். நூற்றுக்கணக்கான ராமாயணங்கள் இருந்தாலும், ஒரு சில ராமாயணங்களே மக்களிடம் செல்வாக்கு பெற்று இருக்கின்றன. 

அந்த அடிப்படையில், துளசிதாசரின் ``ராமசரிதமானஸ்’’, கம்பன் தமிழில் எழுதிய ``கம்பராமாயணம்’’, தமிழில் அருணாச்சல கவிராயர் எழுதிய ``ராம நாடக கீர்த்தனை’’ முதலியவை பிரசித்திப் பெற்ற ராமாயணங்கள். இது தவிர ஆழ்வார்கள், ராமாயண நிகழ்வுகளை தங்கள் பாசுரங்களில் பாடி இருக்கின்றார்கள் அனேகமாக ராமாயண நிகழ்வுகளை பாடாத ஆழ்வாரே கிடையாது என்று சொல்லலாம்.

12. ஆழ்வார்களும், தியாகராஜ சுவாமிகளும் பாடிய ராமாயணம்

மூல ராமாயணமாகிய வால்மீகி ராமாயணத்திலோ, கம்பனின் ராமாயணத்திலோ இல்லாத பல நிகழ்வுகளும், ஆழ்வார்கள் தங்கள் பாசுரங்களில் சொல்லுகின்றார்கள். இது தவிர ராமாயண நிகழ்வுகளை பல தனிப் பாடல்களிலும், கீர்த்தனைகளிலும் பல மகான்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். 

17ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் திருவாரூரில் பிறந்த தியாகராஜ ஸ்வாமிகள், நூற்றுக்கணக்கான கீர்த்தனைகளை ராமன் மீது பாடியுள்ளார். ராமாயண நிகழ்வுகளை அவர் பாடிய கீர்த்தனைகளில் இருந்தே வரிசைப்படுத்தி ``தியாகராஜ ராமாயணம்’’ என்று பலரும் பாடுவது உண்டு. ஆழ்வார்களைப் போலவே தியாகராஜ சுவாமிகளும், மூல ராமாயணத்தில் இல்லாத பல நிகழ்வுகளை தம்முடைய கீர்த்தனை களில் பாடி இருக்கின்றார்.

13. சிலப்பதிகாரத்தில் ராமாயணம்

சங்க கால தமிழர் வாழ்வில் ராமாயணக் கதை பிரசித்தி பெற்றிருந்தது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட சிலப்பதிகாரத்தில், ராமாயண நிகழ்வுகளை ஆச்சியர் குரவையில் மிக அற்புதமாகப் பாடுகின்றார் இளங்கோவடிகள். தசரதனின் பிள்ளையாகப் பிறந்த ராமன், தம்பியோடு காட்டிலும் மேட்டிலும் பதினான்கு ஆண்டுகள் நடந்தான். யாராலும் வெல்லப்பட முடியாத இலங்கை மாநகரை மொத்தமாக அழித்தான்.

அப்படிப்பட்ட ராமனின் பெருமையை காது கொடுத்து கேட்காத காதுகளும் ஒரு காதா? என்று பாடுகின்றார். ‘‘சேவடி சேப்ப தம்பியோடும் கான் போந்து, சோ அரணும் போர் மடிய தொல் இலங்கை கட்டழித்த சேவகன் சீர் கேளாத செவி என்ன செவியே’’ என்று பாடுகிறார். இதில் ராமாயணக் கதையை மக்கள் விரும்பி கேட்டனர் என்பதும், ராமன் பெருமையைக் கேட்பதையே பெரும் பேறாகக் கருதினர் என்பதையும் இளங்கோவடிகள் குறிப்பிடுகின்றார்.  

14. ராவணனை ஏன் அழித்தான்?

இளங்கோவடிகள், ராமனை சேவகன் என்று குறிப்பிட்டதை தொண்டரடிப் பொடியாழ்வாரும் தமது திருமாலைப் பாசுரத்தில் குறிப்பிடுவதை பின்வரும் பாசுரத்தின் மூலம் அறிய முடியும்.
``ஒருவில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து உலகங்கள் உய்ய,  
செருவிலே அரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார்,
மருவிய பெரிய கோயில் மதில் திருவரங்கம் என்னா,
கருவிலே திருவிலாதீர்! காலத்தைக் கழிக்கின்றீரே’’

உலகங்கள் உய்ய, செருவிலே அரக்கர் கோனைச் செற்ற நம்சேவகனார், என்பதற்கு பொருள் சொன்ன உரையாசிரியர்கள், உலகங்களையெல்லாம் வாழ்விக்கக்கருதிய பெருமாள் தனித் தனியாக ஒவ்வொருவருடைய இருப்பிடத்திற்குச் சென்று அவர்களை வாழ்விப்பது அரிய காரியம் என்றெண்ணி ஸதுபாயம் சிந்தித்து, ராவணனொருவனை வென்று விட்டால், உலகங்களையெல்லாம் வாழ்வித்தவாறாம் என்று அறுதியிட்டு ராவணஸம்ஹாரம் செய்தருளினன் என்று நயம்பட உரைத்தார்கள்.

15. கடற்கரை ஆலோசனை

சங்க இலக்கியத்தில் அகநானூறு என்ற இலக்கியத்தில் மிக அருமையான காட்சி ஒன்று. சமுத்திரத்தை கடப்பதற்காக ராமன் வானரசேனையோடு கடற்கரைக்கு வந்துவிட்டான். மிக நீண்ட கடலைப் பார்க்கும் பொழுது, எப்படி இந்த கடலைக் கடந்து, அந்தப் பக்கம் உள்ள இலங்கைக்கு செல்வது என்று ஆலோசனை நடத்துகின்றான். 

அப்படி மந்திர ஆலோசனை நடத்துகின்ற பொழுது மரத்தின் மீது பறவைகள் அமர்ந்து கிரிச்கிரீச் என்று சப்திக்கின்றன. அதனால் ராமன் என்ன பேசுகிறான், மற்றவர்கள் என்ன ஆலோசனை கூறுகின்றார்கள் என்பதை கேட்க இடையூறாக இருந்தது. உடனே ராமன் அந்தப் பறவைகளைப் பார்த்து ‘‘பேசக் கூடாது’’ என்கிற தொனியிலே கையை உயர்த்துகின்றான்.

16. புறநானூற்றிலே ராமாயண நிகழ்வு

அடுத்த நிமிடம் ராமனின் ஆணைக்கு இணங்க அந்தப் பறவைகள் சப்தம் செய்யாமல் அமைதியாக இருந்தன. மந்திர ஆலோசனை நல்லபடியாக நடந்தது என்பதை அகநானூற்றிலே ஒரு செய்யுளில் மிக நுட்பமாக குறிப்பிடுகின்றது. இந்தக் காட்சி வால்மீகி ராமாயணத்திலும், கம்பராமாயணத்திலும் இல்லாத காட்சி என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். (வெல்போர் ‘‘ராமன் அரு மறைக்கு அவித்த பல் வீழ் ஆலம் போல, ஒலி அவிந்தன்று, இவ் அழுங்கல் ஊரே’’ - அகநானூறு) இதைப் போலவே புறநானூற்றிலே ஒரு பாடலின் பகுதி.

``கடுந்தெறல் ராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை,
நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந்
தா அங்கு,     
அறாஅ அருநகை இனிதுபெற் றிகுமே’’

17. சீதையின் நகைகள்

மேலே சொன்ன பாடல் விவரிக்கும் காட்சி இது. ராவணன் சீதையை வான் வழியே கவர்ந்து செல்கின்றான். சீதை தன்னை யாராவது காப்பாற்ற மாட்டார்களா என்று கதறி அலறுகின்றார். புஷ்பக விமானத்தில் போகின்ற பொழுதுதான் எந்த பக்கத்திலே போகின்றோம் என்பதை ராமன் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு அடையாளமாக தன்னுடைய அணிகலன்களை எல்லாம் கழற்றி கீழே போடுகின்றாள்.

இந்த அணிகலன்களை எல்லாம் அந்த பகுதியிலே இருக்கக்கூடிய வானரங்கள் கையில் எடுக்கின்றன. குரங்குகளுக்கு எந்த அணிகலனை எங்கே அணிவது என்பது தெரியாமல் மாற்றி மாற்றி அணிந்து கொள்ளும் காட்சி பார்க்க நகைப்புக்கு உரியதாக இருந்தது என்பதை புறநானூற்று ஆசிரியர் சொல்லுகின்றார்.

18. சீதையிடம் நகைகள் எப்படி வந்தன?

இங்கு ஒரு கேள்வி எழும். மரவுரி தரித்து ராமனோடு காட்டுக்குப் புறப்பட்ட சீதையிடம் நகைகள் எப்படி வந்தன? அனுசுயா, அத்ரி முனிவரின் மனைவி தத்தாத்ரேயரின் தாய். ராமனும் சீதையும், அனுசூயா கணவனுடன் வாழ்ந்த சித்திரகூடம் காட்டிற்கு வருகை தந்த போது, அவர்களை உபசரித்து உதவினாள். மேலும் சீதையின் அழகு, பொறுமை ஆகியவற்றைக் கண்டு மகிழ்ந்தாள். தான் அணிந்திருந்த நகைகளை சீதைக்கு அணிவித்து அழகு பார்த்தாள்.

பின்னர் அந்ந நகைகள் சீதையிடமே இருக்கட்டும் என்று வழியனுப்பினாள். இந்த சம்பவம் ராமாயணத்தில் உள்ள சம்பவம்தான். பின்னால் இந்த அணிகலன்களை எல்லாம் சுக்ரீவன் காட்டும் பொழுது, இலக்குவணன் ஒரே ஒரு அணிகலன் மட்டும் சீதை அணிந்தது தான் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். அது சீதையின் பாதத்தில் அணிந்த அணி கலன். தினமும் அன்னை சீதையின் திருவடிகளில் விழுந்து சேவிப்பதால் அவள் திருவடியில் உள்ள சிலம்பு மட்டும் அடையாளம் தெரியும் என்றான்.

19. திருமங்கையாழ்வாரும் கம்பனும்

``குகன் குறித்து திருமங்கை ஆழ்வார்
பாசுரம் இது.
ஏழை ஏதலன் கீழ்மகன் என்னா திரங்கி
மற்றவற் கின்னருள் சுரந்து
மாழை மான்மட நோக்கியுன் தோழி,
உம்பி யெம்பியென் றொழிந்திலை, உகந்து
தோழ னீயெனக் கிங்கொழி என்ற சொற்கள்
வந்தடி யேன்மனத் திருந்திட,
ஆழி வண்ணநின் னடியிணை யடைந்தேன்
அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே.’’

‘ஏழை’ என்ற சொல் அறிவுகேடனென்னும் பொருளாகும். ஆனால் கருணையுள்ள ராமன் அப்படி குகனை கருதாமல், மனைவியாகிய இந்த சீதை இனி உன் தோழி, என் தம்பியான லட்சுமணன் உன் தம்பியாவன்; என்று சொல்லி இவ்வளவோடு நின்றுவிடாமல், ‘‘நீ எனக்கு தோழன்” என்றான். இங்கே குகனை தம்பி என்று சொல்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், தனக்கு நண்பன் என்றும் சொல்லும் கருணையைப் பார்க்க வேண்டும்.

20. கம்பன் காட்டும் தம்பி

இந்தப் பாசுரத்தை அப்படியே தன் பாணியில் பாடுகிறான் கம்பன். அசோக வனத்தில் ராமனை குறித்து எத்தனையோ சம்பவங்களை நினைவு கூறும் சீதை,
குகனோடு கொண்ட தோழமையை நினைத்துப் பார்க்கிறாள்.  

‘ஆழ நீர்க் கங்கை அம்பி கடாவிய
ஏழை வேடனுக்கு எம்பி நின் தம்பி,
நீ தோழன், மங்கை கொழுந்தி
எனச் சொன்ன வாழி நண்பினை உன்னி
மயங்குவாள்’’

இலக்குமணன் குகனுக்குத் தம்பி எனின், குகனுக்கு ராமன் அண்ணன் ஆகிறான். அண்ணன் ராமனின் மனைவியாகிய சீதை குகனுக்கு அண்ணி ஆகிறாள். ஆனால் இங்கே, ‘கொழுந்தி’ எனக் கூறியதாகக் கம்பர் குறிப்பிட்டுள்ளார். சில மரபில் ஒருவனுக்குத் தன் மனைவியுடன் பிறந்த மகளிர் அனைவரும் கொழுந்தி எனவும் முறை வழங்கப்படுவதுண்டு. கொழுந்து - இளமை என்னும் பொருளில் கொழுந்தி கொழுந்தனார் என்னும் பெயர் ஆட்சிகள் மலர்ந்தன.

21. அரக்கர்கள் ஆடிய கூத்து “பொங்கத்தம் பொங்கோ”

வேறு எந்த ராமாயணத்திலும் இல்லாத அற்புதமான சம்பவத்தை திருமங்கையாழ்வார் பாடியிருக்கிறார். அதில் ஒரு பதிகம் ‘‘பொங்கத்தம் பொங்கோ’’ என்பது. இது தோற்றவர்கள் தோல்வியை பறையடித்து ஆடும் ஒரு கூத்து வகை. ராமபிரானின் பேராற்றலையும், போர் ஆற்றலையும் கண்ட அரக்கர்கள், தங்களது தோல்வி நியாயமானதுதான் என்பதையும் ஏற்றுக் கொண்டு, உன்னுடைய வெற்றியை நாங்கள் ஏற்றுக் கொள்ளுகின்றோம்” என்று பறை அடித்து அறிவிப்பது போல் உள்ள அற்புதமான பாசுரம் இந்தப் பாசுரம். இது மூலராமாயணமான வால்மீகி இராமாயணம் உட்பட எந்த ராமாயணத்திலும் இல்லாதது. புதுமையானது.

22. பகவான் ராமனின் வெற்றிதான் நம் வெற்றி

``இரக்க மின்றியெங் கோன் செய்த தீமை
இம்மை யேயெமக் கெய்திற்றுக் காணீர்
பரக்க யாமின் றுரைத்தென் இரவணன்
பட்ட னனினி யவர்க்கு ரைக்கோம்
குரக்கு நாயகர் காள் இளங் கோவே
கோல வல்வி லிராம பிரானே
அரக்க ராடழைப் பாரில்லை நாங்கள்
அஞ்சி னோந்தடம் பொங்கத்தம்
பொங்கோ’’.

இந்தப் பாசுரம் ஒரு தலைவன் செய்யும் தீமை அவனை நம்பி இருப்பவர்கள்எல்லோர் தலையிலும் விழுகிறது என்பதை நயமாக எடுத்துரைக்கிறது. பாவம் செய்தவன் அவன் (ராவணன்), அந்தப் பாவத்தின் பலன் அவளோடு நில்லாமல் எங்களளவும் பலித்துவிட்டது, ராக்ஷஸரில் இனி ஆடுபோலே கூப்பிடக்கடவாரில்லை’ என்று நஞ்சீயர் நம்பிள்ளைக்குப் பொருள் பணிக்க, அதனை நம்பிள்ளை கேட்டு, ‘ஆடு என்று வெற்றிக்கும் வாசகமாதலால், இந்த ராக்ஷஸ ஜாதியில் வெற்றி சொல்லுவாரில்லை, அதாவது தோற்றோம் தோற்றோம் என்று தோல்வியைச் சொல்ல வல்லாருள்ளோ மத்தனை யொழிய வென்றோ மென்று விஜயத்தைச் சொல்லிக்கொள்ள வல்லாரில்லை. என்று பொருள் கூறலாகாதோ? என்ன, நஞ்சீயரும் இதைக்கேட்டருளி ‘இதுவே பொருந்தும் பொருள், இப்படியே சொல்லிக்கொள்ள அமையும்’ என்று நியமித் தருளினராம்.

23. குழமணி தூரம் எனும் கூத்து

திருமங்கை ஆழ்வார் இன்னொரு பதிகம் பாடி இருக்கின்றார். அதற்கு குழமணி தூரம் என்று பெயர். போரில் தோல்வி அடைந்த அரக்கர்கள், ராமபிரானிடம் அடைக்கலம் கேட்டு ஆடுகின்ற கூத்து வகை இது. இந்தக் கூத்து தலைகீழாக நின்று ஆடப்படும் கூத்து. இதில் ராமபிரானிடம் மட்டும் இல்லாமல் ராமபிரானின் படையில் உள்ள அனு மனிடமும், சுக்ரீவனிடமும், அங்கதனிடமும், தங்களுக்கு அருளுமாறு வேண்டுவதை பார்க்கும் பொழுது அரக்கர்கள் மீது கூட நமக்கு அனுதாபம் பிறக்கும்.

``ஏத்து கின்றோம் நாத்த ழும்ப இராமன்
திருநாமம்
சோத்தம் நம்பீ. சுக்கிரீவா, உம்மைத்
தொழுகின்றோம்
வார்த்தை பேசீர் எம்மை யுங்கள் வானரம்
கொல்லாமே
கூத்தர் போல ஆடு கின்றோம் குழமணி
தூரமே’’.

24. பகவான் தயங்கினாலும் பகவானின் அடியார்கள் மன்னிக்கத் தயங்க மாட்டார்கள்.

 பகவானிடம் நேரடியாகச் செய்த சரணாகதி பலிக்கும் பலிக்காமலும் இருக்கும். ஆனால், பகவானின் அடியார்கள் மூலம் செய்த சரணாகதி பலிக்காமல் போகாது என்பது வைணவ தத்துவம். இங்கே அரக்கர்கள், பகவானின் அடியார்களான சுக்கிரீவன், அனுமன், அங்கதன் முதலி யோர்களின் வழியாக இராமனிடம் அடைக்கலம் கேட்கிறார்கள், பாசுரந் தொடங்கும்போதே “ஏத்துகின்றோம் நாத்தழும்ப இராமன் திருநாமம்” என்ற அழகை என் சொல்வோம்! 

“ராமோ ராமோ ராம இதி ப்ரஜாநாமபவந் கதா - ராமபூதம் ஜகதபூத் ராமே ராஜ்யம் ப்ரசாஸதி. (இராமபிரான் அரசாட்சி புரிந்த காலத்திலே ஜனங்களனைத்தின் வாயிலும் ஸ்ரீராம நாமத்தை தவிர வேறொன்றும் வந்ததில்லை, உலகமே ராம மயமாக ஆகிவிட்டது) என்றாப்போலே, இலங்கையும் ராமநாம மயமாக ஆய்விடுகின்றதிப்போது நாக்குத் தடிக்கும்படி ஸ்ரீ ராம நாமங்களையே சொல்லுகின்றார்கள்.

25. பிறக்கும் போதே தலைகளை எண்ணினானாம்

மூன்றாம் திருந்தாதியில் (பாசுரம் 77) பொய்கையாழ்வார் ஒரு புதிய செய்தியாய் பாடுகிறார். அந்தப் பாசுரம் இது.

``ஆய்ந்த அருமறையோன் நான்முகத்தோன்
நன்குறங்கில் வாய்ந்த குழவியாய்
வாளரக்கன், - ஏய்ந்த
முடிப்போது மூன்றேழன் றெண்ணினான்,
ஆர்ந்த
அடிப்போது நங்கட் கரண்’’.

முன்பு ராவணன், கடும் தவம்செய்தான். பிறகு தனது பத்துத்தலைகளையும் மறைத்துக் கொண்டு நான்முகனிடம் சென்று, குறையாத வாழ்நாளும், உலகை வெல்லும் ஆற்றலும், வரம் வேண்டினான் அப்போது எம்பெருமான் ஒரு சிறு குழந்தை வடிவாய் அப்பிரமனுடைய மடியிலே உறங்குவான்போலே கிடந்தானாம். 

‘பத்துத் தலைகளையுடைய ராவணன், உருவத்தை மறைத்துக் கொண்டு உன்னை வஞ்சித்து வரம் வேண்டிக் கொள்ள வந்திருக்கிறான், இவனுக்கு நீ வரமளித்தால் பெருந் தீங்காய் முடியும் என்று தெரிவிப்பவன் போன்று, தன் திருவடியால், ராவணனுடைய பத்துத்தலைகளையும் எண்ணிக்காட்டினன் என்பதாக இவ்வரலாறு வழங்குகின்றது. அந்த திருவடியே நமக்கு சரண், அரண் எனப் பாசுரம் முடிகிறது. இந்த செய்தி ஆழ்வார் மட்டுமே சொன்ன செய்தி.

26. திருவரங்கமும் ராமாயணமும்

இனி தமிழகத்தில் ஆழ்வார் களால் பாடப் பெற்ற சில ராமாயண தலங்களைக் காண்போம். 108 திவ்ய தேசங்களில் தலைமை திவ்ய தேசம் திருவரங்கம். திருவரங்கப் பெருமான் ஐந்து நிலைகளில் காட்சி தருகின்றான். ராம அவதாரத்தோடு தொடர்பு கொண்ட பெருமாள் அதாவது ராமன் வழிபட்ட பெருமாள். எனவே இவருக்கு பெரிய பெருமாள் என்று திருநாமம்.

``ஆராத அருள் அமுதம் பொதிந்த கோயில்
அம்புயத்தோன் அயோத்தி மன்னற்கு
அளித்த கோயில்
தோலாத தனி வீரன் தொழுத கோயில்
துணையான விபீடணற்குத் துணையாம்
கோயில்
சேராத பயன் எல்லாம் சேர்க்கும் கோயில்
செழு மறையின் முதல் எழுத்துச் சேர்ந்த
கோயில்
தீராத வினை யனைத்தும் தீர்க்கும் கோயில்
திருவரங்கம் எனத் திகழும் கோயில் தானே’’.

திருவரங்கப் பெருமானை நாம் வணங்குகின்ற பொழுது ராமன் வணங்கிய பெருமாளை வணங்குகின்றோம் என்கிற சிறப்புண்டு. ராமனோடும், ராம அவதாரத்தோடும் தொடர்புடைய பெருமான். விபீஷணன் சுமந்து வந்து காவிரி கரையில் வைத்த பெருமாள்.

27. திருக்கண்ணபுரமும் ராமாயணமும்

இரண்டாவது தலம் திருக்கண்ணபுரம். நீலமேகப் பெருமாள். சௌரிராஜப் பெருமாள் என்ற திருநாமம். விபீஷண ஆழ்வாருக்கு அமாவாசை தினத்தன்று பகவான் நடையழகை சேவை சாதித்த தலம். எனவே ராமாயணத்தோடு தொடர்பு கொண்ட தலமாக விளங்குகிறது. அடுத்ததாக ராமனுக்கு குலசேகர ஆழ்வார் தாலாட்டு பாடினார்.

``மன்னுபுகழ் கெளசலைதன் மணிவயிறு
வாய்த்தவனே
தென்னிலங்கை கோன்முடிகள் சிந்துவித்தாய்
செம்பொஞ்சேர்
கன்னிநன்மா மதிள்புடைசூழ் கணபுரத்தென்
கருமணியே
என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ’’

இந்தத் தாலாட்டு வால்மீகியிலும் கம்பராமாயணத்திலும் இல்லாத தாலாட்டு. எனவே ராமனுக்கு தாலாட்டு பாசுரங்கள் பாடப்பட்ட தலம் என்பதால் திருக்கண்ணபுரம் ராமாயணத் தொடர்புடைய தலம்.

28. திருச்சித்ரக்கூடமும் ராமாயணமும்

திருச்சித்ரக்கூடம் சோழ நாட்டு திருத் தலங்களில் ஒன்று. திருமங்கை ஆழ்வாரும் குலசேகர ஆழ்வாரும் பாடிய தலம். புகழ்பெற்ற நடராஜர் ஆலயத்திற்குள்ளேயே கிழக்கு நோக்கி தனி கொடிமரம், கோபுரத்தோடு உள்ள தலம். கோவிந்தராஜ பெருமாள் தேவாதிராஜன் என்று பெருமாளுக்குப் பெயர். சயன கோலம். 

இந்தத் தலத்தில்தான் குலசேகர ஆழ்வார் தம்முடைய இஷ்ட தெய்வமாகிய ராமன் கதையை முழு பதிகமாகப் பாடினார். ஸ்ரீ ராமாயணத்தின் முக்கியமான நிகழ்ச்சிகள் அத்தனையும் இந்தத் தலத்தில் குலசேகர ஆழ்வார் பாடினார். உத்தர காண்டச் செய்திகளும் குலசேகர ஆழ்வார் ராமாயணப் பதிகத்தில் இருப்பதால் இது முழுமையான ராமாயணமாக பாராயணம் செய்யப்படுகிறது.

``அன்றுசரா சரங்களைவை குந்தத்தேற்றி
அடலரவப் பகையேறி யசுரர் தம்மை
வென்றுஇலங்கு மணிநெடுந்தோள்
நான்கும் தோன்ற விண்முழுது
மெதிர்வரத்தன் தாமம் மேவி
சென்றினிது வீற்றிருந்த வம்

மான்றன்னைத்
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந்
தன்னுள்
என்றும்நின்றா னவனிவனென் றேத்தி
நாளும்

இன்றைஞ்சுமினோ வெப்பொழுதும்
தொண்டீர் நீரே.’’
இன்னும் ஒரு சிறப்பு என்னவென்றால், குலசேகர ஆழ்வார் சோழ நாட்டின் தலைநகரான திருவரங்கத்தில் பதிகம் ஆரம்பித்து, திருச்சித்ர கூடத்தில் முடிக்கிறார். இது
குலசேகர ஆழ்வார் நிறைவுப் பதிகம்.

29. திருப்புட்குழியும் ராமாயணமும்

திருப்புட்குழி காஞ்சிபுரம் இருந்து 9கி.மீ தொலைவில், சென்னை வேலூர் சாலையில், பாலு செட்டி சத்திரம் என்ற ஊருக்கு அருகே இடதுபுறத்தில் உள்ள தலம். விஜயராகப் பெருமாள் என்று பெருமாளுக்கு திருநாமம். இந்தத் திருத்தலத்தில் சீதையைத் தேடப் போனபோது, ராமன் சிறிது காலம் தங்கி இருந்ததாகவும், அப்போது ஜடாயுவுக்கு தர்ப்பணாதிகளைச் செய்து மோட்சம் அளிக்க வேண்டி ஜடாயு தீர்த்தத்தை உண்டாக்கினதாகவும் வரலாறு. எனவே, இந்தத் தலத்திற்கு திருப்புட்குழி என்று பெயர் ஏற்பட்டது.

கோயிலுக்கு எதிரில் ஜடாயு சந்நதி இருக்கிறது. மூலவர் நமது தொடையின் மீது ஜடாயுவை வைத்துக் கொண்டு சம்ஸ்காரம் செய்யும் நிலையில் எழுந்தருளி இருக்கின்றார். ஸ்ரீராமானுஜர் தன்னுடைய முதல் குருவான யாதவப் பிரகாசரிடம் கல்வி கற்றது இந்தத் திருத்தலத்தில்தான் என்பது இன்னும் சிறப்பு. எனவே, ராமாயணத்தோடு தொடர்புடைய தலங்களில் இத்தலமும் ஒன்று. 30. திருப்புள்ளம் பூதங்குடியும் ராமாயணமும்

இதே ஜடாயுவோடு தொடர்பு கொண்ட இன்னொரு தலம் திருப்புள்ளம் பூதங்குடி. கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலை வழியாக திரு வைகாவூர் செல்லும் வழியில் உள்ளது. மூலவரின் திருநாமம் வல்வில் ராமன் புஜங்க சயனமாக கிழக்கே திருமுக மண்டலத்தோடு காட்சி தருகின்றார்.

இங்கே உள்ள தீர்த்தத்திற்கு ஜடாயு தீர்த்தம் என்று பெயர். ஸ்ரீ ராமன் ஜடாயுவுக்கு சரம கைங்கர்யங்கள் (இறுதி காரியங்கள்) தன் திருக்கரத்தால் செய்தபின், ஓய்வு எடுப்பதற்காக, பள்ளி கொண்ட நிலையில் இங்கு கோயில் கொண்டதாக தல வரலாறு. சீதையைப் பிரிந்த நிலை என்பதால், இவர் பக்கத்தில் சீதை இல்லை. உற்சவமூர்த்திக்கு ஸ்ரீ ராமன் என்ற திருநாமம். அவருக்கு நான்கு தோள்கள் உண்டு. திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்த தலம். இது புதனுக்குரிய பரிகாரத் தலம். இங்கே பித்ருக்களுக்கு பரிகாரம் செய்வது உகந்தது.

இன்னும் ராமாயணத்தோடும், ராமனோடும் தொடர்பு கொண்ட பல தலங்கள் தமிழ்நாட்டிலும் வட நாட்டிலும் உண்டு. கும்பகோணம் ஸ்ரீ ராமசுவாமி கோயில், வடுவூர் ராமன் கோயில், மதுராந்தகம் ராமர் கோயில், சிதம்பரம் பட்டாபிராமர் கோயில், ஸ்ரீமுஷ்ணம் பட்டாபிராமர் கோயில், திருப்புல்லாணி ஜெகநாதப் பெருமாள் கோயில், தில்லை வளாகம் ராமர் கோயில், தனுஷ்கோடி ராமர் கோயில் என ஏராளமான கோயில்கள் ராமாயணத்தோடும், ராமாயண நிகழ்வோடும் தொடர் புடையதாக இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு ராமாயண நிகழ்ச்சி நடந்ததாகச் சொல்லப்படுகிறது.

எனவே, இந்த ஸ்ரீராமநவமியில், ஸ்ரீராமபிரானை பூஜித்து, அவருடைய திருத்தலங்கள் ஏதேனும் ஒன்றை சேவித்து, ஸ்ரீராமரின் பரிபூரண அருளைப் பெறுவோம். ஜகம் புகழும் புண்ணியக் கதையான ஸ்ரீராமனின் கதையைப் பாடுவோம். கேட்போம். பரிபூரண ஆனந்தம் அனுபவிப்போம்!