காமதகனமூர்த்தி



சிவபெருமானின் திருவடிவங்களில் குறிப்பிடத்தக்கது காமதகனமூர்த்தியின் வடிவமாகும். இம்மூர்த்தியின் சிற்பங்கள் அரிதாக சில சிவாலயங்களில் மட்டுமே இடம்பெற்றுள்ளன. காம

தகன மூர்த்தியின் சிற்பங்கள் வரிசையில் பேரழகு வாயந்ததும், மிகப் பெரியதுமாகிய வடிவம் கங்கைகொண்ட சோழபுரத்து கங்கைகொண்ட சோழீச்சரத்தில்தான் உள்ளது. 
அத்திருக்கோயிலின் ஸ்ரீவிமானத்தின் வடபுறச் சுவரில் திகழும் ஐந்தாம் தேவகோஷ்டத்தில் காமதகன மூர்த்தியின் திருவுருவம் இடம்பெற்றுத் திகழ்கின்றது. கோஷ்டத்தின் இருமருங்கும் சுவரில் நான்கு வரிசைகளாக சிறிய சிற்பங்கள் காணப் பெறுகின்றன. கோஷ்டத்திற்கு வலப்புறம் மேலாகச் சிவபெருமானை நோக்கி அம்பு எய்யும் மன்மதன் காணப்பெறுகின்றான்.

நேர் எதிர்புறம் ஒற்றைக் காலை மடித்த நிலையில் ஒருவர் நின்றவாறு யோகத்தில் ஈடுபட்டுள்ளார். அது சிவனாரைக்கூடக் குறிப்பதாக இருக்கலாம். அடுத்த இரண்டாம் வரிசையில் விண்ணில் மிதந்தவாறு ஈசனை கையுயர்த்திப் போற்றும் சூரியன், சந்திரன் மற்றும் ஒரு தெய்வ உருவம் ஆகியவை இருபுறமும் உள்ளன. 

மூன்றாம் வரிசையில் கண்நுதற்கடவுளாம் சிவபெருமானின் நயனத்திலிருந்து எழுந்த தீயின் தகிப்பினைத் தாங்க இயலாத மன்மதன் நீட்டிய கரங்களுடன் எரிந்து வீழ அவனுக்குப் பின்புறம் அமர்ந்துள்ள இரதியோ அவனுடலைத் தாங்கிப் பிடிக்கின்றாள். எதிர்புறம் பரமேட்டியின் திருக்கருணையால் உயிர்த்தெழுந்த மன்மதனும் இரதியும் இருகரம் கூப்பி நிற்கின்றனர்.

கீழ்வரிசையில் நான்கு ஆடற்கலைஞர்கள் நடம்புரிகின்றனர்.கோஷ்ட மாடத்தில் நான்கு திருக்கரங்களுடன் சிவபெருமான் சுகாசன கோலத்தில் அமர்ந்துள்ளார். வல மேற்கரத்தில் உருத்திராக்க மாலையும், இடமேற்கரத்தில் தீயும் (கோலுடன்) காணப் பெறுகின்றன. வலமுன் கரத்தை எதிரே நீட்டி எரிந்து வீழும் மன்மதனை ஒரு விரலால் சுட்டிக் காட்டுகின்றார். இடமுன்கரமோ தொடைமீது ஒய்யாரமாக இருத்தப்பெற்றுள்ளது. ஒரு காதில் ஓலைச்சுருளும் மறுகாதில் மகரக்குழையும் காணப் பெறுகின்றன. நெற்றிக்கண் விழித்த நிலையில் காணப் பெறுகின்றது.

காமனைக் கண்ணுதற்கடவுள் எரித்த வரலாறு முழுதும் அறிந்தபிறகு இக்காட்சியை மீண்டும் நோக்கு வோமாயின் நாம் மேலும் தெளிவுறுவதோடு சிற்பக்காட்சியின் சீர்மையையும் அறிவோம்.

சிவபெருமானின் அட்ட வீரச் செயல்களுள் ஒன்றாக காமதகனம் பேசப் பெறுகின்றது. கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்தபுராணத்தில் காமதகனப் படலம் என்ற தலைப்பின்கீழ் 110 பாடல் களில் சிவபெருமான் காமனை எரித்த வரலாறு விரித்துரைக்கப்பெற்றுள்ளது.

கல்லால மரத்தின்கீழ் அமர்ந்தானாக சிவபெருமான் யோக நிலையில் திகழ்ந்தபோது திருமாலின் மைந்தனான மன்மதன் தன் ஐமலர்க்கணையை அவர்தம் மோனத்தைக் கலைப்பதற்காக எய்தான். அப்போது அது இளவேனிற் காலம். மலர் அம்போ யோகத்தைக் கலைத்தது. பரமனோ அழல் வீசும் தன் நெற்றிக்கண்ணைத் திறந்து காமவேளை நோக்கியவாறு புன்னகை பூத்தார். கண் அழல் காமத்தைச் சுட்டெரித்தது. அழகெலாம் தொலைந்தொழிய நொடிப் போழுதில் காமன் கருகி பொடியாய் வீழ்ந்தான்.

தேவர்கள் அத்தீயைக் கண்டு அஞ்சி நடுங்கி ஒடுங்கினர். அச்சமுற்ற காமனின் மனைவி இரதிதேவி அண்ணலைப் பணிந்தாள்.  அவளுக்கு இரங்கிய இறைவர் கருணைபுரிந்தார். காமனும் உருப்பெற்றான். ஞானாக்னியை நெற்றியில் வெளிப்படுத்திய அக்கண்ணுதற் கடவுளை சிற்ப ஆகம நூல்கள் காமதகன மூர்த்தி என்ற திருநாமத்தோடு போற்றின.

``கழைபடுகாடு தென்றல் குயில்
கூட
அஞ்சுகணையோன் அணைந்து
புகலும்
மழைவடிவ வண்ணம் எண்ணி
மகவோனை
விட்ட மலர் ஆன தொட்ட மதனன்
எழில்பொடி வெந்து வீழ
இமையோர்
கணங்கள் எரிஎரி என்று இறைஞ்சி
அகத்
தழல்படு நெற்றி ஒற்றை நயனம்
சிவந்த
தழல் வண்ணன் எந்தை சரணே’’

 - எனத் திருநாவுக்கரசர் காமதகன மூர்த்தியைப் போற்றியுள்ளார். திருஞானசம்பந்தப் பெருமானாரோ,

``விண்ணவர்கள் வெற்பு அரசு
பெற்ற மகள்
மெயத்தேன்
பண் அமரும் மென்
மொழியினாளை
அணைவிப்பான்
எண்ணிவரு காமன் உடல் வேவ
எரிகாலும்
கண்ணவன் இருப்பது
கருப்பறியலூரே’’

 - என்று பாடி காமனை எரித்த வரலாற்றைக் கூறியுள்ளார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவெண்காட்டில் பதிகம் பாடும்போது,

``இழித்து உகந்தீர் முன்னைவேடம்
இமையவர்க்கும் உரைகள் பேணாது
விழித்து உகந்த வெற்றி என்னே வேலை
சூழ் வெண் காடனீரே’’
 - என்று கூறி காமவேளை விழித்து உகந்தமையை விவரித்துள்ளார்.

புராண வரலாறும், மூவர் கூற்றும் அறிந்தபின்பு மீண்டும் இச்சிற்பக் காட்சியைப் பாருங்கள். மன்மதன் எரிந்து பொடியாய் வீழும்போது எழுந்த தீயின் தகிப்பினை நாமும் உணர்வோம். இரதியின் வேண்டுகோளுக்காக மீண்டும் அவனை உயிர்ப்பித்து அருளிய அக்கருணாமூர்த்தியின் திருமுகத்தை உற்றுநோக்குங்கள். 

அங்கு வெளிப்படும் கருணை மழையால் நாமும் நனைந்து குளிர்வோம். கங்கைகொண்ட சோழீச்சரத்தில் உள்ள இக்காட்சியைக் கண்டபின்பு தஞ்சைப் பெரிய கோயிலிலும், தாராசுரம் ஐராவதீசுவரர் கோயிலிலும் உள்ள காமதகனக் காட்சியை ஒருமுறையேனும் காணுங்கள். சோழச் சிற்பிகளின் கைவண்ணம் நம்மை உலுக்கிடும்.

முதுமுனைவர் குடவாயில்பாலசுப்ரமணியன்