புராணங்களின் அடிநாதம்



வணக்கம் நலந்தானே!

இந்த தேசத்தின் ஜீவநாடியாக, அடிநாதமாக ஆன்மிகம் என்கிற பெரிய மரபு யுகங்களாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த ஆன்மிக மரபே நம் தேசத்தை ஆதியிலிருந்து அடையாளப்படுத்தும் விஷயமாகும். சரி, இந்த ஆன்மிகம் எதை மையமாக வைத்து நிறுவப்பட்டுள்ளது?

வேதங்களைக் கொண்டு? சரி, இந்த வேதங்கள் யாரால் இயற்றப்பட்டன?

இது எவராலும் இயற்றப்படவில்லை? அண்டம் எனும் அகண்டத்திலிருக்கும் மந்திரங்களை ரிஷிகள் கிரகித்தார்கள். அவற்றை வியாஸர் நான்காகப் பிரித்துத் தொகுத்தார்.
இப்படிப் போய்த்தான் இந்திய ஆன்மிக மரபை புரிந்து கொள்ள வேண்டுமா? வேறு வழியே இல்லையா?

புராணங்கள் எனும் கதை ரூபத்தில் இந்த தேசத்தில் இத்தனை கடினமான விஷயங்களை கொழுக்கட்டைக்குள் பூர்ணம்போல கொடுத்திருக்கிறது. இந்த தேசத்தின் ஆன்மிக மரபையும், கலாச்சாரத்தையும், தர்மங்களையும், வேத, வேதாந்தங்களையும், யோக ரகசியங்கள் அனைத்தையும் கதை எனும் எளிய சர்க்கரை தடவியே ஆதிநாளிலிருந்து சொல்லப்பட்டபடியே வந்து கொண்டிருக்கிறது.

அணுகுண்டின் அழுத்தம் மிகுந்த மாபெரும் வேதாந்தக் கதைகளை குழந்தைக்கு சோறு ஊட்டும்போது  ஒரு தாய் சொல்லி விடுவாள். பத்து வயதுவரை கதையாக இருக்கும். இருபது வயதுக்குப் பிறகு ஏதோ இந்தக் கதைக்குள் இருக்கக் கூடும் என்கிற நம்பிக்கை பிறக்கும். முப்பத்தைந்து வயதிலிருந்து அது என்னதான் சொல்கிறது என்று கதைக்குள் நுழைந்து தேடத் துவங்குவோம்.

நாற்பது வயதுக்குப் பிறகு ஒரே கதைக்குள் இத்தனை விஷயங்களா என்று விழியை விரிக்க வைக்கும். இந்த கதைக்குள் இவ்வளவு ஆழம் உள்ளதோ என்று திகைக்க வைக்கும். அப்போதே அந்தக் கதை குருவாக ஆசனமிட்டு இருதயத்தில் அமரும். அதுவே போதிக்கவும் துவங்கும். தான் சீடனாகி தன் வாழ்க்கையை கதையின் ஆழத்திற்குள் செலுத்தி பயணப்பட்டு விடுவான்.

விதைக்குள் ஒளிந்திருக்கும் விருட்சம்போல கதைக்குள் ஒளிந்திருக்கும் ஒளியின் கிரணத்தை சூட்சுமமாக பற்றியபடியே நடக்கிறான். இப்போது அந்த ஒரு கதை பல்வேறு பரிமாணங்களில் தன்னிலிருந்து கிரணங்களை பாய்ச்சியவாறு தரிசனத்தை கொடுத்துக் கொண்டேயிருக்கும். கூம்பியிருந்த தாமரை இதழ்கள் விரிவதுபோல கதையின் ஒவ்வொரு இதழ்களையும் தத்துவம் எனும் நோக்கில் பிரிக்கப் பிரிக்க மலர்ந்த தாமரையாக இறை தரிசனம் வரை சென்று விடுகிறான்.

ஏனெனில், இந்தக் கதை எனும் மாத்திரைக்குள் மிக வீர்யமாக மகான்கள், ஞானிகள் தமது சக்தியை அதாவது தம்முடைய பேரருளை பொதித்து வைத்திருக்கிறார்கள் எனும் உண்மையை இறை தரிசனம் பெறும்போது ஒரு ஜீவன் உணர்ந்து விடுகிறான். இதற்கு உதாரணங்களாக சர்வ சாதாரணமாக இராமாயண, மத் பாகவத, மகாபாரத இதிகாசங்களை கூறலாம்.

கிருஷ்ணா

(பொறுப்பாசிரியர்)