இறைச்சுவை இனிக்கும் இலக்கியத்தேன்-67 சிந்தையில் நிறைந்த ஸ்ரீராமர்!ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய்ஜெய் ராம்



இந்த பக்தி நாமாவளி காற்றில் மிதந்து, காதில் புகுந்து, இதயத்தில் கலந்து உணர்வில் ஒன்றி ஒரு புதிய உத்வேகத்தை ஏற்படுத்துகிறதல்லவா?
ஆம்! அந்த அளவுக்கு ஆன்மிக அன்பர் களின் இதயத்தில் இரண்டறக் கலந்துள்ளது, ஸ்ரீராமாயணம்.ஜகம் புகழும் புண்ணிய கதையான அந்த ராமர் பெருமை கேட்காத இரு காது உலகத்திலேயே இருக்காது என்று சொல்லலாம். கருவில் இருந்த காலத்திலேயே திருமால் சரிதத்தைப் பிரகலாதன் கேட்ட பிரதேசம்தானே இது.‘கருவரங்கத்துள்  இருந்து கைதொழுதேன் திருவரங்க மேயான் திசை’
- என ஆழ்வாரும்,

கருவாய்க் கிடந்து உன் கழலே நினையும் கருத்துடையேன் என அப்பரும்
அற்புதமாகப் பாடுகிறார்கள்.ஞானபூமியான நம் இந்தியத் திருநாட்டில் நம் வாழ்விற்கு வழிகாட்டியாகத் திகழ்கின்றன ஆண்டவனின் அவதாரப் பெருமைகள். ஏழாவது அவதாரமாகச் சிறக்கும் ராம அவதாரம் மானுடத்தை நெறிப்படுத்த மாலவன் எடுத்த மகோன்னதப் பிறப்பு.
‘நடையின் நின்றுயர் நாயகன்’
- என கம்பர் ஸ்ரீராமரைக் காட்சிப் படுத்துகிறார்.

உலக வாழ்வில் உயர்ந்த நெறிகளை -தர்ம வழிகளைக் கடைப்பிடித்து வாழ் வாங்கு வாழ வேண்டும் என்பதை ஸ்ரீராமர் காட்டியுள்ளார்.‘ஒரு சொல் - ஒரு வில் - ஒரு இல்’ என்னும் உயரிய கோட்பாட்டை இறுதிவரை கடைபிடித்து ‘மானுடம் வென்றதம்மா’ என கம்பர் முழக்கமிடும் வண்ணம் அவதார நேர்த்தி கொண்டதே அரிய ராமரின் வரலாறு!
குகன் - வேடுவர் இனத்தைச் சார்ந்தவன்.
சுக்ரீவன்-குரங்கு இனத்தைச் சார்ந்தவன்.
விபீஷணன்-அரக்கர் இனத்தைச் சார்ந்தவன்.

ஸ்ரீராமர் அன்பால் அனைவரையும் சகோதரர் என ‘ஒரு சொல்’லால் தழுவிக் கொண்டார். கடைசிவரை அந்த ஒரு சொல்லில் இருந்து மாறுபடாதிருந்தார். ராம, லக்ஷ்மண, பரத, சத்துருக்கனர் என தசரத புத்திரர்கள் நால்வர் அல்ல. நீங்கள் மூவரும் சேர்ந்து ஏழுபேர் என இணைத்துச் சிறந்து இனிய வரலாறுதானே ஸ்ரீராமாயணம்.அவர் ஜெயராமராக விளங்கியதால் ஒரே அம்புதான்! எதிரியை வீழ்த்தினார்! தருமத்தை நிலை நிறுத்தினார்.


‘தடையற்ற கணை விட்டு’ எதிர் வந்த தடைகளை எல்லாம் முறியடித்து வெற்றி வாகை சூடினார். ஸ்ரீராமாயணத்தில் மருந்துக்கும் தோல்வி என்பதே கிடையாது. ‘ஸ்ரீராமஜெயம்’ என ஆன்மிக அன்பர்கள் அனைவரும் அதனால்தானே பக்கம்
பக்கமாக எழுதுகிறார்கள்.

இவ்வாறு ஒரு சொல் - ஒரு வில் என புகழ் பெறும் ராமர் சீதாதேவியின் திருக்கரம் பற்றி - பிறன்மனை நோக்காத பேராண்மையோடு ‘இந்த இப்பிறவிக்கு இரு மாதரைச் சிந்தையாலும் தொடேன்’ என் ஆண்மைக்கே உரிய அர்த்த புஷ்டி யான வைராக்கியத்தோடு ‘ஒரு இல்’ எனும் உயரிய கொள்கையில் இணைந்தார். வாழ்க்கை சிறக்க ஒரு மனைவி - போரில் சிறக்க ஒரு கணை - சமுதாய வாழ்வு சிறக்க அன்பாக அனைவரையும் ஒன்று படுத்தி ஒரு சொல் - என நடந்து காட்டிய நாயகர் ஸ்ரீராமர்.
‘‘ஒக மாட ஒக பாணமு ஒக பத்னீவ் ரதுடே ’’
- என்பது தியாகராஜரின் கீர்த்தனை!

அது மட்டுமா? அன்றாட வாழ்வில் இன்பமும், துன்பமும் மாறிமாறி வரும். இன்பத்தில் ஒரேயடியாகத் துள்ளிக் குதித்து நாம் ஆர்ப்பாட்டம் செய்கிறோம். துன்பத்தில் துவண்டுபோய் ஒரு ஓரமாக கன்னத்தில் கை வைத்தபடி  செயலற்றுப்போய் விடுகிறோம். ஆனால், ஸ்ரீராமர் எவ்வாறு வாழவேண்டும் என நமக்குக் காட்டுகிறார். முதல்நாள் பட்டாபிஷேகச் செய்தி, தசரதன்மூலம்! அடுத்த நாள் வனவாசச் செய்தி கைகேயி மூலம்!
வனவாசம் என வருத்தப்படவுமில்லை!

‘‘இன்பத்துள் இன்பம் விழையாதான்  துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்’’
- என்ற திருக்குறளின் இலக்கணமாக ராமர்  விளங்கினார்.

ஸ்ரீராமரின் திருமுகவதனம் பொய்கையில் பூத்திருக்கும் தாமரையாகப் பொலிகிறது என்றார், ஒருவர். ஆனால், கம்பரோ ‘அது சரியல்ல! தவறான உவமை’ என்றார். ஏன் என்கிறீர்களா? குளத்துத் தாமரை காலையில் மலர்ந்திருக்கும். மாலையிலோ குவிந்துவிடும். ராமரின்  முகம் அப்படியல்லவே! எனவே, ஓவியத்தில் உள்ள மலர்ந்த தாமரையை ஒத்தது ராமரின் முகம். எப்போதும் முப்போதும் மலர்ச்சி என சிறப்பாகக் கூறுகிறார் கவியரசர் கம்பர்.
‘சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை ஒத்திருக்கும் முகம்’
- என்பதே கம்பரின் உன்னத உவமை.

மேலும் ஒன்று, நிறைவாக ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் நடக்கும்போது அனுமன் அரியணை தாங்குகிறான். அங்கதன் உடைவாள் ஏந்துகிறான். பரதன் வெண்குடை பிடிக்க, லக்ஷ்மணர், சத்ருக்கனர் கவரி வீச, சீதை மகிழ்வாக அமர்ந்திருக்க, வசிட்டர் முடி சூட்ட என அனைவரையும் காட்சிப் படுத்துகிறார், கம்பர். ஆனால், ராமரை மட்டும் அப்பாட்டில்
விட்டு விடுகிறார். என்ன காரணம் தெரியுமா?

அடுத்த பாட்டில்தான் அதற்கான விடை இருக்கிறது. தனி ஒரு ராமருக்கு முடிசூட்டு விழா நடக்கவில்லை. அயோத்தி மக்கள் அனைவருமே தம்தம் தலையில் கிரீடம் வைக்கப்பட்டதாகவே எண்ணி மகிழ்ந்தார்கள் என கம்பர் பாடுகிறார். குடிமக்களின் இதயங்களில் எல்லாமே கோலோச்சு பவன் அரியணையில் அமர்ந்தால்தான் ஆட்சிக்கு உண்மையான அர்த்தம் விளங்கும். ஸ்ரீராமரின் காவியத்தில் - அவதாரச் சிறப்பில் இப்படி எத்தனை எத்தனையோ அற்புத நேர்த்திகள்.‘நவமியில் பிறந்த நாயகரின்’ வழியை நாளும் கைக்கொண்டு நானிலத்தில் சிறப்போம்!

(தொடரும்)

திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்