குறளின் குரல்: 146 திருக்குறளைப் பின்பற்ற `வேண்டும்!’



முருக பக்தரான உலகநாதர் என்ற புலவர்  எழுதிய  செய்யுள்களை உள்ளடக்கிய
 `உலக நீதி’ என்ற பழைய நூல் `வேண்டாம்’
என்ற சொல்லைப்  பயன்படுத்தி
எதிர்மறையாக நிறைய நீதி களை வலியுறுத்துகிறது.
`ஓதாமல் ஒருநாளும் இருக்க  வேண்டாம்,
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல
வேண்டாம்.
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்
போகாத இடந்தனிலே போக வேண்டாம்
போகவிட்டுப் புறம்சொல்லித் திரிய
வேண்டாம்
வாகாரும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய்
நெஞ்சே! ’

- என்பன அந்த நூலின் தொடக்கப் பாடலின் வரிகள். நூல் முழுவதுமே `வேண்டாம் வேண்டாம்’ என எதிர்மறையாகச் சொல்லப்படும் நீதிகள்தான். உடன்பாட்டு முறையில் ஒரு நீதியும் சொல்லப்படவில்லை.திருவள்ளுவரின் திருக்குறள் எதிர்மறையாகச் சில இடங்களிலும் உடன்பாட்டு வகையில் பல இடங்களிலும் நீதிகளை வலியுறுத்துகிறது.

நாம் எப்படி இருக்கவேண்டும் என்பதை `வேண்டும்' என்ற சொல்லாலேயே வலியுறுத்துகிறார் வள்ளுவப் பெருந்தகை. இவ்விதம் அவர் `வேண்டும்' என்ற சொல்லைத் திருக்குறளில் மொத்தம் இருபது இடங்களில் கையாள்கிறார்.

`வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை
மற்றது வேண்டாமை வேண்ட வரும்.’
(குறள் எண் 362)
ஒருவன் ஒன்றை விரும்புவதானால்
மீண்டும் பிறவாத நிலையை விரும்ப வேண்டும். அது ஆசை அற்ற நிலையை விரும்பினால் உண்டாகும்.
பேயுருக்கொண்டு தலையால் நடந்து
கயிலாயம் வந்தார் புனிதவதி என்ற இயற்
பெயருடைய காரைக்கால் அம்மையார்.

புனிதமான கயிலாயத்தைக் காலால் மிதிக்கலாகாது எனக் கருதியது அவரது பக்தி மனம்.
அவரை அம்மையே என அழைத்த சிவ
பெருமான் அவரை நோக்கி `நீ நம்பால் இங்கு வேண்டுவது என்ன?’ என்று வினவினார்.
அதற்குக் காரைக்கால் அம்மையார்
`பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும்' என வரம் கேட்டார்.
பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப்  பாடிய சேக்கிழாரின் பெரிய புராணத்தில் வரும் அந்த உள்ளத்தை உருக்கும் புகழ்பெற்ற பாடல் இதோ:
`இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின்
வேண்டுகின்றார்
பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்
புண்டேல் உன்னை என்றும்

மறவாமை வேண்டும், இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி
அறவா நீ ஆடும்போது உன்னடியின் கீழ் இருக்க என்றார்!’
மீண்டும் பிறக்கவே கூடாது, அப்படிப் பிறந்தால் சிவனை மறக்கவே கூடாது என அவர்
கேட்ட வரம்தான் எத்தனை உயர்ந்தது!

நாம் நமக்கு என்ன வேண்டும் எனக் கேட்டு இறைவனை வேண்டுகிறோம். ஆனால் இறைவனுக்கு வேண்டியவர் வேண்டாதவர் என்ற வேறுபாடு உண்டா என்ன? கிடையாது. எல்லோரும் அவன் மக்களே. எல்லா உயிரும் அவன் படைப்பே.
இறைவனின் இலக்கணம் என்ன? அவன் வேண்டுதல் வேண்டாமை என்ற இரண்டும்
இல்லாதவன். அப்படிப்பட்ட அவனது அடியைச் சார்ந்து வாழ்பவர்க்குத் துன்பமில்லை என்கிறார், வள்ளுவர்.
`வேண்டுதல் வேண்டாமை இலானடி
சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல.’
(அதிகாரம்: கடவுள் வாழ்த்து, குறள் எண் 4)
 `புலால் உண்ணாமை வேண்டும்' என்கிறார்,

வள்ளுவர். (குறள் எண் 267). மாமிச உணவை வள்ளுவம் ஆதரிக்கவில்லை. எதையெல்லாம் செய்ய வேண்டும் எனப் பட்டியலிடும்போது `எள்ளாத எண்ணிச் செயல் வேண்டும்’ என்கிறார். ( குறள் எண் 470). `புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும்’ என்றும் வலியுறுத்துகிறார். (குறள் எண் 538). `உருவுகண்டு எள்ளாமை வேண்டும்’ எனச் சொல்லி, மனிதர்களை உருவத்தைக் கொண்டு எடை
போடக் கூடாது என்று எச்சரிக்கிறார். பெரிய தேர் உருண்டு செல்வதற்குச் சிறிய அச்சாணி தானே ஆதாரமாகிறது என வினவுகிறார்.
`உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து.’
(குறள் எண் 667)

ஒருவன் உலகில் நன்மையை அடைய விரும்பினால், பழிக்கு அஞ்சுகிற நாணம் என்ற நற்பண்பைப் போற்றிக் காக்க வேண்டும். அவ்வாறே ஒருவன் குலத்தின் உயர்வை விரும்பினால், அவன் எல்லோரிடமும் பணிவாக நடக்கவேண்டும்.
`நலம் வேண்டின் நாணுடைமை வேண்டும், குலம் வேண்டின்
யார்க்கும் வேண்டும் பணிவு’
(குறள் எண் 960)

இப்படி வள்ளுவர் `வேண்டும் வேண்டும்’ என வலியுறுத்துகிற கருத்துகள் திருக்குறளில் வேண்டுமளவு நிறைய உள்ளன.
இறைவனிடம் நமக்கு என்ன வேண்டும் எனக் கேட்டு நாம் வேண்டுகிறோம். அதை வேண்டுதல் என்ற சொல்லாலேயே குறிப்பிடுகிறோம்.
நமக்கு என்ன வேண்டும் என்று இறைவனிடம் நாம் தெரிவிக்க வேண்டுமா? நாம் எதை விரும்புகிறோம் என்று இறைவனுக்குத் தெரியாதா என்ன? நாம் சொல்லித்தான் அதை அவன்
அறிந்து கொள்ள வேண்டுமா? இப்படிச் சிந்திக்
கிறது மாணிக்கவாசகரின் பக்தி வயப்பட்ட உள்ளம்.

`வேண்டத் தக்கது அறிவோய் நீ!
வேண்ட முழுதும் தருவோய் நீ!
வேண்டும் அயன்மாற்கு அரியோய் நீ!
வேண்டி என்னைப் பணிகொண்டாய்!
வேண்டி நீயாது அருள்செய்தாய்
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டென்னில்
அதுவும் உந்தன் விருப்பன்றே?
(திருவாசகம், குழைத்த பத்து 6,      மணிவாசகர்.)
இறைவனிடம் முழுமையாகச் சரணாகதி அடைந்தவர்கள் எதையும் அவரிடம் வேண்டு வதில்லை. ஆனால், தன் அடியவர்களுக்கு வேண்டியதையெல்லாம் அவன் அவர்கள் கேட்காமலே அருளுகிறான். மாணிக்கவாசகரின் தித்திக்கும் பக்தித் தமிழ் இந்தக் கருத்தை மிக அழகாக விளக்குகிறது.  

தமக்கு என்னென்ன வேண்டும் எனக் கந்தகோட்டத்துக் கந்தவேளிடம் தெளிவாகக்
கேட்கிறார் ராமலிங்க வள்ளலார் சுவாமிகள். அவரது பாடலில்  தென்படும் `வேண்டும்
வேண்டும்' என்ற சொற்கள் நம்மை அந்தப் பாடலை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகின்றன. இதோ அந்த அழகிய பாடல்:
`ஒருமையுடன் நினது திரு மலரடி
      நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்!
உள்ளொன்று வைத்துப் புறமொன்று
     பேசுவார்  
உறவு கலவாமை வேண்டும்!
பெருமைபெறும் நினது புகழ்
     பேசவேண்டும்! பொய்ம்மை

பேசாதிருக்க வேண்டும்!
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்!
     மதமான பேய்
பிடியாதிருக்க வேண்டும்!
மருவு பெண்ணாசையை மறக்கவே
     வேண்டும்! உனை
மறவாதிருக்க வேண்டும்!
மதிவேண்டும்! நின்கருணை நிதி

    வேண்டும்! நோயற்ற
வாழ்வு நான் வாழவேண்டும்!
தருமமிகு சென்னையில் கந்த
     கோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்தவேளே!
தண்முகத் துய்யமணி உண்முகச்
     சைவமணி
சண்முகத் தெய்வமணியே!’
 `நோயற்ற வாழ்வுநான் வாழவேண்டும்’ என வள்ளலார் கேட்டது இந்தக் காலத்தில் எத்தனை பொருத்தமாக இருக்கிறது! அதுதானே இன்று உலகம் முழுவதும் எல்லோருடைய பிரார்த்தனையும்!

 `இறைவா! நான் கடந்த காலத்தில் வேண்டிய சிலவற்றை நீ எனக்கு அருளாமல் இருந்தாயே, அதன்பொருட்டு உனக்கு என்றென்றும் என் மனமார்ந்த நன்றி’ என்பதாக ஒரு பொன்மொழி உண்டு. கடந்த காலத்தில் நாம் கேட்டபடி நாம் கேட்டவற்றை இறைச்சக்தி நமக்கு அருளியிருந்தால், நிகழ்காலத்தில் நாம் பெரும் துன்பத்தில் ஆழ்ந்திருப்போம். அதைப் பிறகுதான் நாம் புரிந்துகொள்கிறோம்.

நமக்கு உண்மையில் எது தேவை என்பதை நம்மைவிடக் கூடுதலாக இறைவனே நன்கு அறிவான். எனவே, அவன் எதை நமக்குத் தருகிறானோ அதுவே அவன்மூலம் நமக்குக் கிட்டியுள்ள வரம் என்பதைப் புரிந்துகொண்டு அமைதி அடைவது நல்லது.  நாம் வேண்டும் வேண்டும் என்று ஆசைப்பட்டதை எல்லாம் இறைவன் நமக்கு வழங்கு வதில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நாம் எவற்றிற்குத் தகுதியானவர்களோ அவற்றையே இறைவன் நமக்கு அருளுகிறான்.இந்த உண்மையை உணர்ந்துகொண்டால் வாழ்க்கை இனிக்கும். மனத்தில் நிம்மதி பிறக்கும்.

மகாகவி பாரதியாரும் `வேண்டும்` என்ற சொல்லைப் பயன்படுத்தி, தமக்கு என்னென்ன வேண்டும் எனப் பட்டியலிடுகிறார்:

`மனதில் உறுதி வேண்டும்!
வாக்கினிலே இனிமை வேண்டும்!
நினைவு நல்லது வேண்டும்!
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்!
கனவு மெய்ப்பட வேண்டும்!
கைவசமாவது விரைவில் வேண்டும்!
தனமும் இன்பமும் வேண்டும்!
தரணியிலே பெருமை வேண்டும்!
கண்திறந்திட வேண்டும்!

காரியத்தில் உறுதி வேண்டும்!
பெண்விடுதலை வேண்டும்!
பெரிய கடவுள் காக்கவேண்டும்!
மண்பயனுற வேண்டும்!
வானகமிங்கு தென்பட வேண்டும்!
உண்மை நின்றிட வேண்டும்!
ஓம் ஓம் ஓம் ஓம்!’

வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுவதில் முக்கியப் பங்காற்றுபவை நாம் பக்தியுடன் உச்சரிக்கும் புனிதமான மந்திரங்கள். `ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாய, ஓம் சரவணபவ, ராம ராம' உள்ளிட்ட பல மந்திரங்களை இடைவிடாமல் ஜபித்து இறைவனை வணங்கி நமக்கு வேண்டியதைத் தருமாறு இறைவனிடம் வேண்டுகிறோம். இது தொன்றுதொட்டு வரும் நெறி.  

மந்திரங்களை ஜபிப்பதன் மூலம் முக்தியை வேண்டலாம். பிறவாத பெருநிலையை வேண்டலாம். ஆனால், சின்னச் சின்ன உலகியல் பயன்களை வேண்டலாமா என்ற கேள்வி எழுகிறது.கட்டாயம் வேண்டலாம் என்பதே இந்தக் கேள்விக்கான பதில். மந்திரங்களை ஜபிப்பதன் மூலம் உலகியல் பயன்களும் கிட்டும் என்பதில் சந்தேகமே தேவையில்லை.  

மிக உயர்ந்த முக்தியையே மந்திர ஜபம் பெற்றுத் தருமானால், மிகச் சாதாரணமான உலகியல் நன்மைகளை அது தராதா என்ன? பல லட்சம் ரூபாய் கொடுத்து வீடு வாங்க முடியும் ஒருவரால் பத்து ரூபாய் கொடுத்து பிஸ்கட் பாக்கெட் வாங்க முடியாதா? அதுபோல்தான் இது.
நமக்கு பிஸ்கட் பாக்கெட்டும் வேண்டித்தானே இருக்கிறது? தெய்வ சக்தி தாய்மைக் குணம் உள்ளது. தாயிடம் எதையும் கேட்டுப் பெறக் குழந்தைக்கு உரிமை உண்டு.

அரவிந்தர் அந்தந்த நேரத்து நன்மைகளுக்காக அவற்றை இறைச் சக்தியிடம் அந்தந்த நேரத்தில் வேண்டிப் பெற முடியும் என உறுதி கூறுகிறார்.
அவரது மனைவி மிருணாளினி கொல்கத்தாவில் நோய்வாய்ப் பட்டிருந்தாள். அரவிந்தரோ பாண்டிச்சேரியில் இருந்தார். சரியான நேரத்தில் மிருணாளினி நோய்வாய்ப்பட்டிருக்கும் செய்தி அரவிந்தருக்கு எட்டவில்லை. அவள் காலமானாள். அதன் பின்னரே விவரம் அறிந்தார் அரவிந்தர்.
சரியான நேரத்தில் அவள் நோய்வாய்ப்பட்டிருக்கும் செய்தி மட்டும் தம்மை எட்டியிருந்தால், இறைச்சக்தியைப் பிரார்த்தனை செய்து
அவளைத் தாம் குணப்படுத்தியிருக்க முடியும், அது இயலாமல் போயிற்று என வருந்தியிருக்கிறார் அரவிந்தர்.

ஒரு குழந்தை தனக்கு சாக்லேட் வேண்டும் என்று மனப்பூர்வமாகப் பிரார்த்தனை செய்தால் அன்று மாலைக்குள்ளாக யாரேனும் ஒரு விருந்தினர் மூலம் குழந்தை கேட்ட சாக்லேட் அந்தக் குழந்தைக்கு வந்து சேரும், இது உறுதி என்கிறார் பாண்டிச்சேரி அன்னை.  வேண்டும் வேண்டும் என்று திரைப்பாடல் களும் முழங்கியிருக்கின்றன. `பாலும் பழமும்` திரைப்படத்தில் டி.எம்.எஸ்., பி. சுசீலா குரலில் ஒலிக்கும் கண்ணதாசன் பாடல் உயர்ந்த காதலர்கள் எப்படி வேண்டுவார்கள் என்பதை விவரிக்கிறது.

`நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட
     வேண்டும்
நான் காணும் உலகங்கள் நீ காண
     வேண்டும்
நீகாணும் பொருள்யாவும் நானாக
     வேண்டும்....
பாலோடு பழம் யாவும் உனக்காக
     வேண்டும்
பாவை உன்முகம் பார்த்துப் பசியாற
     வேண்டும்
மனதாலும் நினைவாலும் தாயாக
     வேண்டும், நானாக வேண்டும்
மடிமீது விளையாடும் சேயாக வேண்டும்,நீயாக வேண்டும்!’

வசந்த மாளிகை திரைப்படத்தில் கண்ணதாசன் பாடல் ஒன்று இறைவனிடம் வித்தியாசமான ஒரு வரத்தை வேண்டுகிறது.

`இரண்டு மனம் வேண்டும்
இறைவனிடம் கேட்பேன்
நினைத்து வாட ஒன்று
மறந்து வாழ ஒன்று...
இரவும் பகலும் இரண்டானால்
இன்பம் துன்பம் இரண்டானால்
உறவும் பிரிவும் இரண்டானால்
உள்ளம் ஒன்று போதாதே...’
என்பன அந்தப் பாடலின் அழகிய வரிகள்.
வேண்டும் என்ற சொல்லை வைத்து
உடன்பாட்டு முறையில் பல நீதிகளை வலியுறுத்துகிறார் வள்ளுவர்.
அவற்றை அறிந்துகொள்ள நாம் திருக்குறளைப் பயில வேண்டும்.
திருக்குறளின் பெருமையைப் பரப்ப
வேண்டும். முக்கியமாக திருக்குறள் சொல்லும்
நீதிக் கருத்துகளை நாம் நம் வாழ்வில் பின்பற்ற வேண்டும்.

(குறள் உரைக்கும்)

திருப்பூர் கிருஷ்ணன்