அனந்தனுக்கு 1000 நாமங்கள்!



337. புரந்தராய நமஹ (Purandharaaya namaha)

(திருநாமங்கள் 334 முதல் 345 வரை - பரமாத்மாவான வாசுதேவனின் பெருமைகள்)
தாரகன் என்ற அசுரனுக்குத் தாரகாக்ஷன், கமலாக்ஷன், வித்யுன்மாலி என மூன்று மகன்கள் இருந்தார்கள். அவர்கள் பிரம்மாவைக் குறித்துக் கடுந்தவம் புரிந்தார்கள். அவர்களுக்குக் காட்சி தந்த பிரம்மா, “உங்களுக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார். “எங்களுக்கு இரண்டு வரங்கள் வேண்டும்!” என்று அவ்விருவரும் கோரினார்கள். “சரி! கேளுங்கள்!” என்றார் பிரம்மா.

முதல் வரமாக, “வானில் பறக்கும் மூன்று மாநகரங்கள் எங்கள் மூவருக்கும் வேண்டும். அவற்றில் எங்கள் மூவருக்கும் முறையே இரும்புக் கோட்டை, வெள்ளிக் கோட்டை மற்றும் தங்கக்கோட்டையை உருவாக்கித் தர வேண்டும்!” என்று கேட்டார்கள். அதற்குப் பிரம்மா இசைந்தார்.இரண்டாவது வரமாக, தங்கள் மூவருக்கும் சாகா வரம் வேண்டுமென்றும் பிரம்மாவிடம் வேண்டினார்கள். ஆனால் சாகா வரம் என்று ஒரு வரமே இல்லையெனக் கூறி பிரம்மா மறுக்கவே, வானில் பறந்து கொண்டிருக்கும் மூன்று நகரங்களும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, ஒரே அம்பினால் மூன்றையும் தாக்கினால் மட்டுமே தங்களுக்கு மரணம் ஏற்பட வேண்டுமென வரம் கேட்டார்கள். பிரம்மாவும் அதை ஏற்றார்.

இந்நிலையில், அந்த மூன்று அசுரர்களும் தேவர்களையும் முனிவர்களையும் சொல்லவொண்ணாத துயருக்கு உள்ளாக்கினார்கள். அதனால் தேவர்களும் முனிவர்களும் சிவபெருமானின் உதவியை நாடினார்கள். “சரியான தருணம் வரும்போது அந்த மூன்று அசுரர்களையும் நான் அழிப்பேன்!”
என்று சிவபெருமான் அவர்களுக்கு உறுதியளித்தார்.

அந்த மூன்று நகரங்களும் ஒரே நேர்க்கோட்டில் வரும் சமயம் நெருங்கியது. அப்போது சிவபெருமான் பூமியைத் தனது தேராக்கினார். பிரம்மாவைத் தேரோட்டியாக அமர்த்தினார். சூரியனையும் சந்திரனையும் தேர்ச்சக்கரங்களாக ஆக்கினார். மேருமலையை வில்லாக்கினார். வாசுகி
யெனும் பாம்பை அதில் நாணாகக் கட்டினார்.அந்த மூன்று நகரங்களையும் இப்போது நேர்க்கோட்டில் வைத்து ஒரே அம்பால் தாக்கி அழிக்க வேண்டுமே. அதற்கு எந்த அம்பைப் பயன்படுத்துவது என்று சிந்தித்தார் சிவபெருமான்.

அப்போது அவருக்குத் தேரோட்டியாக அமர்ந்திருந்த பிரம்மா, “புரந்தராய நமஹ:” என்று சொல்லிக் கொண்டிருந்தார். “என்ன சொல்கிறீர்கள்?” என்று சிவபெருமான் கேட்க, “புரம்  என்றால் இருப்பிடம். தர என்றால் அழிப்பவர். அசுரர்கள் மற்றும் தீய சக்திகளின் இருப்பிடங்களைத் திருமால் அழிப்பதால், அவருக்குப் ‘புரந்தர:’ என்று திருநாமம். அசுரர்களின் இருப்பிடத்தை அழிக்கவல்ல புரந்தரனான திருமாலே அம்பாக வந்து இம்மூன்று அசுரர்களின் கோட்டைகளையும் அழிக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறேன்!” என்றார் பிரம்மா.

சிவபெருமானும் “புரந்தராய நமஹ:” என்று உச்சரித்தவாறே, திருமாலே அம்பாக வந்து சிவனின் அம்பறாத் தூணியில் அமர்ந்தார். மூன்று நகரங்களும் ஒரே நேர்க்கோட்டில் வந்தன. அப்போது மேருவெனும் வில்லில் வாசுகியெனும் நாணோடு இணைத்துத் திருமாலை அம்பாகப் பூட்டினார் சிவ
பெருமான். “புரந்தராய நமஹ:” என்று சொல்லிக்கொண்டே அம்பை எய்தார்.அம்பு வடிவில் புறப்பட்ட திருமால், முப்புரங்களாகிய அம்மூன்று நகரங்களையும் எரித்து அழித்தார்.

திரிபுர ஸம்ஹாரம் எனப்படும் இச்சரித்திரத்தை,
“புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து
அரன் அயன் என உலகு அழித்து அமைத்து உளனே”
என்று நம்மாழ்வாரும்,
“குழல்நிற வண்ண நின் கூறு கொண்ட
தழல்நிற வண்ணன் நண்ணார் நகரம்
விழ நனி மலை சிலை வளைவு செய்து அங்கு
அழல் நிற அம்பு அது ஆனவனே”
என்று திருமங்கை ஆழ்வாரும்
பாடியுள்ளார்கள்.

‘புரம்’ என்றால் இருப்பிடம். இங்கே அது அசுரர்கள், பிசாசுகள் உள்ளிட்ட தீய சக்திகளின் இருப்பிடங்களைக் குறிக்கிறது. ‘தாரணம்’ என்றால் அழித்தல். தீயசக்திகளை அவர்களின் இருப்பிடங்களோடு சேர்த்து மொத்தமாக அழித்து, நல்லோர்க்கு நன்மையை அருள வல்லவராகத் திருமால் திகழ்வதால், அவர் ‘புரந்தர:’ என்றழைக்கப் படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 337-வது திருநாமம்.

 “புரந்தராய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களை அனைத்துத் தீய சக்திகளில் இருந்தும் திருமால்
காத்தருள்வார்.

338. அசோகாய நமஹ (Ashokaaya namaha)

(திருநாமங்கள் 334 முதல் 345 வரை - பரமாத்மாவான வாசுதேவனின் பெருமைகள்)
1906-ம் ஆண்டு கும்பகோணத்தில் வாழ்ந்த ஒரு கன்னடக் குடும்பத்தில் அம்மாளு அம்மாள் என்ற பெண்மணி தோன்றினார். அவர்கள் பரம்பரையாக ராகவேந்திர சுவாமியின் பக்தர்களாக இருந்து வந்தார்கள். அந்தக் கால வழக்கப்படி இளமையிலேயே அம்மாளு அம்மாளுக்குப் பெற்றோர்கள் திருமணத்தை நடத்தி வைத்தார்கள்.

திருமணம் என்றால் என்னவென்றே தெரியாத வயதில் திருமணம் ஆன அம்மாளு அம்மாளின் கணவர், சிறுவயதைக் கடந்து பொறுப்புள்ள கணவராக மாறுவதற்கு முன்னமேயே மரணம் அடைந்து விட்டார். சிறு வயதிலேயே விதவை ஆன அம்மாளு அம்மாளை உறவினர்கள்
எல்லோரும் பலவாறாக அவமானப்படுத்தத் தொடங்கினார்கள். சிறுவயதிலேயே கண்ணனிடமும் நரசிம்மரிடமும் மிகுந்த ஈடுபாடுகொண்டிருந்த அம்மாளு அம்மாள், அந்த அவமானங்களைப் பொருட் படுத்தாது, பக்தியில் ஈடுபட்டார்.

ஆனாலும் இளம் விதவையான அம்மாளு அம்மாளைச் சுற்றத்தார்கள் பலவாறாக அவமானப்படுத்தவே, துயரம் தாளாத நிலையில், ஓர் ஆழமான குளத்தின் கரைக்குச் சென்றார் அம்மாளு அம்மாள். “இறைவா! என்னை ஏற்றுக்கொள்!” என்று சொல்லிவிட்டுக் குளத்தில் குதிக்க
முற்பட்டார்.“நில்!” என்று ஒரு குரல். கண்விழித்துப் பார்த்தார் அம்மாளு அம்மாள். எதிரே சாட்சாத் நரசிம்மப் பெருமாள் நிற்கிறார். அதுவும் உக்கிர வடிவமில்லாமல், சாந்த வடிவத்துடன் காட்சி தந்தார். “வாழ்க்கை வாழ்வதற்கே! நீ பூமியில் வாழ வேண்டும்! நான் தந்த உயிரை மாய்த்துக்கொள்ள உனக்கு அதிகாரம் இல்லை!” என்றார் நரசிம்மர்.

“அப்படியானால் எனக்கு ஒரு வரம்தா!” என்று கேட்டார் அம்மாளு அம்மாள். என்ன வரம் என்று நரசிம்மர் கேட்க, “பசி என்றால் என்னவென்றே எனக்குத் தெரியக் கூடாது! இதையே எனக்கு வரமாகத் தா!” என்று வேண்டினார். அதை நரசிம்மரும் அருளினார். அதனால் அன்றுமுதல் தினமும் ஒரு லோட்டா பால் அல்லது தயிர், அத்துடன் ஒரு பழம் மட்டுமே உண்டு தனது வாழ்க்கையை நடத்தத் தொடங்கினார். ஏகாதசி நாட்களில் அதையும்
உண்பதில்லை.

உணவையே  கையால் தொடாத போதும், உற்சாகத்தோடு கண்ணபிரானைக் குறித்துப் பல பஜனைகளும் கீர்த்தனைகளும் பாடி வந்தார், அம்மாளு அம்மாள். அதிலும் விசேஷமாகப் பண்டரிபுரம் பாண்டுரங்கன் மீது அவருக்கு மிகுந்த பக்தியும் அன்பும் உண்டு. பாண்டுரங்கனே அவரது கனவில் தோன்றி, தனது ஊரான பண்டரிபுரத்துக்கு அழைத்துத் தனக்குப் பல தொண்டுகளைச் செய்ய வைத்தான்.

ஒரு முறை காஞ்சி பெரியவர் கும்பகோணத்துக்கு வந்தபோது, ஒரு பக்தர் அவரை நமஸ்கரிக்க வந்தார். அப்போது பெரியவர், “எனக்கு ஏனப்பா நமஸ்காரம் செய்கிறாய்? உங்கள் ஊரிலேயே ஒரு பெண் உணவே உட்கொள்ளாமல் பஜனை பண்ணிக்கொண்டு இருக்கிறாரே! அவரது ஆசீர்
வாதம் இருந்தால் உனக்கு எல்லா நன்மைகளும் உண்டாகும்!” என்று கூறினாராம்.

இப்படிப் பசியையே வென்று பஜனையிலே காலம் கழித்த அம்மாளு அம்மாள், தமது நூற்று நான்காம் வயதில், 2010-ம் ஆண்டு பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் கண்ணனின் திருவடிகளை அடைந்தார். திருமாலின் திருவருளைப் பெற்றபடியால், தன் ஆயுள் முழுவதும் உணவையே கையால் தொடாமல், பசியை வென்று 104 ஆண்டுகள் வாழ்ந்து காட்டினார் அம்மாளு அம்மாள்.

‘சோகம்:’ என்பது உலகில் நாம் வாழும் போது உடல் ரீதியாக நமக்கு ஏற்படும் பசி, தாகம், வருத்தம், மயக்கம், மறதி, மூப்பு உள்ளிட்ட அனைத்து உபத்திரவங்களையும் குறிக்கும். இந்த சோகங்களை எல்லாம் போக்குபவராகத் திருமால் திகழ்வதால் அவர் ‘அசோக:’ என்றழைக்கப்படுகிறார்.
“அபஹதபாப்மா விஜர: விம்ருத்யு: விசோக: விஜிகித்ஸ: அபிபாஸ:”என்ற சாந்தோக்ய உபநிடத வாக்கியம், முக்தி அடையும் ஜீவாத்மாவைப் பாபம், மூப்பு, மரணம், துக்கம், பசி, தாகம் ஆகிய அனைத்திலிருந்தும் திருமால் விடுவிக்கிறார் என்று கூறுகிறது. அதனால்தான் வைகுண்டத்தைச் சென்றடைந்த பின், ஜீவாத்மாவைப் பாபம், மூப்பு, மரணம், துக்கம், பசி, தாகம் போன்றவை தீண்டுவதில்லை.

ஆக, ‘அசோக:’ என்றால் பசி, தாகம், மூப்பு உள்ளிட்ட உடல்ரீதியான சோகங்கள் அனைத்தையும் போக்கி அருள்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின்

338-வது திருநாமம்.
“அசோகாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் உடல் உபாதைகள் அனைத்தையும் திருமால்
தீர்த்தருள்வார்.

339. தாரணாய நமஹ (Thaaranaaya namaha)
(திருநாமங்கள் 334 முதல் 345 வரை -
பரமாத்மாவான வாசுதேவனின் பெருமைகள்)
கடந்த நூற்றாண்டில் கும்பகோணத்துக்கு அருகில் உள்ள நாச்சியார்கோவில் என்னும் ஊரைச் சுற்றி உள்ள பகுதிகளில் பெரும் விஷக்காய்ச்சல் பரவியது. அதனால் பல மக்கள் உயிர் இழந்தார்கள். அச்சமயம் நாச்சியார்கோவில் நிவாசப் பெருமாள் கோவிலில் பட்சிராஜ பட்டாச்சாரியார் என்ற அர்ச்சகர் திருமாலுக்குப் பூஜைகள் செய்துவந்தார். விஷக் காய்ச்சலின் வீரியத்தைக் கண்ட அவர், தான் அன்றாடம் பூஜை செய்யும் வஞ்ஜுளவல்லித் தாயாரிடமும் நிவாசப் பெருமாளிடமும் சென்று இந்த விஷக் காய்ச்சல் விரைவில் தீர வழி காட்ட வேண்டும் என்று பிரார்த்தித்தார்.

அன்று இரவு அவரது கனவில் நிவாசப் பெருமாளும் வஞ்ஜுளவல்லித் தாயாரும் தோன்றினார்கள். வஞ்ஜுளவல்லித் தாயார் அவரைப் பார்த்து, “அனந்தனின் 1000 திருநாமங்களான விஷ்ணு ஸஹஸ்ரநாமமே அனைத்து நோய்களுக்கும் மருந்து. ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தைத் தினந்தோறும் பாராயணம் செய்தால் அனைத்து நோய்களும் விலகும்!” என்று கூறினாள்.

பட்சிராஜ பட்டாச்சாரியார், “தாயே! ஒரு சிறிய விண்ணப்பம்! எல்லோராலும்  தினந்தோறும் ஆயிரம் திருநாமங்களையும் சொல்லமுடியுமா என்று தெரியவில்லை. ஆகையினால் இதற்கு ஓர் எளிய வழியை நீயே காட்ட வேண்டும்!” என்று பிரார்த்தித்தார். அப்போது வஞ்ஜுளவல்லித் தாயார், “புரட்டாசி மாதச் சனிக்கிழமைகள் என் கணவருக்கு மிகவும் உகந்த நாட்களாகும். எனவே புரட்டாசி மாதத்தில் வரும் நான்கு சனிக்கிழமைகளிலும் ஊர்மக்கள் நூறு பேர் ஒன்றுகூடி, கோவிலில் விஷ்ணு சஹஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்யுங்கள்! அதுவே வருடம் முழுவதும் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொன்னதற்குச் சமம்!” என்று வழி காட்டினாள்.

மறுநாள் காலை எழுந்த பட்சிராஜ பட்டாச்சாரியார் சிந்தித்துப் பார்த்தார். “ஒரு புரட்டாசி சனிக்கிழமையில் நூறு பேர் இணைந்து ஒருமுறை ஸஹஸ்ரநாமம் சொன்னாலும், நூறுபேர் சொன்னதால் நூறுமுறை ஸஹஸ்ரநாமம் சொன்ன பலன் கிட்டி விடுகிறது. புரட்டாசி மாதத்தில் வரும் நான்கு சனிக்கிழமைகளிலும் இதை நூறுபேர் சேர்ந்து சொன்னால், மொத்தம் நானூறு முறை ஸஹஸ்ரநாமம் சொன்ன பலன் கிட்டிவிடுகிறது.

நாம் தனியாக அமர்ந்து வருடம் முழுவதும் தினமும் ஒருமுறை விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொன்னாலும், 365 முறைதான் படிக்க இயலும். ஆனால் புரட்டாசி சனிக்கிழமைகளில் நூறு பேர் இணைந்து இதைப் பாராயணம் செய்கையில், 400 முறை பாராயணம் செய்த பலன் கிடைக்கிறதே! நம்பிக்கை நாச்சியார் நமக்கு நல்வழி காட்டிவிட்டாள்!” என்று மகிழ்ந்தார்.

கையில் பஞ்சாங்கத்தை எடுத்துப் பார்த்தார். அன்று புரட்டாசி சனிக்கிழமை. அன்று மாலையே திருக்கோவிலில் உள்ள திருவேங்கடமுடையான் சந்நதியில் நூறு அடியார்களை அழைத்து விஷ்ணு ஸஹஸ்ரநாமப் பாராயணத்தை நடத்தினார் பட்சிராஜ பட்டாச்சாரியார். ஸஹஸ்ரநாமத்தில் உள்ள ஆயிரம் திருநாமங்களுள் ஒவ்வொரு திருநாமத்தைச் சொல்லும் போதும், துளசி தளங்களால் திருவேங்கடமுடையானின் திருவடிகளுக்கு அர்ச்சனை செய்தார் பட்சிராஜ பட்டாச்சாரியார்.

ஆயிரம் திருநாமங்களை நூறு பேர் இணைந்து பாராயணம் செய்து அர்ச்சனை செய்வதால், (1,000x100 = 1,00,000) லட்சார்ச்சனை என்று இந்நிகழ்வுக்குப் பெயரிட்டார் பட்சிராஜ பட்டாச்சாரியார். இவ்வாறே புரட்டாசி மாதத்தின் நான்கு சனிக்கிழமைகளிலும் லட்சார்ச்சனையைப் பட்சிராஜ பட்டாச்சாரியார் நிகழ்த்த, அப்பகுதியைப் பிடித்திருந்த விஷக் காய்ச்சல் மெல்ல மெல்ல விலகத் தொடங்கியது. ஊரில் பழைய நிலை திரும்பியது. இவ்வாறு தனது திருப்பெயர்களை ஓதிய அடியார்களை விஷக் காய்ச்சல் என்னும் பேராபத்தில் இருந்து திருமால் காத்தார்.

இதன் நினைவாக, இன்றுவரை வருடந்தோறும் நாச்சியார்கோவில் நிவாசப் பெருமாள் கோவிலில் உள்ள திருவேங்கடமுடையான் சந்நதியில் புரட்டாசி மாதம் நான்கு சனிக்கிழமைகளிலும் மாலை 6 மணியளவில் இந்த லட்சார்ச்சனை நடைபெறுகிறது. வைகானச ஆகம விஷாரதர், ஜோதிடமணி, ஹநூமத் உபாஸகர் .உ.வே. கண்ணன் பட்டாச்சாரியார் சுவாமிகள் இதைச் செவ்வனே நடத்திவருகிறார்.

இப்படி வியாதிகள், எதிரிகள், திருடர்கள் உள்ளிட்ட ஆபத்துகளாலே மக்கள் பாதிக்கப்படும்போது, அந்த ஆபத்துகளில் இருந்தெல்லாம் காப்பாற்றி, மக்களைக் கரை சேர்ப்பதால், திருமால் ‘தாரண:’ என்று அழைக்கப்படுகிறார். ‘தாரண:’ என்றால் வியாதி, பகை உள்ளிட்ட ஆபத்துகளில் இருந்து காத்துக் கரைசேர்ப்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 339-வது திருநாமம்.

“தாரணாய நமஹ” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களை அனைத்து வித ஆபத்துகளில் இருந்தும் திருமால்
காத்தருள்வார்.

340. தாராய நமஹ(Thaaraaya namaha)
(திருநாமங்கள் 334 முதல் 345 வரை -
பரமாத்மாவான வாசுதேவனின் பெருமைகள்)
“வெவ்வாயேன் வெவ்வுரை கேட்டு இரு
நிலத்தை வேண்டாதே விரைந்து வென்றி
மைவாய களிறொழிந்து தேரொழிந்து மாவொழிந்து வனமே மேவி
நெய்வாய வேல்நெடுங்கண் நேரிழையும் இளங்கோவும் பின்பு போக
எவ்வாறு நடந்தனை எம் இராமாவோ?
எம்பெருமான் என் செய்கேனே?”

என்று தசரதன் புலம்ப, சீதையோடும் லட்சுமணனோடும் ராமபிரான் வனத்தை நோக்கிப் பயணிக்கிறான். சிருங்கிபேரபுரம் என்னும் இடத்தில் கங்கையைக் கடக்க வேண்டியிருந்தது. ராமனின் உயிர்த்தோழனான குகன் கேவத் என்ற படகோட்டியை அழைத்து வந்திருந்தான். கேவத்தின் படகில் ஏறி ராமன், சீதை, லட்சுமணன் ஆகிய மூவரும் கங்கையைக் கடக்கப் போகிறார்கள்.

அப்போது படகோட்டி கேவத், “ராமபிரானே! தயவுசெய்து உங்களது பாதங்களைக் கழுவிவிட்டுப் படகில் ஏறுங்கள்!  நான் இந்த ஒரு படகை வைத்துத்தான் என் வயிற்றுப் பிழைப்பை நடத்திவருகிறேன். பாதங்களைக் கழுவாமல் இதில் வைத்தால் என் பிழைப்பு என்னாவது?” என்று கூறினான். படகோட்டியின் இந்தப் பேச்சைக் கேட்டுக் கொதித்து எழுந்தான் லட்சுமணன். ஆதிசேஷனின் சீற்றம் லட்சுமணனின் முகத்தில் அப்படியே தோன்றியது.

“ஏய்! படகோட்டியே! யாரைப் பார்த்து என்ன வார்த்தை பேசுகிறாய்? என் அண்ணன் குற்றமற்றவர்! மாசற்றவர்! பவித்திரமானவர்! தூய்மையே வடிவெடுத்தவர்! அவரது பாதங்களைக் கழுவாமல் படகில் வைக்கக்கூடாது என்கிறாயா? உன்னை என்ன செய்கிறேன் பார்?” என்று கூறினான்.
படகோட்டி கேவத் நிதானமாக, “ஐயா! நான் தவறான  பொருளில்  சொல்லவில்லை! ஏற்கனவே உங்கள் அண்ணனின் திருவடிகளில் ஒட்டிக் கொண்டிருந்த மண்துகள் பட்டு ஒரு கல் பெண் ஆனது என்ற வரலாற்றை நான் அறிவேன். அதுபோல் இப்போதும் உங்கள் அண்ணன் திருவடிகளில் ஏதாவது மண்துகள் ஒட்டிக் கொண்டிருந்து, அது என் படகில் பட்டால், என் படகும் பெண்ணாக மாறிவிடுமே! அப்புறம் நான் எப்படிப் பிழைப்பு நடத்துவது? அதனால் தான் கழுவச் சொன்னேன்!” என்றான்.

“ஆஹா! என் அண்ணனின் திருவடித் துகளின் பெருமையை இவ்வளவு ஆழமாக நீ அறிந்து வைத்திருக்கிறாயே!” என்று மகிழ்ந்த லட்சுமணன் கேவத்தை ஆரத் தழுவிக் கொண்டான். படகில் மூவரையும் ஏற்றிக் கொண்டு அக்கரையில் சேர்த்தான் கேவத். படகில் இருந்து இறங்கிய ராமன், “உனக்கு நான் எவ்வளவு கூலி தர வேண்டும்?” என்று கேட்க, அதற்குக் கேவத், “ஐயா! உங்களிடம் நான் கூலி வாங்கக் கூடாது!” என்றான்.

“ஏன்?” என்று ராமன் கேட்க, “ஒரு மருத்துவர் இன்னொரு மருத்துவருக்கு வைத்தியம் பார்த்தால், அதற்குப் பணம் வாங்குவாரா? ஒரு முடிதிருத்தும் தொழிலாளி இன்னொரு முடிதிருத்தும் தொழிலாளியிடம் பணம் வாங்குவாரா? அதுபோல நீங்களும் நானும் ஒரே தொழில்தானே செய்கிறோம்! உங்களிடம் நான் எப்படிக் காசு வாங்குவது?” என்று கேட்டான் கேவத்.

உடனே லட்சுமணன், “இளவரசரான என் அண்ணனும், படகோட்டியான நீயும் ஒரே தொழில் செய்கிறீர்களா?” என்று கேட்டான். அதற்குக் கேவத், “நான் கங்கையின் இக்கரையில் உள்ளவர்களை அக்கரையில் சேர்க்கும் படகோட்டியாக இருக்கிறேன். ராமபிரான் பிறவிப் பெருங்கடலின் இக்கரையில் இருப்பவர்களைக் காத்து, வைகுண்டம் என்னும் அக்கரையில் சேர்க்கும் படகோட்டியாக இருக்கிறார். எனவே நாங்கள் இருவரும் படகோட்டிகள்தானே!” என்றான். “வேதங்களால் அறிய முடியாத இறைவனை இவ்வளவு எளிதில் நீ புரிந்து கொண்டுவிட்டாயே!” என்று அவனைக் கொண்டாடினான் லட்சுமணன்.

படகோட்டி சொன்னபடி, பிறப்பு, மூப்பு, இறப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய பிறவிக்கடலை நீந்திக் கடக்க முடியாமல் தவிக்கும் நமக்கெல்லாம் படகோட்டியாக இருப்பவர் திருமால். அவரே பிறவிக் கடலின் அக்கரையான வைகுண்டத்தில் நம்மை அக்கறையோடு கொண்டுபோய்ச் சேர்க்கிறார். அதனால் தான் திருமால் ‘தார:’ என்று அழைக்கப்படுகிறார். ‘தார:’ என்றால் பிறவிப் பிணியால் உண்டாகும் பயத்திலிருந்து கடைத்தேற்றுபவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 340-வது திருநாமம்.

“பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்இறைவனடி சேராதார்.”என்ற குறளும் இங்கே நோக்கத்தக்கது.“தாராய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களை அனைத்து விதமான பயங்களில் இருந்தும் திருமால் கடைத்தேற்றுவார்.(‘தாரண:’ என்ற 339-வது திருப்பெயருக்கு, ஆபத்துகளில் இருந்து காப்பவர் என்றும், ‘தார:’ என்ற 340-வது திருப்பெயருக்கு, பிறவிப்பிணியால் வரும் பயத்திலிருந்து காப்பவர் என்றும் பெரியோர்கள் பொருள் உரைத்துள்ள பாங்கு கவனிக்கத் தக்கது).

 (தொடர்ந்து நாமம் சொல்வோம்)

திருக்குடந்தை
டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்