ராம சரிதத்தில் ரத்தினங்கள்



1. நினைத்ததும் நடந்ததும்
ஸ்ரீ சீதாராம பட்டாபிஷேக வைபவம் வசிஷ்டர் தலைமையில் நடந்து கொண்டிருந்தது. அதன் ஒரு பகுதியாகத் தானங்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன. தகுதியும் தேவையும் உள்ளவர்கள் வந்து, தானங்களைப் பெற்றுச் சென்றார்கள்.

 தானங்களில் ‘திலதானம்’ என்பதும் ஒன்று; எள்ளைத் தானமாகக் கொடுப்பார்கள். விவரமறிந்த எந்தவொரு வேத பண்டிதரும் என்னதான் வறுமையில் இருந்தாலும், தில தானத்தை வாங்க மாட்டார்கள். ஆகையால், அங்கே பட்டாபிஷேக வைபவத்தின்போது, திலதானம் வாங்க யாருமே முன் வரவில்லை.

 வசிஷ்டரின் ஆலோசனைப்படி, ‘‘ இந்தத் திலதானத்தை வாங்க முன் வரும் தகுதியுள்ளவருக்கு, ஒரு பெரிய தங்கக்கட்டி வழங்கப்படும்’’ என்ற அறிவிப்பு வெளியானது. அப்போதும் திலதானம் வாங்க யாரும் முன் வரவில்லை. அந்தக் காலத்தில் அயோத்தியின் எல்லையில் சிங்கார முனிவர் என்பவர் வாழ்ந்து வந்தார். தியானத்திலும் தவத்திலும் தலைசிறந்தவரான அவர், வறுமையிலும் முன் நிற்பவராக இருந்தார்.

  திலதானத்துடன் தங்கக்கட்டியும் வழங்கப்படும் என்ற அறிவிப்பைக் கேட்டதும் சிங்கார முனிவரின் மனைவி, கணவரிடம் ஓடி வந்தாள்; ‘‘நீங்கள் திலதானத்தை வாங்கச் சம்மதியுங்கள்! நாமும் செல்வந்தராக வாழலாம்’’ என்றாள்.முனிவர் திடுக்கிட்டார்; ‘‘என்ன பேசுகிறாய் நீ? தங்கத்திற்காக தவம் முழுவதையும் இழக்கச் சொல்கிறாயா நீ?’’ எனக் கேட்டார்.

மனைவியோ நிதானமாகவும் பொறுமையாகவும் பதில் சொன்னாள்; ‘‘திலதானம் வாங்குபவரின் தவமும் தேஜசும் போய்விடும் என்பது உண்மைதான்; ஆனால், இப்போது திலதானம் கொடுக்கப்போவது யார்? பரம்பொருளான  ராமச்சந்திரமூர்த்தியல்லவா? அவரிடம் இருந்து திலதானம் வாங்கிய அதே விநாடியில் தாங்கள் நிமிர்ந்து, ராமசந்திர மூர்த்தியின் திருமுகத்தைப் பாருங்கள்! அந்தத் திவ்விய தரிசனம், தாங்கள் திலதானம் வாங்கும் பாவத்தை முழுவதுமாக நீக்கிவிடுமே!’’ என்றாள்.

மனைவி சொன்னதில் இருந்த உண்மையை உணர்ந்தார் முனிவர்; ‘‘திலதானம் வாங்க நான் தயார்! ’’ என்று அரண்மனைக்குத் தகவல் அனுப்பினார். தகவலறிந்த ஊர் மக்கள், ‘‘என்ன இது? சிங்காரமுனியா இப்படிச் செய்தார்? தங்கத்திற்காகத் தன் நிலை இழக்கும் அளவிற்குப் போகலாமா இவர்?’’ என்று பேசினார்கள். அதே சமயம் வசிஷ்டரின் யோசனையும் அப்படியே தான் இருந்தது;‘‘ம்! சிங்காரமுனிவர் ‘திலதானம்’ வாங்க ஒப்புக்கொள்கிறாரே! சாதாரணமானவர் இல்லையே அவர்!பிறகு ஏன் இப்படி? இதில் ஏதோ இருக்கிறது’’ என எண்ணினார், சிங்காரமுனி தம்பதியரின் எண்ணம் வசிஷ்டருக்குப் புரிந்தது.

ஆகையால் சிங்காரமுனிவர் தானம் வாங்கும் அதே விநாடியில், ராமருக்கும் சிங்காரமுனிக்கும் இடையில் ஒரு திரை விழுந்து, சிங்கார முனிவரின் பார்வையில் ராமர் படாமல் மறைப்பதற்கான ஏற்பாட்டைச் செய்து முடித்தார். திலதானம் வழங்கும் நேரம் வந்தது. அதற்கென உண்டான விசேஷ மேடையை நெருங்கினார் சிங்காரமுனி, மந்திரங்கள் முழங்க ஸ்ரீராமர் தாரை வார்த்து எள்ளைத் தானம் செய்தார். அதை சிங்காரமுனி பெற்றுக்கொண்ட  அதே நேரத்தில், வசிஷ்டரின் ஏற்பாட்டை அனுசரித்து ‘பளிச்’ சென்று திரை விழுந்தது. சிங்கார முனியால் ஸ்ரீராமரைப் பார்க்க முடியவில்லை. திடுக்கிட்டார் முனிவர்; கண்களில் கண்ணீர் வழியத் தொடங்கியது; வருத்தத்தை வெளிப்படுத்தியது அவர் முகம்.

அதற்குள் சிங்காரமுனிவருக்கு உண்டான தங்கக்கட்டியை, அவர் வீட்டிற்கு அனுப்பி விட்டார் வசிஷ்டர். சிங்காரமுனிவரின் மனைவி மிகுந்த மகிழ்வோடு கணவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளைச்  செய்யத் தொடங்கினாள். சிங்காரமுனிவர் கண்ணீரோடு வீடு திரும்பினார். அதைக் கண்ட அவர் மனைவி மனம் குழம்ப, ‘‘உன் வார்த்தையை நம்பி நான் மோசம் போனேன். உன் ஆசையால் என் தவமும் தேஜசும் போய்விட்டன’’ என்று நடந்ததை விவரித்தார்.

  இதை எதிர்பார்க்காத அவர் மனைவியும் வருந்தினாள்; இருந்தாலும் உடனே சமாளித்துக்கொண்டு, ‘‘ வருத்தப்பட வேண்டாம். நடந்தது நடந்துவிட்டது. மேலே என்ன செய்யலாம் என்று பார்க்கலாம். பட்டாபிஷேகத்தின் நிறைவு நாளன்று ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி தேரில் ஏறிப் பவனி வருவார். அவரது தேர், நம் வீட்டின் அருகில் இந்த மூலையைத் தாண்டித்தான் செல்லும். அப்போது அதோ! அந்த மரத்தினடியில்
நில்லுங்கள்! தேர் அருகில் வந்தவுடன், நெருங்கிப்போய் ஸ்ரீராமரைத் தரிசியுங்கள்! பாபம் தொலையும்’’ என்றாள்.

மனைவியின் வாக்கிலிருந்த நியாயத்தை உணர்ந்த சிங்கார முனிவர் ஒப்புக்கொண்டார்; உணவையும் உறக்கத்தையும் நீக்கினார்; மனம் முழுதும் ஸ்ரீராம தரிசனத்திலேயே இருந்தது.குறிப்பிட்ட நாளன்று பவனி வந்த ஸ்ரீ ராமரின் தேர், சிங்காரமுனியின் வீட்டருகில் மூலையில் திரும்பக்கூடிய நேரம், சிங்கார முனிவர் நெருங்கிப்போய், ஸ்ரீராமரைத் தரிசித்து வணங்கினார்.

அவருக்கு ஆசி கூறிய ராமர், ‘‘முனிவரே! உம்மைப் பிடித்திருந்த பாவம் நீங்கியது. நல்வாழ்வு வாழ்வீர் இனி!’’ என்றார். சிங்கார முனிவர் பெரும் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார். தம் தவத்தை அழித்த தங்கத்தை, அதன்பின் சிங்காரமுனிவர் தொடக்கூட இல்லை.இத்தகவலை ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் ‘களல நேர்ச்சின’ எனும் பாடலில்குறிப்பிடுகின்றார்.

2. அடக்கியதும் அடங்கியதும் ‘களவு மணம்’ என்பது, பழந்தமிழ் நூல் களில் விரிவாகவே சொல்லப்பட்டுள்ளது. பெற்றோர்கள் அறியாதவாறு ஓர் ஆணும் பெண்ணும் தங்கள் காதலைத் தெரிவித்துக் கொண்டு, ஊர்க்காரர்கள் யாரும் அறியாதபடிப் பேசிப் பழகுவது ‘களவு’ எனப்படும். அதன் பிறகு ஊரார் அறியத் திருமணம் நடக்கும். இவ்வாறு களவு முறையில் ஆணும் பெண்ணும் சந்திக்கும்போது, எத்தனை தடைகள் வந்தாலும் சரி! அவற்றையெல்லாம் தாண்டித் தலைவன் தலைவியைச்சந்திப்பான். இவர்களின் இந்தக் களவு சந்திப்பு, ஊராருக்குத் தெரிந்துவிட்டது. அவர்கள் சும்மாயிருப்பார்களா? தலைவியைப்பற்றிப் பலரும் பலவாறாகப் பேசத் தொடங்கினார்கள். (இதை ‘அலர் தூற்றுதல்’என்பார்கள்).

 ஊரே இவ்வாறு பலவிதமாகவும் பேசுவது கண்டு, பெண்ணின் பெற்றோர், அவள் விரும்பிய காதலனுக்கே அவளை மண முடிக்கத் தீர்மானித்தார்கள். பிறகென்ன? ஊரார் வாயை மூடிக்கொண்டார்கள்; அமைதியாகிவிட்டார்கள். ஊராரின் பேச்சடங்கி அமைதியான இந்நிலையைப் பற்றித் தலைவியின் தோழி, தலைவியிடம் சொன்னாள்.

அவ்வாறு அவள் சொல்லும்போது, ‘‘தலைவியே! ஊரிலுள்ள பலரும் உன்னைப்பற்றி பலவாறாகப் பேசித் தூற்றினார்கள் அல்லவா? ஊரே உன்னை இழிவாகப் பேசியதே! ஆனால், உன் காதலருக்கே உன்னை மணமுடித்து வைப்பதாக உன் பெற்றோர் தீர்மானித்ததும்; ஊரார் வாயை மூடிக்கொண்டுவிட்டார்கள். அமைதியாக இருக்கிறார்கள். இது எப்படியிருக்கிறதுதெரியுமா? பாண்டிய மன்னரின் ஆளுகைக்கு உட்பட்ட திருவணைக் கரை எனும் பகுதிக்கு அருகே, கடற்கரையில் ராமர் அமர்ந்திருந்தார்;

ஒரு பெரும் ஆலமரத்தின் அடியில் ஆலோசனை நடந்து கொண்டிருந்தது; இலங்கையின் மீது படையெடுப்பது எப்படி? - என்ற ஆலோசனை நடந்து கொண்டிருந்த அவ்வேளையில், ஆல மரத்தின் மேலேயிருந்த பறவைகள் எல்லாம் ஆரவாரம் செய்து கொண்டிருந்தன. உடனே, ராமர் ஒரு மந்திரம் சொல்லி, அப்பறவைகளின் ஆரவாரத்தைத் தடுத்தார். அதன் காரணமாகப் பறவைகளின் ஆரவாரம் அடங்கிவிட்டது. அதுபோல, உனக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்ட  பிறகு, ஊரார் உன்னைப்பற்றிப் பேசுவது அடங்கிப் போய்விட்டது’’ என்று சொல்லி முடித்தாள் தோழி.

வால்மீகியோ, கம்பரோ சொல்லாத இந்த அபூர்வமான தகவல், அகநானூறு எனும் நூலில் உள்ளது. இதை எழுதியவர் மதுரைத் தமிழ்க்கூத்தனார் எனும் புலவர்.

வென்வேற் கவுரியர் தொல்முது கோடி
முழங்கிரும் பௌவம் இரங்கும் முன்துறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவிந்த
பல்வீழ் ஆலம்போல
ஒலிஅவிந் தன்றுஇவ் அழுங்கல் ஊரே
(அகநானூறு)
3. சிலப்பதிகாரமும் ஸ்ரீராமரும் ஐம்பெருங்காப்பியங்களில் முதலிடம் பெற்றது ‘சிலப்பதிகாரம்’. அரசே வேண்டாம் என்று உதறிவிட்டுப்போன இளங்கோவடிகள், அரசே வேண்டாம் என அயோத்தியை நீத்த ராமரைப் பற்றிப் பலவிதமாகவும், தாம் எழுதிய சிலப்பதிகாரத்தில் கூறியுள்ளார். அவற்றை வரிசையாக அனுபவிக்கலாம். கோவலன் காவிரிப்பூம்பட்டினத்தை விட்டு மதுரைக்குப் புறப்பட்டான்.

வழியில் அவனைச் சந்தித்த கெளசிகன் எனும் வேதியன், கோவலன் நீங்கியதும் காவிரிப்பூம்பட்டினம் அடைந்த அவலநிலையை விவரித்தான். அப்போது அவன் சொன்னது...‘‘கோவலா! காவிரிப்பூம்பட்டினத்தை விட்டு, நீ புறப்பட்டுவிட்டாய். உன் பெற்றோர் பெருந்துயரில் இருக்கிறார்கள். நீ பிரிந்து வந்து விட்டதால், காவிரிப்பூம்பட்டினம் அழகையிழந்து அவலநிலைக்கு உள்ளாகிவிட்டது.

 ‘‘இப்போது காவிரிப்பூம்பட்டினம் எப்படியிருக்கிறது தெரியுமா? தசரதர்கட்டளை என்றவுடன், ராமர் அயோத்தியை விட்டுக் காட்டை அடைந்தாரல்லவா? அப்போது ராமரைப் பிரிந்த அயோத்தி எப்படிப்பட்ட அவலநிலையை அடைந்ததோ, அதேபோல நீ பிரிந்து வந்துவிட்டதால், காவிரிப்பூம்பட்டினம் அழகையிழந்து அவலமான நிலைக்கு உள்ளாகிவிட்டது’’ என்றான் அந்த வேதியன்.  இத்தகவலைச் சொல்லும் சிலப்பதிகாரப் பாடல் வரிகள்:

 பெருமகன் ஏவல் அல்லது யாங்கணும்
 அரசே தஞ்சம் என்று அருங்கான் அடைந்த
 அருந்திறல் பிரிந்த அயோத்தி போலப்
 பெரும்பெயர் மூதூர் பெரும்பே துற்றதும்
அயோத்தியை விட்டு ராமர் பிரிந்தபோது நடந்ததைச் சொன்ன சிலப்பதிகாரம், ராமரை விட்டு சீதாதேவி பிரிந்ததையும் சொல்கிறது. அதைக் கவுந்தியடிகள் மூலம் சொல்லி, ஒரு பாடமே நடத்துகிறார் இளங்கோவடிகள்.

கோவலனும் கண்ணகியும் மதுரை நோக்கி நடந்து சென்றார்கள். அவர்களுக்குத் துணையாகக் கவுந்தியடிகள் எனும் தவத்திலும் வயதிலும் மிகவும் முதிர்ந்த பெண்மணி ஒருவர் சென்றார். ஊரைவிட்டு, மனைவியுடன் காட்டு வழியில் நடந்து வரும்படியாக ஆகிவிட்டதே எனக் கோவலன் வருந்தினான். வருந்திய கோவலனுக்குக் கவுந்தியடிகள் ஆறுதல் சொல்லத் தொடங்கினார்.
‘‘வருந்தாதே அப்பா! கோவலா!

உலகியலில் துன்பம் வருவது இயற்கை. வேதமுதல்வரான திருமால், ராமராக அவதாரம் செய்தபோது, தந்தையின் உத்தரவுப்படி, காட்டிற்குச் சென்றவர் தம் மனைவியான சீதையைப் பிரிந்து வருந் தினார்அல்லவா? அது எதற்கு? துன்பம் வருதல் என்பது இயற்கை, என்பதை விளக்கத்தானே! இது உனக்குத் தெரியாதா? ஆகையால் வருந்தாதே நீ!’’ என்றார் கவுந்தியடிகள்.

இத்தகவலைச் சொல்லும் சிலப்பதி
காரப் பாடல் வரிகள்:
தாதை ஏவலின் மாதுடன் போகிக்
காதலி நீங்கக் கடுந்துயர் உழந்தோன்
வேத முதல்வன் பயந்தோன் என்பது
நீயறிந் திலையோ? நெடுமொழியன்றோ?

 ராமாயணத்தின் நிறைவுப் பகுதியான போர் வெற்றியையும் குறிப்பிடுகிறது சிலப்  பதிகாரம். கோவலன் தன் மனைவியான கண்ணகியுடன் மதுரை சென்றபோது, அங்கே இடைச்சேரியில் வாழ்ந்து வந்த மாதரி எனும் பெண்மணியிடம் பாதுகாப்பாக அடைக்கலமாக விட்டுவிட்டு, மதுரை நகருக்குள் சென்றான்.

 அங்கே கோவலன் கள்வனாகக்கருதப்பட்டுக் கொலை செய்யப்பட்டான். கோவலன் இடைச்சேரியை விட்டு நீங்கியதும், அங்கே இடைச்சேரியில் பலவிதமான தீய சகுனங்கள்-அறிகுறிகள் உண்டாயின.   கண்ணகிக்கு ஆதரவாக இருந்த மாதரி, அத்தீய சகுனங்களைக் கண்டு கவலைப்பட்டாள்; உடனே தன்னைச் சார்ந்தபெண்களை அழைத்து, குரவைக்கூத்திற்கு ஏற்பாடு செய்தாள்.

 குரவைக்கூத்து தொடங்கியது. அதில் பெண்கள் பாடி ஆடும்போது,  ‘‘மூவுலகங்களையும் இரண்டு அடிகளால் தாவி அளந்த திருவடிகள் சிவக்கும்படியாக; தன் தம்பியுடன் காடு சென்று, பின் இலங்கையைக் கோட்டை கொத்தளங்களுடன் சேர்த்து அழித்த திருமாலின், ராமரின் புகழைக்கேட்காத காது என்ன காது? அது நல்லகாதே அல்ல!\” என்று பாடுகிறார்கள்.

 இத்தகவலைச் சொல்லும் சிலப்பதி
காரப் பாடல் வரிகள்:
 மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்
 தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
 சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன் சீர் கேளாத செவி என்ன செவியே?
திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே?

4. சித்த புருஷரும் ஸ்ரீராமரும்

சித்த புருஷர்கள் பிரம்ம நிலையின் உச்சத்தில் இருப்பவர்கள். சித்தத்தைத் தம் வசப்படுத்தியவர்கள். அப்படிப்பட்ட சித்த புருஷர்களில் மிகவும் புகழ் பெற்றவர் சிவவாக்கியர். அவர் பலவிதங்களிலும் ராமரை அனுபவித்து, அவற்றை அப்படியே பாடல் களாகப் பாடியிருக்கிறார். அப்பாடல்களில் இருந்து சில பாடல்கள்:

நீடுபாரிலே பிறந்து நேரமான காயந்தான்
வீடுபே றிதென்றபோது வேண்டி யின்பம் வேண்டுமோ?
பாடி நாலு வேதமும் பாரிலே படர்ந்ததோ!
நாடுராம ராமராம ராம என்னும் நாமமே
கருத்து: உலகம்! அது என்று தோன்றியது என, யாராலும் தெளிவாகக் கூற முடியாது. அவ்வாறு காலம் கடந்த தோற்றத்தைக் கொண்ட பூமியில், காலத்திற்கு உட்பட்ட உடம்பைக் கொண்டு, பேரின்ப நிலையை, முக்தி நிலையை அடைய வேண்டுமா? அதற்கு வழி ‘ராம’ என்னும் நாமமே! நான்கு வேதங்களின் சாரம் ‘ராம’ நாமம்.

போததா யெழுந்ததும் புனல தாகிவந்ததும்
தாததாய்ப்பு  குந்ததும் தணலதாய்வி  ளைந்ததும்
ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றதான அக்கரம்
ஓதடாநீ ராமராம ராம என்னும் நாமமே
கருத்து: காலமாய் - அதாவது காலத்தை அளந்து காட்டும் கருவியான சூரியனாக இருப்பது; நீராக இருப்பது; அனைத்திற்கும் ஆதாரமாக இருப்பது; அக்கினியாய் ஜொலிப்பது - என அனைத்துமான மந்திரம் ‘ராம’ நாமமே! அதை ஓது! அதை ஓது!
காரகார காரகார காவல் ஊழிகாவலன்  

போரபோர போரபோர போரில் நின்ற புண்ணியன்
மாரமார மாரமார மரங்களேழுமெய்தசீ
ராமராம ராமராம ராம என்னும் நாமமே
கருத்து: அனைத்தையும் கட்டிக் காக்கக் கூடியவன்; ஊழிக் காலத்தும் இருப்பவன்; அடியார்களின் புண்ணியப் பலனாக எழுந்தருளி, அடியார்களின் தீவினைகளை அழிப்பவன்; வாலி வதத்தை முன்னிட்டு ஏழு பெரும் மரங்களில் அம்பெய்து, சுக்ரீவனுக்கு நம்பிக்கையை ஊட்டியவன்,
ஸ்ரீராமன். அந்த ‘ராம’ நாமத்தை மந்திரம் எனக் கொள்ளுங்கள்!
 அந்திமாலை உச்சிமூன்று மாடுகின்ற தீர்த்தமும்
 சந்திதர்ப்ப ணங்களும்த பங்களும்செ பங்களும்
 சிந்தைமேவுஞா னமும்தி னம்செ பிக்கு மந்திரம்

 எந்தைராம ராமராம ராமவென்னும் நாமமே
கருத்து: உத்தமமான முனிவர்களின் தவம், ஜெபம், சந்தியா வந்தனம், தர்ப்பணம், தெளிவுபெற்ற அவர்கள் தினந்தோறும் ஜெபிக்கும் மந்திரம் எனும் அனைத்துமே எந்தை ராமனின் ‘ராம’ நாமமே!
கதாவுபஞ்ச பாதகங்க ளைத்துறந்த மந்திரம்
இதாமிதாமி தல்லவென்று வைத்துழலு  மேழைகாள்
சதாவிடாமல் ஓதுவார்த மக்குநல்ல மந்திரம்
இதாமிதாமி ராமராம ராம என்னும் நாமமே

கருத்து: ஐம்புலன்களும் நம்மை, நன்றாக வேட்டையாடத் தூண்டுகின்றன. அதன் காரணமாகப் பஞ்சமா பாதகங்களையும் செய்கிறோம். பஞ்சமா பாதகங்களிலிருந்து விடுதலை பெறத் துடிக்கிறோம்.ஐம்புலன்களின் தூண்டுதலில் இருந்து தப்பிப் பிழைக்க ஒரே வழி ‘ராம’ நாமம்தான்! இந்த ‘ராம’ நாமம்தான்!

5. மோதிரம் யாரிடம் ?
நாராயணீயம் பாடியவர் நாராயண பட்டதிரி. பகவானின் அவதாரங்கள் அனைத்தும் அடங்கிய ஸ்ரீமத் பாகவதத்தின் சாரமாகவே எழுதப்பட்டது ‘நாராயணீயம்’.   அதை எழுதும்போது பட்டதிரி, ‘‘குருவாயூரப்பா! இப்படிச் செய்தாயாமே!’’ என்று கேட்க, குருவாயூரப்பனும்,‘‘ஆம்!’’ எனத் தலையசைத்து ஒப்புதல் கொடுத்த நூல் நாராயணீயம். அதே சமயம் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால், அதையும் பகவானிடம் கேட்பார் பட்டதிரி; பகவானும் உடனே சந்தேகத்தைத் தீர்த்து வைப்பார்.

  ஒவ்வோர் அவதாரமாகப் பாடிவந்த பட்டதிரி, ராமாவதாரத்தைப் பாடத் தொடங்கினார்; அதில் சுந்தர காண்டத்தை பாடத் தொடங்கினார். ஆஞ்சநேயரின் செயல்களை எல்லாம் பாடிக்கொண்டு வந்த பட்டதிரி, சீதாதேவியின் சூடாமணியை ஆஞ்சநேயர் ராமரிடம் தந்த பகுதியில், ‘சூடாமணியைக் கொடுத்தார்’ என்று பாடினாரே தவிர, ராமரிடம் கொடுத்தார் - என்று பாடவில்லை.

  திகைத்தார் பட்டதிரி; சீதாதேவி தந்த சூடாமணியை ராமரிடம்தான் தந்தார் ஆஞ்சநேயர் - என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். இருந்தாலும் அதற்காக, தான் எழுதும் பாடலில் அதைக் குறிப்பிடாமல் இருக்கலாமா? குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும்.

 ஆனால், பட்டதிரி பாடிய அப்பாடல் பகுதியில் அந்நிகழ்வில், ராமர் பெயர் குறிப்பிடப்படவில்லை. உணர்ந்து திகைத்தார் பட்டதிரி. பாடலில் ‘ராமரிடம்’ எனும் சொல்லைப் போடப் பாடலின் அந்த முடிவுப் பகுதியில் இடமில்லை; சம்ஸ்க்ருத இலக்கணப்படிப் போடவும் முடியாது.

வேறு வழியின்றி பட்டதிரி குருவாயூரப்பனைத் தியானித்தார்; ‘‘அப்பனே! குருவாயூரப்பா! நீதான் இதற்கு ஒரு பதில் சொல்ல வேண்டும்!’’ என வேண்டினார். அதே வேளையில் குருவாயூரப்பன் தன் திருக்கரத்தை பட்டதிரி முன்னால் நீட்டினார்; அதாவது, அனுமன் அந்த சூடாமணியைத் தந்தது ‘என்னிடம்’தான் என்பதைக் குறிக்கும் முகமாகவே, பகவான் தன் கையை நீட்டிக் காட்டினார்.

பட்டதிரிக்கு மெய் சிலிர்த்தது. உடனே ‘தே’(உன்னிடம்) என்று போட்டுப்  பாடலை நிறைவு செய்துவிட்டார்.ராமாவதாரம் எடுத்த சுவாமி, அந்தக்காலத்தில் மட்டுமல்ல; எந்தக் காலத்திலும் அடியார் துயரங்களை நீக்குவார் என்பதை விளக்கும் நிகழ்வு இது.

சந்திரமௌலி பரத்குமார்