கத்திரிநத்தம் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில்



கத்திரிநத்தம் எனும் திருவூர் தஞ்சாவூர்-திருவாரூர் நெடுஞ்சாலையில் புன்னைநல்லூர் மாரியம்மன்  கோயில் எனும் ஊரிலிருந்து தெற்கு நோக்கிப் பிரியும் சாலையில் சுமார் 2.கீ.மீ தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூரில் திகழும் சிவாலயம் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில் என அழைக்கப்பெறுகின்றது. அவ்வாலயம் சோழப் பெருமன்னன் இராஜராஜன் காலத்தில் எடுக்கப்பெற்று அச்சக்கரவர்த்தியால் வழிபட்ட சிறப்புடைய கோயிலுமாகும்.

மாமன்னன் இராஜராஜசோழன் (கி.பி.985-1014) தன்னுடைய சோழ மண்டலத்தை பல வளநாடுகளாகப் பிரித்து அவ்வளநாடுகளுக்குத் தன் பட்டப் பெயர்களைச் சூட்டினான். கேரளாந்தகவளநாடு, இராஜராஜவளநாடு, நித்தவிநோதவளநாடு, அருமொழிதேவ வளநாடு, சத்திரிய சிகாமணி வளநாடு, உய்யகொண்டார் வளநாடு போன்ற பெயர்களில் அவன் வகுத்த வளநாடுகள் அமைந்திருந்தன.
ஓவ்வொரு வளநாடும் பலநாடுகளாகவும் அல்லது கூற்றங்களாகவும் பகுக்கப்பெற்று அவற்றுள் பல ஊர்களும், பிடாகைகளும் (சிற்றூர்களும்) அடங்கியிருந்தன. அப்பேரரசன் வகுத்த இராஜராஜ வளநாட்டில் காந்தாரநாடு, தென்கவீரநாடு, கீழ்வேங்கைநாடு, குன்றில் கூற்றம், பழையூர் நாடு, பன்றியூர் நாடு, பறண்டையூர் நாடு, பரவை நாடு, பொய்யில் கூற்றம், புலிவல கூற்றம், புன்றில் கூற்றம், வல்லநாடு, வரகூர் நாடு ஆகியவை அடங்கி யிருந்தன.

காந்தார நாட்டு ஊர்கள் பலவற்றுள் கோனூர், இராஜமகேந்திர சதுர்வேதி மங் கலம், ரவிகுலமாணிக்க நல்லூர்,விஜயாலய சதுர் வேதிமங்கலம் போன்ற ஊர்கள் குறிப்பிடத்தக்கவையாகும். விஜயாலய சதுர்வேதிமங்கலம் என்பது தற்போதைய சாலியமங்கலத்தையும், இராஜமகேந்திர சதுர்வேதிமங்கலம் என்பது கம்பர்நத்தத்தையும், ரவிகுலமாணிக்க நல்லூர் என்பது கத்திரிநத்தத்தையும் குறிப்பிடும் பழம் பெயர்கள் என்பதைக் கல்வெட்டுச் சாசனங்கள் வழி அறியமுடிகிறது.

ரவிகுலமாணிக்கம் என்பது சூரியகுலத்தில் தோன்றிய மாணிக்கக் கல் போன்றவன் இராஜராஜன் என்பதைக் குறிப்பிடும் சொல்லாகும். ரவிகுலமாணிக்கநல்லூரில் முதலாம் இராஜராஜ சோழன் எடுத்தகற்கோயில் தற்போதைய கத்திரிநத்தம்காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயிலாகும்.சோழப் பேரரசர்கள் தாங்கள் எடுத்த பல திருக்கோயில்களுக்கு கயிலாய மலையைக் சுட்டும் வகையில் ஸ்ரீகயிலாசம்என்றும் திருக்காளத்தி மலை மேல் திகழும் சிவாலயத்தை நினைவுகொள்ளும் வகையில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரம் என்றும் பெயர் சூட்டினர். அம்மரபில் எடுக்கப் பெற்றதே ரவிகுலமாணிக்கத்து (கத்திரிநத்தத்து)சிவாலயமாகும்.

காளத்திநாதர் கோயிலுக்குரிய தனிச்சிறப்பு கண்ணப்பநாயனாருக்கு ஈசன் அருள்பாலித்ததாகும். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவராலும் வழிபடப்பெற்று தேவாரப் பாடல்கள் பாடிய தலம் இதுவாகும். சிலந்தி, பாம்பு, யானை ஆகியவை காளத்தீஸ்வரரை வழிபட்டு முக்தி பெற்ற சிறப்பும் இத்தலத்துக்கு உண்டு. காளத்திநாதனை தன் தலைநகரமாகிய தஞ்சாவூருக்கு அருகிலேயே தாபித்து திருக்காளத்தியாகவே வழிபட விரும்பியதால்தான் இராஜராஜன் இக்கோயிலை எடுப்பித்துள்ளான்.

மாமன்னன் எடுத்த இவ்வாலயத்தில் மூலவராக லிங்க வடிவில் காளத்தீஸ்வரரை பிரதிட்டை செய்துள்ளான். இச்சிவலிங்கம் தஞ்சாவூர் பெரிய கோயிலின் மூலவரான இராஜராஜேச்சரமுடைய பரமசாமி என அழைக்கப்பெறும் பிரகதீஸ்வர பெருமானாரின் திருவடிவத்தினை நூற்றுக்கு நூறு ஒத்து திகழ்கின்றது.

தஞ்சை பெரிய கோயிலுக்குரிய ஆகம சிற்ப சாஸ்த்திர அளவீட்டுக்குரிய வகையில் அமைக்கப் பெற்றுள்ளதால்தான் பிரகதீஸ்வரரின் தோற்றத்திலேயே இந்தலிங்கம் அமைந்துள்ளது. வட்ட பீடம், அகண்ட பாணம், அரைவட்ட வடிவில் பாணசிகரம் ஆகியவை அமைந்துள்ளன.இராஜராஜன் காலத்தில் திருக்காமகோட்டம் எனப்பெறும் தனித்த அம்மன் கோயில் அமைப்பது இல்லை.

பின் வந்த சோழ அரசர்கள் காலத்தில்தான் தனித்த அம்மன் வடிவங்களை இடம் பெறச்செய்தனர். அவ்வாறு இத்திருக்கோயிலிலும் பிற் காலச் சோழ மன்னர்கள் காலத்தில் அமைக்கப் பெற்ற தனித்த அம்மன் திருமேனி இடம் பெற்றுள்ளது. அம்பிகையின் திருநாமம் ஞானாம்பிகை என்பதாகும்.  எவ்வாறு திருக்காளத்தியில் அம்பிகையின் பெயர் ஞானாம்பிகை என்று வழங்கப் பெறுகின்றதோ அதே வகையில் இங்கும் அத்திரு
நாமமே உள்ளது. நின்ற கோலத்தில் அக்கமணிமாலையும் தாமரை மலரும் பின்னிரு கரங்களில் ஏந்திய நிலையில் அபயவரத கரங்களோடு தேவி காட்சி நல்குகின்றாள்.

இத்திருக்கோயிலில் பண்டு சோழர்கள் காலத்தில் அஷ்ட பரிவாரங்கள் எனப்பெறும், சூரியன், சந்திரன், சப்தமாதர், கணபதி, முருகன், ஜேஷ்டா தேவி, சண்டீசர், பைரவர் ஆகிய திருமேனிகள் இடம் பெற்றிருந்தன. பின்னாளில் இவ்வாலயம் சிதைவுற்ற பின்பு மீண்டும் பின்வந்தோர் திருப்பணிகள் செய்தபோது சண்டீசர், பைரவர், கணபதி, முருகன் போன்ற பழைய திருமேனிகளே எஞ்சியிருந்ததால் புதிதாக ஜேஷ்டா தேவிக்குப் பதில் கஜலட்சுமியை மட்டும் பிரதிட்டை செய்துள்ளனர்.

அதுபோன்றே கோஷ்ட தெய்வங்களாக ஆலமர் செல்வராகிய தட்சிணாமூர்த்தி, காளையுடன் கூடிய அர்த்தநாரீஸ்வரர் ரிஷபதேவர் (காளை) ஆகிய திருமேனிகள் மட்டுமே சோழர் காலத் திருமேனிகளாகவுள்ளன. பிற்காலத் திருப்பணிகளின்போது புதிய திருமேனிகளாக பிரமன், துர்க்கை ஆகிய திருவடிவங்களை இடம் பெறச் செய்துள்ளனர், தனித்த சிவலிங்க பாணம் ஒன்று பிரகாரத்தில் காட்சி நல்குகின்றது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இவ்வாலயத்தை எடுத்த மாமன்னன் இராஜராஜ சோழன் காளஹஸ்தி நாதராகிய சிவபெரு மானை வணங்கும் கோலத்தில் தன் உருவச் சிலையை இக்கோயிலில் இடம் பெறுமாறு செய்துள்ளான். தன் இருகரங்களுடன் வணங்கிய நிலையில் நின்ற கோலத்தில் திகழும் அப்பிரதிமம் பிற்காலத்தில் கலை அறிவு அற்றோரால் சிதைக்கப்பெற்று தற்போது கரங்களையும், பாதங்களையும் இழந்த நிலையில் சுவரில் பொதிக்கப்பெற்று காணப்பெறுகின்றது. இந்த நிலையிலாவது அச்சிற்பத்தினை காப்பாற்றி இருப்பது போற்றுதலுக்கு உரியதாகும்.

சிறிய வடிவில் திகழும் முருகப் பெருமான் சிற்பமும், கணபதியார் வடிவமும் சோழர் கலையின் சிறப்புக்குரிய படைப்புக்களாகும்.  சண்டீசர் அமர்ந்த கோலத்தில் கையில் மழுவினை ஏந்தியவாறு காணப்பெறுகின்றார். ரிஷபம் (நந்தி) சோழர் கலையின் சிறப்புக்குரிய வடிவமாகும்.

இவ்வாலயத்தின் சோழர்கால கட்டுமானங்களும், கல்வெட்டுக்களும் காலப்போக்கில் அழிந்து சிதைந்துவிட்டன.  பின்னாளில் தஞ்சாவூர் மராட்டிய அரசர் துக்கோஜி எனும் துளஜா என்பவர் இவ்வாலயத்தைப் புதிப்பித்து அக்கோயிலின் நிருவாகத்திற்காக நிலக்கொடையும் அளித்துள்ளார். அதனை ஒரு கல்வெட்டாகக் காலக்குறிப்புகளுடன் இவ்வாலயத்தில் பதிவும் செய்துள்ளார். அக்கல்வெட்டில் இவ்வூரின் பெயர் சத்தரிஷி நத்தம் எனக் குறிப்பிடப்பெற்றுள்ளது. 

சப்தரிஷி என்பது இங்கு சத்தரிஷி என மருவி காணப்பெறுகின்றது. இவ்வாலய புராணப்படி சப்தரிஷிகளான 1. அத்ரி,  2. வசிட்டர்,  3. காச்யபர்,  4. கௌதமர்,  5. பரத்வாசர், 6. விச்வாமித்ரர், 7. ஜமதக்னி எனும் இவர்கள் இவ்வூரில் தங்கி இங்குள்ள சிவபெருமானை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர் என்பதால் இவ்வூருக்கு சப்தரிஷி நத்தம் எனப் பெயர் ஏற்பட்டதாக குறிக்கப் பெற்றுள்ளது.  இந்த ஏழு ரிஷிகளும் குபேரனுக்கு ஆசிரியர்களாக விளங்கியவர்கள் ஆவர்.  

சோழர்காலத்திய இவ்வூரின் பழம் பெயரான ரவிகுலமாணிக்க நல்லூர் என்பது காலப்போக்கில் மறைந்து சப்தரிஷிநத்தம் என மராட்டிய அரசர்கள் காலத்தில் விளங்கி இருநூறு ஆண்டுகளுக்குள் அப்பெயரும் மறைந்து கத்திரி நத்தம் என தற்காலத்தில் விளங்குகின்றது.

அதுபோல இவ்வூரின் வட எல்லையில் விளங்கும் பின்னலூர் எனும் ஊர் தற்காலத்தில் புன்னைநல்லூர் மற்றும் மாரியம்மன்கோயில் என்ற பெயர்களால் அழைக்கப்பெறுகின்றது. பழம்பெரும் ஊரான ரவிகுலமாணிக்க நல்லூரின் ஒரு பகுதி பிற்காலத்தில்பின்னலூர் ஆகி அதுவும் புன்னைநல்லூர் என மருவிவிட்டது.

1996ஆம் ஆண்டு சிதைந்த நிலையில் இருந்த இக்கோயிலின் முன்மண்டபத்தில் திகழ்ந்த  கற்பலகை ஒன்றில் இக்கட்டுரை ஆசிரியரால் தஞ்சை மராட்டிய மன்னன் துக்கோஜி எனும் துளஜா அவர்கள் வெட்டுவித்த மேறகுறித்த கல்வெட்டுச் சாசனம் கண்டறியப்பெற்றது.  

தஞ்சையின் முதல் மராட்டிய அரசரான ஏகோஜியின் மறைவிற்குப் பின்பு (கி.பி.1683) அவர் தம் மூன்று மகன்களான சகஜி, அவர் தம்பி முதலாம் சரபோஜி, அவர் தம்பி துக்கோஜி ஆகிய மூவரும் இணைந்து தஞ்சாவூர் தேசத்தை ஆட்சி செய்தனர். அக்காலக்கட்டத்தில் கி.பி.1692ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் நாளில் பொறிக்கப் பெற்றதே காளத்தீஸ்வரர் கோயில் கல்வெட்டாகும்.

அதில் ஆங்கீரஸ வருஷம் கார்த்திகை மாதம் இரண்டாம் நாள் குறிக்கப்பெற்று சத்தரிஷி நத்தம் எனும் இவ்வூரில் திகழும் காளஹஸ்தீஸ்வர சுவாமிக்காக அக்கிராமத்தின் இருபது வேலி நிலத்தில் ஆறேகால் வேலி புறம்போக்கு நிலத்தைத் தவிர்த்து பதிமூன்றே முக்கால் வேலி நிலத்தை சர்வமானியமாக அளித்தார் என்பது குறிக்கப்பெற்றுள்ளது.

அந்த சர்வ மானிய ஊரான சத்தரிஷிநத்தத்தின் நான்கு எல்லைகளாக ராராமுத்திரக்கோட்டை, குளிச்சப்பட்டு, மருங்கை, பின்னலூர் என்ற ஊர்கள் திகழ்வதாகவும் அச்சாசனத்தில் கூறப்பெற்றுள்ளது.  இதில் குறிப்பிடப் பெறும் பின்னலூர் தற்போது புன்னைநல்லூர்  (மாரியம்மன் கோயில்) என மருவி வழங்குகின்றது. கத்திரி நத்தம் மராட்டியர் காலத்தில் காளத்தீஸ்வரசுவாமியாருக்கான சர்வமானிய ஊராகத் திகழ்ந்தது என்பது இக்கல்வெட்டுச் சாசனத்தால் உறுதிபெறுகின்றது. சர்வமானிய ஊர்கள் அரசுக்கு எந்தவிதமான வரியும் செலுத்த வேண்டியது இல்லை.

தொண்டை மண்டலத்து திருக்காளத்தி எனும் தலத்தினை ராகு கேது சேஷத்ரம் எனக் குறிப்பிடுவர். ராகு - கேது  எனும் கோள்களின் சாரத்தால் ஏற்படும் தீவினைகள் அனைத்தும் அங்கு நீங்கும் என்பது வழிபாட்டு மரபாகும். அதே பலனைகத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயிலிலும் மக்கள் பெற்று நலம் பெறுகின்றனர். சோழ நட்டு மக்கள் காளத்திநாதனின் பெருங்கருணையைப் பெறவேண்டும் என்ற நோக்கிலேயே  இவ்வாலயம் சோழப்பெருமன்னனால் எடுக்கப்பெற்று, மராட்டிய மன்னர்களால் போற்றப்பெற்று வந்துள்ளது. பழம்பெரும் இவ்வாலயத்தை போற்றிப் பாதுகாப்பது  நம் கடமை.  இவ்வாலயத்திற்கென உயர்ந்த ராஜகோபுரம் எழுப்பப்பெற வேண்டும். கோள் சாரங்களால் துன்புறும் அன்பர்கள் ஒரு முறையேனும் கத்திரிநத்தத்துக்கு வாருங்கள்.  பெருமானின் கருணையால் நிச்சயம் உங்கள் வாழ்வு மேம்படும்.

முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்