சித்திரை பதித்த முத்திரை



உள்ள(த்)தைச் சொல்கிறோம்

ஜனவரி ஒன்றாம் தேதியை ஹேப்பி நியூஇயர் என்று கோலாகலமாக கொண்டாடும் நம்மவர்களுக்கு, தமிழ் புத்தாண்டை எப்படி கொண்டாடுவது என்று சொல்லித் தந்ததோடு, சித்திரை சிறப்புகளை பட்டியலிட்டு, தமிழ் கடவுளாம் முருகனின் அழகான வண்ணப் படத்தை கொடுத்தது சந்தோஷமே! புத்தாண்டு வாழ்த்து அட்டை (கிரீட்டிங் கார்டு) போல அமைந்தது. சித்திரை சிறப்பிதழ், மந்தாரை போல மணந்து, முத்திரை பதித்து, பத்தரை மாற்று தங்கம் போல ஜொலித்து, ஆன்மிக மாத்திரையானது.
- மல்லிகை அன்பழகன், சென்னை.

‘புத்தாண்டை எப்படிக் கொண்டாடி வரவேற்பது'
என்ற கட்டுரையைக் கண்டேன். அசோகரின் காலம் ஒரே காலக் கணக்கு. அரிச்சந்திரன் காலமும் ஒரு காலக் கணக்கு என கூறியதும், ஒருவரை நிலை நிறுத்துவது தெய்வபலமும். அதன் செய்த செயல்களும்…. அப்பப்பா… அந்த வரிகள் என் இதயத்தில் ஒட்டிக் கொண்டன.
- வண்ணை கணேசன், சென்னை.

அரட்டை, அக்கப் போர் என வெட்டிப் பேச்சுக்களால் சுகம் காணும் நம்மவர்கள் அதையே வலைத்தள பதிவுகளாக, அதனால் மோதலாக இன்று வளர்ச்சியடைய வைத்திருக்கிறார்கள். இந்த வாய் சொல் வீரர்கள் வம்பு, புறம் பேசுதல், பொய், திரித்தல் என வார்த்தை கலகமூட்டி, சமூகத்திலும், பிறர் வாழ்விலும் பிரச்னைகளை உண்டாக்குகிறார்கள். இதற்கு பரிகாரமாக, மௌன விரதத்தை பொறுப்பாசிரியர் வலியுறுத்தியதோடு அதன் தொடர்ச்சியாக மனோ மௌனம் பெற்றால் பிரம்மம் பிரகடனமாகும் என்று சிலிர்ப்பூட்டினார். இந்த நல்ல விஷயத்தை இனியாவது முயற்சி செய்வோமா !
- அ. யாழினி பர்வதம், சென்னை.

சித்திரைப் பற்றிய செய்திகள் பல கண்டு வியந்தே போனேன். திருக்கோவிலூர்
உலகளந்த பெருமாள் தரிசனம் ஆன்மிக இதழ் மூலம் கிட்டியதும் பரவசம் அடைந்தேன். எலும்பு நோய் நீக்கும் உடும்பீசர் ஆலயச் செய்திகள் மெய் சிலிர்க்கச் செய்தது. ஆன்மிக இதழ் பலாக் கனியாய் இனித்தது.
- சு. குலக்குமணசுவாமி, மதுரை.

பிலவ வருட பஞ்சாங்கத்தை இலவசமாக எங்களுக்குக் கொடுத்திருப்பது ‘‘ஆன்மிகம் செய்த மிகப் பெரிய அறப்பணி!’’
‘‘மணியம் செல்வனின் கை வண்ணத்தில் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாளின் அழகிய அட்டைப் படம் மகோன்னதம். !’’ பிரபுசங்கர் எழுதியுள்ள திருப்பங்கள் தருவார் திரிவிக்கிரம்ப பெருமாள் கட்டுரை ஆழ்வார்கள் காலத்திற்கே நம்மை அழைத்துச் சென்றதோடு, அக்கோயிலை நேரடியாக
சுற்றிக் காட்டியது போன்றதொரு பிரமிப்பு ஏற்பட்டது.
- வெ. லட்சுமி நாராயணன், வடலூர்.

நாத பிரம்மம் முத்துசாமி தீட்சிதர் பற்றிய கட்டுரை அரிய தகவல்களோடு அமைந்திருந்தது. ரகுநாதர் அவர்கள் எழுதிய குடிபெயர்ந்த ராமரும் குணம் தரும் அனுமனும் எனும் கட்டுரை ஒரு கோயிலுக்குப் பின்னால் இவ்வளவு விஷயங்களா என்கிற ஆச்சரியத்தை அளித்தது.
 - ஆனந்தன், மதுராந்தகம்.

காரைக்கால் அம்மையார் குறித்த எம்மைப் பேணும் அம்மையே வருக கட்டுரையை உமா பாலசுப்ரமணியன் நேர்த்தியாக எழுதியிருந்தார். அதேபோல் இங்கண் எனும் தலம்தான் எண்கண் என்று அழைக்கப்படும் வரலாற்றை முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் அவருக்கே உரித்தான ஆழமான விளக்கங்களோடும் பொக்கிஷம் நிறைந்த வரலாற்று தகவல்களோடும் விளக்கியிருந்ததை படித்து பிரமித்தோம்.
 - முரளி கார்த்திகேயேன், புதுக்கோட்டை.