செப்டம்பர் 1 முதல் 15 வரை ராசி பலன்கள்பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷம் :  தன்னம்பிக்கையால் காரியங்களில் வெற்றி பெறும் மேஷ ராசி அன்பர்களே! இந்த காலகட்டத்தில் பாக்கியஸ்தானத்தில் இருக்கும் கிரக கூட்டணியால் செல்வ சேர்க்கை உண்டாகும். மனதில் இருக்கும் கவலைகள் மறையும். எதிலும் ஒரு வேகம் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் சேரும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும். தொழில் ஸ்தானத்தில் சூரியன் அமர்ந்திருக்கிறார். தொழில் வியாபாரத்தில் வேகம் பிடிக்கும். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும்.
பெண்களுக்கு: செல்வச்சேர்க்கை உண்டாகும்.
கலைத்துறையினருக்கு: எல்லோரையும் எளிதில் வசீகரிக்கும் திறமையும் அதிகரிக்கும்.
அரசியல்வாதிகளுக்கு: தங்களது செயல்
களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். முயற்சிகள் சாதகமான பலன் தரும்.
மாணவர்களுக்கு: கல்வியை பற்றிய மனக்
கவலை உண்டாகும். பயணங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்.
பரிகாரம்: கந்தசஷ்டி கவசம் படித்து கந்தனை வணங்கினால் கஷ்டம் நீங்கும்.

ரிஷபம்: மனசாட்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் ரிஷப ராசி அன்பர்
களே! இந்த காலகட்டத்தில் ராசிநாதன் சுக்கிரன் தைரிய ஸ்தானத்தில் இருக்கிறார். பதினெட்டு வருடத்திற்கு பிறகு ராசிக்கு ராகு வருகிறார். மனதில் நிம்மதி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருக்கும் அன்பு நீடிக்கும். விருந்தினர் வருகை இருக்கும். தந்தை வழியில் இருந்து வந்த கருத்து மோதல்கள் அகலும். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தை கடை பிடிப்பது நல்லது. வரவேண்டிய பணம் வந்து சேரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். பெண்களுக்கு: காரிய வெற்றி அடைவார்கள். கலைத்துறையினருக்கு: இருந்த போட்டிகள் அகலும்.
அரசியல்வாதிகளுக்கு: தாங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும்.
மாணவர்களுக்கு: வீண் அலைச்சலை குறைத்துக் கொண்டு கல்வியில் கவனம்
செலுத்துவது நன்மை தரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி.
பரிகாரம்: மாரியம்மனை விளக்கேற்றி வணங்கி வர, மாற்றங்கள் நிகழும். மனநிம்மதி உண்டாகும்.

மிதுனம்: அறிவு சார்ந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மிதுன ராசி அன்பர்களே! இந்த காலகட்டத்தில் ராசிநாதன் புதன் சுகஸ்தானத்தில் இருக்கிறார். ஆட்சி உச்சமாக இருக்கிறார். ராசியை குரு - சனி பார்க்கிறார்கள். மனதில் இருந்த கவலை நீங்கி தைரியம் உண்டாகும். எதிலும் லாபத்தை பார்க்க முடியும். வாக்கு வன்மையால் எந்த காரியத்தையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். நண்பர்கள் உறவினர்கள் உதவி கிடைக்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். தாமதமாகி வந்த சுபகாரியங்கள் சிறப்பாக நடக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள்.
பெண்களுக்கு: காரிய வெற்றி காண்பீர்கள்.
கலைத்துறையினருக்கு: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள். அரசியல்வாதிகள் ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். தேவையான நிதியுதவி கிடைக்கும்.
மாணவர்களுக்கு: கல்வியில் எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்க பாடுபடுவீர்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்.
பரிகாரம்: சிவபுராணம் படித்து வர சிரமங்கள் நீங்கும். இல்லறம் இனிக்கும்.

கடகம் : உணர்வுகள் சார்ந்த விஷயங்களுக்கு மதிப்பளிக்கும் கடக ராசி அன்பர்களே! இந்த கால
கட்டத்தில் ராசியை செவ்வாய் தனது நான்காம் பார்வையால் பார்க்கிறார். எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து அதிகரிக்கும். குடும்ப ஸ்தானத்தை குரு பார்க்கிறார். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். தொழில் வியாபாரம் தொடர்பாக அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் நிர்வாக திறமை பளிச்சிடும். எதிர்ப்புகள் குறையும்.
பெண்களுக்கு: எந்த ஒரு வேலையையும் நேரடியாக கவனிப்பது நன்மை தரும்.
கலைத்துறையினருக்கு: ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். அரசியல்வாதிகள் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சுலபமாக முடிந்துவிடும் என்று நினைக்கும் காரியம் கூட சற்று தாமதமாகலாம்.
மாணவர்களுக்கு: முயற்சிகள் சாதகமான பலன் தரும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். திறமை வெளிப்படும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்.
பரிகாரம்: துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்ற துன்பங்கள் விலகும். தடைகள் நீங்கும்.

சிம்மம்: சுயகௌரவம் பார்க்கும் சிம்ம ராசி அன்பர்களே! இந்த காலகட்டத்தில் ராசியை ராசிநாதன் சூரியன் அலங்கரிக்கிறார். குரு பார்க்கிறார். முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். ராசிநாதன் சூரியனின் சஞ்சாரம் எதிலும் ஒரு வேகத்தை உண்டாக்கும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். திருமண முயற்சிகள் கைகூடும். வாழ்க்கை துணையால் பணவரத்து இருக்கும். உறவினர்
களுடன் இருந்த மன வருத்தம் நீங்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறி வேகம் பிடிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புத்தி சாதூர்யம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். பெண்களுக்கு: மற்றவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கி நட்பு உண்டாகும்.
கலைத்துறையினருக்கு: வெளியூர் பயணம் அதன் மூலம் அலைச்சல் உண்டாகலாம். அரசியல்வாதிகள் உதவிகள் செய்யும்போது ஆலோசித்து செய்வது நல்லது.
மாணவர்களுக்கு: கல்வி தொடர்பான பயணம் செல்ல நேரலாம். திறமை வெளிப்படும். சாமர்த்தியமான பேச்சு இருக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி.
பரிகாரம்: நரசிம்மரை வணங்க நன்மைகளும் உண்டாகும். எதிலும் வெற்றி கிடைக்கும்.

கன்னி: மயிலிறகை விட மெல்லிய மனம் கொண்ட கன்னி ராசி அன்பர்களே! இந்த காலகட்டத்தில் ராசியை ராசிநாதன் புதன் அலங்கரிக்க - ராசியை சனி பார்க்கிறார். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த பண வரவு கிடைக்கும். வழக்குகள் உங்களுக்கு சாதகமான நிலையில் இருக்கும். ஆரோக்கியக் குறைபாடு நீங்கும். குடும்ப பாக்கியாதிபதி சுக்கிரன் உச்சம் பெற்றிருக்கிறார். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து செயல்படுவீர்கள். உறவினர்கள் வருகை இருக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகனங்கள் சேர்க்கை இருக்கும். தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறமை அதிகரிக்கும்.
பெண்களுக்கு: உங்களது செயல்களுக்கு மற்றவர்களது ஆதரவு கிடைக்கும்.
கலைத்துறையினருக்கு: எந்த விஷயத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது.
மாணவர்களுக்கு: கல்வி தொடர்பான
காரியங்கள் நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்.
பரிகாரம்: விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயணம் செய்து பெருமாளை பூஜிக்க, வெற்றிகள் குவியும். வேதனைகள் மறையும்.

துலாம்: தொழில் நுணுக்கம் தெரிந்த துலாம் ராசி அன்பர்களே! இந்த காலகட்டத்தில் ராசிநாதன் சுக்கிரன் தொழில் ஸ்தானத்தில் இருக்கிறார். ராசியை செவ்வாய் பார்க்கிறார். எதிலும் தன்னம்பிக்கையுடன் ஈடுபட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். முக்கிய நபர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது.
பெண்களுக்கு: மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் உண்டாகும்.
கலைத்துறையினருக்கு: கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு: காரியங்களில் தடை அகலும். திட்டமிட்டு செய்வதன்மூலம் சாதகமான பலன் கிடைக்கும்.
மாணவர்களுக்கு: கல்வி தொடர்பான விஷயங்களில் திடீர் தடை, தாமதம் ஏற்படலாம். மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பெரியோர், ஆசிரியர் அரவணைப்பு இருக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி.
பரிகாரம்: லட்சுமி அஷ்டோத்திரம் படித்து மகாலட்சுமியை வணங்க, வீட்டில் லட்சுமி
கடாட்சம் உண்டாகும். செல்வம் சேரும்.

விருச்சிகம்: கொடுக்கும்
வாக்கினை உயிருக்கு சமமாக மதிக்கும் விருச்சிக ராசி அன்பர்களே! இந்த காலகட்டத்தில் ராசிநாதன் செவ்வாய் ஆறாமிடத்தில் மறைந்திருந்தாலும் ராசியைப் பார்க்கிறார். மறைமுக எதிர்ப்புகள் குறையும். எடுத்த காரியத்தில் ஏற்பட்ட தடை, தாமதம் நீங்கும். உடல் ஆரோக்கியம் பெறும். வழக்குகள், தகராறுகளில் சாதகமான பலன் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனக்கசப்பு மாறும். மனநிம்மதி உண்டாகும். உறவினர்கள் வருகை இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான போட்டிகள் நீங்கும். மனதில் உற்சாகம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் உற்சாகமாக காணப்படுவார்கள். சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும். பெண்களுக்கு: எந்த ஒரு செயலையும் அக்கறையுடன் செய்து முடிப்பீர்கள்.
கலைத்துறையினருக்கு: பணிகளில் கவலைகள் இருந்தாலும் நிறைவாக முடியும்.
அரசியல்வாதிகளுக்கு: தேவையற்ற
பிரச்னைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது.
மாணவர்களுக்கு: எதிலும் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய்.
பரிகாரம்: பழனி முருகனை வணங்கி
வர பணப் பிரச்னை தீரும். கார்த்திகேயன்
அருளால் காரிய வெற்றி உண்டாகும்.

தனுசு: பழமையான நம்பிக்கைளை மதிக்கும் தனுசு ராசி அன்பர்களே! இந்த காலகட்டத்தில் ராசியில் இருக்கும் கிரக கூட்டணியால் எல்லா முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். உங்களது செயல் களுக்கு யாராவது ஒருவர் உறுதுணையாக இருப்பார்கள். கணவன் மனைவிக்கிடையே மன வருத்தம் ஏற்படலாம். தொழில் வியாபாரம் மிதமாக இருக்கும். உங்களது பேச்சு திறமையால் மேலிடத்தில் இருப்பவர்களிடம் நல்ல பெயர் பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. பெண்களுக்கு: செயல்களுக்கு பக்கபலமாக யாராவது இருப்பார்கள்.
கலைத்துறையினருக்கு: நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.
அரசியல்வாதிகளுக்கு: எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.
மாணவர்களுக்கு: கல்வியில் வெற்றிபெற கடினமாக உழைக்க வேண்டி இருக்கும்.
எல்லோரிடமும் அனுசரித்துச் செல்வது நல்லது.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி.
பரிகாரம்: பைரவரை வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிரிகள் தொல்லை இல்லாமல் போகும்.

மகரம்: வாதாடும் திறமை கொண்ட மகர ராசி அன்பர்களே! இந்த காலக்கட்டத்தில் ராசியை சுக்கிரன் பார்ப்பதால் பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். சுப காரியங்கள் திட்டமிட்டபடி நடக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். மனதில் இருக்கும் குழப்பம் நீங்கும். குடும்பத்தில் நிம்மதி காணப்படும். கணவன் மனைவிக்கிடையே சகஜநிலை நீடிக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கூறிய பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.
பெண்களுக்கு: பயணங்களின் போதும் வாகனங்களை பயன்படுத்தும் போதும் கவனம் தேவை.
கலைத்துறையினர்களுக்கு: நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு: செயல்களில் வேகம் உண்டாகும்.
மாணவர்களுக்கு: கல்வியில் முன்னேற திட்டமிட்டு செயல்படுவீர்கள். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நன்மை தரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி.
பரிகாரம்: விநாயகப் பெருமானை தேங்காய் உடைத்து வழிபட்டு வர வினைகள் அகலும். வெற்றிகள் குவியும்.

கும்பம்: உழைப்பினால் உன்னத நிலையை அடையும் கும்ப ராசி அன்பர்களே! இந்த காலகட்டத்தில் எல்லா காரியங்களும் சுமுகமாக நடந்து முடியும். மனத்துணிவு உண்டாகும். எதையும் வேகமாக செய்து முடிப்பீர்கள். தடை தாமதம் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை காணப்படும். சொத்துப் பிரச்னை தீர்வு பெறும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.
 பெண்களுக்கு: எந்த காரியத்தை செய்து முடிப்பதிலும் வேகத்தை காண்பீர்கள்.
கலைத்துறையினருக்கு: அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களை பற்றி கூறுவதை தவிர்ப்பது நல்லது.
அரசியல்வாதிகளுக்கு: மேலிடம் கூறுவதை நிதானமாக யோசித்து செய்வது நல்லது.
மாணவர்களுக்கு: எதிர்கால கல்வி பற்றிய எண்ணம் மேலோங்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு வடமாலை சாத்தி வழிபட ஆரோக்யம் உண்டாகும். மனோ தைரியம் கூடும்.

மீனம்: இரக்ககுணம் அதிகம் கொண்ட மீன ராசி அன்பர்களே! இந்த காலகட்டத்தில் அறிவுத்திறன் அதிகரிக்கும். சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கப் பெறுவீர்கள். பண
வரத்து அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை ஏற்படும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சக ஊழியர்களுடன் எளிதில் கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. அலுவலகத்தில் உங்களுக்கான அங்கீகாரம் அதிகரிக்கும்.
பெண்களுக்கு: கலைகளில் ஆர்வம்
அதிகரிக்கும்.
கலைத்துறையினருக்கு: நீண்ட நாட்களாக இருந்த பழைய பகைகள் மாறும்.
அரசியல்வாதிகளுக்கு: எதிர்காலம் பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். மாணவர்களுக்கு: கல்வியில் வெற்றி பெற எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சாதுரியமான பேச்சால் நன்மை கிடைக்கப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்.
பரிகாரம்: குல தெய்வத்தை பூஜித்து வணங்கிவர எல்லா தடைகளும் நீங்கி காரிய அனுகூலம் உண்டாகும். மனதில் அமைதி ஏற்படும்.