நாகலோக மகாராணி மானஸாதேவி



உத்தரகண்ட் - ஹரித்துவார்

வங்காள தேசத்தில் ‘சந்த் சௌதாகர்’ என்று ஒரு வியாபாரி இருந்தார். இவர் சிறந்த சிவபக்தர். சிவனையன்றி மற்றொரு தெய்வத்தை வணங்காதவர். வங்காள தேசத்தில் மானஸா தேவி என்னும் நாகதேவதை பரவலாக வழிபடப்பட்டு வந்தாள். ஆனால் சந்த் செளதாகர் மானஸா தேவியை எதிரியாகப் பாவித்தார்.

தன் ஆளுமைக்கு உட்பட்ட இடங்களில், மானஸா தேவியை பூஜை செய்வதையும் தடுத்து வந்தார். இதனால் கோபமடைந்த மானஸா தேவி, அவருடைய ஆறு குழந்தைகளையும் மரிக்கச் செய்தாள். ஆயினும் இதனால் மனம் தளராத சந்த், தன் கொள்கையை விடவில்லை. அவர் தன் சிவ பூஜையை தொடர்ந்து செய்து வந்தார். ஒரு சமயம் சந்த் செளதாகர் தன் விற்பனைப் பொருட்களை பதினான்கு படகுகளில் நிரப்பி கடலில், செலுத்திச் சென்றார்.

மானஸா தேவி, நடுக்கடலில் அவர் முன்தோன்றி, என்னை வழிபடாவிட்டால் பல விதமான கஷ்டங்களை நீ எதிர் கொள்ள நேரிடும் என்று எச்சரித்தாள். சந்த் சௌதாகர் தன் கொள்கையில் பிடிவாதமாக இருந்தார். மானஸாதேவி, ஒரு பயங்கரமான புயலை அனுப்பி, அவருடைய வியாபார சாமான்களை கடலில் வீழ்ந்து அழியச் செய்தாள்.

சந்த் செளதாகர், தன்னை காப்பாற்றிக் கொள்வதே பெரும் பாடாக போய்விட்டது. எப்படியோ நீந்தி கரை சேர்ந்தார். பன்னிரண்டு வருஷங்கள் ஒரு அந்நிய நாட்டில் வறுமையுடன் போராடி, மிகுந்த பிரயாசையுடன் ஊர் வந்து சேர்ந்தார்.

அவருக்கு ஒரு மகன் பிறந்தான். இந்த மகிழ்ச்சியும் நீடிக்கவில்லை. அவனுடைய ஜன்ம பலன்படி, மணமான இரவே, பாம்பு கடியினால் தன் உயிரை இழப்பான் என்று ஆரூடம் சொல்லப்பட்டது. சந்த் பலவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து, தன் மகன் உயிரை காப்பாற்ற முயற்சி கள் செய்தார். பலத்த இரும்பு கம்பிகளும், கதவுகளும் அமைந்த மணவறை தயாராயிற்று.

மகள் லகீந்தர், பேஹிலா என்ற பெண்ணை மணந்து மணவறையில் மகிழ்ச்சியுடன் இருந்த சமயம், நன்றாக பாதுகாக்கப்பட்ட அந்த அறையிலிருந்த சிறிய துவாரம் வழியாக ஒரு பாம்பு நுழைந்து லகீந்திரனின் உயிரை வாங்கியது. விதியை யாரால் வெல்ல முடியும்?’ ஒவ்வொரு வரும் துக்கத்தின் எல்லையில் இருந்தனர்.

மேற்கொண்டு என்ன செய்வது என்று குழம்பினர். ஆனால் மணமகளான பேஹீலா அதிரவில்லை. இந்த துரதிருஷ்டத்தையே, தனக்கு வரப்பிரசாதமாக மாற்றும் முயற்சியில் இறங்கினாள். யாருடைய எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், தன் கணவனுடைய உடலை எடுத்துக் கொண்டு ஒரு கட்டை மரத்தில் ஏற்றி, கடலினுள் சென்றாள். பல நாட்கள் இரவும் பகலுமாக படகை வலித்துக் கொண்டு சென்றாள். இறந்த லகீந்திரனின் உடல் காற்றில் கரைய ஆரம்பித்தது. மீதி இருந்தது வெறும் எலும்புகளே. ஆனால் பேஹீலா விடாமல் தன் படகை செலுத்திச் சென்றாள்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு அவள் படகு ஸ்வர்க்கத்தை அடைந்தது. சலவை தொழிலாளியின் உதவியுடன் அவள், கடவுள் சபைக்குச் சென்றாள். அந்த தெய்வங்களை பாடியும், ஆடியும் மகிழ்வித்து சென்றாள். அந்த வரங்களின் பலனாக தன் கணவன், மற்றும் ஆறு மூத்த சகோதரர்களோடும் வீடு திரும்பியவள், மானஸாவை பக்தி சிரத்தையுடன் வழிபட்டாள். அவள் வேண்டிக் கொண்டபடி, சந்த் செளசாரும். ஒரு புஷ்பத்தை எடுத்து, இடது கையால் மானஸாவை அர்ச்சித்தார். இவ்வாறு தான் மானஸாவின் வழிபாடு தொடங்கப்பெற்றது.

இந்த பேஹீலா - லகீந்தர் ஜோடியின் கதை பரம்பரை, பரம்பரையாக வங்காள ஜனங்களை கவர்ந்திருக்கிறது. அதன் மூலம் கணவன் - மனைவிக்கிடையில் நிலவிய அன்பும், கடமை உணர்வும் எடுத்துக்காட்டாக சொல்லப்பட்டு வந்துள்ளது. சராவண (ஆவணி) மாதத்தின் கடைசி இரவும் பாத்திர (புரட்டாசி) மாதத்தின் முதல் நாளுமான தினம் மானஸா பூஜைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

வங்களா தேசத்தைச் சேர்ந்த த்விஜா பன்ஸிதாஸ் மைமென் ஸிங் என்பவர், இந்த பண்டிகை பற்றிப் பாடல்கள் இயற்றியிருக்கிறார். விவசாயிகள் விதை விதைக்கும் இந்த பருவத்தில் ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு வகீந்தர் - பேஹீலா ஜோடியின் காதல் அமரத்வத்தை வியந்து கொண்டாடுகின்றனர்.

துர்கா பூஜைக்கு வெகு நாட்கள் முன்பாகவே இந்த விழா கொண்டாடப்படுகிறது.ஹரித்துவாரிலிருந்து 3 கி.மீ தொலைவில் மானஸாதேவிக்கு புகழ் பெற்ற கோயில் உள்ளது. இக்கோயில் காஷ்யப் என்கிற பழங்கால துறவியால் நிறுவப்பட்டுள்ளது.

சு.இளம் கலைமாறன்