மடியின்மைவணக்கம் நலந்தானே!

மடியின்மை எனில் சோம்பல் இல்லாதிருத்தல் என்று பொருள். திருக்குறளில் வரும் அனைத்து அதிகாரங்களும் முக்கியமானதுதான். ஆனால், இந்த அதிகாரத்தை இளைஞர்கள் முக்கியமாக படித்துப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
இந்த மடியின்மைக்கும் ஆன்மிக வாழ்க்கைக்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. கீதையில் முக்குணங்களை கிருஷ்ணர் விளக்குகின்றார். அதாவது, சத்வ குணம், ராஜஸ குணம், தமோ குணம். இந்த மூன்று குணங்களும் நம்முடைய தினசரி வாழ்வில் நமக்குள் சர்வசாதாரணமாக வந்து போய் கொண்டிருக்கும்.

இதில் தமோ குணம் என்றொன்று இருக்கின்றதே அதற்குள் சோம்பல் எனும் குணமும் அடக்கம். ஸ்ரீராமகிருஷ்ணர் ஒரு கதை சொல்லுவார்.காட்டில் தனியே நடந்து கொண்டிருக்கும் ஒரு வழிப்போக்கனை மூன்று பேர் மடக்கி மரத்தில் கட்டி வைத்து விடுவார்கள். அந்த மூன்று பேர்களில் முதலாமவன், இவனிடமிருக்கும் பொருட்களை பறித்துக்கொண்டு இவனை கொன்று விடலாம் என்பான்.

இரண்டாவது நபர், இவனிடமிருந்து பொருளை பறித்துக்கொண்டு கட்டிப் போட்டுவிட்டு நாம் சென்று விடலாம் என்பான். மூன்றாமவன், அதெல்லாம் தேவையில்லை. இவனிடமிருந்து பொருளை மட்டும் எடுத்துக்கொண்டுவிட்டு கட்டை அவிழ்த்து விட்டு விடலாம். பாவம் அவன் பிழைத்துக் கொள்ளட்டும் என்றான்.

மூன்று பேர்களில் முதலாமவனாக வந்து கொன்று விடலாம் என்று சொன்னானே அவன்தான் தமோ குண அதிபதி. கட்டிப்போட்டு விட்டு அப்படியே சென்று விடலாம் என்றானே அவனே ராஜஸ குணத்தின் அதிபதி. மூன்றாவதாக தப்பிப் பிழைக்கட்டும் என்றானே அவனே சத்துவ குண அதிபதி. எனவே, தமோ குணம் எனும் சோம்பல் ஆன்மிக வாழ்க்கை மட்டுமல்ல லௌகீக வாழ்க்கையையும் கூண்டோடு அழித்துப் போடும்.  நாளை முதல் தியானம் செய்யலாம். பூஜை செய்யலாம்.

ஆழமும் தத்துவச் செறிவும் நிறைந்த புத்தகங்களை படிக்கலாம் என்று தள்ளிப் போட்டுக்கொண்டே போவோம். தள்ளிப்போடும் குணத்தினால் சோம்பலானது புத்தியில் கெட்டியாக பாறைபோன்று இறுகத் தொடங்கும். மனதினடியில் சோம்பல் ஆழச் சென்றால் உடனே, அது உடலையும் பாதிக்கும். ஏனெனில், உடலே மனம். சிறு தண்ணீர் குவளையைக் கூட எடுத்துக் குடிக்க முடியாது வரை சோம்பல் வேர் விட்டுப் பரவிவிடும். மனதின் ஆசைகளை நிறைவேற்றும் செயல்திறனானது சோம்பலால் மூடப்பட்டுவிடும்.

அதனால், அது தனக்கான நியாயங்களை கற்பிப்பதோடு மட்டுமல்லாமல் இன்னொருவரின் சாதனைகளை குறைத்து குற்றம் காணப் பழகிவிடும். இந்த குணத்தால் வீட்டிலிருந்து தொடங்கி வேலை செய்யும் இடம் வரை எல்லா இடங்களிலும் தோல்விதான்.

எனவே, தன்னை ஜெயிப்பவனுக்கு முதலில் வேண்டிய முதன்மையான குணம் மடியின்மையே. சோம்பலென்ன சுண்டினால் பறந்துவிடும் பூச்சியா? அதை வைராக்கியத்தால்தான் வெற்றி காண வேண்டும். அதற்கு முதலில் நாம் சோம்பலெனும் நோயால் சூழப்பட்டிருக்கின்றோம் என்பதை ஒப்புக்கொள்ளும் துணிவு வேண்டும்.    

கிருஷ்ணா

(பொறுப்பாசிரியர்)