காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள்-விபீஷணன்



“எனக்கு எந்த ஆபத்து வந்தாலும் என் மனது, தர்ம வடிவான பகவானிடமே எப்போதும் இருக்க வேண்டும். குரு உபதேசம் இல்லாமலேயே பிரம்மாஸ்திரத்தின் மந்திரமும் ரகசியமும் எனக்குத் தெரியவேண்டும். எந்த நிலையில் நான் இருந்தாலும் எனக்கு தர்ம புத்தியே உண்டாக வேண்டும். அந்தந்தத் தர்மங்களைக் குறைவில்லாமல் நடத்த வேண்டும். தர்மத்தை நாடிய மனம் உடையவர்களுக்கு, அகில உலகங்களிலும் கிடைக்காதது உண்டா? இதுதான் நான் வேண்டிய வரம்” என்பது விபீஷணன் வேண்டுகோள்.

“நீ எப்போதும் தர்மாத்மாவாகவே இருப்பாய். நீ கேட்டபடியே ஆகும். உனக்கு மரணம் கிடையாது” என்று வரம் கொடுத்தார் பிரம்மா.
ராவணன், கும்பகர்ணன், விபீஷணன் எனும் மூவரும் தவம் செய்தபோது, விபீஷணன் பிரம்மதேவரிடம் வேண்டிப் பெற்ற வரம் இது. வரம் வாங்கியிருக்கலாம். ஆனால் அதன்படிச் செயல்பட்டால் அல்லவா பெருமை! அதிலும் விபீஷணன் வெற்றி பெற்றான். நல்வழியிலேயே - தர்ம வழியிலேயே நடந்து வெற்றி பெற்றான்.

இவ்வாறு வெற்றி பெற்ற விபீஷணனை,
கும்பகர்ணனே பாராட்டினான். இதோ!
நீதியால் வந்ததொரு நெடும் தருமநெறி அல்லால்
சாதியால் வந்த சிறு நெறி அறியான் என் தம்பி
(கும்பகர்ணன்)

- என்று ராமரிடம் சொன்னான் கும்பகர்ணன். நீதியும் தரும நெறியும் தான், விபீஷணனின் வாழ்க்கை. இதை மனதில் பதிய வைத்துக்கொண்டு வாருங்கள்! விபீஷணனைப் பார்க்கலாம்.விஸ்ரவஸ் எனும் முனிவருக்கும் கேகசிக்கும் பிறந்த விபீஷணன், தவம்செய்து பிரம்மதேவரிடம் இருந்து வரம் பெற்றான். சைலூஷன் எனும் கந்தர்வனின் மகளான சரமை என்பவளை மணந்தான். இவர்களுக்குப் பிறந்த பெண் திரிசடை. அசோக வனத்தில் ராவணனால் சிறை வைக்கப்பட்ட சீதைக்கு, தைரியமும் ஆறுதலும் சொன்னவள்- விபீஷணன் மகளான இந்தத் திரிசடையே!

விபீஷணனை ஆஞ்சநேயர் வாயிலாகக்கம்பர் அறிமுகப்படுத்தியுள்ளார். சீதாதேவியைத்தேடி இலங்கைக்குள் புகுந்த ஆஞ்சநேயர், விபீஷணனைக் கண்டார். முகம் மலர்ந்தது. கறுநிறம் கொண்டு தருமம், விபீஷணன் உருவில் இலங்கையில் ஔிந்து வாழ்கிறது போலும். “இவன்(விபீஷணன்) குற்றம் இல்லாதவன்; நற்குணங்கள் கொண்டவன்” என நினைத்தார் ஆஞ்சநேயர்.

அடுத்தவரின் உள்ளத்தை ஊடுருவிப் பார்த்து உணரும் ஆஞ்சநேயர் மூலமாக, விபீஷணனை உறங்கி–்க் கொண்டிருந்த நிலையில், ‘தர்மத்தின் வடிவம்’ என அறிமுகப் படுத்திய கம்பர், அந்தத்தர்மம் விழித்துக்கொண்டு ராவண சபையில் ராவணனுக்கு உபதேசம் செய்த நிகழ்வைக் கூறுகிறார்.
ஆஞ்சநேயர் வந்து இலங்கையைக் கொளுத்தி விட்டுத் திரும்பிய பிறகு, ராவணன் சபையைக் கூட்டினான். அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள், கும்பகர்ணன், விபீஷணன், இந்திரஜித் எனப்பலரும் அடங்கிய அச்சபையில் ஒவ்வொருவராகப்பேச, கும்பகர்ணன் பேசி முடித்ததும் இந்திரஜித் எழுந்து பேசத் தொடங்கினான்.

அதுவரை பேசாமல் இருந்த விபீஷணன் எழுந்து பேச ஆரம்பித்தான்; ஆரம்பத்திலேயே, “ சிறுபிள்ளை நீ! அறிவில்லாமல் பேசாதே “ என இந்திரஜித்தை அடக்கி விட்டுப்பேசத் தொடங்கினான். அதுசரி! அவ்வளவு நேரம் விபீஷணன் பேசாதிருந்தது ஏன்? இப்போது பேசக்காரணம் என்ன?
இவ்வளவு நேரம் பேசியவர்களும் அறிவு, ஆற்றல், அனுபவம், வயது ஆகியவற்றில் பெரியவர்கள். அதனால் விபீஷணன் அமைதி காத்தான். இந்திரஜித் விபீஷணனை விட அனைத்திலும் சிறியவன். அதன் காரணமாகவே இப்போது விபீஷணன் எழுந்து பேசத்தொடங்கினான்.

“அண்ணா! எனக்குத் தந்தை, தாய், குரு, செல்வம் எனும் அனைத்துமே நீதான். இந்திரனை வென்று அரசாட்சி செய்யும் நீ, அந்தப் பெரும் பாக்கியத்தை இழக்கிறாயே என்ற வருத்தத்திலேயே பேசுகிறேன். கோபம் கொள்ளாதே! வேண்டுமானால், என் பேச்சைக்கேட்டு விட்டு அதன்பின் கோபித்துக்கொள்!

“ஒரு குரங்கு வந்து இந்த நாட்டைச் சுட்டுவிட்டது என்கிறாயே. குரங்கா சுட்டது? இந்நகரத்தையும் உன் பெரும் புகழையும் எரித்தது, உலகிற்கே அன்னையான சீதாதேவியின் கற்புத் தீயல்லவா சுட்டது!
கோநகர் முழுவதும் நினது கொற்றமும்
சானகி எனும் பெயர் உலகின் தம்மனை
ஆனவள் கற்பினால் வெந்ததல்லாது ஓர்
வானரம் சுட்டதென்று உணர்தல் மாட்சியோ?

(கம்ப ராமாயணம்)

“பெருந்தவம் செய்து பிரம்மனிடம் வரம் வாங்கிய காலத்தில், மனிதரை வெல்வதற்கு நீ வரம் கேட்கவில்லை. மனிதனான கார்த்த வீரியார்ஜுனன் உன்னைத் தோற்கடிக்க வில்லையா? கைலாய மலையை நீ தூக்கும்போது குரங்கினால் உனக்கு அழிவு வரும் என்று நந்திபகவான் கூறவில்லையா? வாலி உன்னைத் தோற்கடிக்கச் செய்து இருக்கிறான்.

“முன்பொரு சமயம் வேதவதீ என்பவளை நீ தீண்டச் சென்றாய். அப்போது அவள், ‘உனக்கு நோயாக நானே வருவேன்’ என்று சொல்லிவிட்டுத் தீயில் குதித்தாளே. அதை மறந்து விட்டாயா? அவள் தான் இப்போது திருமகளாக - சீதையாக வந்திருக்கிறாள்.

தீயிடைக் குளித்த அத்தெய்வக் கற்பினாள்
வாயிடை மொழிந்த மொழி மறுக்க வல்லமோ?
நோயுனக்கு நானென நுவன்றுளாள் அவள்
ஆயவள் சீதை பண்டு அமுதின் தோன்றினாள்
(கம்ப ராமாயணம்)90

“சத்தியத்திற்குக் கட்டுப்பட்ட தசரதரின் பிள்ளைகள் இன்று உனக்குப் பகைவர்களாகி உள்ளனர். அவர்கள் விசுவாமித்திரரிடம் சகல கலைகளையும் கற்றவர்கள். விஷ்ணுவின் வில், திரிபுரம் எரித்த சிவபெருமானின் அம்பு ஆகியவற்றை, அகத்தியரிடம் இருந்து பெற்றவர்கள்; கர-தூஷணன் முதலானவர்களைக் கொன்றவர்கள். உன் செயலால் தங்களுக்கு ஆபத்து வரும் என்பதை உணர்ந்தும் உன்னிடமுள்ள பயத்தால், அரக்கர்கள் பேசாமல் இருக்கிறார்கள். நம் அடிமைகளான தேவர்களுக்கு, நம்மிடம் பயம் போய் விட்டது. சீதையை விட்டு விட்டால், நாம் நீடூழி காலம் சுகமாக வாழலாம்” என நீளநெடுக அறிவுரையும் கூறி முடித்தான் விபீஷணன்.

அதைக்கேட்ட ராவணன் கைகளைத் தட்டிச்சிரித்து, பல விதங்களிலும் விபீஷணனை அவமானப் படுத்தினான். கூடவே, “என் எதிரில் நின்றால் உன்னைக்கொன்று விடுவேன்” என்று விரட்டவும் செய்தான்.வேறு வழியற்ற நிலையில் விபீஷணன் அங்கிருந்து புறப்பட்டான். அவனுடன் கூடவே நான்கு பேர்கள் வெளியேறினார்கள். அதாவது விபீஷணன் வெளியேறியதும் இலங்கையில் இருந்து அறம்-பொருள்-இன்பம்-வீடு என்னும் நான்கும் வெளியே போய் விட்டன என்பது குறிப்பு.

வெளியேறும் அந்த நிலையிலும் விபீஷணன் அறவுரை கூறுகிறான் அண்ணனுக்கு, “அண்ணா! பிள்ளைகள், குருநாதர்கள், ஈடு இணை சொல்ல முடியாத உன் உறவினர்கள், நண்பர்கள், உன்னைச் சார்ந்தவர்கள் என அனைவரையும் ராமனது அம்பு சித்திரவதை செய்து அழிக்கும். அதன் பிறகு தான் உன் எண்ணத்தை விடுவாய் போலும்” என்று சொல்லி வெளியேறினான்.

தீயதை விட்டு வெளியேறிய விபீஷணன், நல்லதை நாடி, ராமரை நாடிப்போனான். விபீஷணனின் வருகையைக் கண்ட ராமர், தன்னைச்சுற்றி இருந்தவர்களிடம் ஆலோசனை நடத்தி, விபீஷணனை ஏற்றுக்கொண்டார்.

லட்சுமணனை அழைத்து, விபீஷணனுக்கு மகுடம் சூட்டச் சொன்னார்.விபீஷணன் கண்ட ராம தரிசனத்தை அப்படியே கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்துகிறார் கம்பர். மார்க்கடம் சூழ்ந்த வைப்பின் இளையவன் மருங்கு காப்பநாற்கடல் உடுத்த பாரின் நாயகன் புதல்வன் நாமப்
பாற்கடல் சுற்ற விற்கை வடவரைப் பாங்கு நிற்பக் கார்க்கடல் கமலம் பூத்தது எனப் பொலிவானைக் கண்டான்(கம்ப ராமாயணம்)
குரங்குகள் சுற்றி இருக்கின்றன. லட்சுமணன் அருகே காவலாக நிற்கின்றான். அவர்கள் நடுவே ராமர் இருப்பது, பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமன் போல இருந்ததாம்.

இக்காட்சியைக் கண்டதும், “பிறவிப் பிணி தீர்ந்தது” என்றபடியே, தலைக்குமேல் கைகளைக் குவித்தபடி, கல்லும் புல்லும் உருகும்படியாக, ராமர் திருவடிகளில் விழுந்து வணங்கினான் விபீஷணன். அவனைத் தன் கருணைப் பார்வையாலேயே தழுவினார் ராமர். அது மட்டுமல்ல, ‘தாழ்கடல் இலங்கைச்செல்வம் நின்னதே தந்தேன்’ என்றான். ‘இலங்கை அரசைத் தந்தேன் உனக்கு’ என்ற ராமர். லட்சுமணனை அழைத்து, ‘இந்த விபீஷணனை இலங்கைக்கு அதிபதியாக உன் கையால் முடிசூட்டு’ என்றார்.

அதைக்கேட்ட விபீஷணன், “தெய்வமே! ராமா! அழியாத செல்வத்தை எனக்கு அளிக்க விரும்பினால், தேவியைக் களவாடிக் கொண்டுபோன ராவணனின் தம்பி எனும் பாவம் தீர, பரதனுக்கு அளித்த மகுடத்தை எனக்கு அளி!” என்று வேண்டினான்.

விளைவினை அறியும் மேன்மை வீடணன் என்றும் வீயா
அளவறு பெருமைச்செல்வம் அளித்தனை யாயின் ஐய!
களவியல் அரக்கன் பின்னே தோன்றிய கடமை தீர
இளையவற் கவித்த மோலி என்னையும் கவித்தி என்றான்
(கம்ப ராமாயணம்)

பரதனுக்கு சூட்டிய மகுடம் தனக்கும் வேண்டும் என்கிறான் விபீஷணன். பரதனுக்கு சூட்டியது ‘பாதுகா பட்டாபிஷேகம்’ அல்லவா? ராமர் தன் பாதுகைகளைத் தர, அவற்றைத் தன் தலைமீது சுமந்தபடித் திரும்பினானே பரதன். விபீஷணன் கேட்பதும் இதைத்தான். அதாவது, ராமருடைய திருவடிகளில் பக்தியை - திருவடி தீட்சையைத் தான் விரும்பினான் விபீஷணன்.

ராமரோ, விபீஷணன் கேட்டதற்கு மேலாகவே அளித்து விட்டார்.
அதை ராமர் வாயிலாகவே வெளியிடுகிறது கம்ப ராமாயணம்.
குகனொடும் ஐவரானோம் முன்பு பின் குன்று சூழ்வான்
மகனொடும் அறுவரானோம் எம்முழை அன்பின் வந்த
அகனமர் காதல் ஐய! நின்னொடும் எழுவரானோம்
புகலரும் கானம் தந்து புதல்வரால் பொலிந்தான் உந்தை
(கம்ப ராமாயணம்)

“விபீஷணா! தசரதர் பிள்ளைகளாக நாங்கள் நால்வர் தான் இருந்தோம். அது குகனையும் சேர்த்து ஐவராக ஆனது. அதன் பின் சுக்ரீவனும் எங்கள் சகோதரனாக ஆனான். சகோதரர்கள் ஆறு பேர்களாக ஆனோம். இப்போது மிகுந்த அன்போடு எங்களைத் தேடி வந்த தூய உள்ளம் கொண்ட விபீஷணா! உன்னையும் சேர்த்து இப்போது, தசரதருக்கு ஏழு பிள்ளைகள் என ஆகி விட்டது” என்றார் ராமர்.

விபீஷணனைத் தன் சகோதரனாக ஏற்றுக்கொண்ட ராமர், விபீஷணனைத் தசரதரின் பிள்ளையாகவும் பாவித்து உயர்த்தியிருப்பது, ராமருடைய உயர்ந்த உள்ளத்துடன் விபீஷணனின் தூய்மையான உள்ளத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறது.

இதைவிட ஓர் அபூர்வமான தகவல். இது விபீஷணனின் உள்ளத்தை மேலும் தெளிவாகக்காட்டும். விபீஷணன் சரணாகதி அடைந்த அன்றிரவு. தனித்திருந்த ராமரிடம் விபீஷணன் பேசத் தொடங்கினான். அப்போது, இலங்கைவந்த ஆஞ்சநேயர் செய்த செயல்களையெல்லாம் விரிவாகக் கூறினான் விபீஷணன்.

ஆஞ்சநேயர் இலங்கையிலிருந்து மீண்டதும் சீதை தந்த சூடாமணியை ராமரிடம் தந்து, சீதை நலங்களைத் தெரிவித்தாரே தவிர, இலங்கையில் தான் செய்த வீர-தீரச் செயல்கள் எதைப் பற்றியும் விவரிக்கவில்லை. அடக்கத்துடன் அமைதி காத்து விட்டார்.ஆனால் ஆஞ்சநேயரின் அருஞ்செயல்களை விபீஷணன் ராமரிடம் விவரித்தான்.

“இலங்கை வேந்தனான ராவணனின் மகனான அட்ச குமாரனைத் தரையோடு தரையாகத் தேய்த்தான் அனுமன். அந்தக்குழம்பு இலங்கைத்தெருவில், இன்னும் உலராமல் இருக்கிறது. பஞ்ச சேனாதிபதிகள் எனும் மாவீரர்கள் ஐந்து பேர்களும் தங்கள் சேனையுடன், யானையின் காலடியில் அகப்பட்ட கறையான் புற்றைப்போல நொறுங்கிப் போனார்கள்.

“கிங்கரர் எனும் பெயர் கொண்ட எண்பதினாயிரம் அரக்கர்கள், திரிபுரத்தில் இருந்த அரக்கர் சிவன் எதிரில் அழிந்ததைப் போல, ஒருவர் கூட மீதியில்லாமல் அழிந்தார்கள். அரக்க சேனாபதியான ஜம்புமாலி, தலையை இழந்தான். இலங்கையில் தீ வைத்த அனுமான், ஏராளமான அரக்கர்களைக் கொன்று அவர்களின் ரத்த வெள்ளத்தாலேயே இலங்கையில் பரவிய தீயை அணைத்தான்.

“என்ன சொல்ல? தீப்பிடித்ததன் காரணமாக, அன்று அணிந்திருந்த ஆடை ஆபரணங்களுடன் புஷ்பக விமானத்தில் ஏறி, இறங்க முடியாமல் ஆகாயத்திலேயே ஏழுநாட்கள் இருந்தான் என்றால், அனுமனின் வீரத்தை என்னசொல்ல? அனுமனால் அழிக்கப்பட்ட அந்த இலங்கையைப் பிரம்ம தேவர் தானே முன்னின்று மறுபடியும் படைத்தார்”.

விபீஷணன் இவ்வளவு நேரம் சொன்னதில், ஆஞ்சநேயருடைய அசாதாரணமான நிகழ்வுகள் பதிவாகி இருக்கின்றன. ஆனால் இனிமேல் பேசுவதுதான் தங்கக்குடத்திற்குச்சந்தனப் பொட்டு வைத்து போன்று அமைந்துள்ளது.விபீஷணன் தொடர்ந்து சொல்லத் தொடங்கினானா; “ராமா! மிகப்பெரும் வீரர்களான கர- தூஷணர்கள் கொல்லப்பட்டதையும் வாலி அழிந்ததையும் கேள்விப்பட்டு, நான் இங்கு வரவில்லை; ஆஞ்சநேயர் இலங்கையில் புகுந்து அரக்கர்களை அழித்து, ஊரிலும் தீ வைத்து அழித்ததைப் பார்த்தேன்; இப்படிப்பட்ட மாபெரும் வீரனான அனுமனை அடிமையாகக்கொண்ட நீ,புருஷோத்தமனாகத்தான் இருக்க வேண்டும் என்பதை அறிந்தே, நான் உன்னை அடைந்தேன். அனுமன் இலங்கைக்கு வராவிட்டால், நீ எனக்குக் கிடைத்திருக்க மாட்டாய்” என்று கூறி முடித்தான் விபீஷணன்.

ராமருடைய ஆற்றலை - வீரத்தை உணர்ந்து கொண்டதால், விபீஷணன் ராமரைத்தேடி வரவில்லை; வேறு எதையும் விரும்பியும் ராமரைத்தேடி வரவில்லை; ராமர் பரம் பொருள் என்பதை ஆஞ்சநேயர் செயல்களின் மூலம் உணர்ந்தே, விபீஷணன் ராமரைத்தேடி வந்திருக்கிறான்; சரணாகதி அடையவே வந்திருக்கிறான்.

இத்தகவல்தான், ‘பரதனுக்குச் செய்யப்பட்ட அந்தப் பாதுகா பட்டாபிஷேகத்தை - திருவடி தீட்சையை விரும்பினான்’ எனும் ‘இளையவர்க்கவித்த மோலி என்னையும் கவித்தி என–்றான்’எனும் வார்த்தைகளின் மூலம் வெளிப்பட்டுள்ளது.

(தொடரும்)

பி.என். பரசுராமன்