திருமாலை மாற்றுப் பதிகம்



கந்தவேளை எந்த வேளையும் எண்ணி வணங்கும் உத்தமரான அருணகிரிப் பெருமான், கயிலைமலையில், கோயில் கொண்ட மயில் வாகனனை, பின்வருமாறு போற்றுகிறார். ‘‘புமியதனிற் ......ப்ரபுவான புகலியில்வித் ...... தகர்போல அமிர்தகவித் ...... தொடைபாட அடிமைதனக் ...... கருள்வாயே’’ அதாவது, ‘‘இந்தப் பூமண்டலத்தின் தனிப் பெரும் தலைவரும், சீர்காழிப்பதியில் அவதரித்தவருமான, திருஞான சம்பந்த மூர்த்தியைப்போல, நான் கவி பாடுவதற்கு எனக்கு வல்லமை தர வேண்டும்’’ என்று வடிவேலனை வேண்டுகிறார்.

உண்மையில் அருணகிரிநாதரைப்போல சந்தம் வைத்து தமிழில் சிங்கார இசை பாடியவர் யாருமே இல்லை என்றே சொல்லலாம். ஆனால், அப்படிப்பட்ட புகழுக்குரியவரான அருணகிரியார், தனக்கு திருஞானசம்பந்தரைப்போல கவி பாடும் வல்லமையை தரவேண்டும் என்று முருகனை இரைஞ்சுவது வியப்பாக இருக்கிறது இல்லையா?

ஆதிசங்கரர்கூட திருஞானசம்பந்தரின் கவிதையை, கவித்திறமையை மெச்சுகிறார். இதற்கு ‘‘திரவிட சிசு ஆஸ்வாத்ய தவ யது’’என்ற அவரது, சவுந்தர்ய லஹரியின் வரிகளே ஒரு எடுத்துக்காட்டு. ஆதி சக்தியின் அருளால் ஒரு தமிழகத்து குழந்தை, பல அறிஞர் பெருமக்கள் வியக்கும் வண்ணம் கவி பாடியது என்று அந்த வரிக்கு பொருள். ஆக மொத்தத்தில் வடமொழிக் கவிகளும் சரி, தமிழ்மொழிக் கவிகளும் சரி, சம்பந்தர் கவிதையை போட்டி போட்டுக் கொண்டு புகழ்ந்து தள்ளுகிறார்கள்.  இதற்குக் காரணம் என்னவாக இருக்கும்?

சிவ ஞானத்தையும், பாங்கினில் ஓங்கிய அற ஞானத்தையும், கலை ஞானத்தையும், மெய் ஞானத்தையும் தனது பாலோடு குழைத்து சம்பந்தருக்கு அம்பிகை ஊட்டியதாக சேக்கிழார் சொல்லுவார். (சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவ ஞானம்.....) பாலோடு ஞானத்தையும் சேர்த்து ஊட்டிய அம்பிகையின் திருவருளால் வந்த ஏற்றமா? இல்லை, தமிழ் கடவுளே வந்து தமிழ் பாடியதால் வந்த மகத்துவமா? என்பது விளங்காத புதிர்தான். (அருணகிரிநாதர் போன்ற தேர்ந்த முருக பக்தர்கள், சம்பந்தரை முருகனின் அவதாரமாகவே காண்கிறார்கள். இதற்கு பல சாட்சியங்களும் உண்டு) இப்படி வையமே போற்றும் அளவுக்கு, கவி உலகில் சம்பந்தர் படைத்த புதுமைகளில் ஒன்றை இந்தக் கட்டுரையில் (முடிந்தவரையில் சுருக்கமாக) காண்போம்.

ஒரு அழகான முத்து மாலை. அதை மிகவும் நேர்த்தியாகவும் திறமையாகவும் ஒரு பொற்கொல்லர் செய்து கொண்டிருக்கிறார். ஒவ்வொரு முத்தாக எடுக்கிறார். அதைத் தங்கக் கம்பியில் நுழைக்கிறார். அதை அழகாக கம்பியோடு கட்டுகிறார். இப்படிப் பல முத்துக்களை ஒன்றன் பின் ஒன்றாக அந்த பொற்கொல்லர் தங்கக் கம்பியில் கோர்க்கிரார். கோர்த்து முடித்தப் பின்னர், முதலில் கோர்த்த முத்தோடு கடைசியில் கோர்த்த முத்தை இணைத்து கட்டி விடுகிறார். அவர் அப்படி அந்த முத்து மாலையின் முதலையும் முடிவையும் சேர்த்துக் கட்டியவுடன், அந்த மாலையை நம் கைகளில் தருகிறார். தந்தவர், இதில் எது முதலில் கோர்க்கப்பட்ட முத்து என்று காட்டச் சொல்கிறார். நம்மால் காட்ட முடியுமா?

நிச்சயமாக வாய்ப்பே இல்லை. ஏனெனில், முழுவதும் ஒன்றேபோல் இருக்கும் முத்துக்களைக் கொண்டு தொடுத்த மாலையில், தனியாக எப்படி ஆதியையும் அந்தத்தையும் கண்டுபிடிப்பது? எந்தப் பக்கம் திருப்பிப் பார்த்தாலும் அந்த முத்து மாலை ஒரே மாதிரிதானே இருக்கும்? இடமிருந்து பார்த்தால் என்ன? வலமிருந்து பார்த்தால்தான் என்ன? ஒரு வித்தியாசமும் தெரியப்போவது இல்லை. அந்த மாலையை எப்படி மாற்றி மாற்றி
பார்த்தாலும் ஒரே மாதிரிதான் இருக்கும்.

சரி, இப்படி முத்துக்களை கோர்த்து ஒரு மாலையை செய்ய முடியும். வார்த்தைகளை கோர்த்து ஒரு பாமாலையை செய்ய
முடியுமா? என்று கேட்டால் முடியும் என்று செய்து காட்டியே விட்டார் சம்பந்தர்.‘‘யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா’’
(மாலை மாற்றுப் பதிகம் - 5)

இப்போது மேலிருக்கும் பாடலின் முதல் வரியை படியுங்கள். இது தமிழா என்று தோன்றும். அப்படி நினைப்பவர்களுக்கு சத்தியம் செய்து சொல்கிறேன். இது தமிழ்தான். இப்போது கடைசி வரியை வலதுகை பக்கத்தில் இருந்து இடது புறமாக படியுங்கள். ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா? முதல் வரியின் முதல் சொல் ‘‘யாகாலாமே’’ என்பது. கடைசி வரியின் கடைசி சொல் ‘‘மேலாகாயா’’ என்பது. உன்னித்து கவனித்தால், ‘‘மேலாகாயா’’ என்பது ‘‘யாகாலாமே’’ என்ற சொல்லின் கண்ணாடி பிரதி பிம்பம்தான் என்பது விளங்கும். இப்படி ஒருவார்த்தை மட்டும் இல்லை. ஒரு பதிகத்தையே பாடி இருக்கிறார் சம்பந்தர்.

இன்னொரு முறை அந்தப் பாடலின் முதல் வரியை படியுங்கள். இரண்டாவது வரிக்காக நீங்கள் கீழே பார்க்கவே வேண்டாம் முதல் வரியையே, வலமிருந்து இடமாக வாசித்தால் இரண்டாவது வரி வந்துவிடும் அவ்வளவு தான்.

ஆங்கிலத்தில் இந்தமாதிரி சொற்களை அமைத்து உபயோகிப்பதை ‘‘plaindrome’’ என்று சொல்லுவார்கள். இப்படி, முதல் வரியின் கண்ணாடி பிரதிபிம்பம் போல இரண்டாம் அடியை அமைக்கும் அதே வேளையில், அழகிய ஆழ்ந்த பொருளை இரண்டு வரிகளும் சற்றும் வஞ்சனையில்லாமல் தருவதுபோல பதிகத்தை அமைத்திருக்கிறார், சம்பந்தர். அந்தப் பதிகத்திற்கு ‘‘திருமாலை மாற்றுப் பதிகம்’’ என்று பெயர். அதாவது ஒரு முத்துமாலையை எந்தப் பக்கம் மாற்றி மாற்றிப் பார்த்தாலும் ஒரேமாதிரி இருப்பதுபோல பதிகத்தை எந்தப் பக்கமாக மாற்றி மாற்றிப் படித்தாலும் ஒரே மாதிரி இருக்கும்.
இது, மூன்றாம் திருமுறையில் 117வது பதிகமாக அமைந்த அற்புதப் பதிகம். பொருள் நிறைந்த பெரும் பதிகம். அதன் பதினோரு பாடல்களையும் பொருளோடு வாசிக்க தமிழை நேசிக்கும் நமது உள்ளம் ஏங்குகிறது இல்லையா? ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற முதுமொழிக்கு ஏற்ப மேலே கண்ட பாடலின் பொருளை (மட்டும்) காண்போமா?

யாகாலா - இந்த உலகம் இயங்க முக்கியக் காரணம் காலம். அந்தக் காலத்தின் வடிவினனாக இருப்பவனே! என்கிறார் சம்பந்தர். சம்பந்தரின் இந்த வார்த்தையை கேட்டதும் திருவாசகத்தை ஓதி உணர்ந்த உத்தமர்களின் உள்ளத்தில் ‘‘காலமே உன்னை என்று கொல் காண்பதே’’என்ற மாணிக்கவாசகம்தான் மாணிக்க ஒளி வீசும்.

ஒரு ஆமை, எப்படி தன்னை ஓட்டுக்குள் இழுத்துக் கொள்ளுமோ, அப்படி உலகை தன்னுள் இருந்தே தோற்றுவித்து, தன்னுள்ளேயே ஒடுக்கிக் கொள்ளும் இறைவனின் இயல்பை, கால சக்தியை நாராயண பட்டத்திரி ‘‘பதான்யாத்மா கால சக்த்யா’’ என்று சொல்கிறார். இறைவனை காலமாக காண்பதில் அல்லது காலத்தை இறைவனின் சக்தியாக காண்பதில் சைவத்துக்கும் வைஷ்ணவத்துக்கும் வேறுபாடே இல்லை என்பது இதில் இருந்து விளங்குகிறது.

மேயா = எவற்றின் உள்ளும் எள்ளில் எண்ணெய்போல மறைந்து இருப்பவனே! ‘‘விரகில் தீயினன் பாலில் படு நெய் போல்’’ என்று அப்பர் சுவாமிகள் ஒரு வரியில் சொன்னதை சம்பந்தர் ஒரே வார்த்தையில் சொல்லி விட்டார்! காழீ =. சீர்காழியில் கோயில் கொண்டவனே! ஒரு கன்று தாய் பசுவிடம் நாடுவது அதன் மடியைத் தானே! அது போல தனக்கு பசி என்றபோது ஓடி வந்த சீர்காழி தோணியப்பனை, தோடுடைய செவியனை மீண்டும் சம்பந்தரின் மனம் நாடுகிறது போலும்.

யாமேதாவி = எவரைக் காட்டிலும் அறிவில் அதாவது மெய் ஞானத்தில் உயர்ந்தவனே என்று பொருள். ஈசனே ஞான வடிவினன் என்பதால், அவனைப்பற்றி அவன் மட்டுமே முழுவதுமாக அறிவான் என்பது மறைத்திருக்கும் பொருள். தன் பெருமையைதானே அறிந்திருந்த போதிலும், அவனிடம் எளிமைக்கு பஞ்சமில்லை.

சாக்கிய நாயனார் தந்த கல்லடியையும், விஜயனின் வில்லடியையும், சுந்தரரின் ‘‘பித்தா! பேயா!’’ என்ற சொல்லடியையும், மதுரையில் பாண்டியன் தந்த பிரம்படியையும் விருது வாங்குவதுபோல் அல்லவா வாங்கிக் கொண்டார்! மொத்தத்தில் ஞானமே வடிவானவன், ஞானமே வடிவான தன்னை முழுவதுமாக அறிந்தவன், ஆனபோதும் அடியார்க்கு என்றும் எளியவன். இந்த மூன்று பொருளையும் ஒரே சொல்லில் அடக்கி விட்டார் சம்பந்தர்.

தாயாவீ = உலகிற்கே தாயானவனே - சீர்காழியில் இருந்துகொண்டு திருச்சியில் கோவில் கொண்ட தாயுமானவனை அழைக்கிறாரோ என்று தோன்றுகிறது இல்லையா? வீயாதா = என்றும் அழிவு இல்லாதவனே என்று ஈசனை அழைக்கிறார். ஆதியும் அந்தமும் இல்லாமல் அருட்பெருஞ்ஜோதியாக நின்ற அண்ணாமலை அப்பனின் நினைவு சம்பந்தரின் மனதில் எட்டிப் பார்த்து விட்டது போலும்.
வீ = கின்னரம் என்ற ஒரு பறவை வகைதாமே = அருகில் வந்து மயங்கி விழும்படி
யாழீ = யாழை இசைப்பவனே!

ஈசன் யாழ் இசைப்பாரா? என்று ஆச்சரியப் படுபவர்களுக்கு ஒரு ஆச்சரியமான கதை காத்திருக்கிறது. சுகப்பிரம்ம மகரிஷி, தும்புரு முனிவர், நாரத முனிவர் போன்ற இசை கலையில் தேர்ச்சி உடைய முனிவர்களுக்கு, ஒருமுறை ஒரு அரிய ஆசை வந்தது. வீணை முதலிய இசைக் கருவிகளில் சாம வேதத்தினை இசைத்துப் பார்க்க வேண்டுமென்பதுதான் அந்த ஆசை.

ஆசை மட்டும் இருந்ததே ஒழிய அந்த ஆசையை நிறைவேற்றும் வழியை அவர்களால் கண்டறிய முடியவில்லை. அதனால் அவர்கள் தவித்துப் போனார்கள். திக்கற்றவனுக்கு தெய்வம் தானே துணை?. இந்த மூன்று முனிவர்களும் அருள் புரியுமாறு வேண்டி ஈசனை சரண் புகுந்தார்கள். ஈசன் அவர்களுக்காக மனமிரங்கி, இசைக் கலையை முழுவதும் கற்றுத் தந்தார்.

வெறும் தட்சிணாமூர்த்தியாக இருந்தபோது பரமன் மவுன உபதேசம் செய்து நமது செவிகளை ஏமாற்றி விட்டார். ஆனால், இம்முறை அந்த இறைவன் நமது செவிகளை ஏமாற்றவில்லை. ஆம். வீணை அமைக்கும் முறை, வீணை அமைக்கப்  பயன்படுத்த வேண்டிய மரத்தின் லட்சணம் என்று திருவாய் மலர்ந்து உபதேசம் செய்து அருளினார்.

தும்புரு, நாரதர், சுகர் ஆகிய மூவரின் கண்ணும் காதும் பிறந்த பயனை அடைந்து விட்டது என்பதை சொல்லவும் வேண்டுமோ? இவ்வளவு அருளிய பின்பும் ஈசனுக்கு மனம் நிறையவில்லையாம். ஆகவே, தானே ஒரு வீணையை எடுத்து வாசித்தும் காட்டினாராம். வீணையில் அந்த ஈஸ்வரன் சாமவேதத்தை இசைக்க ஆரம்பித்ததும் அண்ட சராசரமும் மயங்கிவிட்டது.

சுகரும் தும்புருவும் நாரதரும்தான். இப்படி மூன்று முனிவர்களுக்காக அருள ஈசன் எடுத்த கோலம், ‘‘வீணா தட்சிணாமூர்த்தி’’ கோலம் என்று விமர்சையாக சைவர்களால் போற்றப்படுகிறது. இந்தக் கோலம் ஈசனின் அறுபத்து நான்கு ரூபங்களில் முப்பத்து நான்காவது ரூபம் என்பதும் குறிப்பிடத்தக்கது.சம்பந்தர் யாழீ என்று ஒற்றை வார்த்தையில் சொன்னதற்கு பின் எவ்வளவு அர்த்தங்கள் இருக்கிறது பாருங்கள்!

யாம் = நான் அல்லது நாங்கள்
மேல் = மேற்கொண்டு
ஆகு = ஆணவத்திற்கு
ஆயா = ஆளாகாத வாறு
கா = எங்களை காப்பாற்று.

அன்று நான்முகன் ஆணவம் கொண்டபோது அவனது ஆணவத்திற்கு காரணமான ஐந்தாவது தலையை கொய்து அவனுக்கு அருளினான் அல்லவா அந்த ஈசன். அருளிய கையோடு கண்டியூரில் பிரம்மசிர கண்டீஸ்வரர் என்ற நாமத்தோடு, இன்றும் நமது ஆணவத்தை கண்டிப்பவனாக விளங்கும் வல்லமையை சொல்கிறாரோ? என்று தோன்றுகிறது இல்லையா? இருக்காமல் போகுமா? ‘‘கண்டியூர் கண்டியூர் என்பீர் ஆகில் கடுக நம் வல்வினைகள் கழற்றலாமே’’ என்று அப்பர் சுவாமிகள் பாடிப் பரவும் ஈசன் இல்லையா அவன்?.அவனிடம் பிரம்மனின் ஆணவத்தை களைந்ததுபோல தன் ஆணவத்தையும் களையும்படி வேண்டுகிறார் சம்பந்தர்.

அதாவது, ‘‘கால வடிவினனே! எங்கும் நீக்கம் அற நிறைந்தவனே! சீர்காழியில் இருப்பவனே! ஞானமே வடிவானவனே! அந்த ஞானத்தை முற்றும் உணர்ந்தவனே! அனைத்து உயிர்க்கும் தாயானவனே! பறவை உரு கொண்ட சுகப் பிரம்ம மகரிஷி மகிழும் வண்ணம் வீணை வாசித்தவனே! எனது ஆணவத்தை நீக்கி என்னை ஆட்கொள்வாய்’’ என்பது சுருக்கமான பொருள். இந்த மாலைமாற்றுப் பதிகம் ஒரு எடுத்துக்காட்டு தான். இதுபோல் இன்னும் பல அரிய பதிகங்களை சம்பந்தர் நமக்குத் தந்திருக்கிறார்.

திரு ஏகபாதம், திரு கோமூத்திரி, திரு யாழ்முறி, திருவெழுகூற்றிருக்கை, திரு மொழிமாற்று, திரு இயமகம், திரு தாளச்சதி என்று ஒவ்வொரு பதிகமுமே நம்மை மூக்கின்மேல் விரல் வைக்கச் செய்கிறது. அதன் பொருளையும் பெருமையையும், ஆயிரம் நா படைத்த ஆதிசேஷனாலும் சொல்ல முடியாது என்னும்போது நாம் எல்லாம் எம்மாத்திரம்? அதுமட்டுமில்லை, சம்பந்தர் பாடிய பதினாராயிரம் பதிகங்களில் கிடைத்த முன்னூற்று சொச்சப் பதிகங்களே இப்படி நம்மை வியக்க வைக்கும்போது மற்ற பதிகங்களை (நமக்கு கிடைக்காமல் செல்லரித்து விட்ட பதிகங்கள்) நினைத்து கூட பார்க்க முடியவில்லை!

ஜி.மகேஷ்