சுந்தரானந்தர் குரு பூஜைஞானிகளுக்குள் பேசிக் கொள்வதற்கு என்ன இருக்கிறதென்றும், சந்திக்க வேண்டிய அவசியமும் என்ன இருக்கிறது என கேட்கலாம். ஆனாலும், ஒரு ஞானியால்தான் இன்னொரு ஞானியை தெரிந்து கொள்ள முடியும். அவர் எப்பேற்பட்டவர் தெரியுமா... என்று அவரின் ஞானத்தின் உயர் நிலையை எடுத்துச் சொல்ல முடியும். எப்போதுமே சிவ சொரூபத்திலேயே லயித்துக் கிடப்பவரல்லவா என்று அவரின் பெருமைகளை கூறுவது நம் மதத்தின் மரபு. திருஞானசம்பந்தர் அப்பரே.... என அழைத்ததும் இப்படித்தான். அடியார்களை அடியார்கள் சந்திப்பது என்பது மிகப் பெரிய விஷயம்.

சதுரகிரியைச் சேர்ந்த சுந்தரானந்தர், யூகி முனிவர், கொங்கணர் போன்ற சில முனிவர்கள் எதிர்கொண்டு வணங்கினர். இந்த நிகழ்வை மனக் கண்ணில் நிறுத்தும்போதே இந்த விஷயத்தின் பிரமிப்பை உணரலாம். ஏனெனில் மேலே சொன்ன முனிவர்கள் தங்களளவில் மாபெரும் நிலையை அடைந்தவர்கள். மாபெரும் யோகீஸ்வரர்கள். ஆனாலும். குரு ரத்னமாக ஒளிரும் அகத்தியரை கண்டவுடன் தங்களை மறந்தனர். சுந்தரானந்தரின் ஆசிரமத்தில் அகத்தியரை வரவேற்று புனித தீர்த்தங்கள் கொடுத்து உயர்ந்த ஆசனத்தில் அமர்வித்தனர்.

அகத்தியர் அவ்விடத்தில் இருந்தோர்களை நோக்கி சிவபூசை செய்வதற்காக தம்மாலொரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்ய வேண்டுமென கூறினார். ஆகம வேதபுராண சாஸ்திர விதிப்படி பூஜிக்க வேண்டுமெனவும் தெரிவித்தார். கயிலையில் ஈசனுக்கும், பார்வதிக்கும் திருமணம் நடைபெறுவதாகவும் வடதிசை தாழ்ந்தும், தென் திசை உயர்ந்தும் இருப்பதால் அதை சமப்படுத்தவே இங்கு வந்ததாகவும் தெரிவித்தார். எல்லோரும் அகத்தியரை வணங்கி தாங்களின் வரவே எங்களின் பெரும்பேறுஎன்றனர்.

ஒரு நன்னாளில் அகத்தியர் சுந்தரானந்தரின் ஆசிரமத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தார். அனுதினமும் பூஜித்தார். எல்லோரும் அந்த சிவலிங்கத்தை வணங்கினர். அகத்தியரை சகல சித்தர்களும் சூழ்ந்திருக்க அந்த குறுமுனி தமக்குள் எங்கேயோ வெகு ஆழத்தில் ஆழ்ந்து கிடந்தார். சிவசக்தி ஐக்கிய சொரூபமும், சிவபார்வதி திருமணக் காட்சியும் அவருக்குள் தோன்றின.

கயிலைவாசா... பரமேஸ்வரா...கருணைக்கடலே என அவர் உருகித்தவித்தார். மெல்ல சுற்றியிருந்தோர் எல்லோருக்குள்ளும் ஒரு பெருஞ்சக்தி ஊடறுத்து பெருகியது. எல்லோரும் ஆனந்த நிலையை அடைந்தனர்.இதோ இந்த சதுரகிரி சித்தர்களுக்கும் சேர்த்து தாங்களின் திருமணக் கோலத்தை காட்டுவீராக என்று மெல்லிய பிரார்த்தனையாக அகத்தியர் வேண்டிக் கொள்ள மாபெரும் ஒளி வெள்ளம் சுந்தரானந்தர் ஆசிரமத்தை சூழ்ந்து கொண்டது. இதுவரை சித்தர்கள் தாங்கள் இருந்த ஆன்மிகத்தளத்தை தாண்டி வேறொரு உயர்ந்த நிலையை அங்கு அடைந்தனர்.

எல்லோருக்குள் எப்போதும் எல்லாவற்றையும் இயக்கிக் கொண்டிருக்கும் சிவசக்தி தம்பதியர் சுந்தரானந்தர் ஆசிரமத்தில் சட்டென்று தோன்றினர். ஈசனும், பார்வதியும் இருக்குமிடத்தில் தேவர்களும், பூதகணங்களும் உடனே வந்தனர். ஈசன் ரிஷபாரூடராக காட்சி தந்தார். சதுரகிரி எனும் ஸ்தூலமான தலம் மறைந்து கயிலையாகவே மாறியது. எல்லா சித்தர்களும், முனிவர்களும் நமஸ்கரித்தனர். மெல்ல அந்த திவ்ய காட்சி மறைந்து அந்த லிங்கத்தினுள் சென்று மறைந்தது. சித்தர்கள் ஆனந்த பரவசத்திலேயே திளைத்திருந்தனர்.

அகத்தியர் சித்தர்களோடு நிறைய உரையாடினார். காயகற்ப மூலிகைகள்பற்றி நிறைய விஷயங்கள் பகிர்ந்து கொண்டனர். சதுரகிரியில் அகத்தியர் லிங்கத்திற்கு பூஜை செய்யும் முறையை தவறாது வந்து தரிசித்தனர். ஒருநாள் சுந்தரானந்தர் அகத்தியரைப் பார்த்து ‘‘தாங்களிடம் ஒரு கோரிக்கை உண்டு. கேட்கலாமா’’ என்றார்.‘‘தாராளமாகக் கேளுங்கள். சுந்தரானந்தரே’’ என கருணையோடு சொன்னார்.

‘‘தாங்கள் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜிக்கும் பேறுவை கண்ணுறும் பாக்கியம் பெற்றேன். அடியேனும் லிங்கத்தை பூஜிக்கும் பெரும்பேறை அருள வேண்டும்படி கேட்டுக் கொள்கிறேன்’’ என்று மிகப் பணிவாகக் கேட்டார்.அகத்தியரும் சரியான சமயத்தில் கேட்டிருக்கிறார் என கண்களை மூடினார். ஈசன் இஷ்டம் எதுவோ அப்படியே ஆகட்டும் என முகம் மலர்ந்து சுந்தரானந்தரை பார்த்தார். அவர் பார்த்த அந்த பார்வையில் சுந்தரானந்தரின் முகம் முன்னிலும் ஒளிர்ந்தது. சுந்தரானந்தரின் கரத்தை பற்றி ஆசிரமத்திற்குள் அழைத்துச் சென்றார். லிங்க மூர்த்தத்தின் முன்பு அகத்தியர் பேசத் தொடங்கினார்.

 அகத்தியரும் அருளோடு அவரை ஏறிட்டார். குடிலுக்குள் அழைத்துச் சென்றார்.‘‘அகில உலகையும் அசைக்கும் ஈசனே என்னையும் இயக்குகிறான். இப்போது உங்கள் மூலமாகவும் இந்த வினாவையும் கேட்கிறான். என்னையும் ஈசன் இனி தனியே தவம் செய்ய உந்துகிறான் என்றே நினைக்கிறேன். எனவே இந்த லிங்கத்தின் சொரூப லட்சணங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

எங்கும் நிரம்பியவரான ஈசன் இங்கு லிங்க மூர்த்தத்தில் எழுந்தருளியுள்ளார். எதுவொன்று காலதேச வர்த்தமானங்களுக்கு அப்பாற்பட்டு விளங்குகிறதோ அது இங்கு சூட்சுமமாக உறைந்திருக்கிறது. படைத்தல், காத்தல், மறைத்தல், அழித்தல், அருளல் என்று ஈசனுக்கு ஐந்து தொழில்கள் உள்ளன. இந்த லிங்க மூர்த்தியின் தத்துவமே இறைவன் அருவமாகவும், உருவமாகவும், அருவுருவமாகவும் விளங்குகிறார் என்பதை உணர்த்துகிறது. இந்த லிங்க மூர்த்தமும், சிவனும் வெவ்வேறல்ல.

எனவே நம்பெருமானாகிய இந்த சிவலிங்கத்திற்கு பூஜை செய்து ஆராதிப்பதே முக்கிய கடமையாகும். இதனை அரிய மந்திரங்களாகிய சிவசக்தியின் அட்சரப் பொருளை, அதாவது எல்லாவற்றிற்கும் மூலாதாரமான ஆணிவேர்ச் சொல்லாக விளங்கும் பீஜம் போன்ற மந்திரத்தை உள்ளத்தில் நினைத்து பூஜிக்க வேண்டும். நமசிவாய எனும் மந்திரம் சிவனின் பெருஞ்சக்தியை தனக்குள் கொண்டிருக்கும் மூலமான மந்திரமாகும். இறைவனும், அந்த நாமமும் வெவ்வேறல்ல என்பதை ஞானம் அடையும்போது ஒரு சாதகன் நிச்சயம் உணர்வான். மாமறைகள் அறிவிக்கும் மந்திரங்களை உச்சரித்து சிவனாரை பூஜியுங்கள். நிச்சயம் ஈசனின் காட்சி கிடைக்கும்’’ என்று கூறிவிட்டு அருகிலிருந்த மலைக்குச் சென்று தவம்புரிய தொடங்கினார்.

தற்போதும் அகத்தியர் தவமிருந்த மலையை கும்பமலை என்று அழைக்கின்றனர். சுந்தரானந்தர் பூஜித்ததால் அந்த லிங்கத்தை சுந்தரலிங்க மூர்த்தி எனும் திருப்பெயரால் அழைத்தனர். சதுரகிரியின் மைய சந்நதியான சுந்தரமகாலிங்கத்திற்கு முன்பாகவே சுந்தரலிங்க மூர்த்தி சந்நதி அமைந்துள்ளது.
இப்படித்தான் ஆங்காங்கு எழுந்தருளியுள்ள லிங்கத்தையே நாயன்மார்களும், நால்வரும் தரிசித்து பதிகம் பாடிச் சென்றனர். கிட்டத்தட்ட நானும் அந்த ரிஷியைப்போல இத்தலத்தில் ஈசனின் தரிசனம் கண்டேன் என்கிற உறுதிப்பாடு அது.

இதையே வைணவத்தில் மங்களாசாஸனம் என்பார்கள். இதற்கு இணையாக அகத்தியர் இத்தலத்தில் லிங்கத்தின் மகிமைகளை சுந்தரானந்தருக்கு கூறி இதுவே ஈசன் என்று உறுதி கூறுகிறார். ஒவ்வொரு ஆலயமும் ஏதேனும் ஒருவகையில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவே இருக்கும். ஒன்று சுயம்பாகவோ, தேவர்களாலோ, ரிஷிகளாலோ அல்லது மானிடர்களாலோ பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். அந்த வகையில் ஒரு ரிஷியாலேயே இந்த லிங்கமூர்த்தி பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது.

இப்படிப்பட்ட சுந்தரானந்த சித்தரின் ஜீவசமாதிதான் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அமைந்துள்ளது என்பது பக்தர்கள் மற்றும் ஆய்வாளர்களின் கருத்து. மேலும், சுந்தரேஸ்வரரே மானிட உருவத்திலும் சித்தர் தோற்றம் கொண்டு அவதரித்ததாகவும் கர்ண பரம்பரை கதைகள் உண்டு.  

- அபிநயா