சர்ப்பம் பற்றிய பிட்ஸ்சர்ப்பக் காவுகள்

பாம்புகளைப் பெருங்கடவுளாக வழிபடும் வழக்கம் ஆதியில் இருந்தது. பாம்புகள் காடு, மலை, தண்ணீர் என்று எங்கும் தாராளமாக புழங்கின. எனவே தங்களுக்கும் தங்களின் கால்நடைகளுக்கும் அவை தீங்கு செய்யாமல் இருக்க அவற்றைக் கடவுளாக வழிபட்டனர். பாம்புகளுக்கென தனி இடங்களை அமைத்தனர். அவை பாம்புக் கோயில்கள் அல்லது சர்ப்பக் காவுகள் என்று அழைக்கப்படுகின்றன. புகழ்பெற்ற நாகர்கோவிலில் உள்ள நாகராஜா ஆலயம் பாம்புக்கென்றே அமைந்ததாகும். இதனுள் நாகராஜர் எழுந்தருளியுள்ளார். பின்னாளில் இதில் திருமால், சிவன் ஆகியோரும் எழுந்தருளி வைக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவில் அனேக இடங்களில் சர்ப்பக் காவுகள் இப்போதும் சிறப்புடன் விளங்குகின்றன. இதில் பல பாம்புகள் வசிக்கின்றன. பல சர்ப்பக் காவுகளில் பெண்கள் பூசை நடத்துகின்றனர். தெய்வங்கள் யாவும் பாம்பு வடிவில் தோன்றி அன்பர்களுக்கு அருட்பாலித்ததை தலபுராணங்கள் உரைக்கின்றன. சிவன், அம்பிகை, திருமால், முருகன் முதலியோரும் பாம்பு வடிவு கொண்டு அன்பர்களுக்கு அருள்புரிந்துள்ளனர். சிவபெருமான் பாம்பு வடிவில் தோன்றி அன்பருக்கு அருள் புரிந்ததை மருதூர் புராணம் கூறுகிறது.

திருமால் பாம்பாக இருந்தது அருள் பாலித்ததைக் காஞ்சியில் காண்கிறோம். அவர் காஞ்சி உலகளந்த பெருமாள் கோயிலில் ஊரகத்தான் என்ற பெயருடன் பாம்பு உருவில் விளங்குகிறார். அம்பிகை தம்பியை ஏமாற்றி பொய் சத்தியம் செய்தவனை பாம்பு வடிவில் சென்று அழித்ததை திருஆமாத்தூர் தலவரலாற்றில் காணலாம். முருகனைப் பாம்பு வடிவில் வழிபடும் வழக்கம் பரவலாக உள்ளது. சென்னை - கந்தக்கோட்டத்தை நிறுவிய மாரியப்ப செட்டியாருக்கு முருகன் திருப்போரூரில் பாம்பு வடிவில் காட்சியளித்ததாகக் கூறுகின்றனர்.

பாம்பு தெய்வங்களுடன் பிற தெய்வங்களையும் பாம்பு வடிவில் வழிபடும் வழக்கம் பாரத தேசத்தில் பரவலாக இருந்துள்ளது. கண்ணபிரானின் அண்ணனான பலராமன் ஆதிசேடனின் அவதாரமாவார். முன்னாளில் அவருக்குக் கோயில்கள் இருந்தன. அவை நாகர் கோட்டம் என்று அழைக்கப்பட்டன. பாம்பு வழிபாடு காலப் போக்கில் தனித்தன்மை இழந்து பிற தெய்வ வழிபாடுகளின் அங்கமாகி விட்டன. அனைத்து ஆலயங்களிலும் நாகம், நாக கன்னிகை, இரட்டை நாகம், அஷ்ட நாகங்கள் முதலிய திருவுருவங்களை நிலைப் படுத்தி வணங்கி வருவதை பரவலாகக் காணலாம்.

இறந்த கன்னிப் பெண்கள் பாம்பு வடிவம் அடைகின்றனர் என்றும் அவர்கள் பாம்பு வடிவுடன் கோயில்களில் வாழ்கின்றனர் என்றும் நம்புகின்றனர். மேலும், தெய்வ அருள் பெற்ற நாகர்களும் கோயில்களில் வாழ்கின்றனர் என்று கூறுகின்றனர். பாம்பு வழிபாடு வளமான வாழ்வைத் தரும் வழிபாடாக உள்ளது.

சர்ப்பகிரிகள்

சில மலைகள் நீண்டு வளைந்து நெளிந்து படுத்திருக்கும் பாம்புகள் போலக் காணப்படுகின்றன. மக்கள் இவற்றை பாம்புடன் இணைத்து நாக மலை, நாக கிரி, பாம்பு மலை, சர்ப்ப கிரி எனப் பலவாறு அழைக்கின்றனர். திருச்செங்கோட்டு மலைக்கு அரவகிரி என்பது பெயர். மதுரைக்கு அருகில் நாகமலை என்னும் மலை உள்ளது. இது திருவிளையாடற் புராணத்தோடு தொடர்புடையதாகும். இன்னும் பல மலைகள் பாம்புகளோடு தொடர்பு கொண்டுள்ளன.

நாகமலை (திருச்செங்கோடு)

திருச்செங்கோடு மலை புராணத்தில் நாக மலை என்று போற்றப்படுகிறது. ஆதிசேடனே மலைவடிங் கொண்டு தவம் செய்து கொண்டிருப்பதுடன் அர்த்தநாரீசப் பெருமானைத் தன் தலைமீது தாங்கித் கொண்டிருப்பதாகக் கூறுவர். இதனை சர்ப்ப சயிலம், அரவ கிரி எனப் புராணம் போற்றுகின்றது. இம்மலையில் உச்சிக்குச் செல்லும் படிகளையொட்டி நாகர் பள்ளம் என்னுமிடம் உள்ளது. அங்கு பெரிய பாறையில் ஏறத்தாழ அறுபதடி நீளமுள்ள பாம்பு வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. இதன் படத்தின் நடுவில் லிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. பெரிய பாம்பைச் சுற்றி அனேக பாம்புகளும் பாம்பும் பிணையல்களும் செதுக்கப்பட்டுள்ளன.

இது பெரிய பிரார்த்தனைத் தலமாக விளங்குகின்றது. இந்தப் பாம்பினை ஒட்டி அமைந்துள்ள படிகள் சத்தியப்படிகளாகப் போற்றப்படுகின்றன. இவற்றில் நின்று பொய் சத்தியம் செய்தால் விரைவில் மரணம் நேருமென்று உறுதியாக நம்புகின்றனர். இங்குள்ள நாகர்களுக்கு மக்கள் நேர்ந்து கொண்டு பொங்கலிட்டு வழிபடுவதுடன் கோழி முதலியவற்றைக் காணிக்கையாகவும் அளிக்கின்றனர். மேலேயுள்ள அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்திலும் புற்று மண்ணாலான பெரிய நாகர்கள் வடிவங்கள் உள்ளன. இதையொட்டி நாக லிங்கங்கள் உள்ளன. அருணகிரி நாதர் இதனை ‘‘நாகாசலம்’’ என்று அழைக்கிறார்.

பாம்புகளை அணிந்தாடும் பரமன்

சிவபெருமான் தனது திருமேனியில் பாம்புகளை ஆபரணங்களாக அணிந்து அலங்கார கோலத்துடன் விளங்குவதால்  அவனை பாம்பலங்காரர் என்று இலக்கியங்கள் போற்றுகின்றன. பாமணி எனும் தலத்திலுள்ள பெருமான் பாம்பலங்காரர் என்னும் பெயரில் அருட்பாலித்துக் கொண்டிருக்கிறார். இறைவன் பாம்புகளைத் தனது தலை, தோள், மார்பு, இடை, கால் முதலிய அங்கங்களில் அணிந்திருப்பதைத் தேவாரம் சிறப்புடன் விவரிக்கின்றது. அவன் சடையில் உள்ள ஐந்து முதன்மைப் பொருட்களில் பாம்பும் ஒன்றாகும். சிவபெருமான் தோளில் பாம்புகளை வாகுவளையாக (தோள் வளையாக)க் கட்டியுள்ளார் என சுந்தரர் குறித்துள்ளார்.

சிவபெருமான் பாம்பினை இடையில் அரைக்கச்சாக அணிந்திருப்பதைப் பண்டரவு தன்னரையில் ஆர்த்த பரமேட்டி (பழைய பாம்பை இடுப்பில் கட்டியுள்ள பரமன்) புற்றில் வாழும் அரவும் அரை ஆர்த்தவன், ஐந்தலை அரவு கொண்டு அரைக்கசைத் தவன் பாம்பு, அரை ஆர்த்தபரமன் எனப் பல்வேறு இடங்களில் இறைவன் மாலையாகப் பாம்புகளை அணிந்திருப்பதை ஆரம். பாம்பு ; சுடுகூர் அரி மாலை தாழ்ந்தவன், ஆரம் பாம்பது அணிவான் என்றும், அங்கங்களில் அணிந்திருப்பதை ஒளிர் தருகின்ற மேனி உருவெங்கும் அங்கம் அவை ஆர ஆடல் அரயம் பூண்டான்’’ கொண்டு அணைசெய் கோலமது கோள் அரவினோடும் என்றும் ஞானசம்பந்தர் குறித்துள்ளார். கார்க்கோடகனின் கரங்களில் சங்கன், பதுமன், என்போரும் அஷ்ட மாநாகங்களும் கங்கணங்களாக உள்ளனர்.

நடராஜர் திருவுருவங்களில் அவரது அபயம் காட்டும் அருட்சுரத்தைக் சுற்றிக் கொண்டு படம் எடுத்தாடும் பாம்பைக் காண்கிறோம். அந்தப் பாம்பிற்கு அனந்தன் என்பது பெயர். பாம்புகள் காஞ்சிபுரத்தில் தவம் செய்து அவருக்கு ஆபரணமாகும் பேறு பெற்றன என்று காஞ்சிப் புராணம் கூறுகிறது. பாம்புகளுக்கு அபயம் அளித்த அவற்றைத் தனது திருமேனியில் ஆபரணங்களாகத் தரித்திருப்பதால், சிவனுக்குப் பணாதரேச்சுவரர் என்பது பெயரானது.

பாம்புகளை வடமொழியில் புஜங்கம் என்பர். அதையொட்டி சிவபெருமானுக்கு புஜங்க பூஷணர் என்பது பெயராயிற்று. மேலும், நாகபூஷணன் எனவும் நாகா பரணபூஷிதர் எனவும் அழைக்கின்றனர். பாம்புகளை அணிந்தாடும் பெருமானைப் புஜங்கலலிதர் என்று சிற்ப நூல்கள் கூறுகின்றன. பாம்புகளை அவர் அணிந்து அந்தப் பாம்புகளும் மகிழ்கின்றன. பாம்புகள் மகிழப் பெருமான் ஆடுவது தேவாரத்தில் பல இடங்களில் குறிக்கப்பட்டுள்ளது. சேக்கிழார் நீள் நாகம் அணிந்தார் என்று பெருமானைப் போற்றுகின்றார். பன்னகம் என்ற சொல்லும் பாம்பைக் குறிக்கிறது. இப்பெயரால் பெருமான்
பன்ன காபரணர் என்று அழைக்கப்படுகிறார்.

நாகத்தின் அனேக நாமங்கள்

பாம்பிற்கு, 1). பன்னகம், 2). பணி, 3). உரகம், 4). நாகம், 5). புயங்கம், 6). அரி, 7). பாந்தன், 8). அரவு, 9). அகி, 10). கஞ்சுகி, 11). பவணாசனம், 12). கூட பந்தம், 13). மாசுணம், 14). போகி, 15). பரவு, 16). காலிலி, 17). சக்ரி, 18). விஷதரி, 19). கதோதரம், 20). காத்ரி, 21). தந்த சூகம், 22). கட்செவி, 23). சர்ப்பம், 24). தம்பிஞ்சம், 25). கும்பீசம், 26). அங்கதம், 27). வியாளம், 28). மாரளம் என்னும் இருபத்தெட்டு பெயர்களை நிகண்டுகள் கூறுகின்றன.

நாகங்களில் பறக்கும் தன்மையுள்ள பட்சி நாகம் (பறவை நாகம்) குக்குட சர்ப்பம் ஆகியவை சிறப்பானதாகும். பை, பணம், துத்தி, உத்தி, படப்பொறியும் பாம்பின் பெயர்களாகும். இந்தப் பெயர்களையொட்டியே சிவபெருமானை பன்னகாபரனர், பணீசர், நாகநாதர், புஜங்கப் பெருமான் (அஷ்டபுஜங்கா), புஜங்கத்திராசர், பாந்தளீசர், கஞ்சுகேசர், சர்பபுரீசர், விஷதரர் (பாம்புகளை அணிந்தவர்) எனும் பெயர்களால் அழைக்கப்படுகிறார்.

மதுரை நாகமலை

அருப்புக்கோட்டையிலிருந்து 14 கி.மீ. தொலைவில் திருச்சுழியல் என்னும் தலம் உள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகளால் பாடப்பட்ட பதி. இங்கிருந்து பாறைக்குளம் என்னும் சிற்றூருக்குச் செல்லும் வழியில் ஒரு குன்று உள்ளது. இதில் குடைவரைக் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. குடைவரையை அமைத்த பாறையிலேயே லிங்கத்தையும் அமைத்துள்ளனர். இப்பெருமான் பன்னக கிரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். பன்னக கிரி (பாம்புமலையில்) குடிகொண்டிருப்பதால் இப்பெயர் பெற்றார்.

புஜங்கதிராசம்

சிவபெருமான் பாம்புகளை ஏந்தி ஆடுகின்றார். அந்தக் கோலத்தைச் சிற்ப நூல்கள் இரண்டு வகையாகக் கூறுகின்றன. முதல்வகையினது, சிவபெருமான் தம்மை வணங்கிப் போற்றிய நாகர்களைத் திருமேனியில் அணிகளாகப் பூண்டு அவர்கள் மகிழும்படியாக ஆடிய இனிய தாண்டவமாகும். இதனை வடமொழியில் புஜங்க லளிதம் (புஜங்கம் - பாம்பு) என்பர்.

இன்னொரு வகை பகைவர்கள் ஏவிய பாம்பை அச்சுறுத்தி அடக்கி அதை எடுத்து எல்லோரும் காண ஆடியதாகும். இதனை புஜங்கதிராசம் என்பர். பகைவர்கள் ஏவிய பாம்பைச் சிவபெருமான் எடுத்துத் தம் விருப்பப்படி ஆட்டு வித்ததைப் பாசூர் தேவாரம் பாம்பெடுத்து ஆட்டுவார் போலும் பாசூர் அடிகளே என்கிறது.

பூசை. ச.அருணவசந்தன்