உள்ள(த்)தைச் சொல்கிறோம்



விவேகம் விதைத்த வேழமுகத்தான் விநாயகருக்கு இத்துணை திருநாமங்களா! அதிகமான பெயர்கள் கொண்ட கடவுள் ஆணை முகத்தோனோ! நிலத்தடி நீர்மட்டத்தை காட்டவே அரச மரத்தடியில் ஆதி முதல்வன் என்றும், நாக தெய்வங்களை மரத்தடி புற்றில் அமைத்து பால் வார்ப்பது மூட நம்பிக்கை என்ற கேலியை முறியடித்து, பால் ஊற்றினால் புற்று குளிர்ச்சியாகி பாம்பு வெளிவந்து அச்சுறுத்தாது என்றும் விளக்கியது, வியப்பூட்டியது. மும்மூர்த்திகளும் போற்றும் முதல் மூர்த்திக்கு கணபதி தொந்தி போல கனமான சிறப்பு மலர் கொடுத்து விட்டீர்கள். பலே பாண்டியா!
- அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

விநாயகர் சதுர்த்தி சிறப்பிதழலில் அறியப்படாத அரிய திருத்தலங்களின் குறிப்புகளையும் வழங்கி வாசகர்களை திக்கு முக்காட வைத்து விட்டீர்கள்.
- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

அட்டைப்படம் துவங்கி இதழ் முழுக்க ஆனை முகத்தானின் புகழ் பாடியிருந்த விநாயகப்பெருமானின் படங்கள் அவரது அருட்சிறப்புகளை வாரி வழங்கியிருந்த கட்டுரைகள், குறிப்பாக 7 பக்கங்களில் வியாபித்திருந்த சு. இளம் கலைமாறன் எழுதியிருந்த ஆனை முகத்தானின் அழகிய நாமங்கள் குறித்த விளக்கமான பதிவுகள் ஆகியன ஆன்மிக உள்ளங்களை அதிலும் விக்னவிநாயக பக்தர்களை உள்ளம் குளிரவைப்பதாக அமைந்திருந்தன.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.
- எஸ்.முத்துகிருஷ்ணம்மாள், செண்பகராமன்புதூர்.

விநாயகர் சதுர்த்தியையொட்டி வெளிவந்த முனைவர் செ.ராஜேஸ்வரி, பிள்ளையார் வழிகாட்டும் நீரியல் தத்துவம். வாழ்வியல் நெறிமுறை வேப்பமரம், ஆலமரம் மற்றும் அரச மரத்தின் கீழ் பிள்ளையாரை வைத்து ஏன் வழிபடுகிறோம் என்ற தத்துவ ரகசியம் ஆழங்காற்பட்டது.
- காவிரிபுனிதர் அரிமளம் தளவாய் நாராயணசாமி, பெங்களூர் - 76.

அரசமரம் ஒன்று, ஆனைமுகன் இருபத்திரண்டு என்ற தலைப்பில் வெளியான விநாயகர் குறித்த கட்டுரை அருமையாக இருந்தது. உ.வே.வெங்கடேஷ் எழுதும் தொடரான அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் தொடரை தொடர்ந்து படித்து வருகிறேன். விஷ்ணுக்கு இருப்பது போல் விநாயகருக்கும் நாமங்கள் பல இருப்பதை இப்போது தான் அறிந்தேன். சு.இளம் கலைமாறனின் விநாயகரின் நாமங்களும் விளக்கங்களும் அதிசயக்க வைத்தது.
- பிரமிளா, செங்கல்பட்டு.

எந்தக் கோயில் என்ன பிரசாதம் என்ற தலைப்பில் பிள்ளையார்பட்டி விநாயகர் குறித்த தகவலும், முக்குறுணி கொழுக்கட்டை செய்யும் விதம் குறித்தும் பதிவிட்டிருந்தது பயனுள்ளதாக இருந்தது. ஆன்மிகம் இதழுக்கு நன்றி.
- அ.ஜோதி ராதா கிருஷ்ணன் சென்னை.

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் பகுதியில் ஒவ்வொரு ராசிக்கும் உரிய பரிகாரங்களும், சொல்ல வேண்டிய மந்திரங்களும் கொடுத்
திருந்தது மிகவும் நேர்த்தியாக இருந்தது.
- வசந்தா, சாயர்புரம்.

ஐங்கரனைப் பற்றி அறியப்படாத தகவல்களை தந்து என் போன்ற வாசகர்களை வியப்பிலும், மகிழ்ச்சியிலும் மூழ்கச்செய்தது. இந்த விநாயகர் சதுர்த்தி பக்தி ஸ்பெஷல்.
- ஆர்.மணிகண்டன் கைலாசம், கந்தமங்கலம். நன்னிலம்.

யானைக்கடவுள் என்ற தலைப்பில் கணபதி குறித்து வெளியான ஆய்வுக்கட்டுரை விநாயகர் குறித்த தேடலின் உச்சம் என்றே கூறலாம். ஒவ்வொரு ஆன்மிகம் இதழும் படித்து விட்டு பாதுகாக்க வேண்டிய பொக்கிஷமாகவே உள்ளன. அத்தனை முத்தான தகவல்கள் அடங்கியிருக்கிறது. வரும் சந்ததியினருக்கு சொல்லிக் கொடுக்கும் ஏடாகவும், ஆதார திரட்டாகவும் விளங்குகிறது ஆன்மிகம்.
- ஆதிஈஸ்வரன், பாலக்கரை, திருச்சி.