வாராகி வீரத்தின் விளைநிலம்



வாராகிக்கு அளிக்கப்பட்ட உருவத்தைக் கொண்டும் கற்பிக்கப்பட்ட செயல்பாடுகளைக் கொண்டும் முழுமையாக ஆராய்ந்து அத் தெய்வத்தைப் புரிந்து
கொள்ள வேண்டும். புராணக் கதைகளின் ஆன்மாவைப் புரிந்து கொண்டால் வாராகியைப்பற்றிய முழு புரிதல் நமக்கு கிடைக்கும். ஒவ்வொரு கடவுளின் உருவாக்கத்துக்கும் ஒரு முக்கியத் தேவை இருக்கும். ஒரு வரலாற்று நிகழ்வைப் பதிவு செய்வதற்காக மக்கள் தெய்வங்களை உருவாக்கி வழிபாடுகளை மேற்கொள்வர்.

வேட்டைச் சமூகத்தை தொடர்ந்து தோன்றிய வேளாண் சமூகம் சப்த கன்னியருள் ஒருத்தியான வாராகிபன்றி முகம் கொண்ட துடியான கடவுள். இவளைப் போர்த் தெய்வம் என்றும் வெற்றித் தேவதை என்றும் பகையை அழிக்க உதவுவாள் என்றும் இது வரை நம்பப்பட்டு வருகிறது. ஆனால் வாராகி வீரத்தின் விளைநிலம். வேளாண் தெய்வம். அவள் வேட்டைச் சமுதாயத்தின் எச்சம்; ஆணாதிக்கத்தின் தொடக்கம்; இரு வகை பண்பாடும் இணைந்த உருவம். பெண் முதன்மைச் சமுதாயத்தில் மூத்த தாய் சண்டைக்கு முதன்மை வகிப்பாள்; அந்த வீரத்தின் எச்சமாக போர்க் கருவிகளை ஏந்தியவளாக வாராகி உருவகிக்கப்படுகிறாள்.

வாராகியைப் பற்றிய இது வரை நிலவி வரும் கருத்துக்களை முதலில் தெரிந்துகொண்ட பின்பு வாராகி வீரத்தின் விளை நிலமாகவும் வேளாண்மையின் அம்சமாகவும் விளங்குவது குறித்து விரிவாகக் காணலாம் இந்து சமயத்தில் வாராகிதேவி மகாத்மியம் வாராகி சும்ப நிசும்பர்களையும் ரக்த
பீஜனையும் காளி கொல்ல முனைந்த போது அவளுக்குத் துணையாக நின்றவள் என்கிறது. இவளைத் தேவியின் படைத் தளபதியாக லலிதோபாக்யானம் எடுத்துரைக்கிறது.  

விஷுக்ரன் என்ற அசுரனை வாராகி தனித்து நின்று வதம் செய்தாள். வாராகி எதிரிகளின் கொழுப்பை அடக்கி அவர்களின் அறிவைக் குலைத்து பைத்தியமாக அலைய விடுவாள் என்பதால் மன்னர்களும் மற்றவர்களும் தமது பகையை ஒழிக்க இவளுக்குச் சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டனர். உன்மத்த பைரவரை இவளுக்கு இணையாகச் சேர்த்தும் இடைக்காலத்தில் வடநாட்டில் நூல்கள் எழுதியும் பேசியும் வந்தனர்.  

ஐந்து எட்டு என வாராகியும் வளர்ந்தாள் சமுகத்தின் மதிப்பு பெற்ற கடவுள் எதுவாக இருந்தாலும் அதனை சமயங்கள் தன்னுடையவையாக மாற்றிக் கொள்ளும். அவ்வாறு பௌத்த சமயம் ஐந்து வகையாக வாராகியை வளர்த்திருக்கிறது. பௌத்தத்தில் வஜ்ராயனம் வாராகியை வழிபடு தெய்வமாகக் கொள்வதால் அங்கு அவள் வஜ்ர வாராகி என்றும் மரிச்சி என்றும் வழங்கப்படுகிறாள். இந்து சமயமோ  ஆதிவாராகி, பிருஹத் வாராகி, லகு வாராகி, பஞ்சமி வாராகி, அஷ்வாரூடா வாராகி, சுத்த வாராகி, தண்டநாதா வாராகி, தும்ர வாராகி, ஸ்வப்ன வாராகி, வார்த்தாளி என்று பத்தாக வளர்த்துள்ளது. இதில் எட்டை மட்டும் எடுத்து அஷ்ட வாராகி என்று அழைப்பதும் உண்டு. தாந்திரிகம் இவளை சோபன வாராகி, கண்ட வாராகி, மகி வாராகி, கிருசா வாராகி, மச்ச வாராகி என்று ஐந்தாக வளர்த்து விட்டது. வாராகியை இந்து சமயத்தில் ஆணாகக் கருதுவதும் உண்டு. அவளே லலிதையின் தகப்பனார். லலிதையின் தாய் குருகுல்லா. இவர்கள் இருவருக்கும் ஒரிசாவின் தலைநகருக்கு அருகே  கொரகொரோ என்ற ஊரில் தனிக் கோயில் உள்ளது.

வாராகிக்கு உரியவை வாராகி மனித உடம்பில் எலும்புக்கு உரியவள். மருந்துகளில் இனிப்பையும் ஈரத்தையும் குறைக்கும் சிறு குறிஞ்சான் மற்றும் சிற்றரத்தைக்கு உரியவள். உன்மத்த பைரவி, ஸ்வப்னேசி, திரஸ்கரணி, கிரிபதா ஆகியோர் இவளது பரிவார தேவதைகள் ஆவர். இவளுடைய சிம்மத்துக்கு வஜ்ர கோஷம் என்றும் வாகனமான ரதத்துக்கு கிரி சக்ர ரதம் என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கிரி என்றால் பன்றி. இவளுடைய ரதம் பன்றிகளால் இழுத்துவரப்படும். வாராகியின் யந்திரத்துக்குப் பெயரும் கிரி சக்ரமே ஆகும். வீரை கவிராச பண்டிதரால் 16ஆம் நுற்றாண்டில் எழுதப்பட்ட வாராகி மாலை இவளது யந்திரத்தை அதன் அமைப்பை அதன் செயல்பாட்டை ஒரு பாடலில் விளக்குகிறது.

தேராத வட்டம் முக்கோணம் சட்கோணம் துலங்கு வட்டத்து

ஈராறு இதழிட்டு ரீங்காரம் உள்ளிட்டு அதனடுவே
ஆராதனை செய்தது அருச்சித்துப் பூசித்தடி பணிந்தால்
வாராதிராள் அல்ல; ஞான வாலை வராகியுமே

தமிழகத்தில் வாராகி கோயில்கள்

பக்தி இயக்கம் தோன்றி சிவன் கோயில் பிராகாரத்தில் வாராகிக்கு இடமளித்ததற்கு முன்பு தமிழகத்தில் அவள் பௌத்த தெய்வமாகப் போற்றப்பட்டாள். அதனால், பௌத்தம் செழித்திருந்த  தமிழகத்தின் தென் பகுதியிலும் பௌத்தர்களின் தலைமைப் பீடமாக விளங்கிய காஞ்சிபுரத்திலும் வேளாண்மையில் சிறந்து விளங்கிய பௌத்தர்கள் அதிகளவில் கோயில்கள் கட்டியிருந்த காவிரிக் கரையின் திருச்சி, தஞ்சை நாகப்பட்டினம் பகுதியிலும் வாராகிக்குத் தனிக்  கோயில்கள் இருந்தன. இவற்றில் பலவற்றை இடித்துவிட்ட போதும் ஒரு சில தப்பிவிட்டன. அவ்வாறு தப்பிய கோயில்கள் வருமாறு;

இராமநாதபுரம் அருகே உத்தரகோச மங்கையில் வாராகிக்கு பழைய கோயில் ஒன்று உள்ளது. இதனைச் சிலர் 35௦௦ ஆண்டுகள் பழையது என்று சற்று மிகைப்படுத்தி கூறினாலும் இக்கோயில் பழமையானது என்பதில் ஐயமில்லை. ஏனெனில் இங்கு சிவன் - விஷ்ணு சிலைகள் எதுவும் கிடையாது. பக்தி இயக்கத்துக்கு முந்திய காளி, பைரவர், மற்றும் நாட்டுப்புறத் தெய்வங்களான கருப்பசாமி, ராக்காச்சி ஆகியவையே பரிவாரத் தெய்வங்களாக உள்ளன. வாராகி அம்மனுக்குரிய பூஜை காலம் உச்சிப்பொழுது  மற்றும் நள்ளிரவு 12 மணி என்பதால் இக்கோயில் மதியம் 12 மணிக்கு
திறக்கப்படும்.

விழுப்புரம் அருகே சாலாமேடு என்ற ஊரில் அஷ்ட வாராகிக்கு கோயில் உள்ளது. இதுவே தமிழகத்தின் பழைய கோயில் என்று அங்கு வசிப்போர் கூறுகின்றனர். காஞ்சிபுரம் அருகே பள்ளூர் என்ற கிராமத்தில் அரசாலையம்மன் கோயில் என்ற பெயரில் வாராகியம்மனுக்கு ஓர்ஆலயம் உள்ளது. வாராகி ஸஸ்ரநாமத்தில் அரசாலை என்றும் வாராகி அழைக்கப்படுகிறாள். தெற்கு நோக்கிய சொர்ண வாராகியாகக் காட்சி அளிக்கிறாள். இக்கோயில் 15௦௦ ஆண்டுகள் பழமையானது என்று அங்கு வாழும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

திருச்சிக்கு அருகிலுள்ள திருவானைக்காவில் அகிலாண்டேஸ்வரி வாராகி அம்சமாக எழுந்தருளி இருப்பதால் இங்கு திருக்கல்யாணம், பள்ளியறை பூஜை ஆகியன கிடையாது. இக்கோயில் வாராகி பீடமாகப் போற்றப்படுகிறது. இரவில் வாராகிக்குரிய  பூஜைகள் இங்கு நடத்தப்படுகின்றன.
நாகப்பட்டினம் பௌத்தர்களுக்கான தங்குமிடங்களையும் பல்வேறு தீவுகளில் இருந்து இங்கு வந்திறங்கும் பௌத்தர்களுக்கான வழிபாட்டுத் தலங்களையும் கொண்டிருந்த நகரமாகும். இங்குள்ள வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயில் முன்பு வாராகியம்மனுக்கான தனிக் கோயிலாக இருந்துள்ளது. சைவ எழுச்சிக்குப் பிறகு இக்கோயில் சிவன் கோயிலாக மாற்றப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டையபுரத்துக்கு அருகே நரிப்பட்டி என்ற ஊரில் வாராகிக்கு தனி கோயில் ஒன்று உள்ளது.
வராக முகமும் கலப்பையும் வேட்டைச் சமூகத்துக்கு அடுத்துத் தோன்றிய வேளாண் சமுதாயம் பெண்ணை அடிமைப்படுத்தி குழந்தை பெறும் இயந்திரமாக்கி வீட்டு வேலைகளில் முடக்கிப்போட்ட போது பெண் வேளாண்மைப் பணிகளுக்கும் முக்கியமானவள் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் வாராகி உழவுக் கலப்பையுடன் உருவகிக்கப்பட்டாள். உழவுக் கருவி ஏந்தி இருக்கும் ஒரே பெண் தெய்வம் வாராகி மட்டுமே.

வாராகியின் பன்றி முகத்தை வைத்துப் பலரும் அவளை வராக அவதாரத்துக்கு இணை சேர்க்கின்றனர். காளிக்கும் சப்த கன்னியருக்கும் ஆண் தெய்வங்களை ஜோடி சேர்ப்பதுதான் தர்மம் என்று வைதீகர்கள் கருதினர். ஆனால், வாராகிக்கு அவ்வாறு செய்வது கடினமாக இருந்ததால் அரி, அரன், நாரதர் உன்மத்த பைரவர் எனப்பல பெயர்களைக் கூறினர். ஆனால், வாராகி எந்த ஆணுக்கும் ஜோடி தெய்வம் கிடையாது. அவள் தனித் தெய்வம்.

வேளாண் தெய்வமான வாராகி

வராக முகம் என்பது அவளை வேளாண்மையுடன் இணைத்துக் காட்டும் முக்கியக் குறியீடு ஆகும். வராகத்தின் ஒற்றைக் கொம்பு கலப்பையின் கொழு போன்றது. அதுதான் நிலத்தைக் கீறி அடிமண்ணை மேலே கொண்டு வரும். அதுவே உழுதலின் நோக்கம். வராகம் என்பது உழவின் ஒற்றை அடையாளமாக இப்பெண் தெய்வத்துக்கு அமைந்துள்ளது. ராஜராஜ சோழன் கட்டிய பெரிய கோயிலில் இவள் கையிலும் உழவுக் கலப்பை ஏந்திக்
காட்சியளிக்கிறாள்.

வராகப் பெருமாளின் அவதார நோக்கத்தை அறிந்து கொண்டால் வராகம் என்பதன் அடையாளம் அல்லது அர்த்தம் என்ன என்பதை புரிந்து கொள்ளலாம். வராக அவதாரமே தனது ஒற்றைக் கொம்பைக் கொண்டு பூமியை அகழ்ந்தெடுக்க தோன்றியதுதான். எனவே, வராகம் என்பது பூமியைக் குத்திக் கிளறி மேலே கொண்டு வருவது. அதனை புராணக் கதைகள் பூமிப்பந்தை எடுத்து விட்டதாகக் கதை சொன்னாலும் அதன் உள்ளர்த்தம் வராகம் என்பது உழவுக் கலப்பையின் குறியீடு என்பதாகும், பூமியைக் கிளறி அடியில் இருக்கும் மண்ணை மேலே கொண்டு வர வல்லது என்பதை வராகம் என்ற வடிவம் உணர்த்துகிறது.

சப்த கன்னியருள் வாராகி மற்றும் சாமுண்டிக்கு மட்டும் ஜோடி தெய்வங்கள் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் மற்ற கன்னிகளைப் போல மென்மையான கொடி போன்ற தோற்றம் உடையவர் அல்லர். தாய்த் தெய்வம் போன்ற பருத்த வயிறும் கனத்த மார்புகளும் கொண்டவர்கள். வாராகி மூதாயின் உருவகமாக விளங்குவதாலும் அவள் சண்டைக்காரியாக இருப்பதாலும் கரிய நிறத்துடன் திராவிட உருவ அமைப்புடன் தடித்த பெண்ணாக சிலை வடிக்கப்படுகிறாள்.

இந்து சமயத்தில் வாராகியை வழிபடுவது போல வஜ்ராயன பௌத்த சமயமும் வாராகியை வழிபடு தெய்வமாகக் கொண்டுள்ளது. ஆதி வேளாண் சமயத்தின் வழிபாட்டுக் கடவுளாக வாராகி இருப்பதால் இவளை அனைத்து சமயப் பிரிவுகளும் அணைத்துக் கொள்கின்றன. சைவ சமயத்தில் சாமி சந்நதியின் உட்பிராகாரத்தில் ஏழு சப்த மாதர்களுள் ஒருத்தியாக இருக்கும் வாராகிக்குச் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. பத்தாம் நூற்றாண்டில் ராஜராஜ சோழன் தனது பெரிய கோயிலில் இவளுக்குத் தனிச் சந்நதியே அமைத்தான். அவன் காலத்தில்தான் வாராகி சைவக் கோயிலுக்குள் இடம் பெறுகிறாள்.  

ஆயுதங்கள்

வாராகி நான்கு, ஆறு, எட்டு கைகளுடன் வடிவமைக்கப்பட்டு ஆயுதங்களையும் மண்டை ஓட்டையும் ஏந்தியவளாக இருந்தாலும் அவள் எருமை மாட்டின் வால், காண்டா மணி, உழவுக் கலப்பை போன்ற வினோதமான ஆயுதங்களுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆயுதங்களை இவள் தாங்கியிருப்பதன் காரணம் யாதெனில் இவள் இன்று சாட்டையால் அடிப்பதைப் போல இவள் மாட்டு வாலால் அடித்துத்  தண்டிப்பாள். இவளைத் தண்ட நாயகி என்று குறிப்பிடும் தேவி மகாத்மியம் படைத் தளபதியாக கொள்கின்றது. இவள் பகைவர்களைத் தண்டிப்பவள். மாட்டு வால் என்பது அந்தக் காலத்தில் மனிதர்களை தண்டிக்கப் பயன்பட்டது.

வாராகி கையில் இருக்கும் காண்டா மணி மற்றும் சக்கரம் ஆகியன காலத்தைக் குறிக்கும் குறியீடுகள் ஆகும். அவளைக் காலதேவனின் மனைவி என்று காலனோடு தொடர்பு படுத்துவதன் காரணம், அவள் இறப்புக்குரிய கொலைத் தெய்வமும் ஆவாள். இவளை யமனின் மனைவியாக்கி யமி என்றும் குறிப்பிடுவர். பாவனோபநிஷதம் ‘வாராகி பித்ரு ரூபா’ என்று இறந்தவர்களின் உருவமாகக் கொள்கிறது.

ஒரு கையில் உலக்கையும் மறு கையில் உழவுக் கலப்பையும் கொண்டிருக்கும் வாராகி அடுத்த காலகட்டத்தில் தன் இரு கரங்களையும் அபய வரத ஹஸ்தமாக வைத்திருப்பாள். இந்த உருவத்தில் இருக்கும் வாராகி உழவுக் கலப்பையால் ஆக்குதல் [பயிர் வளம்] உலக்கையால் அழித்தல் மற்றும் அபய கரத்தால், காத்தல் மற்றும் வரத கரத்தால் அருளல் ஆகிய செயல்பாடுகளின் வடிவமாக விளங்குகிறாள். அபய வரத ஹஸ்தம் அளித்து அவளை மேன்மைப்படுத்தி மென்மைப்படுத்திப் பிற்காலத்தில் உருவாக்கினாலும் அவள் வீரத்துக்கும் வேளாண்மைக்கும் உரியவள் என்பதைக் குறிக்கும் கலப்பையும் உலக்கையும் அவள் கையில் நீங்காமல் இடம் பெற்றிருப்பதை குறிப்பிட வேண்டும்.  

புராணங்களும் தேவி மகாத்மியமும் அவளைப் போர்த் தெய்வமாக மட்டுமே கொள்ள வேண்டும் என்று கருதியதாலும் ஆண் முதன்மைச் சமுதாயத்தில் தோற்றுவிக்கப்பட்ட சமய மரபுகள் பெண்ணுக்கு உழவு போன்ற கடினமான வேளாண்  பணிகளில் இடமளிக்க முன் வராததாலும்
பிற்காலத்தில் அவளிடம் இருந்து கலப்பையை எடுத்து விட்டனர். பழைய காலச் சிற்பங்களில் இவள் கலப்பை, உலக்கை, மாட்டு வால், மணி போன்ற ஆயுதங்களுடன் தோற்றமளிக்கிறாள். யானையை அடக்கும் அங்குசமும் அவள் கையில் உண்டு.

வைணவம் வாராகியைத் தன்னுடையவளாக சொந்தம் கொண்டாடிய போது, வராகப் பெருமாளிடம் உள்ள சங்கு, சக்கரம், தண்டாயுதம், தாமரை, போன்றவற்றை  இவள் கைகளில் கொடுத்திருப்பதைச்  சில சிலைகளில் காணலாம். காளியைப்போல இவள் கையில் ரத்தத்தை ஏந்திக் குடிக்கும் மண்டை ஓட்டையும் காணலாம். அதற்கு அந்தகாசுரனை வதைத்த கதையும் ரக்தபீஜனைக் கொன்றபோது அவனது  ரத்தத்தைக் குடித்த கதையும் பல புராண நூல்களில் சொல்லப்படுகின்றது.

சமயங்கள் கொடுத்து அழகு பார்த்த வாகனங்கள்

சைவம் தழுவிய வராகியின் வாகனமாக மகிஷம் [எருமை], புலி, போன்ற விலங்குகள் காணப்படும்.  வைஷ்ணவ வராகிக்கு சேஷ வாகனம் உண்டு.  துணையாளாக கருடன் உண்டு. பவுத்தத்தில் அவள் பதுமம் [தாமரை] அல்லது பீடத்தில் அமர்ந்து இருப்பாள். சாக்தத்தில் இவளை இருட்டின் அம்சமாக [துரும வராகி] இரவுத் தேவதையாகக் கொள்வர். இவள் பிரேதம் அல்லது பெண் எருமையின் மீது தோன்றுவாள். வாராகி
தனது ஜம்பினி குதிரை மீது அமர்ந்து உருவமைப்பும் உண்டு. சாவின் மூலமாக இவள் முக்தி அருள்பவள் என்பதால் கைவல்ய ரூபினி என்று அழைப்பதும் உண்டு.

நடு ராத்திரி & உச்சிப் பொழுதின் வழிபாடு

வாராகி வழிபாடு பஞ்ச மகரங்களுடன் கூடியது. அவளை வணங்கியவர்களின் எதிரிகள் நாசமடைவது உறுதி. மது, மச்சம் [மீன்], தானியம், மாமிசம், மைதுனம் எனப்படும் சடங்கியல் கலவி ஆகியன உண்டு. கங்கை கரையில் இருக்கும் காலராத்ரி கோயிலில் வாராகி சந்நதியில் இரவில் இப்போதும் இவ்வழிபாடுகள் நடக்கின்றன.  இக்கோயிலை பகலில் பூட்டி வைத்திருப்பர்.

மார்க்கண்டேய புராணம், வராக புராணம், மச்ச புராணம், தேவி புராணம் வாராகி பற்றிய கதைகளை உருவாக்கி சேர்த்துள்ளன.
இவள் சப்த மாதரில் ஐந்தாமவளாக இருப்பதால் இவளை பஞ்சமி என்பர். உடலில் இவள் மணிபூரகத்துக்கு [தொப்புள்] பகுதிக்கு உடையவளாக மூலாதாரச் சக்கரத்தில் காட்டுவர்.

கோயில் வரலாறு

இடைக்காலத்தில் [9, 10ஆம் நூற்றாண்டில்] வராகிக்குத் தனிக் கோயில்கள் எழுப்பப்பட்டன. அக்காலத்தில் இந்தியா முழுக்க பக்தி இயக்கம் பரவியிருந்தது. இவ்வியக்கம் தமிழகத்தில் தோன்றி வடக்கே பயணித்தது. அப்போது அதுவரை வழிபாட்டில் இருந்த பூர்வீகத் தெய்வங்கள் அனைத்தும் வைதீகச் சமயங்களுக்குள் இழுக்கப்பட்டன. வைதீகச் சமயங்கள் அவைகட்குப் புதிய புராணக் கதைகளை உருவாக்கி சைவ வைணவக் கோயில்களில் பரிவாரத் தெய்வங்களாக அமர்த்தப்பட்டன.

பௌத்தம் செழித்திருந்த இடங்களில் மட்டும் வாராகிக்கு தனிக் கோயில்கள் இருந்தன. ஒரிசாவில் சவுராசி என்ற ஊரில் மச்ச வராகிக்கு தனிக் கோயில் உருவானது. நேபாளத்தில் பேயா ஏரியின் நடுவில் வாராகி கோயில் உள்ளது. பக்த பூரில் ஜெய பராகி [இங்கு வ என்பது அங்கு ப என மாறும்] என்ற பெயரில் இவளை வெற்றித் தெய்வமாக கொண்டாடும் மக்கள் தம் குழந்தைகளுக்கு வாராகியை தனது முன்னோராக உருவகித்து அவளைப் பாட்டிமா [அஜீமா] என்று அழைக்கக் கற்றுக் கொடுத்துள்ளனர்.

தமிழகத்தில் அவ்வை என்ற பெயரில் வணங்கப்படும் மூத்த தெய்வமும் இந்த பாட்டிமாவுக்கு நிகரான வழக்காறு எனலாம். [கன்னித்  தெய்வம், தாய்த்  தெய்வம் மற்றும் பாட்டித்  தெய்வம் என மூன்று வடிவங்களில் தனிப் பெண் தெய்வங்களை வழிபடுகின்றனர்.] குஜராத்தில் ஒரு சில இடங்களில் வாராகிக்கு கோயில் உள்ளது. தற்காலத்தில் வாராகி வழிபாடு தமிழகத்தில் புத்துணர்ச்சி பெற்று வருகிறது. கோயில் கடைகளில் வாராகி மாலை  நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

வாராகி மாலை என்ற  நூல் வாராகி வழிபாட்டுக்குரிய யந்திரம் மந்திரம் ஆகியவற்றை கொண்டிருக்கும் இந் நூலை வீர கவி ராஜர் இயற்றினார். ஸ்தம்பனம், வசியம், மாரகம் என மக்களின் பல தேவைகளுக்கு ஏற்ப இவ்வாராகி மாலையில் யந்திரங்களும் மந்திரங்களும் பாடல்களும் உள்ளன.
முருகனுக்கு ஆறு திருமாலுக்கு எட்டு சிவனுக்கு ஐந்து என்று அட்சரங்கள் மந்திரங்களாக இருப்பது போல சாக்தத்தில் ஐயும் கிலியும் சவ்வும் என்ற மூன்று எழுத்து மந்திரம் உண்டு. இதற்கு எடுத்துக்காட்டாக வாராகி மாலையில்...

ஐயும் கிலியும் சவ்வும் என தொண்டர் போற்றும் அரிய பச்சை
மெய்யும் கருணை வழிந்தோடுகின்ற விழியும்
கையும் பிரம்பும் கபாலமும் சூலமும்  கண்ணெதிரே
வையம் துதிக்க வருவாள் வாராகிஎன் மலர்க்கொடியே
 - என்று பாடலைக் கூறலாம்.
 
மனித வரலாற்றின் அழியாப் பதிவு வராகி

வாராகி என்பவள் இரு காலகட்டத்தின் இணைப்புக் குறியீடு. இரு முக்கியப் பண்புகளின் வெளிப்பாடு. மனித வரலாற்றில் வேட்டைக் காலத்தின் முடிவாகவும் வேளாண் காலத்தின் தொடக்கமாகவும் புரிந்து கொள்ளப்பட வேண்டிய வரலாற்று பதிவு. இதனால் இவள் ஆத்திரக்காரியாகவும் அதேசமயம் மண்ணைக் கிளறி பொன் விளைய வைக்கும் வளமைத் தெய்வமாகவும் விளங்குகிறாள்.

வேந்தனும் வாராகியும்

தானிய லட்சுமி கையில் நெற்கதிருடன் காட்சி தர, அன்ன லட்சுமி கையில் கரண்டியுடன் சாத்விகமாகக் காட்சி தர, வாராகி மட்டும் கலப்பை, உலக்கை, மாட்டு வால், காண்டா மணி போன்றவற்றுடன் காட்சியளிக்கக் காரணம் என்னவென்றால்  இவள் சொகுசுத்  தேவதை அல்ல. உழைப்புக் கடவுள், போர்க் கடவுள். வேளாண்மையும் போரும் இணைந்து வருவதற்கு காரணம் நில உடைமைத்துவத்துடன் இணைந்தே  ஒரே தலைவனான வேந்தன், மன்னராட்சி ஆகியன புதிதாகத் தோன்றின.

இவ்வாறு ஆங்காங்கே மன்னர்கள் உருவானதால் அவர்களுக்குள் நிலத்தைக் [நாட்டைக்] கைப்பற்றும் ஆசையும் பிறந்தது. சமூக மானுடவியல் அறிஞர்கள்  ‘உலகில் போர் என்பதே வயல்கள் நிரம்பிய வேளாண்மை சிறந்திருந்த உணவு ஏராளமாகக் கிடைத்த நாட்டைப்  கைப்பற்றும் நோக்கத்துடன் தான் தொடங்கியது  என்கின்றனர். வீரம் செறிந்தவரால் மட்டுமே நிலத்தைக் கைப்பற்ற முடிந்தது. வேளாண் பணிகளைப் பிரித்து கொடுத்து தனது நிலத்தைக் காப்பாற்றினான்.

இதனால் அவன் வணங்குவதற்கு ஏற்ற தெய்வமாக வாராகி விளங்கினாள். வாராகி வேளாண் சமுதாயத்தில் பகையை அழிக்கும் வீரக் கடவுளாகப் போற்றப்பட்டாள். ராஜராஜ சோழனைப் போன்ற மன்னர்கள் போருக்குப் போகும் முன்பு வாராகிக்குச் சிறப்பு பூஜைகள் செய்து வணங்கிச் சென்றனர்.

இவ்வாறு வாராகி அரசர்களின் ஆதரவு பெற்ற இன்றியமையாத் தெய்வமானதால் அனைத்துச் சமயங்களும் அவளைத்  தம்முடையவை ஆக்கிக் கொண்டன. புராணங்களும் அவளுக்கு புதுப்புது கதைகளை உருவாக்கின. எனினும், இன்றுவரை வாராகி தனித் தெய்வம். வீரத்தின் விளைநிலம். வேளாண்மையின் அடையாளம் என்றே உணர வேண்டும்.  

முனைவர் செ. ராஜேஸ்வரி