குறளின் குரல்-127



இலக்கியங்களில் கடல்

கடல்போல் பரந்த நீதி இலக்கியம் திருக்குறள். அது சொல்லாத நீதி இல்லை. கடலைப் பற்றியும் சொல்கிறது அது. கடலைப் பல இடங்களில் உவமையாக்குகிறது. கடலின் இயல்புகளைச் சொல்லி மனிதவாழ்வைச் செம்மைப்படுத்துகிறது.

‘பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார்’(குறள் எண் 10)

கடவுளுடைய திருவடிகளைச் சரணடைந்தவர்கள் தான் பிறவியாகிய பெருங்கடலைக் கடக்க முடியும்.
அல்லாதவர்கள் கடக்க இயலாது.
`நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.’ (குறள் எண் 17)

மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே மழையாகப் பெய்யாமல் போகுமானால் அந்தக் கடலும் தன் வளம் குன்றிவிடும்.
`பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற் பெரிது.’ (குறள் எண் 103)

இன்ன பயன் கிடைக்கும் என்றெல்லாம் யோசிக்காமல் ஒருவன் உதவி செய்வானேயானால், அந்த உதவியின் மதிப்பு கடலை விடப் பெரியதாகும்.
‘கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து’(குறள் எண் 496)

வலிய சக்கரங்களை உடைய நெடிய தேர்களே என்றாலும் அவை கடலில் ஓட இயலாதவையே. அதுபோல் கடலில் ஓடுகின்ற கப்பல்கள் நிலத்தில் ஓட முடியாது. எனவே யார்யாருக்கு எந்தெந்த இடத்தில் வலிமை என்பதை ஆராய்ந்து செயல்படுதல் அவசியம்.
`கடலன்ன காமம் உழந்தும் மடல்ஏறாப்
பெண்ணின் பெருந்தக்கது இல்’ (குறள் எண் 1137)

கடல்போன்ற காம நோயால் வருந்தியும் கூட மடலேறாமல்
துன்பத்தைப் பொறுத்துக் கொண்டிருக்கும்
பெண்பிறப்பைப் போன்ற பெருமையான பிறவி வேறு இல்லை.
`காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்.’ (குறள் எண் 1164)

காம நோயாகிய கடல் இருக்கிறது. ஆனால் அதை நீந்திக் கடந்து செல்வதற்கு வேண்டிய பாதுகாப்பான தோணிதான் இல்லை.
`படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண்.’ (குறள் எண் 1175)

அன்று கடலும் தாங்க இயலாத காமநோயை உண்டாக்கிய என் விழிகள், இன்று உறங்க முடியாமல் துன்பத்தால் வருந்துகின்றன.
`உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு.’ (குறள் எண் 1200)

நெஞ்சமே நீ வாழ்க! அன்பு இல்லாதவரிடம் உன்னுடைய அளவற்ற துன்பத்தைச் சொல்கின்றாய்.
அதற்குப் பதில் கடலைத் தூர்க்கும் முயற்சியில் ஈடுபடு. அதுகூட சாத்தியமாகலாம்.

திருக்குறளில் கடல் என்ற சொல்லை அப்படியே பயன்படுத்தும் இந்தக் குறள்கள் தவிர, கடலுக்கான வேறு சொற்களைப் பயன்படுத்திக் கடலைப் பற்றித் தெரிவிக்கும் சில குறள்களும் உண்டு. `விரிநீர், மாறா நீர், ஆழி, நாமநீர்’ ஆகியவையும் கடலைக் குறிக்கும் சொற்களே.
`விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உண்ணின்று உடற்றும் பசி.’ (குறள் எண் 13)

உரிய காலத்தில் மழை பெய்யாமல் போகுமானால் கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தாலும் உயிர்களைப் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்.
`கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி.’(குறள் எண் 701)

ஒருவன் வாயால் சொல்லாமல் இருக்கும்போது, அவனுடைய முகத்தையும் கண்ணையும் பார்த்தே அவனது மனக்கருத்தை அறிபவன், வற்றாத கடலால் சூழப்பட்ட இவ்வுலகிற்கு ஓர் அணிகலன் போன்றவன்.
`அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.’ (குறள் எண் 8)

அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்
 அல்லாமல் மற்றவர் பொருளும் இன்பமும் ஆகிய பிற கடல்களைக் கடக்க இயலாது.
`நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.’
(குறள் எண் 149)

கடல்சூழ்ந்த இவ்வுலகில் நன்மைக்கு உரியவர் யார் என்றால் பிறருக்கு உரிமையானவளின் தோளைப் பொருந்தாதவரே ஆவர்.
திருக்குறளில் மட்டுமல்ல, பழைய இலக்கியங்கள் பலவற்றில் கடல் மிக முக்கியமானதாகப் பேசப்பட்டுள்ளது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐவகை நிலங்களில் நெய்தல் நிலம் என்பது கடலும் கடல் சார்ந்த பகுதியுமே ஆகும். `வருணன் மேயப் பெருமணல் உலகமும்’ என்று தொல்காப்பியம் எழுதிச் செல்கிறது. `பெருமணல் உலகம்’ எனத் தொல்காப்பியம் குறிப்பது கடல்சார்ந்த பகுதியைத் தான்.

விரிதிரை பெருங்கடல் வளைஇய உலகம் (குறுந்தொகை 41), கடல்சூழ் மண்டிலம்
(குறுந்தொகை 137), முந்நீர் வளைஇய உலகம் (குறுந்தொகை 293), புலவுக் கடல் உடுத்த..மலர்தலை உலகம் (பெரும்பாணாற்றுப்படை 409 ஆம் வரி), விரிகடல் வேலி வியனுலகம் (சிறுபாணாற்றுப் படை 114ஆம் வரி) எனச் சங்க இலக்கியத்தில் நெடுகக் கடல் அலையடித்துக் கொண்டே
இருப்பதைக் காண்கிறோம்.

பண்டைய தமிழகத்தில் ஒருமுறை மாபெரும் கடல் சீற்றம் ஏற்பட்டிருக்கிறது. அந்த ஆழிப் பேரலையான சுனாமியால் அழிந்த இலக்கியங்கள் எத்தனையோ! அப்படியொரு கடல் கொந்தளிப்பு நிகழ்ந்ததற்குச் சாட்சியாக உள்ளன சிலப்பதிகாரத்தில் உள்ள கீழ்வரும் வரிகள்:
`பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள...’
புராணங்களிலும் கடல்சார்ந்த நிகழ்வுகளைக் காண முடிகிறது.
 சிவபெருமான் மீனவராக வந்து பார்வதியை மணம்புரிந்து கொண்டதைச்
சொல்கிறது திருவிளையாடல் புராணம்.

இரண்யாட்சன் என்ற அரக்கனால் கடலில் மூழ்கடிக்கப்பட்ட பூமியைத் திருமால் வாராக அவதாரம் எடுத்து வந்து கடலுக்கு மேலே உயர்த்திக் காத்ததைப் பேசுகிறது விஷ்ணு புராணம்.`புகை வர்ணமான ரோமங்கள் மேல்நோக்கிச் சுழல, தூக்கப்பட்ட வாலுடனும் கீழ் நோக்கிய மூக்குடனும் மேகங்களை வேகமாகப் பிளந்துகொண்டு நீர் புறப்பட்டீர். உம்மைத் துதிக்கின்ற முனிவர்களின் இதயங்களைக் குளிரச் செய்தவாறே அங்குமிங்கும் தேடும் கண்களோடு, கடல் தண்ணீரில் இறங்கினீர்!

பிறகு முதலைக் கூட்டங்கள் பயந்து ஓடவும், திமிங்கிலங்கள் சுழன்று வரவும், அலைகள் மோதவும் கொந்தளித்த தண்ணீரில் மூழ்கினீர்! பார்ப்பவர்களை நடுநடுங்கச் செய்துகொண்டு நீர் பூமாதேவியைத் தேடிச் சென்றீர்! பின் கோரப் பற்களின் நுனியில் பூமியைத் தூக்கிக் கொண்டு தண்ணீரை விட்டு வெளியே வந்தீர்!’

வாராக அவதாரம் நிகழ்த்திய செயலை குருவாயூரப்பனுக்கே எடுத்துச் சொல்லும் வகையில், நாராயண பட்டதிரி தம் நாராயணீயத்தில்
எழுதியுள்ள ஸ்லோகங்களின் பொருள் இது.அனுமன் கடலைக் கடந்த காட்சி சுந்தர காண்டத்தில் உண்டு. மலைமேல் நின்று அனுமன் கடலைத் தாண்ட முற்பட்டுத் தாவிய போது நேர்ந்த விளைவுகளைக் கம்பர் மிக அழகான கற்பனைகளைக் கலந்து எழுதிச் செல்கிறார்.

அந்த மலையிலிருந்து அச்சத்தோடு வெளிப்பட்ட பாம்புகள் மலையரசனின் குடல்போல் தோற்றமளித்தன. செந்தூரப் பொடி, அருவி நீரில் கலந்து பெருகிய காட்சி மலையரசன் ரத்தம் கக்குவதுபோல் தென்பட்டது. அனுமன் தாவிய வேகத்தில் அவனுடன் கொஞ்ச தூரம் சென்று பின் கடலில் மரங்கள் விழுந்த காட்சி, விருந்தினர்களை உறவினர்கள் சிறிதுதூரம் உடன்சென்று வழியனுப்புவதுபோல் தோன்றியது.

இவ்விதம் பலப்பல பாடல்களில் கம்பன் தீட்டும் கம்ப சித்திரம் படிக்கப் படிக்கத் திகட்டாதது. தெய்வ மடந்தையர் மலையில் நேர்ந்த
மாறுபாடுகளைக் கண்டு அஞ்சி ஊடல் தீர்ந்து தங்கள் நாயகரைத் தழுவிக் கொண்டார்களாம். பிறகு வானில் சென்றார்களாம். அப்போது அவசரத்தில் மலையிலேயே விட்டுவிட்டு வந்த தங்களுடைய அன்பான கிளிகளுக்காக அவர்கள் வருந்துகின்றார்களாம்.

`ஊறிய நறவும் உற்ற
குற்றமும் உணர்வை உண்ணச்
சீறிய மனத்தர் தெய்வ
மடந்தையர் ஊடல் தீர்வுற்று
ஆறினர் அஞ்சு கின்றார்
அன்பரைத் தழுவி உம்பர்
ஏறினர் இட்டு நீத்த
பைங்கிளிக்கு இரங்குகின்றார்!’

ராமன் சேது அணை கட்டிக் கடலைக் கடந்ததும் ராமாயணத்தில் விவரிக்கப் படுகின்றது. பஞ்ச பூதங்களில் ஒன்றான கடல், ராமனே ஆனாலும் தான் இயற்கை நியதிக்குக் கட்டுப்பட்டுள்ளதாகக்கூறி ராமனுக்கு வழிவிட மறுத்துவிடுகிறது. பிறகுதான் கடலரசன் சொன்ன யோசனைப்படி அணைகட்ட முற்படுகிறான் ராமன்.

அதற்கு மாறாக, பஞ்ச பூதங்களில் இன்னொன்றான நெருப்பு சீதைக்காகத் தன் இயற்கைப் பண்பை மாற்றிக் கொள்கிறது. அக்கினிப் பிரவேசத்தின்போது சீதையை நெருப்பு சுடவில்லை!ராமனுக்காக நீர் தன் இயல்பு மாறாதிருப்பதும் சீதைக்காக நெருப்பு தன் இயல்பை மாற்றிக் கொள்வதும் ஏன்? ஒருவேளை ஆணின் வீரத்தை விடப் பெண்ணின் கற்புநெறி உயர்வானது என்பதை உணர்த்துவதற்காகத்தான் இந்த
முரண்பாடா? சிந்திக்க வேண்டிய கேள்வி.

பிரளய காலத்தில் எங்கும் சூழும்கட்டுக்கடங்காத கடல் நீரில் ஆலிலைமேல் கண்ணன் குழந்தையாகத் தோன்றுவதை பாகவதம் விவரிக்கிறது.
திருமாலின் பத்து அவதாரங்களில் அவர் மீனாக அவதரித்தது தண்ணீரிலேயே தான். ஸத்யவிரதர் என்ற முனிவர் ஆற்று நீரை இறைத்துத் தர்ப்பணம் செய்கையில் அவரது இணைந்த உள்ளங்கையின் நீரில் பளபளப்பான வடிவுடன் ஒரு மீன்குஞ்சாகத் தோன்றினார் திருமால்.
அந்த மீன்குஞ்சை மறுபடித் தண்ணீரில் விட்டபோது அது பயந்ததுபோல் தோற்றமளிக்க அதைத் தன் கமண்டலத்தில் எடுத்துக் கொண்டு வீடு சென்றார் முனிவர்.

பிறகு தான் நடக்கத் தொடங்கியது அந்த அதிசயம். அந்த மீன் விரைவில் வளர்ந்து கமண்டலத்தை நிறைத்தது. அது பின் கிணற்றில் விடப்பட்டு கிணறளவு பெரிதாகியது. குளத்தில் விடப்பட்டபோது குளத்தின் அளவு வடிவம் பெற்றது.`இப்போது நான் என்னதான் செய்யட்டும்?’ என ஸத்யவிரதர் கேட்க, தன்னைக் கடலில் விட்டுவிடுமாறு கட்டளையிட்டது மீன். அது கடலில் விடப்பட்டபோது, அதைத் திருமால் எனக் கண்டுகொண்ட ஸத்யவிரதர், தாம் பிரளயத்தைக் காண விரும்புவதாகத் தெரிவித்தார். அவரிடம் ஏழுநாள் பொறுத்துக் கொண்டிருக்கச் சொல்லிவிட்டு மறைந்துவிட்டது மீன்.

ஏழாம் நாள் கொட்டத் தொடங்கியது அதுவரை உலகம் காணாத பெருமழை. உலகம் முழுவதுமே தண்ணீரில் மூழ்கியது. ஸத்யவிரதரும் சப்த ரிஷிகளும் நடுங்கியபோது பூமி ஒரு தோணியாக அவர்கள் முன்னே தென்பட அந்தத் தோணியில் ஏறிக் கொண்டார்கள் அவர்கள்.

மீண்டும் பிரளயப் பெருவெள்ளத்திலிருந்து மாபெரும் மீனாக உதித்த திருமால், தன் கொம்பில் அந்தப் படகைக் கட்டச் சொன்னார். படகை இழுத்துக்கொண்டு நீந்திச் சென்றது மீன். ஸத்யவிரதரும் சப்த ரிஷிகளும் அந்த ஆச்சரியகரமான பிரளயக் காட்சியை முழுமையாக தரிசித்துப் பின் திருமாலை வேண்டி வைகுந்த பதவிஅடைந்தார்கள் என்கிறது விஷ்ணு புராணம்.

புராணங்களில் மட்டுமா? தற்கால இலக்கியங்களிலும் கடல் தனக்குரிய அந்தஸ்தைப் பெற்றிருக்கிறது. வண்ணநிலவன் எழுதிய புகழ்பெற்ற புதினமான `கடல்புரத்தில்` என்ற படைப்பு பேசுவது கடல்சார்ந்த மனிதர்களின் வாழ்வைப் பற்றித்தான். மோட்டார்ப் படகில் சென்று மீன் பிடிப்பவர்களுக்கும் சாதாரணப் படகில் சென்று மீன் பிடிப்பவர்களுக்குமான பிரச்னைகளை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல் அது.

பிரபல எழுத்தாளர் நரசய்யா எழுதிய `கடலோடி’ என்ற பயண இலக்கிய நூல், தீரர் சத்தியமூர்த்தியின் புதல்வி லட்சுமி கிருஷ்ணமூர்த்தி நடத்திவந்த வாசகர் வட்டம் என்ற பதிப்பகத்தின் வாயிலாகப் பெருமை மிகுந்த நூலாக வெளிவந்தது. கப்பல் துறையில் பணியாற்றிய நரசய்யா, தம் பயண அனுபவங்களில் வாசகர்களைமூழ்கடிக்கிறார்.

தாம் பணிபுரிந்த பிரம்மாண்டமான கப்பல்கள், கடலில் குட்டித் தீவுகள் போல் அலையும் திமிங்கலங்கள், 1970களில் பாகிஸ்தானுடன் நடைபெற்ற போரில் விசாகப்பட்டினத்தில் இருந்த இந்தியாவின் ஒரே விமானந்தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தைத் தகர்க்க வந்த ஒரு பாகிஸ்தான் நீர்மூழ்கியை எப்படி ஜலசமாதி ஆக்கினார்கள் என்ற விவரம் என எல்லாவற்றையும் நேரில் காண்பதுபோல் எழுத்தில் காட்சிப்படுத்தும் அரிய கலை நரசய்யாவுக்குக் கைவந்திருக்கிறது.

தமிழில் கடலை ஆதாரமாகக் கொண்டு வாழும் பரதவர்களின் வாழ்வைச் சித்திரித்த முக்கியமான நாவல் சாகித்ய அகாதமி பரிசுபெற்ற ஜோ.டி. குரூஸ் எழுதிய `ஆழி சூழ் உலகு`. ஆமந்துறை என்னும் கடற்கரையோர கிராமத்தின் வரலாறாக விரியும் படைப்பு.தொடர்ந்து நம் மனக்காதில் அலையோசை கேட்டுக்கொண்டே இருப்பது போன்ற பிரமையைத் தோற்றுவிக்கும் ஆழமான புதினம் அது. தற்கால இலக்கியத்தில் கடல் சார்ந்த படைப்புகள் இன்னும் சில உண்டு.

மகான்களின் சரிதத்திலும் கடல் வருகிறது. புதுச்சேரி அன்னை இளம் வயதில் கப்பலில் வரும்போது அந்தக் கப்பல் புயலால் தத்தளிக்கிறது. பயணிகள் படும் துன்பத்தைப் பொறுக்காத அன்னை, தன் உடலிலிருந்து உயிரைப் பிரித்து வானில் பறந்து சென்று புயலை உருவாக்கிய தீய சக்திகளை அதட்டிப் புயலை நிறுத்தினார் என்றும் பிறகு மீண்டும் தன் உயிரைத் தமது உடலில் பொருத்திக் கொண்டார் என்றும் அவரது திருச்சரிதத்தால் அறிகிறோம். அன்னையின் மகிமையை உலகம் உணர்ந்து போற்றத் தொடங்கியதற்கு ஆதாரமாக அமைந்த முதல் சம்பவம் அது.

திரைப்பாடல்களிலும் கடலைக் கொண்டாடியிருக்கிறார்கள் நம் திரைக்கவிஞர்கள். `அக்கரையில் அவனிருக்க இக்கரையில் நானிருக்க அக்கரை இல்லாததென்ன கடலலையே’ என்றும், `போய்வா கடலலையே’ என்றும் `கண்ணானால் நான் இமையாவேன்..கடலானால் நான் நதியாவேன்..’ என்றும் கடலை உள்ளடக்கி எழுதப்பட்ட திரைப்பாடல்கள் இன்னும் பல.

நாவலாகவும் திரைப்படமாகவும் பெரும்புகழ் பெற்ற கடல்சார்ந்த மலையாளப் படைப்பு தகழியின் `செம்மீன்’. அந்த நாவல் சுந்தரராமசாமியின் மொழிபெயர்ப்பில் தமிழிலும் வெளிவந்து எண்ணற்ற தமிழ் வாசகர்களைக் கவர்ந்தது.

வள்ளுவர் காலத்துக் கடல் இன்றளவும் ஓயவில்லை. தமிழ் இலக்கியத்தில் கடல் இன்றும் ஏன் என்றும் அலையடித்துக் கொண்டேதான் இருக்கும்.

கடற்கரையில் அமர்ந்து நண்பரோடு வேர்க் கடலை சாப்பிட்டுக் கொண்டிருந்தார் கி.வா.ஜகந்நாதன். திடீரென `நாம் வேர்க்கடலை சாப்பிடுவது இருக்கட்டும்.

அகத்திய முனிவர் கூடக் கடலைச் சாப்பிட்டிருக்கிறார் தெரியுமா?’ எனக் கேட்டார். நண்பர் வியப்படைந்தபோது கி.வா.ஜ. விளக்கினார்.
`தேவர்களின் வேண்டுகோளின்படி ஒருமுறை அகத்தியர் சமுத்திரத்தை அப்படியே குடித்துத் தீர்த்தார். அதனால்தான் சொன்னேன் அகத்தியர் கடலைச் சாப்பிட்டிருக்கிறார் என்று!’

(குறள் உரைக்கும்)

திருப்பூர் கிருஷ்ணன்