இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன்-49அலங்காரத்தில் அழகன் !

விதம்விதமான அலங்காரங்களில் கருவறை மூலவரையும், உற்சவ மூர்த்தியையும் ஆலயங்கள் பலவற்றில் தரிசனம் செய்து நாம் மகிழ்கின்றோம். வண்ண மலர்களாலும், வஸ்திரங்களாலும் வேளைக்கொருஅலங்காரத்தை இறைவன் ஏற்றாலும், என்றும் அழியாத அலங்காரத்தை வழிபாடு தெய்வமான வடிவேலனுக்கு அணிவிக்க வேண்டும் என ஆசைப்பட்டார் அருணகிரிநாதர்.

மலர் அலங்காரம் சில மணிநேரங்களிலேயே வாடிவிடும். எனவே அருணகிரியார் எப்படிப்பட்ட அலங்காரம் செய்ய வேண்டும் என்று எண்ணினார் தெரியுமா ? திருப்புகழ் ஒன்றில் தன் ஆசையைத் தெரிவிக்கின்றார் அருணகிரிநாதர் . எந்நாளும் இற்றுப்போகாத என் இதய அன்பே மாலைக்கு நூலாக அமையவேண்டும்.

 உன் புகழையே எப்போதும் உச்சரிக்கும் என் நாவினால் அம்மாலையைக் கட்ட வேண்டும். மூலமுதலாகி நிற்கும் மூர்த்தியே உன்னைப் பூரணமாகப் புரிந்து கொண்ட ஞானமே அம்மாலையில் நறுமண வாசனையாக வீச வேண்டும். என் புத்தி அதில் பொருந்துகிற வண்டாக வேண்டும்.

மாலையின் குஞ்சமாக என் நெஞ்சம் விளங்க வேண்டும். மகாமந்திரச் சொற்களால் அழியாத அலங்காரமாக, ஆறுமுகப் பெருமாளே, உங்களுக்கு அடியேன் அந்த அற்புதச் சொற்பத மாலையை தங்களின் ஆறிரு தடந்தோள்களிலும் அணிவிக்க வேண்டும்.

ஆசைகூர் பத்த னேன்மனோ பத்ம
மானபூ வைத்து ...... நடுவேயன்
பானநூ லிட்டு நாவிலே சித்ர
மாகவே கட்டி ...... யொருஞான
வாசம்வீ சிப்ர காசியா நிற்ப
மாசிலோர் புத்தி ...... யளிபாட
மாத்ருகா புஷ்ப மாலைகோ லப்ர
வாளபா தத்தி ...... லணிவேனோ
மூசுகா னத்து மீதுவாழ் முத்த
மூரல்வே டிச்சி ...... தனபார
மூழ்குநீ பப்ர தாபமார் பத்த
மூரிவே ழத்தின் ...... மயில்வாழ்வே
வீசுமீ னப்ப யோதிவாய் விட்டு
வேகவே தித்து ...... வருமாசூர்
வீழமோ திப்ப ராரைநா கத்து
வீரவேல் தொட்ட ...... பெருமாளே

மேலே சொன்ன வேண்டுகோள்படியே வேலவனுக்கு அவர் அணிவித்த மகாமந்திர மாலைகள்தான் திருப்புகழ், திருவகுப்பு, கந்தர் அலங்காரம், அனுபூதி, அந்தாதி, வேல் மயில் விருத்தம் ஆகியவை ஆகும். மல்லே புரி பன்னிருவாகுவில் என்
சொல்லே புனையும் சுடர் வேலவனே -என்ற கந்தர் அனுபூதிச் செய்யுளாலும்,...

‘இலக்கணங்களும் இயல் இசைகளும் மிக
விரிக்கும் அம்பல மதுரித கவிதனை
இயற்று செந்தமிழ் விதமொடு புயமிசை புனைவோனே’ -என்ற திருப்புகழ் வரிகளாலும் அருணகிரியாரின் சொல் அலங்காரத்துடன் சுடர் விடுகிறார் சுப்ரமண்யர் என்று அறிந்து கொள்ளலாம். கந்தர் அலங்காரம் என்பதற்கு மூன்று விதமாக நாம் பொருள் கூறலாம்.

1). கந்தப் பெருமானின் வாகனமாக மயில், ஆயுதமான வேல், கொடியாக விளங்கும் சேவல், அவரின் பன்னிரு தோள்கள், இரு நாயகியர், ஆறுமுகங்கள் என முருகப் பெருமான் தோன்றும் விதத்தை அதாவது. அவரின் அலங்காரத்தை விரித்துப் பேசுகின்றது. 2). எதுகை, மோனை, அணிவகைகள், வண்ண வேற்றுமை, தாளக் கட்டு, ஓசை ஒழுங்கு உவமை, உருவகம் என அலங்காரமாக இப்பாடல்கள் அமைந்துள்ளன.

3). வாக்கிற்கு அருணகிரியின் பாடல் வரிகளையே வடிவேலன் தன் அலங்காரமாக ஏற்றுக் கொண்டிருக்கின்றான்.  வெள்ளத்தால் போகாத, வெந்தனலால் வேகாத உயர்ந்த கவிமாலையாக ஏற்றிப் போற்றப்படுகிறது வாக்கிற்கு அருணகிரியின் வண்ணத்தமிழ் அலங்காரம்.
அதிகாரம் செய்யும் காலனுக்குக்கூட அலங்காரத்தை தினசரி ஓதும் அன்பர்கள் அஞ்ச வேண்டாம். அவர்கள் பூரண நலத்துடன் பொலிவார்கள். காரணம் அருணகிரியாரின் அருட்பாக்கள்.

சலம் காணும் வேந்தர் தமக்கு அருட்பாக்கள்.
யமன் சண்டைக்கு அஞ்சார்
துலங்கா நரகக்குழி அணுகார்
துட்டநோய் அணுகார்
கலங்கார் புலிக்கும் கரடிக்கு யானைக்கும்
கந்தன் நன் நூல் அலங்காரம் நூற்றுள்
ஒரு கவிதான் அறிந்தவரே !
கந்தர் அலங்காரம் ஓதும் அன்பர்களே! காலனுக்கு அஞ்ச வேண்டாம் என்னும்போது அருணகிரியாரை எமன் அண்டுவானா ? பாம்பன் சுவாமிகள் பாடுகின்றார். ‘எமனுடைய ஊறொழிந்த அருணகிரிநாதர்’ என்று.

முருகப் பெருமான் தோள் மீது கிளிவடிவில் அருணகிரியார் விளங்குகின்றார். திரு அண்ணாமலை ஆலயக்கோபுரம் ஒன்றுள் அவர் அமர்ந்திருந்ததால் இன்றும் அது கிளிக்கோபுரம் என்று அழைக்கப்படுகின்றது.

 துகளில் சாயுச்சிய கதியை ஈறற்றசொல்
சுகச் சொரூபத்தை உற்றடைவேனோ
 - என்பது திருப்புகழ்.

கிளி மட்டுமே பறவைகளில் பேசும் சக்தி பெற்றது.கிளத்துவதால் கிளிஎன்பது காரணப் பெயர். பாரதியாரும் கலைமகளின் இருப்பிடங்களை கூறும் போது கிளியின் நாவை இருப்பிடம் கொண்டாள் என்று பாடுகின்றார். மேலும், சொன்னதைச் சொல்லும் கிளிப் பிள்ளை என்பார்கள். சுவாமிநாதனாகிய முருகப் பெருமான் தனக்கு உபதேசமாகச் சொன்னதை உலகினர்க்கு அப்படியே திருப்பிச் சொன்னவர் அருணகிரியார். அதனால்தான் தாயுமானவர் கீழ்கண்டவாறு பாடுகின்றார்.

கந்தர் அனுபூதி பெற்று கந்தர் அனுபூதி சொன்ன
எந்தை அருள்நாடி இருக்கும் நாள் எந்நாளோ ?
ஐயா, அருணகிரி அப்பா! உனைப் போல
 மெய்யாக ஓர் சொல் விளம்பினர் யார் ?

முருகப் பெருமான் மலர் வாக்கால் உபதேச விசேஷம் பெற்ற உயரிய இடத்தில் விளங்குகின்றார், அருணகிரிநாதர். அதுமட்டுமல்லாது, அனைவரும் அந்த அனுபூதிப் பெறும் நிலையை அடையும் பொருட்டு வாக்கில் அதை வழங்கியவர் அருணகிரியார். அதன் காரணமாகவே கருணைக்கு அருணகிரி என்ற சொற்றொடர் வழங்கப்படுகிறது, முருகப் பெருமானிடம் உபதேசம் பெற்றவர்கள் மூலம்.

‘‘குறு முனியார்க்கும், திருப்புகழ்ப் பண்ணவர்க்கும்
ஆலாலம் உண்டவர்க்கு உபதேசித்த என் ஆண்டவனே...’’
மேற்கண்டவாறு முருகர் அந்தாதி குறிப்பிடுகின்றது.

 உபதேசம் வாய்க்கப் பெற்ற பரமசிவனும் , அகத்தியரும் தான்பெற்ற பெரும் பேற்றினைத் தன்னளவிலேயே வைத்துக் கொண்டனர். அவனியோர் அனைவரும் பெற அருணகிரியார் மட்டுமே அதை அம்பலத்தில் கட்டுச் சோறாக அவிழ்த்து அனைவரும் பெற வழி செய்தார்.
அருணகிரியார் பூவுலகில் வாழ்ந்த காலம் பதினைந்தாம் நூற்றாண்டு.

 ‘பிரபுடதேவ மாராஜர் உளமும் ஆட
 வாழ்தேவர் பெருமாளே’
 - என திருப்புகழ் ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 பிரபுடதேவர் - விஜய நகரப் பேரரசர். அவர் அரசாண்டகாலம் 15ஆம் நூற்றாண்டு. எனவே, அப்பாடல் வரியால் அருணகிரியார் காலத்தை பெரியவர்கள் கணித்தார்கள். அருணகிரியார் காலத்திற்குப்பின் இப்போது வரை எழு நூறு ஆண்டுகளாக வாழையடி வாழையாக வருகின்றஞானிகள் அனைவருமே அருணகிரியாரே உச்சிமேல் வைத்து மெச்சுகின்றனர்.

 தாயுமானவர், திருப்போரூர் சிதம்பரம் சுவாமிகள், அருட்பிரகாசர் காவடிச்சிந்து அண்ணாமலை, பாம்பன் சுவாமிகள், திருமுக கிருபானந்த வாரியார். மஹா பெரியவர் என ஆன்மிகப் பெரியவர்கள் அனைவருமே அருணிகிரியார் அருளிய நூல்களை வேதமாகப் போற்றுகின்றனர்.
திருப்புகழ் பாடும் அன்பர்கள் திசை எட்டும் பரவி உள்ளனர். பூவுலகில் வாழ்பவர்கள் மட்டுமல்லாது வானுலகில் வசிக்கும் தேவர்களின் செவியிலும் தேனாகப் பாய்கிறது திருப்புகழ் என்று வியந்து போற்றுகின்றார் காவடிச் சிந்து அண்ணாமலை ரெட்டியார்.

அருணகிரி நாவில் பழக்கம் - பெறும்
 அந்தத் திருப்புகழ் முழுக்கம்
பல அடியார்கணம் மொழி போதினில்
 அமராவதி இமையோர் செவி அடைக்கும் !
அண்டம் உண்டக்கும்.

ஆனி மாதம் முழுநிலவு ஒளி வீசும் மூல நட்சத்திரத்தில் முருகவேளுடன்ஜோதி வடிவில் அருணகிரியார் ஒன்றினார் என்று பாம்பன் சுவாமிகள், திருமுருக வாரியார் வழிபாடு செய்கின்றனர்.தான் பாடிய அனைத்துப் பனுவல்களின் நிறைவிலும் அருணகிரியார் பெயரைப் பதிக்கின்றார், பாம்பன் சுவாமிகள்.

வடமொழி கலப்பே தமிழ் மொழியில் கூடாது என வாதம் புரிந்த மறைமலை அடிகளே மணிப்ரவாளத் திருப்புகழ் முன் மண்டியிட்டுப் பணிந்தார் என்றால் திருப்புகழின் பெருமைதான் என்னே என்று அனைவரும் வியக்கின்றனர்.மறைமலை அடிகள் திருப்புகழின் கீர்த்தியைக் கீழ்க்கண்டவாறு உரைக்கின்றார்.

வருக்கைச் சுளையும் பொருக்கரை மாவும்
செழுங்கனி வாழையும் செழுஞ்சுவைக்கன்னலும்
ஒருங்குதலை மயங்கிய அரும் பெருங் கலவையின்
 அருஞ்சொல் வழக்கமும் திருந்திய நடையும்
 வண்ண வேற்றுமையும் தண்எனும் ஏழுக்கமும்
 ஒன்றி நிரம்பிய குன்றாத் திருப்புகழ்.

கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, கந்தர் அந்தாதி, வேல்மயில் விருத்தம், திருப்புகழ், திருவகுப்பு என ஆறு புகழ் நூல்களால் காலத்தால் கலையாத அலங்காரத்தை கந்தபெருமானுக்குச் செய்த குருநாதர் அருணகிரியாரைக் கொண்டாடி மகிழ்வோம்!

(தொடரும்)

-திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்