உலக வேள்வி தொடரட்டும்!வணக்கம்  நலந்தானே!

வராகப் பெருமாளின் அவதாரமும் சரி, வாராகியும் சரி உருவமைப்பில் பெரும் ஒற்றுமையை கொண்டிருக்கின்றன. இரண்டுமே வீரத்தின் அடையாளமாக விளங்குகின்றன. வராக அவதாரம் நிகழ்ந்ததின் பின்னணியை நாம் நுட்பமாகப் பார்க்க வேண்டும். இரண்யாட்சன் எனும் அசுரன்  பூமியையும் அதிலுள்ள வேதங்களையும் கவர்ந்து சென்றான். அவனுடன் யுத்தம் புரிந்து பூமியை மீட்டபடி கடலிலிருந்து எழுவதுபோன்ற திருவுருவத்தையே நாம் வராகப் பெருமாள் என்று வணங்குகின்றோம்.

இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், வராகம் என்பதை மத் பாகவதம் உள்ளிட்ட நூல்கள் யக்ஞ புருஷன் என்று வர்ணிக்கின்றன. யாகத்திற்கு அதிபதியானவன் எனும் பொருள்பட பேசுகின்றன. அதாவது, வராகப் பெருமாளின் திருமேனியில் காணப்படும் ஒவ்வொரு ரோமமும் ஒவ்வொரு ஹோம குண்டங்களாகும். யாக சாலைகளாலும் என்று விவரிக்கின்றன. இப்போது பெருமாள் பூமியில் அழிந்து போயிருந்த யாகத்தை அதாவது வேள்வியை மீட்டெடுத்தார் என்று பொருள் வரும்.

அப்போது இங்கு வேள்வி என்று எதைக் குறிக்கின்றது என்பதை நாம் பார்க்க வேண்டும். வேள்வி என்பது உலகத்தின் ஒட்டுமொத்த செயல் திறனே ஆகும். தொடர்ந்து உலகம் இயங்கி இயங்கி வினைபடுதலே வேள்வியாகும். இந்த வேள்வியையே வைதீகத்தில் அக்னியாக நிலைப்படுத்தியிருக்கின்றார்கள்.

எனவே, தன்னுடைய இயக்கத்தை நிறுத்தியிருந்த பூமியானது அதாவது பூமியிலுள்ள உயிர்கள், மக்கள் என்று அனைவரும் ஏதோவொரு அச்சத்தால் தங்கள் செயல்களை நிறுத்தி வேள்வி எனும் தொழிலைச் செய்ய முடியாமல் தவித்து நின்றனர். அப்படி நின்றபோது மீண்டும் அந்த இயக்கத்தை தொடரச் செய்யவும், ஒரு முழு முடக்கத்திலிருந்து வெளிவரச் செய்தவரே வராகப் பெருமாள். இதுவே அவரின் அவதார நோக்கமாகும்.  

அதுபோலவே, அச்சத்தால் நடுங்கிக் கொண்டிருந்த தேவர்களையும், மக்களையும் காப்பதற்காக சும்ப நிசும்ப சகோதரர்களை வதம் செய்வதற்காக காளி எடுத்த அவதாரத்தில் படைத்தலைவியாக வாராகி வருகின்றாள். இங்கு அசுரச் சக்திகள் என்பது கண்ணுக்குத் தெரியாத தூம்ர லோசனன் என்கிற புகை வடிவிலும் இருக்கலாம். சகல இயக்கத்தையும் நிறுத்தி பந்த் எனும் பொருள் வரும்படியான பண்டாசூரனாகவும் இருக்கலாம்.

தன்னையே இரண்டிரண்டாக பெருக்கிக் கொள்ளும் ரக்தபீஜன் எனும் அரக்கனாகவும் இருக்கலாம்.  இவையாவும் பிரபஞ்சத்தில் மனிதர் உட்பட சகல உயிர்களின் இயக்கத்தை நிறுத்தும் சக்தியாகவே புராணங்களில் கூறப்படுகின்றது.

அப்படிப்பட்ட கடுமையான அரக்கர்களை அழித்து உயிர்களை தங்களின் பழைய நிலைக்கு கொண்டு செல்லும் சக்தியாகவும் வீரத்தோடு போர் தொடுத்து வெற்றி பெறச் செய்யும் வெற்றி தேவதையாகவும் வாராகி விளங்குகின்றாள். புராணம் மிக மிக ரகசியமானது. அது எப்போதும் நிகழ்வதையே கதையாக வைத்துள்ளது. இப்போதுள்ள சூழலில் உலக வேள்வியில் வெற்றி பெற வாராகியை வழிபடுவோம். வைரஸை ஒழிப்போம்.

கிருஷ்ணா

(பொறுப்பாசிரியர்)