சமயம் வளர்த்த நாயன்மார்கள்-2



வெண்ணீற்றின் மணம் கமழும் சேக்கிழார்!

பாலாறு பாயும் தொண்டை நாட்டிலுள்ள இன்றைய சென்னை - குன்றத்தூரான புலியூர் கோட்டமெனும் தலத்தில் சேக்கிழார் குடியினர் வசித்து வந்தனர். குன்றத்தூரைப்பற்றி அந்த ஊரிலேயே உள்ள திருநாகேஸ்வரம் கோயிலிலும், நத்தம் கோயிலிலும் கல்வெட்டுக்கள் வாயிலாக பல செய்திகளை அறியலாம். ஏறக்குறைய சேக்கிழார் குடியினர் இருந்த காலத்தில் குன்றத்தூர் பெரிய நகரமாக இருந்துள்ளது.

பெரிய தெருக்களோடு கூடிய மாட மாளிகைகளும் இருந்தன. இசையையும் நடனத்தையும் வளர்த்தனர். கோயிலை அடுத்துள்ள மடத்தில் எப்போதும் சிவனடியார்கள் தங்கியிருந்தனர். சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச் செய்த திருத்தொண்டர் தொகை எனும் அற்புதமான  நாயன்மார்களின் திருவரிசைப் பதிகங்களை சொல்லிச் சொல்லி எல்லோருக்குள்ளும் பக்தித்  தழலை மூட்டினர்.  

கரிகாற் பெருவளத்தான் தொண்டை நாட்டில் குடியேற்றிய நாற்பத்தொண்ணாயிரம் வேளாளர் குடும்பங்களுள் சேக்கிழார் குடும்பமும் ஒன்றாகும். சேக்கிழார் மரபினர் சைவம் தவிர வைணவத்திலும் பக்தி மிகுந்தவர்களாக விளங்கினர்.சேக்கிழார் எனும் சொல் இடத்தைக் குறிப்பது அல்ல. அதை இரண்டு வகையாக பிரிக்கலாம்.

சே என்றால் எருது. கிழான் என்றால் உரிமை உடையவன். அதாவது எருதினை உரிமையாகக் கொண்டவன். யார் எருதினை உரிமையாக உடையவன் என்று பார்த்தால் சிவபெருமானே அதற்கான விடையாகும். இன்னொரு பொருளில் சேக்கிழான் என்பது பயிர்த் தொழிலுக்கு உரிமையாகக் கொண்ட வேளாளன் என்றும் பொருள்படும். ஆனால், இப்பொருளை விட சிவபெருமானுக்குரியவரே எனும் பொருளே சரியானதாகும்.

கி.பி. பதினோராம் நூற்றாண்டின் கடைப் பகுதியில் வெள்ளியங்கிரி மற்றும் அழகாம்பிகை ஆகியோருக்கு முதல் மகனாக சேக்கிழார் பிறந்தார். பெற்றோர் இருவரும் பெரும் சிவபக்தர்களாக விளங்கினர். பல தலங்களுக்குச் சென்று வந்தனர். பல்வேறு தீர்த்தங்களில் நீராடினர். சேக்கிழாருக்கு பெற்றோர் அருள்மொழித் தேவர் என்று பெயரிட்டனர். சேக்கிழாருக்குப் பிறகு பாலறாவாயர் என்கிற மகன் பிறந்தான்.

சேக்கிழார் தமது ஐந்தாவது அகவை முதலே தந்தையிடமிருந்து கேட்டுக் கேட்டு திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் போன்றோரின் அருட்பதிகங்களை பாடி வந்தார். மிகக்குறுகிய காலத்திலேயே சேக்கிழார் சைவ சமயத்திலுள்ள பக்தி இலக்கியங்களை வாசித்து முடித்திருந்தார்.

இவற்றில் அவரை மிகவும் கவர்ந்தது திருத்தொண்டர் தொகையில் வரும் அடியார்கள் குறித்த சரிதமே ஆகும். அவரது இதயத்தில் சதாகாலமும் அந்த அடியார்களின் பக்தித் திறனும், சிவ ஞானத்தில் தோய்ந்திருந்த அவர்களின் உள்ளமும் மெய்சிலிர்க்க வைத்தது. இப்படியொரு பக்தியா… என்னவொரு சரணாகதி என்று அவருள் நாயன்மார்களின் கதை எனும் அமுதம் நுரைத்துப் பொங்கியபடி இருந்தது. அது புராண வாயிலாக வருவதற்கு காலம் ஒரு மன்னரைத் தந்தது. அந்த அரசனே அநபாய சோழன் ஆவான்.

ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனின் பரம்பரையில் வந்த அநபாய சோழன் என்கிற இரண்டாம் குலோத்துங்கனே பல்லவர்க்குப் பின் தென்னிந்தியா முழுவதையும் ஆண்டான். சோழர்களின் பெரும் கொடை என்னவெனில் சகல சிவாலயங்களிலும் நாயன்மார்களின் சிலைகளை எடுப்பித்ததே ஆகும். இவ்வாறு மக்கள் மத்தியில் நாயன்மார்களின் கதைகளை செவிவழியாகவும், கோயில் சிலைகள் வழியாகவும் கொண்டு சென்றனர். மக்களும் தங்களின் பிள்ளைகட்கு ஆணாக இருந்தால் ஆலாலசுந்தரன், திருஞானசம்மந்தன், திருநாவுக்கரசன், பரஞ்சோதி, கலியன், சிங்கன், கோட்புலி என்று நாயன்மார்களின் பெயரைச் சூட்டி மகிழ்ந்தனர். பெண்களெனில் மங்கையர்கரசியார், திருவெண்காட்டு நங்கை, பரவையார், திலகவதி என்றெலாமும் பெயரிட்டு இன்புற்றனர்.  

இப்படிப்பட்ட சைவத்தின் பொற்காலமாக அநபாயச் சோழன் காலம் விளங்கியது. பெரும்பாலும், சிதம்பரம் தில்லை நடராசர் ஆலயத்திலேயே தம் பொழுதை போக்கினான். ‘‘நடராஜருடைய திருவடிகள் ஆகிய செந்தாமரையிலுள்ள அருளாகிய தேனைக் குடிக்கும் ஈயைப் போன்றவன்’’ என்று அநபாயனின் பக்தியைப் வியந்தோதினர்.  

அநபாயச் சோழன் சிறந்த தமிழ்ப் புலவனும் ஆவான். ஒட்டக்கூத்தர் உள்ளிட்ட பெரும் தமிழ் புலவர்கள் அரசவையை அலங்கரித்தனர். சங்க இலக்கியங்கள் குறித்தும், ஊரைக் குறித்தும், அரசனைக் குறித்தும் ஏதேனும் கேள்வியை கேட்டபடி இருப்பான். அநபாயன் என்ன கேள்வியை எப்போது கேட்பான் என சிலசமயம் கலக்கத்தோடு புலவர்கள் அமர்ந்திருப்பதும் உண்டு. ஒருமுறை அநபாயன் புலவர்களை கூட்டினான்.

‘‘புலவர்களே, மூன்று கேள்விகளை கேட்கிறேன். நீங்கள் இதற்கான பதிலைக் கூற வேண்டும். முதல் கேள்வி, மலையிற் பெரியது எது? இரண்டாவது, கடலிற் பெரியது எது? மூன்றாவது, உலகிற் பெரியது எது? என்று புலவர்களை கேட்டு ஏறிட்டுப் பார்த்தான். இந்த மூன்று கேள்விகட்கும் புலவர்கள் என்ன பதில் சொல்வதென்று அறியாது கலக்கத்தோடு அமர்ந்திருந்தனர். இக்கேள்விகள் மூன்றும் தமிழ் நூல்களைப் பற்றியவை என்பதை அவர்கள் அறியாதிருந்தனர்.

அரசன் கேட்டு விட்டான் சரியான பதிலைச் சொல்ல வேண்டும். இல்லையெனில் இழிவாகப் பார்ப்பானே என்றுதான் பயந்தனர்.
தொண்டை நாடு முழுவதும் கேள்விகள் பரவின. தொண்டை நாட்டுப் புலவர்கள் பல்வேறு விதங்களில் விடை காண முயன்றனர். திண்ணையில் அமர்ந்திருந்த சேக்கிழார் ஒரு அரசு அலுவலகர் மூலம் இந்தக் கேள்விகளை செவியுற்றார். மென்மையாக புன்னகை பூத்தார். தமக்குள்ளேயே, ‘‘திருக்குறளை படித்துப் பாக்களை நினைவில் கொண்டால் இவற்றுக்கு எளிதாக விடை கூறலாம்’’ என்று கூறிக் கொண்டார்.
ஒவ்வொரு கேள்வியை எழுதினார். அதற்குத் தகுந்த பதிலையும் எழுதத் தொடங்கினார்.

1. மலையில் பெரியது எது?

நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது. தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின் உயர்வை விட மிகவும் பெரிதாகும்.

2. கடலிற் பெரியது எது?

பயன் தூக்கார் செய்தஉதவி நயந்தூக்கின் நன்மை கடலிற் பெரிது. இன்ன பயன் கிடைக்கும் என்று ஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலை விடப் பெரியதாகும்.

3. உலகிற் பெரியது எது?

காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.  
உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும்.

சேக்கிழார் தக்க அரசு அலுவலர் மூலம் இந்த விடைகளை அரசனுக்கு அனுப்பி அநபாயானும் அதைப் படித்துப் பார்த்தான். சேக்கிழாரது நுண்ணறிவினை வியந்தரன். உடனடியாக அந்தப் புலவர் இங்கு வந்தருள வேண்டும் என்றார். சேக்கிழாரும் அரசனின் வருகை ஓலையைக் கண்டார். பெரிதும் மகிழ்ந்தார். ஏற்கனவே, அநபாயனின் தமிழ் புலமையையும், சைவத்தின் மீதான பெரும் பற்றையும் நன்கு அறிந்திருந்தார். ஒரு நன்னாளில் அநபாயனைக் காண புறப்பட்டார். வழியெங்குமுள்ள சிவத் தலங்களை தரிசித்தபடியே சென்றார். அரசவைக்குள் சென்று
மன்னனைச் சந்தித்தார்.

சேக்கிழாரின் திருமுகப்பொலிவும், நெற்றியிலுள்ள திருவெண்ணீறையும் கண்டு  மகிழ்ந்தார். அவரின் தீட்சண்யமான திருப்பார்வையை கண்டு ஆஹா… இவர் புலவர் மட்டுமல்ல உள்ளொளி பெற்ற பெருமகனார் ஆயிற்றே என்று மரியாதையோடு வரவேற்றார். தமிழின் பெரும் இலக்கியங்களையும் அதன் நுட்பங்களையும், பக்தித் தமிழின் ஆழங்களையும் பல நாட்கள் அமர்ந்து பேசினார்கள். அநபாயனின் அனைத்துச் சந்தேகங்களையும் சேக்கிழார் தீர்த்தபடி இருந்தார். புலமையோடு அவருக்குள் இருந்த அரசியல் அறிவும் அநபாயனை பிரமிக்க வைத்தது.

ஒருநாள் அரசவையைக் கூட்டினான். ‘‘தொண்டை நாட்டுப் பெரும் புலவராகிய அருள்மொழித் தேவர் இன்று முதல் நமது சோழப் பெருநாட்டு முதல் அமைச்சராக விளங்குவார். நான் அவருக்கு உத்தமச் சோழப் பல்லவராயர் என்னும் பட்டத்தை அளிக்கின்றேன்’’ என்று அநபாயன் அறிவித்தான். சேக்கிழார் இந்த அருமையான சந்தர்ப்பத்தை தீர்த்த யாத்திரைக்கு பயன்படுத்திக் கொண்டார். இன்றைய தமிழகம் முழுவதும் பயணித்தார். அமைச்சராக இருப்பதாலேயே எல்லா சிற்றரசர்களும் அவரை வரவேற்று விருந்தளித்தனர்.

எல்லாவித மரியாதைகளை ஏற்றுக் கொண்டாலும் அவரின் அகத்தே ஒவ்வொரு தலங்களைப்பற்றிய குறிப்புகளையும் எழுத்திக் கொண்டே வந்தார். இவர் சந்தித்த சில சிற்றரசர்களின் முன்னோர்களில் சிலர் நாயன்மார்களாக இருந்ததால் அவர்களைக் குறித்து பல்வேறு விஷயங்களை கேட்டுக்கேட்டு குறிப்பெடுத்துக் கொண்டார்.

இப்படி பல்வேறு விஷயங்களை ஆராய்வதற்காகவே ஒவ்வொரு தலமாகச் சென்று பார்த்தபடி இருந்தார். இதைவிடச் சிவத் தொண்டு செய்யும் வேறு வாய்ப்பு கிடைக்காது என்று நெஞ்சு முழுவதும் சந்தோஷம் பரவ யாத்திரையையும் அமைச்சகப் பணியையும் சேர்த்து பார்த்தபடி இருந்தார்.

அநபாயச் சோழன் உட்பட பல்வேறு மன்னர்கள் சிவனார் மீது பெரும் பக்தி செய்தபோதிலும், சீவக சிந்தாமணி போன்ற காப்பியங்களையே  மிகவும் ரசித்து அனுபவித்திருந்தனர். காப்பியம் கூறும் அனுபவம் தாண்டி சிவத்தின் மான்மியம் பகரும் பெரும் புராணம் ஒன்றை படைத்தே ஆக வேண்டும்.

காப்பியத்தின் இலக்கியச் சுவையை விட சிவானுபூதி தரும் ஞானப் பெருநிதியே உயர்ந்தது என்று நிறுவ வேண்டும் என்று உறுதி பூண்டார்.

அரசனைப் பார்ப்பதற்காக அரசவையை நோக்கி நடந்தார். சிவனருள் அவரோடு தொடர்ந்து சென்றது. சேக்கிழாரின் அண்மையை அநபாயன் வெண்ணீற்று மணமாய்  உணர்ந்தான்.

(சிவம் ஒளிரும்)

கிருஷ்ணா