முருகா... முருகா...



உள்ள(த்)தைச் சொல்கிறோம்

‘சர்ப்ப தோஷம் நீக்கும் குக்கே சுப்ரமண்யா’ கண்டேன். சர்ப்ப தோஷத்திற்கு என்ன செய்ய வேண்டும்  எந்த கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்று திண்டாடுபவர்களுக்கு இந்த கோயில் ஓர் வரப்பிரசாதம்தான். தூணின் உள்ளே வாசுகிப் பாம்பு உறைவதாக கூறி அதற்கு வெள்ளி முலாம் பூசுவது என்னை மெய்சிலிர்க்க வைத்தன.
- வண்ணை கணேசன், சென்னை.

தலையங்கம் படித்தபின் ஞானம் பிறந்து நம்மை யார்? என உணர வைத்து விட்டது. ‘குக்கே’ சுப்பிரமணிய சுவாமி கோயிலைப்பற்றி இவ்வளவு விரிவாக இதுவரை யாரும் இப்படியொரு தகவலைத் தந்ததே இல்லை. கும்பகோணம் சார்ங்கபாணி கோயில் பற்றிய முழு விவரங்கள், அக்கோயிலின் பிரசாதம் போன்றவை சந்தோஷம் தந்தது.ஒரே இடத்தில் ஆறுபடை வீட்டு முருகனின் இருப்பிடம், அதன் விவரம், வரலாறு, அதன் மகிமைகள் இவைகளை ஒன்றாக கண்டபோதும்,  தை கிருத்திகையும், தைப்பூசமும் அமைந்ததின் ஒற்றுமையும் கண்டு மெய்சிலிர்த்தேன்.
- சிம்ம வாஹினி,வியாசர் காலனி.

ஆனந்த வாழ்வருளும் ஆறுபடையப்பா கண்டேன். ஆறுபடைகளுக்குச் செல்லும் நேரம். பணம் எவ்வளவு செலவாகும். ஆனால், அதே நேரத்தில் எல்லா முருகக் கடவுளை சேர்த்து பார்த்து பரவசமடையச் செய்யும் பெசன்ட் நகர்... இவ்வளவு நாள் தெரியாமல் போயிற்றே. இனி மாதா மாதம் ஆறுபடைகளை தரிசனம் செய்யலாம் போலிருக்கிறதே?
- ரேவதி ஷண்முகம். சேலம்.

அடேயப்பா... சும்மா இருக்கவும் இறைவன் அருள் வேண்டுமா? நினைக்கவே வியப்பாக இருக்கிறது. இதை எல்லாம் பார்க்கும்போது ‘அவனின்றி ஓர் அணுவும் அசையாது’ என்ற கருத்துதான் என் இதயத்தில் பாய்ந்தது.
- உஷா ராஜகோபாலன். ஈரோடு.

கும்பகோணம் சார்ங்கபாணி திருக்கோயில் குறித்து ஆன்மிக பலன் இதழின் ஆன்மிக பக்கங்கள் வாயிலாக அறிந்தோம். திருக்குடந்தையில் செய்த பாவம் திருக்குடந்தையிலேயே தீர்க்கப்பட வேண்டும் என்ற ஆன்மிக அற்புதத்தை அறிந்துகொண்டோம்.
- முனைவர்.இராம.கண்ணன், திருநெல்வேலி.

தைப்பூசம் இதழ். முருகனின் பெருமைகள், கருணைகள், எல்லாவற்றையும் கூறின. ‘‘காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள்’’ தொடரில் இராவணனின் சரித்திரத்தை வாசகர்களாகிய நாங்கள் அறிந்து கொண்டோம்.
- எஸ்.ஜெகன், சாந்திநகர்.

கர்நாடகா மாநிலம் சர்ப்ப தோஷம் நீக்க குக்கே நாக சுப்ரமணியர் கோயில் படங்களுடன் ஆன்மிக தகவல்கள் நாங்கள் அறியப்படாத தொன்று. பல அரிய ஆன்மிக கட்டுரை ஆன்மிகம் இதழில் மட்டுமே காண முடியும். ஆன்மிகத்தை வாசகர்களுக்கு மேலும் மேலும் வழங்கி வரும் ஆன்மிகமே... நீ நீடூழி வாழ்க.
- K. விஜயா மாதேஸ்வரன்,தர்மபுரி - 1.

கர்நாடக மாநிலத்திலுள்ள பிரசித்தி பெற்ற குக்கே நாக சுப்ரமணியர் ஆலயம் குறித்த கட்டுரை, அந்த அரிய ஆலயம் குறித்த தகவல்களை முழுமையாக எடுத்துரைத்திருந்த அதேசமயம், தைப்பூசம் பக்திப் ஸ்பெஷலிற்கு கூடுதல் சிறப்பையும் சேர்த்திருந்தது.
- இரா.வளையாபதி, 51, தோட்டக்குறிச்சி.

‘‘வள்ளலாரின் முழு உருவப்படத்துடன்’’, ‘‘அவர் அருளிய தெய்வமணிமாலை பற்றிய விளக்கமும்,’’ ‘‘வடலூர் தைப்பூச ஜோதி தரிசனம்’’ நடைபெறப்போகும் நேரத்தில் வெளியிட்டிருப்பது வெகு பொருத்தம் மட்டுமல்ல, மகிழ்ச்சியும்கூட!
- வெ.லட்சுமி நாராயணன். வடலூர்-607303.

பாம்பு வடிவில் போற்றும் கர்நாடக குக்கே சுப்ரமண்யா கோயில் முதல் (புஷ்ப) நாக வாகனம் கொண்ட சித்தனை பாம்பாட்டி சித்தர் வழிபட்டதோடு, பாம்புபோல நெளிந்து, நெளிந்து செல்லும் நடையில் ஆதிசங்கரர் சுப்பிரமணிய புஜங்கம் பாடியதும், முருகனின் பரிவாரமாக நாகர் திகழ்வதுமென மயில் வாகனனுக்கும், பாம்புக்கும் உள்ள தொடர்பை விளக்கிய பக்கங்கள், என்போல நாக (ராகு, கேது) தோஷமுடையவர்களுக்கு வழிகாட்டியான பரிகாரங்கள்.
- மல்லிகா அன்பழன்,சென்னை- 600078.