வாலி



காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள்

வாலி. ராமாயணத்தில் உயர்ந்த பாத்திரம்; அதேநேரம், நெருடல்களும் பிரச்னைகளும் நிறைந்த பாத்திரம். மற்ற கதாபாத்திரங்களைப் பற்றித் தெரிகிறதோ,இல்லையோ?ராமர் வாலியை தாக்கியது சரியா  என்ற கேள்வி மட்டும், இன்றுவரை தொடர்கிறது. வாலியைப் பற்றிய அடிப்படை உண்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம் வாருங்கள்!

ராவணனின் கொடுமை தாங்காத தேவர்கள் முதலானவர்கள் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டார்கள். அப்போது மகாவிஷ்ணு, தான் தசரத மைந்தன் ராமராக அவதரித்து, ராவணனை சங்காரம் செய்வதாகச் சொன்னார். பிரம்மாதி தேவர்களையும் வானரங்களாக வந்து பிறக்கும்படியாகச் சொன்னார்.

வானுளோர் அனைவரும்
வானரங்களாக் கானினும் வரையினும்
கடிதடத்தினும்  சேனையோடு அவதரித்
திடுமின் சென்று என ஆனன
மலர்ந்தனன் அருளின் ஆழியான்
(கம்ப ராமாயணம்)

அதன்படி யார்யார் யார்யாராகப் பிறந்தார்கள் என்பதை, வால்மீகி - கம்பர் முதலானவர்கள் விரிவாகவே கூறுகிறார்கள். பிரம்மதேவருடைய அம்சமாக ஜாம்பவான்; இதேபோல தேவேந்திரன்- வாலி; சூரியன் - சுக்ரீவன்; அக்கினி பகவான் - நீலன்; பிரகஸ்பதி - தாரன்; குபேரன் - கந்தமாதனன்; விசுவகர்மா - நளன்; வருணபகவான் - சுஷேணன்; அஸ்வினி தேவர்கள் இருவர். மைந்தன் - துவிதன் எனும் இருவராக; இவ்வாறு தேவர்கள் பலரும் வானரங்களாகப் பிறந்தார்கள்.

தருவுடைக் கடவுள் வேந்தன் சாற்றுவான் எனது
கூறு மருவலர்க் கசனி யன்ன வாலியு
மகனு மென்ன இரவிமற் றெனது கூறங்
கவற்கிளை யவனென்றோத அரியுமற்
றெனது கூறு நீல னென்றறைந்திட்டானால்
(கம்ப ராமாயணம்)

ஜாம்பவான் முதலானவர்கள் இவ்வாறு வந்து பிறந்ததாக, அருணகிரிநாதரும் திருப்புகழில் கூறுகிறார்.
இரவி இந்த்ரன் வெற்றிக் குரங்கின்
அரச ரென்றும் ஒப்பற்ற உந்தி
இறைவன் எண்கினக் கர்த்தரென்றும்  நெடு
நீலன் எரிய தென்றும் ருத்ரற் சிறந்த
அனும னென்றும் ஒப்பற்ற அண்டர்
எவரு மிந்த வர்க்கத்தில் வந்து புனமேவ
(கருவடைந்து - திருப்புகழ்)

இவ்வளவு பேர்களும் வந்து பிறந்தது, ராவண சங்காரம் செய்யப்போகும் ராமருக்கு உதவுவதற்காகவே. இதை நன்கு மனதில் பதிய வைத்துக் கொள்ளவேண்டும். அவ்வாறு பதிய வைத்துக் கொண்டால்தான், வாலி வதம் பற்றிய உண்மை  புரியும். இந்திர அம்சமாகப் பிறந்த வாலி, ஆற்றல்கள் பலவும் மனத் திண்மையும் கொண்டவன். அவற்றில் ஒரு சில. பாற்கடல் கடைந்தவன்; தினந்தோறும் எட்டுத் திசைகளிலும் சென்று சிவபூஜை செய்பவன்; அவ்வாறு ஒருநாள், வாலி வழிபாடு செய்யச் சென்றிருந்த நேரத்தில், (திக்விஜய யாத்திரைக்காகப் புறப்பட்ட) ராவணன் வாலியுடன் போரிட நினைத்து, கிஷ்கிந்தை வந்தான். வந்த ராவணன், வாலி அங்கு இல்லை என்ற தகவலை அறிந்ததும், வாலி இருக்குமிடத்தைத் தேடிப் போனான். போர் செய்யும் நோக்கத்தோடு ராவணன் வருவதை அறிந்த வாலி, அப்படியே ராவணனை ஒரு சிறு பூச்சியைப்போல தூக்கி வந்து விட்டான்.

ஆம்! ராவணனின் வீரம் வாலியிடம் எடுபட வில்லை. அரண்மனை திரும்பிய வாலி, ராவணனைத் தன் பிள்ளையான அங்கதனின் தொட்டில்மேலே, ஒரு விளையாட்டுப் பொம்மையைப்போலத் தொங்க விட்டான் என்றும் சொல்வதுண்டு. பிறகு ராவணன் மன்னிப்பு கேட்க, வாலியும் ராவணனும் நட்பு பூண்டார்கள்; “உன் நண்பன் என் நண்பன்; உன் பகைவன் என் பகைவன்” எனும் அளவிற்கு நட்பு உருவானது. (ராவண சங்காரத்தில் ராமருக்கு உதவி செய்வதற்காக வந்த, இந்திர அம்சமான வாலி, அந்த ராவணனுடனேயே நட்பு பூண்டதைக் கவனிக்க வேண்டும்)

அடுத்தது, மாயாவி - துந்துபி எனும் இரு அரக்கர்களுக்கும் வாலிக்குமான தொடர்பு! மாயாவியும் துந்துபியும் மயனின் பிள்ளைகள்; மண்டோதரரின் சகோதரர்கள்; ராவணனுக்கு மைத்துனர் முறையானவர்கள். அந்த இருவரில் துந்துபி வாலியுடன் போர் செய்ய வந்தான். அவனைக் கொன்ற வாலி, துந்துபியின் உடலை ஒரு பந்தை வீசுவதைப்போல வீசினான். அது மதங்க முனிவரின் ஆசிரமத்தில் விழுந்தது. அதன்காரணமாக மதங்க ஆசிரம எல்லைக்குள் வந்தால், வாலி மரணமடைந்து விடுவான் எனும் சாபத்தையும் பெற்றான் வாலி.

துந்துபியை இவ்வாறு வதம் செய்த வாலியுடன், மாயாவியும் போர் செய்தான். மாயாவிக்கும் வாலிக்கும் இருபத்தெட்டு மாதங்கள் போர் நடந்தன. அந்த நேரத்தில்தான் சுக்ரீவனுக்கும் வாலிக்கும் பேதம் உண்டானது.வாலி மாயாவியுடன் போர் செய்தபோது, வாலியின் ஆற்றல் தாங்காமல் ஓடிய மாயாவி, ஒரு பெருங்குகையில் புகுந்தான். வாலியும் துரத்திக் கொண்டு ஓடினான்; வாலியைப் பின்தொடர்ந்து சுக்ரீவனும் வானர வீரர்களும் ஓடினார்கள். அவ்வளவு பேர்களையும் குகை வாயிலிலேயே தடுத்து நிறுத்திய வாலி, தான்மட்டும் குகையினுள்ளே போனான்.

சுக்ரீவன் முதலானோர் குகை வாசலிலேயே காத்திருந்தார்கள். குகையினுள்ளே பெரும் போர் நடப்பதற்கான கூச்சல்கள் கேட்டன. பிறகு, குகையின் உள்ளேயிருந்து ரத்தம் வரத் தொடங்கியது. குகை வாசலில் காத்துக் கிடந்த வானர வீரர்கள் பலரும், மாயாவிதான் வாலியைக் கொன்று விட்டான் எனத் தவறாக எண்ணி, குகைவாயிலைப் பெரும்பெரும் பாறைகளால் மூடினார்கள். மாயாவி வெளியே வந்தால், அவனால் பாதிப்பு வரக்கூடாதே என்ற எண்ணம் அவர்களுக்கு!

அது மட்டுமல்ல! தங்கள் அரசனான வாலி இறந்து போய்விட்டான் என எண்ணிய அவர்கள், கிஷ்கிந்தைக்கு அரசனாக சுக்ரீவனை, வற்புறுத்தி சிம்மாசனத்தில் அமர வைத்தார்கள். அந்த நேரத்தில்தான், மாயாவியைக் கொன்றுவிட்டு வாலி வெளியேறத் தொடங்கினான்; குகை வாயிலை நெருங்கிய வாலிக்கு வானர வீரர்கள் பெரும்பெரும் பாறைகளால் அடைத்து  வைத்திருந்ததைக் கண்டு திகைத்தார்கள்.
குகைவாசல் அடைக்கப்பட்டு தான் வெளியேறத் தடை உண்டானதைக் கண்டவுடன், வாலிக்குக் கோபம் மூண்டது; தடைகளை உதைத்து உடைத்துவிட்டுப் பெருங்கோபத்துடன், தன் அரண்மனை நோக்கிப் புறப்பட்டான். அங்கே சுக்ரீவனுக்கு அரச பதவி அளிக்கப்பட்டிருந்ததைக் கண்டதும், வாலியின் கோபம் எல்லைமீறிப் போனது. விளைவு?

சுக்ரீவனை ஒழித்துக் கட்ட முயன்றான், வாலி. உயிர் பிழைப்பதற்காக மதங்க முனிவரின் ஆசிரமத்தை நோக்கி ஓடினான் சுக்ரீவன். மதங்க ஆசிரம எல்லைக்குள் வந்தால் வாலி உயிர் துறப்பான் என்ற சாபத்தை அறிந்ததன் காரணமாக, வாலியால் வரமுடியாத மதங்க ஆசிரமத்தை நோக்கி ஓடினான், சுக்ரீவன். ராவண வதத்திற்காக, ராமருக்கு உதவுவதற்காக வந்த வாலி, ராவணனின் மைத்துனர்கள் இருவரைக் கொன்றது; ராவணனுடனேயே நட்பு கொண்டது ஆகியவற்றை நினைவில் கொள்ள வேண்டும். இதுவரையில் பார்த்தது மிகச்சுருக்கமான முற்பகுதி; முக்கியமான பிற்பகுதி தொடர்கிறது. இது ஓரளவுக்கு நன்றாகவே பிரபலமான பகுதி.

சீதையைக் கவர்ந்து கொண்டுபோன ராவணனைத் தேடி, ராமரும் லட்சுமணரும் வந்தார்கள். காட்டின் வழியே வந்த அவர்களை அனுமன் சந்திக்க, சுக்ரீவனுடன் சந்திப்பும் நட்பும் உண்டானது. அப்போது சுக்ரீவனுடைய வாட்டத்திற்கான காரணத்தை, ராமரிடம் விரிவாகவே கூறத் தொடங்கினார், ஆஞ்சநேயர். வாலியைப்பற்றிய தகவல்களையும் விரிவாகவே சொன்னார், அனுமன்.

நான்கு வேதங்களும் நான்கு ஞானக்கடல்களாய் கிடக்க; அந்தக் கடல்களுக்குக் கரை கிடப்பதைப் போலப் பாதுகாப்பாக இருக்கிறது பழமையான கயிலைமலை. மலைமேல் மலைபோலக் கயிலை மலைமீது, ஞானமலையாய்ச் சிவபெருமான் வீற்றிருக்கிறாராம். நல்லவர் - பொல்லாதவர் என்ற வேறுபாடு இல்லாமல், தன்னை நாடியவர்களுக்கெல்லாம், வரப் பிரசாதம் பொழிந்த வண்ணமாக இருக்கிறார், சிவபெருமான். வாலி அந்தச் சிவபெருமானை வழிபட்டு தத்தன் ஆற்றலை, எல்லையில்லாத ஆற்றலாகப் பெருக்கிக் கொண்டிருக்கிறான்.

நாலு வேதமாம் நவையில் ஆர்கலி
வேலி அன்னதொல் மலையின் மேலுளான்
சூலி தன்னருள் துறையின் முற்றினான்
வாலி என்றுளான் வரம்பில் ஆற்றலான்
(கம்ப ராமாயணம்)

எட்டுத்திக்குகளின் எல்லையிலும்போய் அஷ்ட மூர்த்தியாகிய சிவபெருமானை வழிபடுவான் வாலி. அவனிடம் வந்து மிகுந்த பலமுள்ளவர்கள் போர் செய்ய எதிர்த்தாலும், அவர்களின் உடல் பலம் - வரபலம் ஆகிய பலங்களில், பாதி பாகம் வாலிக்கு வந்து விடும்.

கிட்டுவார் பொரக் கிடைக்கின் அன்னவர்
பட்ட நல்வரம் பாகம் எய்துவான்  
எட்டு மாதிரத்து இறுதி நாளும் உற்று
அட்ட மூர்த்தி தாள் பணியும் ஆற்றலான்
(கம்ப ராமாயணம்)

இவ்வாறு சொல்லிக்கொண்டு வந்த அனுமன், மேலும் தொடர்ந்து - வாலி பாற்கடல் கடைந்தது; ராவணனைக் கட்டித் தூக்கிப் போனது; ராவணனுடன் நட்பு பூண்டது; துந்துபியைக் கொன்றது; மாயாவியைக் கொன்றது என பல விவரங்களையும் சொல்லிக் கொண்டு வந்தார். அதன்பின் நடந்த வாலி தன் சகோதரனான சுக்ரீவனை அடித்துத் துவைத்து விரட்டிய நிகழ்வையும் சொன்னார். தான் அடிபட்ட நிகழ்வைக் கேட்டபோது, அருகிலிருந்து  கேட்டுக் கொண்டிருந்த சுக்ரீவனுக்கு உடம்பு நடுங்கியது. அதைக் கவனித்த அனுமன் சொன்னதை அப்படியே பாடலாகப் பார்க்கலாம்.

அடல் கடந்த தோள்
அவனை அஞ்சி வெங்
குடல் கலங்கி எம்
குலமொடுங்க, முன்
கடல் கடைந்த வெங்
கர தலங்களால்
உடல் கடைந்தனன்
இவன் உலைந்தனன்
(கம்ப ராமாயணம்)

இப்பாடலை ஓருமுறை வாய்விட்டுச் சொல்லிப் பாருங்கள்! கோபத்துடன் வந்த வாலியின் தோளாற்றலும், அதைக்கணடு வானர வீரர்கள் குடல் கலங்கியதும், கடல் கடைந்த தன் கரங்களால் சுக்ரீவனைக் கடுமையாகத் தாக்கியதும், சுக்கிரீவன் நடுங்கியதும் அப்படியே படம் பிடித்தாற்போல், ஒரு நேர்முக வர்ணனையாகவே தெரியும்; கூடவே கம்பரின் தமிழாற்றலும் தெரியும்.

வாலி குத்தி அடித்துப் படாதபாடு படுத்த அடிபட்ட சுக்ரீவன் நிலைகுலைந்து உருக்குலைந்து போன தகவலைச் சற்று விரிவாகவே கூறிவந்த அனுமன், ‘உடல் கடைந்தனன் இவன் உலைந்தனன்’ என்று அந்தத் துயரத்தை விளங்கக் காட்டினார்.  “அப்படித் துயரப்பட்டவன் ‘இவன்’.ராமா! உங்களுடைய இன்னுயிர்த் துணைவனாக நீங்கள் அங்கீகரித்திருக்கும் ‘இவன்தான்” என்று அருகிலிருந்த சுக்ரீவனைச் சுட்டிக் காட்டினார், அனுமன். அதன்பின் வாலியின் ஆற்றலைப்பற்றி மேலும்  சில தகவல்களைக் கூறினார் அனுமன்.

பிறகென்ன? வளர்த்துவானேன்! உத்தமரான அனுமன் மூலம் நடந்ததையெல்லாம் விரிவாகவும் தெளிவாகவும் உணர்ந்து கொண்ட ராமர், வாலியை வதம் செய்வதாக சுக்ரீவனுக்கு வாக்கு தந்தார். அதன்பிறகு நடந்த ஒருசில நிகழ்வுகளுக்குப் பின், ராமரின் உத்தரவின் பேரில் சுக்ரீவன் கிஷ்கிந்தைக்குப் போய் வாலியைப் போருக்குக் கூவி அழை த்தான்.

சுக்ரீவனின் ஆர்ப்பாட்ட ஓசை கேட்ட வாலி, மலை போன்ற தோள்கள் குலுங்க, வீரச்சிரிப்பு சிரித்தான்; கண்கள் தீப்பொறி சிந்த, “வந்தேன்! வந்தேன்!” எனக் கர்ஜித்தான். அந்த வேளையில், வாலியின் மனைவியான தாரை வந்து தடுத்தாள். “தடுக்காதே!விடு!விடு! கடல்கடைந்து அமுதத்தை எடுத்ததைப்போல, போருக்கு அழைக்கும் அந்தச் சுக்ரீவனுடைய உயிரைக் குடித்து, சீக்கிரமாகத் திரும்புவேன்” என்றான். வாலி.போர்வெறி கொண்ட கணவனின் வார்த்தைகளைக் கேட்டு, தாரை கோபப்படவில்லை; மேலும், நிதானமாகப் பேசினாள்.

“வலியவந்து, அவன் போருக்கு அழைப்பதற்குக் காரணம் உண்டு. முன்பு இல்லாத வலிமையை, இப்போது புதிதாகப் பெற்று விட்டானா? அல்லது புதிதாக ஒரு பிறவியே எடுத்து வந்து விட்டானா?இரண்டும் இல்லையே!இருந்தாலும், மறு படியும் வந்து  போருக்கு அழைக்கிறான் என்றால்... ஒரு பெரும் துணை ஒன்று கிடைத்திருக்க வேண்டும்” என்றாள், தாரை.

பெற்றிலன் பிறந்திலன்; பெயர்த்தும்
போர் செயற்கு உற்றது நெடுந்துணை
உடைமையால் என்றாள்.
(கம்ப ராமாயணம்)

அதைக் கேட்ட வாலி, சற்று நிதானித்தான்; முதலில் இவளை சமாதானப்படுத்த வேண்டும் என நினைத்தான்;
“என்ன சொல்கிறாய் நீ? என் பேரைக் கேட்டால் யமன்கூட நிலைகுலைந்து போவான். அறிவில்லாதவர்கள் தான் என் னுடன் போர் செய்ய முனைவார்கள். யார் வந்தால் என்ன? அவர்களின் உடல் பலமும் வர பலமும், பாதி எனக்கு வந்து விடுமே!இது அறிந்தவர்,என்னுடன் பகைகொள்ள முடியுமா என்ன? கவலையை விடு நீ !” என்றான் வாலி. தான் அறிந்து வைத்திருந்த தகவலை; வாலி அறியாத தகவலைச் சொன்னாள் தாரை; “ராமன் சுக்ரீவனுக்கு உயிர்த் துணையாக வந்திருக்கிறான். வேடிக்கை பார்க்கவா? உங்களைக் கொல்வதற்காகவே வந்திருக்கிறான்” என்றாள் தாரை.

அதைக் கேட்டதும் வாலி; “அடிப்பாவி! நீ உன் பெண்மையால் பிழை செய்து விட்டாய்” என ஏசினான். “ராமன் உலகிற்குத் தர்ம வழி காட்டுகிறவன்” என்றுதான் வாலி கேள்விப்பட்டிருக்கிறான். அப்படிப்பட்ட புருஷோத்தமன் விஷயத்தில், தாரை அபசாரப்படுவதாகவே நினைத்தான், வாலி.அதன் காரணமாகவே தாரையை ஏசினான் வாலி. ராமர்மீது அவ்வளவு அபிமானமா வாலிக்கு? வாலியே சொல்லட்டும் !      
                                         

 - தொடரும்


படங்கள்:மதுஜெகதீஷ்