என்ன சொல்கிறது, என் ஜாதகம்?



தொழில் தொடங்க சரியான தருணம் இதுவே!

?24 வயதாகும் எனக்கு வயதான தாய் தந்தையர் உள்ளனர். என்னுடைய வருங்காலம் எப்படி உள்ளது? சொந்தமாக தொழில் செய்யலாமா
என்பதை கணித்துச் சொல்லவும்.
- சாயிராம், சென்னை- 35.
 
உங்கள் ஜாதகத்தை கணித்துப் பார்த்ததில் நீங்கள் சொந்தமாகத் தொழில் செய்யலாம் என்பது தெளிவாகிறது. பூரம் நட்சத்ரம், சிம்ம ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கிறீர்கள். தொழிலைப் பற்றிச் சொல்லும் ஜீவன ஸ்தானம் ஆகிய 10ம் வீட்டிற்கு  அதிபதி ஆகிய சந்திரன் லாப ஸ்தானம் ஆகிய 11ம் வீட்டில் சுக்கிரனின் சாரத்துடன் சஞ்சரிப்பது சிறப்பான அம்சம் ஆகும்.

சுயதொழில் செய்கின்ற அறிவைத் தரக் கூடிய புதன் ஜென்ம லக்னத்தில் அமர்ந்துள்ளார். லாப ஸ்தான அதிபதி சூரியன் நீசம் பெற்றிருந்தாலும் லக்னகேந்திரம் பெற்றுள்ளதால் சுயதொழில் செய்வதற்கான தகுதி நிச்சயம் உண்டு. தின்பண்டங்கள் சார்ந்த தொழில் செய்வது உத்தம பலனைத் தரும். அதிலும் ஸ்வீட் ஸ்டால், பேக்கரி, சாட் அயிட்டங்கள், ஸ்நாக்ஸ் முதலான வியாபாரம் ஆகியவை உங்களுக்குக் கை கொடுக்கும். அதிலும் தற்போது சந்திர தசையில் புதன் புக்தியின் காலம் துவங்குவதால் தொழில் தொடங்க சரியான தருணம் இதுவே ஆகும்.

27வது வயதிற்குள் தொழிலை ஸ்திரப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதால் காலதாமதம் செய்யாமல் உடனடியாக செயலில் இறங்குங்கள். வெற்றி நமதே என்ற குறிக்கோளுடன் கடுமையான உழைப்பினை வெளிப்படுத்துங்கள். உங்கள் உழைப்பிற்கான பலனை நிச்சயமாக அனுபவித்து உணர்வீர்கள். வயதான பெற்றோரை நல்ல முறையில் கவனித்துக் கொள்வீர்கள். சொந்தமாக தொழில் செய்வது மட்டுமல்ல, குறைந்தது இருபது பேரை வைத்து சம்பளம் தரும் முதலாளியாக உயர்வடைவீர்கள் என்பதையே உங்களது ஜாதகக் கணிதம் சொல்கிறது.

?என் மகளுக்கு திருமணம் நடைபெற்று நான்கு ஆண்டுகள் முடிந்துவிட்டன. இன்னும் மழலை பாக்கியம் ஏற்படவில்லை. நாங்கள் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளோம். இவர்களுக்கு எப்பொழுது சந்தானப்ராப்தி கிடைக்கும்?
- சாவித்திரி, குரோம்பேட்டை.

உங்கள் மகள் மற்றும் மருமகன் இருவரின் ஜாதகங்களிலும் புத்ர காரகன் குருவின் அனுக்ரஹம் உள்ளதால் நிச்சயமாக புத்திர பாக்கியம் என்பது உண்டு. அவர்கள் இருவரின் ஜாதகங்களையும் கணிதம் செய்து பார்த்ததில் இந்த வருடத்தின் இறுதிக்குள் உங்கள் மகள் கர்ப்பம் தரித்துவிடுவார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அஸ்வினி நட்சத்ரம், மேஷ ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகத்தில் புத்திரகாரகன் குரு பாக்ய ஸ்தானம் ஆகிய ஒன்பதாம் வீட்டில் ஆட்சி பலத்துடன் அமர்ந்துள்ளார்.

உடன் லக்னாதிபதி செவ்வாயும் இணைந்திருப்பது கூடுதல் பலமே. அதே நேரத்தில் புத்ர ஸ்தானம் ஆகிய ஐந்தாம் வீட்டின் அதிபதி சூரியன் மறைவு ஸ்தானம் ஆகிய ஆறாம் வீட்டில் புதனுடன் இணைந்திருப்பது குழந்தைப்பேற்றினை பெறுவதில் சிறு தடையை உண்டாக்குகிறது. அதே போல ஐந்தாம் வீட்டில் சனியின் மைந்தன் ஆகிய மாந்தியும் இணைந்திருப்பதால் கர்ப்பம் தரிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, மிதுன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மருமகனின் ஜாதகத்தில் ஐந்தாம் வீட்டில் ஐந்து கிரஹங்களின் சேர்க்கை பலமான நிலையே ஆகும்.

என்றாலும் ஐந்தாம் பாவக அதிபதி சுக்ரன் அஸ்தங்கத தோஷத்தினைப் பெறுவதாலும், புத்ர காரகன் குருவும் அதே அஸ்தங்கத தோஷத்திற்குள் வருவதாலும் பிள்ளைப்பேறு தாமதப்பட்டு வருகிறது. உங்கள் மகள் மற்றும் மருமகன் இருவரையும் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற்று அதன்படி நடந்து கொள்ளச் சொல்லுங்கள். மருத்துவர்களின் ஆலோசனையை தவறாமல் பின்பற்றி வருவதன் மூலம் இந்த வருடம் ஐப்பசி மாத வாக்கில் மகள் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது.

ஒவ்வொரு வியாழக்கிழமை நாளிலும் காலை ஆறு மணி முதல் ஏழு மணிக்குள்ளாக வரும் குரு ஹோரையில் வடக்கு முகமாக நெய்விளக்கு ஏற்றி வைத்து குருபகவானை மனதிற்குள் தியானித்து பிரார்த்தனை செய்து வரச் சொல்லுங்கள். வரும் வருடத்தில் மழலைச் செல்வம் மகளின் மடியில் தவழ்வதை கண்குளிரக் கண்டு ரசிப்பீர்கள் என்பதையே அவர்களின் இருவரின் ஜாதகங்களும் உணர்த்துகிறது.

?எனது நண்பனின் மகனுக்கு 32 வயதாகியும் இதுவரை திருமணம் ஆகவில்லை. பி.ஈ., படித்து ஐ.டி.கம்பெனியில் பணிபுரியும் இந்த பையன் திருமணம் ஆகாமல் மிகவும் சோர்ந்து போயிருக்கிறான். தாங்கள் இவரது ஜாதகத்தை கணித்து அவருக்கு திருமணம் நடக்கும் காலத்தை பரிந்துரை செய்யுங்கள்.
-    சுந்தரம் சடகோபன், பெங்களூரு.

நீங்கள் அனுப்பியிருக்கும் விவரங்களின் அடிப்படையில் பஞ்சாங்கத்தின் துணை கொண்டு அவரது ஜாதகத்தை கணித்துப் பார்த்ததில் ஏழாம் பாவகத்தில் அமர்ந்திருக்கும் கேதுவும், ஏழாம் பாவக அதிபதி புதனின் சாதகமற்ற சஞ்சார நிலையும் அவரது திருமணத்தை தடைசெய்து வருகிறது என்பதை அறிய முடிகிறது. பரணி நட்சத்ரம், மேஷ ராசி, மீன லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகப்படி தற்போது செவ்வாய் தசையில் சனி புக்தி என்பது நடந்து வருகிறது. திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் கேது மிகவும் வலிமையுடன் அமர்ந்திருக்கிறார்.

மேலும் ஏழாம் பாவக அதிபதி ஆகிய புதன் மறைவு ஸ்தானம் ஆகிய ஆறாம் பாவகத்தில் கேதுவின் சாரம் பெற்று அமர்ந்திருப்பதால் கேதுவின் வலிமை இன்னமும் கூடுகிறது. பொதுவாக கேது தான் அமர்ந்திருக்கும் இடத்தின் வலிமையைக் குறைக்கும் குணம் கொண்ட கிரஹம் என்பதால் ஏழாம் வீட்டின் வலிமை என்பது குறைகிறது. பி.ஈ., படித்து ஐ.டி.கம்பெனியில் பணிபுரியும் இவருக்கு நிகரான கல்வித்தகுதியுடன் பெண் அமைவது என்பது சற்று சிரமமே.

நிகரான தகுதியுடன் கூடிய பெண்ணாகத் தேடாமல் சாதாரண கல்வித்தகுதியுடன் பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து வைக்க முயற்சிக்கச் சொல்லுங்கள். வருகின்ற பெண் வேலை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. தற்காலம் நடைபெறும் சனி புக்தி என்பது திருமணத்திற்கான வாய்ப்பினை உருவாக்கித் தராது. ஜாதக பலத்தின்படி 01.03.2020ற்குப் பின் இவரது திருமணம் என்பது நடக்கும் என்பதை உங்கள் நண்பர் மகனின் ஜாதகம் உணர்த்துகிறது.

? அறுபது வயதாகும் எனக்கு இன்றுவரை நிரந்தர தொழிலோ, வருவாயோ அமையாததற்கு காரணமென்ன? பூர்வீக சொத்தும் கிட்டாமல் இனி என் எதிர்காலம் எப்படி அமையும்? இதற்கு மேலும் யோக பலனோ, நிம்மதியாக வாழ்க்கையோ அமைய வாய்ப்பு உள்ளதா?
- அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

நிம்மதி என்பது நாம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் முறையை வைத்தும் நமது அடிப்படை குணத்தினைக் கொண்டும் அமைவது ஆகும். அறுபது வயதாகும் நீங்கள் இனிமேல் எதையும் வாழ்வினில் எதிர்பார்க்காமல் இறை சிந்தனையோடு மட்டுமே வாழ வேண்டும் என்பதையே ஜோதிட சாஸ்திரம் மட்டுமல்லாது தர்ம சாஸ்திரமும் எடுத்துரைக்கும்.

அறுபது என்பது கால அளவு. அறுபது நொடி , ஒரு நிமிடம், அறுபது நிமிடம் ,ஒரு மணி நேரம், அறுபது நாழிகை  ஒரு நாள் என்பது போல அறுபது வருடம் என்பதும் வாழ்வினில் ஒரு சுழற்சியே. ஒரு சுழற்சி முடிந்து அடுத்த சுழற்சிக்குள் அடியெடுத்து வைக்கும்போது இது புனர்ஜென்மம் அதாவது இதே வாழ்வின் மற்றொரு பகுதி என்று சாஸ்திரம் சொல்கிறது. அதனால்தான் அறுபது வயது முடிந்தவர்களுக்கு சாந்தி செய்து அறுபதாம் கல்யாணம் என்ற நிகழ்வினை நடத்துவார்கள். முதல் அறுபது வயதில் இல்வாழ்க்கையின் சுகத்தினில் உழன்ற மனிதன் தனது அடுத்த சுழற்சியில் ஆன்மிக விசாரங்களை கையில் எடுத்துக்கொண்டு இறை சிந்தனையுடன் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு பொருளின் மீது பற்று இல்லாமல் இறைசிந்தனையுடன் வாழ்பவர்களை நோக்கி பொருள்வரவு என்பது தானாகவே அமைந்துவிடும். இதைத்தான் உங்களது ஜாதக நிலையும் தெளிவாகச் சொல்கிறது. பூரம் நட்சத்ரம், சிம்ம ராசி, கும்ப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்களது ஜாதக அமைப்பே சற்று வித்தியாசமானது. ஜென்ம லக்னத்தில் அமர்ந்திருக்கும் சுக்கிரன் மனதில் ஆசையைத் தூண்டுவார். அதே நேரத்தில் உடன் இணைந்திருக்கும் கேது ஆசையைத் துறந்து வாழ வேண்டும் என்ற ஞானத்தை போதிப்பார். இதே போன்று ராகு - சந்திரன், சூரியன் - சனி என்ற முரண்பாடுகள் நிறைந்த கிரஹங்களின் இணைவும் உங்கள் ஜாதகத்தில் காணப்படுகின்றன.

 இதுபோன்ற அமைப்புகள் உங்களை முழுமையாக ஆன்மிகப் பாதையிலும் செல்ல விடாமல், லௌகீகமான பாதையிலும் செல்லவிடாமல் மதில்மேல் பூனை போல தவிக்கவிட்டிருக்கிறது. காசு பணம் என்பதற்கு மிகுந்த முக்கியத்துவம் தராமல் உங்கள் முயற்சியின் மேல் முழுமையான நம்பிக்கை வைத்து செயல்படுங்கள். சிம்ம ராசியில் பிறந்திருக்கும் உங்களால் எதையும் சாதிக்க இயலும். நீங்கள் அடுத்தவர்களுக்குச் செய்யும் உதவியும் பணியும் வெற்றிகரமாக முடியும்.

அதே நேரத்தில் உங்களுக்கு என்ற தனிப்பட்ட  முறையில் எதிர்பார்ப்புடன் ஒரு பணியைச் செய்யும்போது அதில் தடையே உண்டாகும். இந்த உண்மையைப் புரிந்துகொண்டு எதிர்பார்ப்பு ஏதுமின்றி வாழக் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்விற்குத் தேவையான பொருள் என்பது தானாகத் தேடிவரும். ஆன்மிகப் பாதை மட்டுமே உங்களுடைய எதிர்கால வாழ்விற்கு உறுதுணையாக இருக்கும் என்பதையே உங்கள்  ஜாதகம் உணர்த்துகிறது.

? என் கணவர் மிகவும் கண்டிப்பானவர். அதே நேரத்தில் எந்தவிதமான கெட்ட பழக்கமும் இல்லாதவர். என் மகள் சி.ஏ. முடித்து ஆடிட்டராக நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறாள். தந்தையின் குணத்தினைக் கண்டு திருமணம் என்றால் சுதந்திரம் பறிபோய்விடும் என்று எண்ணுகிறாள். மேலும் உயர்படிப்பு, வெளிநாட்டு வேலை ஆர்வத்தினாலும் திருமணத்தை வெறுக்கிறாள். அவள் மனம் மாறுவாளா? அவளது திருமணம் எப்போது கைகூடி வரும்?
-    ஆனந்தி, சென்னை.

உங்கள் மகளின் ஜாதகத்தை பஞ்சாங்கத்தின் துணை கொண்டு துல்லியமாகக் கணித்துப் பார்த்ததில் லக்னாதிபதி குரு ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிப்பது நல்ல நிலையே. சுவாதி நட்சத்திரம், துலா ராசி, மீன லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதக பலத்தின் படி திருமணம் என்பது நிச்சயமாக நடக்கும். தற்காலம் சனி தசையில் சுக்கிர புக்தி என்பது நடந்து வருகிறது. சுக்கிரன் அவரது ஜாதகத்தில் ஜீவன ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் உத்யோகம் சார்ந்த விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தச் சொல்லுங்கள்.

அவரது விருப்பப்படியே வெளிநாட்டு வேலைக்கும் முயற்சிக்கலாம். வேலை பார்த்துக்கொண்டே உயர்கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது. தற்சமயம் நடந்து வரும் நேரத்தின்படி  இப்போது அவரை திருமணத்திற்கு வற்புறுத்தாதீர்கள். திருமணம் குறித்த தெளிவான புரிதல் அவருக்கு வரும்வரை காத்திருக்க வேண்டியது அவசியம். ஜாதக ரீதியில் காணும்போது 30வது வயதில் அவரது திருமணம் நடைபெறும் என்பதையும், மணமகன் குறித்த தேர்வு என்பது அவரது விருப்பத்தின் அடிப்படையில் அமையும் என்பதையும் அறிய முடிகிறது.

காதல் திருமணம் என்ற தவறான கற்பனைக்குள் செல்ல வேண்டாம். அவரது மனநிலையைப் புரிந்துகொண்ட மணமகனாக அமைவார் என்று எடுத்துக் கொள்ளலாம். உங்கள் மகளின் ஜாதகத்தைப் பொறுத்த வரை தற்போது திருமணத்திற்காக அவரைக் கட்டாயப்படுத்த வேண்டாம். உத்யோக ரீதியிலான முன்னற்றம் அவருக்கு காத்திருக்கிறது. நிதானித்துச் செய்யும் திருமணமே நல்லதொரு வாழ்வினை அவருக்கு அமைத்துத் தரும் என்பதையே அவரது ஜாதகம் நமக்கு உணர்த்துகிறது.

தம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண விரும்பும் வாசகர்கள் தங்களுடைய ஜாதக நகலுடன் தங்கள் பிரச்னையைத் தெளிவாக எழுதி அனுப்பலாம். கீழ்க்காணும் முகவரிக்கு அவ்வாறு அனுப்பி வைக்கும் உங்களுக்கு இப்போதே, வண்ணமயமான, வளமான வாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவிக்கிறோம்.

என்ன சொல்கிறது, என் ஜாதகம்?
ஆன்மிகம், தபால் பை எண். 2908,
மயிலாப்பூர், சென்னை - 600 004