சிவமாகி நின்ற சிவவாக்கியர்



சிவவாக்கியர் அவதார நன்னாள் - தை மகம் - 10-02-2020

சிவசிவா! அய்யோ ஆள்கொல்லி பூதம், ஈசனே என்னை காப்பாற்றுவாய்’’ எதையோ பார்த்து பயந்துப் போய் ஓடி வந்தார் அந்த மனிதர். நல்ல இளம் வயது  அவருக்கு. நெற்றி கொள்ளாத திருநீற்றின் பூச்சு. இடையில் இருக்க கட்டிய ஒற்றை வேஷ்டி. ஞான ஒளி வீசும் திருமுகம்.  கழுத்தில் சாரி சாரியாக ருத்ராக்ஷ  மாலை. இப்படி ஒரு தபசியின் லட்சணங்களுக்கு ஒரு குறையும் இல்லை. ஆனால் , எதைப் பார்த்து பயந்துப் போய் இந்த நடுக் காட்டில் ஓடிய படி இருக்கிறார்?  என்பதுதான் விளங்காமல் இருந்தது.

இவர் இப்படி பதறி ஓடி வருவதை,  காட்டில் இருந்த  நான்கு வேடர்கள் பார்த்து விட்டார்கள். தலை தெறிக்க ஓடிய அவரை நிறுத்தி, ஆசுவாசப் படுத்தினார்கள்.  அவர் ஒரு நிலைபட்டதும் ‘‘அய்யா எதைப் பார்த்து இப்படி பயந்து ஓடி வருகிறீர்கள்.?’’ என்று சற்று நேரத்திற்கு முன் நடு காட்டில் தலை தெறிக்க ஓடிய  அந்த நபரை அந்த நான்கு வேடர்கள் கேட்டார்கள். ‘‘அய்யா, என் பெயர் சிவவாக்கியன். மற்ற குழந்தைகள் எல்லாம் பிறக்கும் போது குவா குவா என்று அழும்.   நானோ சிவா சிவா என்று அழுதேன். ஆகவே எனக்கு என் பெற்றோர்கள் எனக்கு இந்தப் பெயர் வைத்தார்கள்.

இங்கு தான் அருகில் இருக்கும் வேடுவச் சேரியில் இருக்கிறேன். மூங்கிலை வெட்டி முறம் செய்து அதை விற்று என் பிழைப்பை ஓட்டுகிறேன். இன்றும் வழக்கம்  போல, இந்த காட்டிற்கு வந்து மூங்கிலை வெட்டினேன். ஆனால்,  நான் இன்று வெட்டிய மூங்கிலில்...... மூங்கிலில்’’ எதையோ சொல்ல வந்து மேலே சொல்ல  வார்த்தை வராமல் பரிதவித்தார். பிறகு ஒருவாறு தன்னை தேற்றிக் கொண்டு தொடர்ந்தார். ‘‘அய்யா! அந்தப் பக்கம் போகாதீர்கள்! அங்கே ஆட்கொல்லி பூதம்  இருக்கிறது. பார்த்து பக்குவமாக இருந்து கொள்ளுங்கள். நான் வருகிறேன்.’’ சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடந்தார் சிவவாக்கியர்.

வேடுவர்கள் ஒன்றும் புரியாமல் விழித்தார்கள். அந்த வேடுவர்கள் நால்வருள் ஒருவனுக்கு திடீரென்று மூளையில் ஒரு பொறி தட்டியது. ‘‘ஏன்டா… அது என்ன  பூதம்னு போய் பார்த்தால்தான் என்ன?’’  தனக்கு தோன்றியதை மற்ற மூவரிடம் சொன்னான். மற்ற மூவருக்கும் அவன் சொல்வது சரி என்றே தோன்றியது.  நால்வரும் சிவ வாக்கியர் சொன்ன இடத்துக்கு சென்றார்கள். அங்கு அவர்கள் கண்ட காட்சி அவர்களை வாயைப் பிளக்க வைத்தது. அங்கு ஒரு நன்கு தடிமனாக  வளர்ந்திருந்த மூங்கில் ஒன்று குறுக்கில் வெட்டப் பட்டிருந்தது. சிவ வாக்கியர்தான் வெட்டி இருக்க வேண்டும். வெட்டப் பட்ட அந்த மூங்கிலில் இருந்து தங்கம்,  தாரை தாரையாக கொட்டிக் கொண்டிருந்தது.

அத்தனையும் தங்கக் காசுகள். அடிக்கும் வெய்யிலில் அந்த காசுகள் கண்ணை பறிக்குமாறு மின்னியது. நால்வரும், மந்திரத்திற்கு கட்டுப் பட்டவர் போல, தனது  மேல்  துண்டை கீழே விரித்து அந்த தங்கத்தை மூட்டை கட்டினார்கள். அத்தனை தங்கத்தையும் மூட்டை கட்டியதால் நால்வரும் சோர்ந்து போனார்கள். பசி  வயிற்றைக் கிள்ளியது. அந்த நால்வரில் இருவர் மூட்டை கட்டிய தங்கத்திற்கு காவலாக இருக்க. மற்ற இருவர் சென்று உண்டுவிட்டு இருவருக்கும் உணவு  கொண்டுவருவதாக முடிவு செய்யப்பட்டது. உண்ணச் சென்ற இருவரும் வயிறார உண்டுவிட்டு, மற்ற இருவருக்கு கட்டு சோறு கட்டிக் கொண்டு வந்தார்கள்.

ஆனால் அந்த கட்டுச் சோற்றில் விஷத்தை கலந்திருந்தார்கள். அதற்குக் காரணம் இருக்கத் தான் செய்தது. மற்ற இருவரை தீர்த்துக் கட்டி விட்டால், நான்கு பேர்  பங்கு போட வேண்டிய செல்வத்தை இரண்டே பேர் பங்கு போட்டுக் கொள்ளலாம். இருவருக்கும் அதிக செல்வம் கிடைக்கும் என்ற பேராசை தான். வேறென்ன.  விஷ சாதத்தை கொண்டு வந்து மற்ற இருவருக்கு கொடுத்தார்கள். அவர்கள் அதை வாங்கி அருகில் வைத்து விட்டு சாதம் கொண்டு வந்த இருவரை  நோக்கினார்கள். ‘‘ அதிக தூரம் நீங்கள் நடந்து வந்ததால் உங்களுக்கு தாகமாக இருக்கும், அருகில் ஒரு கிணறு இருக்கிறது அதில் நீரை பருகி விட்டு  வாருங்கள்’’  என்று அக்கறையோடு சொன்னார்கள்.

உணவு கொண்டுவந்த இருவரும் அதை நம்பி கிணற்றுக்கு அருகில் சென்றார்கள். உணவு கொண்டு வந்த இருவரை தங்கத்துக்கு காவலாக இருந்தவர்கள்  மறைந்திருந்து கிணற்றுக்குள் தள்ளி விட்டார்கள். எல்லாம் பணத்தாசை படுத்தும்பாடு. கிணற்றில் விழுந்த இருவரும் சீக்கிரத்தில் மாண்டு போனார்கள்.  அவர்களை தள்ளி விட்டவர்கள், கிணற்றில் விழுந்தவர்கள் கொண்டுவந்த விஷ உணவை உண்டார்கள். அவர்களும் மடிந்தார்கள். மறுநாள் இந்த நால்வரின் பிண  ஊர்வலம் சிவவாக்கியரின் இல்லத்தின் வழியே சென்றது. அதைக் கண்ட அந்த மகானுக்கு நொடியில் நடந்த விஷயம் எல்லாம் புரிந்தது.

‘‘ சிவ சிவா! அந்த ஆள் கொல்லி பூதம் இப்படி நான்கு பேரை அநியாயமாக காவு வாங்கி விட்டதே’’ என்று புலம்பினார். அருகில் இருந்தவர்கள் ஒன்றும்  விளங்காமல் விழித்தார்கள்!. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான இந்த சிவவாக்கியரின் இந்த பக்குவ நிலை நம்மை மலைக்கச் செய்கிறது இல்லையா?  இப்படித்தான் ஒரு முறை கொங்கணர் என்ற ஒரு சித்தர் இவரை பார்க்க இவரது இல்லத்திற்கு வந்தார். கற்றாரை, கற்றாரே காமுறுவர் என்னும்மா போல  வந்ததும்  ‘‘ சிவ வாக்கியார் எங்கே? என்று தான் வீட்டில் இருந்த அவரது மனைவி இடம் கேட்டார்.

கொங்கண சித்தரை, கண்டதுமே அம்மையாருக்கு அவர் ஒரு சிறந்த தவ சீலர் என்பது விளங்கியது. சிவ வாக்கியரோ மூங்கில் முறத்தை விற்க சந்தைக்குச்  சென்றிருந்தார். இந்த விஷயத்தை கொங்கணரிடம் கூறினார். பிறகு ஒரு குறையும் இல்லாமல் அவரை உள்ளே அழைத்து, உபசரித்தார். அந்த அம்மையாரின் மதி  நுட்பம் கொங்கணரை வெகுவாக வியப்படையச் செய்தது. சிவவாக்கியரது குரு அவரிடம் ஒரு சுரைக்காயையும் ஒரு கைப்பிடி மண்ணையும் தந்தார். தந்துவிட்டு  ‘‘இவற்றை யார் உனக்கு சமைத்துத் தருகிறாளோ அவளையே நீ மணக்க வேண்டும்’’ என்று அன்பு கட்டளையும் விதித்தார்.

சிவ வாக்கியரின் குரு சொன்னது போல வெறும் மணலையும் சுரைக்காயையும் சமைத்துத் தந்த மாதர் குல மாணிக்கம் இந்த அம்மையார். அவரது அற்புத குணம்  கொங்கண சித்தரையும் கவர்ந்ததில் வியப்போன்றும் இல்லையே! இப்படிப் பட்ட ஒரு மங்கையர்கரசிக்கு,  நல்ல ஒரு பரிசு தர வேண்டும் என்று விரும்பினார்,  கொங்கண சித்தர். உடன் அந்த அம்மையாரை வீட்டில் இருக்கும் தட்டு முட்டு  சாமான் அனைத்தையும் கொண்டு வரச்சொன்னார். அம்மையார் அனைத்தையும்  கொண்டு வந்து அவர் முன்னே பக்தியோடு வைத்தார். அந்த சாமான்களை எல்லாம் பார்த்த கொங்கணர், கை நிறைய திருநீற்றை அள்ளி அதன் மேல் தூவினார்.
 
திருநீறு அந்த இரும்பு சாமான்ங்களில் பட்டதும், அதன் மீது பெரிதாக ஏதோ புகை கிளம்ப ஆரம்பித்தது. அதைக்கண்ட கொங்கணர் மெல்ல ஒரு இளநகை பூத்தார்.  பிறகு, ஏதோ மந்திரத்தை கண்களை மூடி ஆத்மார்த்தமாக ஜபித்தார். அவர் மந்திரத்தை ஜெபிக்க ஆரம்பித்தது தான் தாமதம் உடன் அனைத்து இரும்பும் தங்கமாக  மாறியது. அதைக் கண்ட கொங்கணர்  பூரிப்பு அடைந்தார். திரும்பி, அம்மையாரைப் பார்த்தார். அம்மையாரோ அங்கு எதுவுமே நடக்காதது போலவும்,  உணர்ச்சியற்ற மரம் போலவும், நிச்சலமாக நின்றிருந்தார். கவனித்த கொங்கணருக்கு ஆச்சரியம் தாளவில்லை.  

ஆஹா சிவ வாக்கியர் எத்தனை பெரிய பாக்கிய சாலி! பெரிய பெரிய ரிஷி முனிவர்களுக்கும் வராத பக்குவ நிலையை கை வரப் பெற்ற ஒரு நங்கையின்  கரத்தை பற்றி இருக்கிறாரே. கொங்கணரின் மனம் அவருக்கு மட்டும் கேட்கும் குரலில் சொன்னது. சற்றும் தாமதிக்காமல் நாடகத்தை அடுத்த கட்டத்திற்கு  எடுத்துச்செல்ல முடிவு செய்தார் கொங்கணர். ஆகவே, அம்மையாரை நோக்கி திரும்பினார் கொங்கணர். ‘‘அம்மணி! சிவ வாக்கியர் வந்ததும் அவரிடம் இந்த  தங்கத்தை அவரது,  உற்ற நண்பன் கொங்கணர் அவருக்கு பரிசாக தந்திருக்கிறார் என்று சொல்லி அவரிடம் கொடுத்து விடுங்கள் நான் வருகிறேன்’’ என்று  அந்த அம்மையாரை பார்த்துச் சொல்லிவிட்டு தனது தாடியை நீவி விட்டபடியே மர்மப் புன்னகை பூத்தார் கொங்கணர்.

‘‘அப்படியே செய்கிறேன் சுவாமி’’ என்றபடி கை குவித்தார் சிவ வாக்கியரின் மனைவி. கொங்கணர் மர்மப் புன்னகை புரிந்த படியே நகர்ந்தார். மேற்கில்  சூரியன் மறைந்தது. வேலையை முடித்து விட்டு இல்லம் திரும்பினார் சிவ வாக்கியர். நடு வீட்டில் கொங்கணர் எப்படி விட்டுச் சென்றாரோ அப்படியே இருந்தது  அத்தனை தங்கமும். அம்மையார் அதைப் பத்திரப் படுத்தவும் இல்லை, பாதுகாக்கவும் இல்லை. வீட்டில் நுழைந்த சிவ வாக்கியரின் கண்களில் முதலில் பட்டது  அந்த தங்கக் குவியல்தான். ‘‘யார் இதை தந்தது?’’ ஆச்சரியப்பட்ட படியே கேட்டார் சிவ வாக்கியர். அம்மையார் நடந்ததை அப்படியே சொன்னார்.

கேட்ட, சிவ வாக்கியருக்கு ஒருவேளை இவள்தான் கொங்கணரை தங்கம் கேட்டிருப்பாளோ? என்ற சந்தேகம் பிறந்தது. உடன் தனது வாயில் இருந்த வெற்றிலை  பாக்கை அருகில் இருந்த பாறாங் கல்லில் உமிழ்ந்து, கையில் இருந்த சொம்பு ஜலத்தை அதில் கொட்டினார். நொடியில் அந்தப் பெரிய பாறை தங்கப் பாறையாக  மாறி மின்னியது. இமைப்பினில் நிகழ்ந்து விட்ட அந்த அதியசத்தை கண்டு அம்மையார் ஒன்றுமே நடக்காததை போல நின்றிருந்தார். இதை கவனித்த சிவ  வாக்கியருக்கு ஓரளவு மனம் அமைதி பட்டாலும், முழு நிறைவு ஏற்படவில்லை. அம்மையாரை மேலும் சோதிக்க எண்ணினார்.

‘‘அம்மணி இந்த பாறையை சென்று அந்த பாழும் கிணற்றில் போட்டு விடு. பிறகு நொடி கூட தாமதிக்காமல் அதை மூடிவிடு’’ என்று கட்டளை இட்டுவிட்டு  திரும்பிப் பார்க்காமல் வீட்டிற்குள் சென்றார். அம்மையார் அவர் சொன்னதை வார்த்தை பிசகாமல் அப்படியே செய்து விட்டு, அசதியாக முந்தியால் முகத்தை  துடைத்த படியே இல்லத்தில் நுழைந்தார். அவரைக் கண்ட சிவ வாக்கியர் ஆச்சரியத்தின் விளிம்பிற்கே சென்றார். ‘‘உனக்கு இந்த தங்கத்தைக் கண்டு ஆசை  பிறக்க வில்லையா? தனது ஆச்சரியத்தை அடக்கிக் கொண்டு கேட்டார்.

‘‘சுவாமி! சிவா சிவா என்றும் ராமா ராமா என்றும் இறைவனின் நாமத்தை சொன்னால், வராதது எதுவும் இல்லை என்று தாங்கள் சொல்ல காதார கேட்டவள்  சுவாமி நான்’’ நமசிவாய அஞ்செழுத்து நல்கும் மேல் நிலைகளும் ’’ என்ற தங்களது பாடலை கேட்டு கேட்டு உயிர் வளர்ப்பவள் சுவாமி நான்.  அனைத்தையும் அருளும் அஞ்செழுத்து இருக்கும் போது, நமக்கென்ன கவலை?. இந்த அஞ்செழுத்தின் முன் இந்த தங்கமெல்லாம் அறை காசு பெறாது சுவாமி!  இந்த பாடத்தை உங்களோடு இருந்த இத்தனை நாளில் நான் கற்கவில்லை என்றால் நான் பெண்ணே இல்லை.

‘‘ அந்த அம்மையார் எதுவும் நடக்காதது போல பதில் சொல்லிவிட்டு தனது வேலையை கவனிக்க சென்றுவிட்டார். சிவ வாக்கியருக்கு நாம் இந்த உலகிற்கு  செய்த உபதேசத்தை அவர்கள் கேட்டார்களோ இல்லையோ, இவளாவது கேட்டாளே என்று பூரிப்படைந்தார். சிவ வாக்கியரின் வாழ்வின் சில துளிகளே நம்மை  மலைக்கச் செய்கிறதே, அப்போது அந்த மகான் எப்பேர்பட்ட ஞானியாக இருக்க வேண்டும். பதினெண் சித்தர்களுள் ஒருவரான இந்த மகான், தை திங்கள் மக  நட்சத்திரத்தில் பிறந்தவர். அவரை அவர் பிறந்த நன்னாளில் போற்றி மகிழ்வோம்.

ஜி.மகேஷ்