அஷ்டாவதானி கட்டிய கோயில்



ஆந்திர மாநிலத்தின் மேதக் மாவட்டத்தின் அனந்தசாகரில் அமைந்த கோயில் சரஸ்வதி தேவி நின்ற கோலத்தில் காட்சி தரும் ஒரே ஆலயமாகும்.  அஷ்டகலாநரசிம்ம ராமசர்மா என்னும் ‘அஷ்டாவதானி’யால் வாஸ்து சாஸ்திரப்படி கல்லினால் மட்டுமே வடிவமைத்து எழுப்பப்பட்ட கலைமகளின்  திருக்கோயில். தனது அஷ்டாவ தானம் வாஸ்து சாஸ்திரம், நிலத்தடி நீரறியும் திறன் ேஜாதிஷம் என்னும் கலைகளின் வெளிப்பாட்டினால் ஈட்டிய பொருளால்  மட்டுமே (நன்கொடையாக பைசா பெறாமல்) அவர் கட்டிய கோயில். கரீம் நகரிலிருந்து 40 கி.மீ. தொலைவிலுள்ளது இக்கோயில்.

தலியோல பூஜை

கோட்டயத்தை அடுத்த சங்கனாச்சேரியிலிருந்து 11 கி.மீ. தொலைவிலுள்ள பனச்சிக்காடு என்னுமிடத்தில் தக்ஷிணமூகாம்பிகை சரஸ்வதி ஆலயம் உள்ளது. இங்கு  நவராத்திரி உற்சவத்தின் போது ‘தலியோல பூஜை’ (பனை ஓலை - ஏடு பூஜை) மற்றும் விஜயதசமியன்று வித்யாரம்பம், மிகச் சிறப்பான பூஜைகள்  நடைபெறுகின்றன. கலைமகளுக்கு அபிஷேகம் செய்த நெய்யை உட்கொண்டால் அளவில்லாயி கல்விச் செல்வம் பெறுவது உறுதி என்பது நம்பிக்கை.

மூக்குத்தி கேட்ட துர்க்கை

மயிலாடுதுறை அருகிலுள்ள கிடாத்தலை மேடு என்ற ஊரில் உள்ள கோயிலில் துர்க்கை தனி சந்நதியில் வடக்கு நோக்கி கிடாத்தலையின் மீது நின்றபடி  அருள்புரிகிறாள். கைகளில் சக்கரம், பாணம், வில், கத்தி, கேடயம் ஏந்தியிருக்கிறாள். சக்ரபூர்ண மகாமேருவும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. துர்க்கைக்கு  சிலை வடித்த சிற்பி, தேவிக்கு மூக்குத்தி வடிக்கவில்லை. கனவில் வந்த துர்க்கை, தன் இடது நாசியில் துளையிடும் படிகட்டளை இட்டாள். அதன்படியே செய்து  தேவிக்கு மூக்குத்தி அணிவிக்கப்பட்டது.

படிப்பு வரமருளும் தொட்டிச்சி

பழனி கிரிவலப்பாதையில் உள்ள புலிப்பாணி ஆசிரமத்தில் உள்ள கிராம தேவதையான தொட்டிச்சி அம்மனின் சந்நதி உள்ளன. கல்வியில் மென்மேலும் சிறந்து  விளங்கவும். தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெறவும், மாணவர்கள் இங்கு வந்து தங்கள் எழுது பொருட்கள், ஹால் டிக்கெட் ஆகியவற்றை அம்மனின்  திருவடியில் வைத்துப் பிரார்த்தனை செய்கின்றனர்.

- S. ராமச்சந்திரன்