கூரத்தாழ்வான்



குருபக்திக்கு ஓர் எடுத்துக்காட்டாய் வாழ்ந்தவர் கூரத்தாழ்வான். ஸ்ரீ வைணவ சம்பிரதாய குரு பரம்பரை பெரிய பெருமாள், பிராட்டியுடன் ஆரம்பித்து வழிவழியாக  நாதமுனிகள், ஆளவந்தார், ராமானுஜர் என்று வளர்ந்து மணவாள மாமுனிகளுடன் நிறைவுபெறுகிறது மேற்படி குரு பரம்பரையில் பகவத் ராமானுஜரின் முதல்  சீடரான கூரத்தாழ்வாரைப் பற்றி சற்று அறிவோம்.

கூரத்தாழ்வான் காஞ்சிபுரத்துக்கு அருகில் அமைந்துள்ள கூரம் என்ற சிறு கிராமத்தில், கலியுகம் 4180 ஆண்டு (சௌம்ய வருடம்) தை மாதம் ஹஸ்த  நட்சத்திரத்தில் அவதரித்தார். இவருக்குப் பெற்றோர்கள் தகுந்த சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்ற இவருக்குத் திருமணம் செய்துவைக்கப் பெற்றோர் முயன்றபோது,  தான் பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிக்கப் போகிறேன் என்று மறுத்த இவர், காஞ்சிப் பேரருளாளனுக்கு ஆலவட்ட (விசிறி வீசுதல்) கைங்கரியம் செய்து  கொண்டிருந்த திருக்கச்சி நம்பிகளின் அபிமானத்தைப் பெற்று, வைணவத்தில் ஈடுபட்டு வாழ்ந்திருக்க, இவரது பெற்றோர்கள் கூரம் நாட்டுப் பதவியை இவரிடம்  ஒப்புவித்துவிட்டு, திருப்பதி சென்று வாழத் தொடங்கினர்.
     
அரசனாகிய இவர், நள்ளிரவில் வழக்கமாக நகர சோதனைக்குச் சென்றபோது, ஓர் நாள் ஓர் அந்தணர் வீட்டில் சிலர் உரக்க வாதாடிக் கொண்டிருப்பதைக் கண்டு,  அவ்வீட்டு அருகில் நின்று காதுகொடுத்துக் கேட்டு விஷயங்களை அறிந்தார். அதன்படி அவ்வீட்டில் வாழும் அந்தணர் குடும்பத்துக்கு ஒரு மகள் இருந்ததையும்,  அவள் மணமுடிக்கும் வயதில் இருப்பதையும், ஆனால் ஜோஸ்யர்களின் கருத்துப்படி அவளுக்குத் திருமணம் செய்து வைத்தால், மணமகனுக்கு உடன் மரணம்  சம்பவித்து இவளும் விதவை ஆவிவிடுவாள் என்பதால் துக்கமுற்ற பெற்றோர்கள் அவளை, ஊர்ப்பழிக்கு அஞ்சி,  கொன்றுவிட உத்தேசித்து அதற்கான நாளையும்  குறித்துள்ளனர் என்றறிந்தார் கூரத்தாழ்வான்.

மறுநாள் அந்தக் குடும்பத்தினரை தன் அவைக்கு அழைத்து அவர்களின் மகளைத் தானே மணமுடிக்கச் சித்தமாய் இருப்பதாகவும், இருந்தபோதிலும் தங்களுக்குள்  தாம்பத்ய உறவு இருக்காது என்றும் கூறி, அவர்களின் மகளான ‘ஆண்டாளை’ மணந்து, தன் பிரம்மச்சரியத்தைத் தொடர்ந்தார். ஆண்டாளும் ஆழ்வானை  மணந்து, அவரின் விருப்பப்படியே வாழ்க்கைத் துணைவியாய் இருந்தாள். அரசு பதவியும், உயர்ந்த செல்வமும் நிறைந்து விளங்கிய போதிலும், ஒரு துறவியாகவே  வாழ்ந்து தன் செல்வங்களை எல்லாம் ஏழை எளியோர்களுக்கு உதவி வந்தார். தினமும் இவரின் அரண்மனை வாயிற்கதவுகள், காஞ்சி வரதராஜப் பெருமானின்  ராக்கால பூஜை முடிந்தவுடன் சாத்தப்படும்.

அந்த ஓசை கேட்டவுடன் தான் இவரின் அரண்மனைக் கதவுகள் மூடப்படும். ஒருநாள் தம் அரண்மனை வாயிற்கதவுகள் மூடப்பட்ட பின், காஞ்சிப் பெருமானின்  திருக்கோயில் வாயிற்கதவுகள் சாத்தப்படும் ஓசை கேட்ட ஆழ்வார், தவறு நேர்ந்துவிட்டதே என மிகவும் வருந்தினார். அதே சமயம் காஞ்சியில் வரதராஜப்  பெருமானுக்கு கூரத்தில் கதவு சாத்தப்படும் ஓசை கேட்க, அவர் தம்மிடம் அளவளாவிக்கொண்டிருந்த திருக்கச்சி நம்பிகளிடம் , ‘‘அது என்ன ஓசை?’’ என்று  கேட்க, நம்பிகளும் கூரத்தாழ்வானின் அரண்மனை வாயிற்கதவுகள் மூடப்பட்ட சத்தம் (ஆழ்வாரின் வாயிற்கதவுகளில் வெங்கல மணிகள் கட்டப்பட்டிருக்கும்)  என்று கூறி, ஆழ்வாரைப் பற்றிக் கூறிட, வரதராஜப் பெருமானும் ஆழ்வானின் செல்வமோ நம்மை வியக்க வைத்தது என்று கேட்டார்.

இதை அறிந்த கூரத்தாழ்வான் தம் செல்வங்களை எல்லாம் அனைவருக்கும் வாரி வழங்கி, ஓர் நல்லாசிரியரை குருவாக ஏற்று, நல்ல முறையில்  வாழவேண்டுமென நினைத்து, தன் மனைவியுடன் காஞ்சி நோக்கி நடைப்பயணமாக வந்தார். இரவு ஆனபடியால் பயந்துபோன அவர் மனைவி, வழியில் கள்ளர்  பயம் உள்ளதோ என வினவ, அதற்கான காரணத்தைக் கேட்க ஆழ்வானிடம் ஆண்டாள் தன் மடியில் உமது உபயோகத்துக்காகத் ‘தங்க வட்டில்’ ஒன்றை  எடுத்து வந்துள்ளேன் என்று கூற, ஆழ்வானும் அந்த வட்டிலை வாங்கித் தூரத்தில் வீசியெறிந்து, மனைவியிடம், ‘மடியில் கனம் இருந்தால் தானே வழியில்  பயம்’ என்று கூறி, பயணத்தைத் தொடர்ந்து காஞ்சியை வந்தடைந்தார்.

பின், அங்கிருந்த ராமானுஜரைச் சரணடைந்தார். அவரும் இவரை ஏற்று, கூரத்து ஆழ்வான் என்று நாமகரணம் சூட்டி, தம் சீடராக ஏற்றுக்கொண்டார். அது முதல்  தான் இவர் கூரத்தாழ்வான் என்று அழைக்கப்படுகிறார். இதே காலத்தில் ஸ்ரீ முதலியாண்டான் என்பாரும் ராமானுஜரிடம் சரணடைந்து சீடரானார். குரு பக்தியில்  சிறந்து விளங்கிய இவர்களை, ராமானுஜர் தன் தண்டும் பவித்திரமும் என்று புகழ்வார். ஸ்ரீ ரங்கத்தில் இருந்தபோது, ஆழ்வானுக்கு ஒருநாள் உண்ண உணவேதும்  கிடைக்காததால், பசியால் களைப்பாய் இருந்தார்.

இருந்தாலும் அவர் மனைவி ஆண்டாள் கவலைப்பட்டு வருந்தி, ஸ்ரீ ரங்கனை மனமுருக வேண்டு, உன் தொண்டன் பசியோடு இருக்கும்போது நீர் அருள்  செய்யாமல் இருப்பது ஏன்? ’ என்று மனத்துள் நினைத்தாள். அந்தச் சமயம் அரங்கனுக்கு இரவு பூஜை மணி அடித்தது. ஆண்டாளின் வருத்தத்தை அறிந்த  அரங்கன், தன் அர்ச்சகர்கள் மூலம் தான் அமுது செய்த பிரசாதங்களை ஆழ்வானின் இல்லத்துக்கு அனுப்பிவைத்தார். பிரசாதங்களை எடுத்து வந்த  அர்ச்சகர்களைக் கண்டு ஆழ்வார் ஆண்டாளிடம், ‘நீ அரங்கனிடம் குறைபட்டு கொண்டாயா?’’ என்று கோபித்துக் கொண்டார்.

அரங்கனின் அருளால் ஆழ்வானுக்கு இரண்டு குமாரர்கள் அவதரித்தார்கள். அவர்களே வேதவியாச பட்டர் மற்றும் பராசர பட்டர் என்று பிற்காலத்தில் பிரபலமாக
விளங்கினார்கள். ஒரு சமயம் சோழ மன்னனான கிருமி கண்ட சோழனால், ராமானுஜர் உயிர் ஆபத்து ஏற்பட்டபோது, கூரத்தாழ்வானும் பெரிய நம்பிகளும் (இவர்  ராமானுஜரின் ஆசார்யர்களில் ஒருவர்) சோழ மன்னனிடம் சென்று, நாராயணனே தெய்வம் என்று வாதிட்டார்கள்.  ராமானுஜரைக் காக்க வேண்டி, அவரின்  காஷாயத்தையும் திரிதண்டத்தையும் தானே தரித்து மன்னன் முன்சென்ற கூரத்தாழ்வானை, ராமானுஜர் என்று நினைத்த மன்னன், அவரின் கண்களைப்  பிடுங்கிவிட உத்தரவிட்டான்.

ஆனால் கூரத்தாழ்வானோ, ‘உன்னைப் போன்ற பாவிகளைக் காணாமல் இருப்பதே மேல்’ என்று கூறி, தன் கண்களைத் தாமே பிடுங்கிக்கொண்டார். பிறகு  திருமாலிருஞ்சோலை சென்றடைந்து , அங்கே சில காலம் வசித்தார். முன்னதாக, கூரத்தாழ்வான் சொல்படி  ராமானுஜர், மேலக்கோட்டைக்குச் சென்று 12  ஆண்டுக் காலம் வசித்து, அங்கு திருநாராயணனுக்குக் கோயில் கட்டி வைணவத்தை வளர்த்தார். சுமார் 12 வருடங்கள் கழித்து, ராமானுஜரும் கூரத்தாழ்வானும்  காஞ்சியில் சந்தித்துக் கொண்டார்கள். கூரத்தாழ்வானின் நிலையறிந்த ராமானுஜர், காஞ்சி வரதராஜப் பெருமாள் அருளால் கூரத்தாழ்வானுக்குக் கண்கள்  கிடைக்கும்படி செய்தார்.

ஆழ்வானின் விருப்பப்படி அவருக்குத் தேவப்பெருமாளும், ஆசார்யனான ராமானுசரும் மட்டும் கண்களுக்குத் தெரியுமாறு அருளினார். கூரத்தாழ்வானுடைய உதவி  இல்லையேல், ராமானுஜரால் ஸ்ரீ பாஷ்யத்துக்கு அர்த்த விசேஷங்களை எழுதியிருக்கவே முடியாது. அதுபோல கூரத்தாழ்வானுக்கு அவர் வேண்டியபடி மோட்சம்  கிடைக்க திருவரங்கன் அருளியபோது, ஆழ்வான் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மோட்சம் உண்டு என்று அருளினார். இதையறிந்த ராமானுஜர் ஆழ்வானிடம்,  ‘ஏன் இப்படிச் செய்தீர்? எனக்கு முன்பாக நீர் பரமபதத்தை அடைந்துவிட்டால், நான் எப்படி வாழ்வது?’ என்று வருத்தப்பட்டார்.

ஆழ்வானோ, ‘அடியேன் முன்னதாகச் சென்று, தேவரீர் பரமபதம் எழுந்தருளும்போது எதிர்கொண்டு அழைக்கும் பாக்கியம் எனக்குக் கிடைக்கும் என்பதால் தான்’  என ராமானுஜரிடம் கூறி, அவரைச் சமாதானப்படுத்தினார். அதுபோலவே ஆழ்வார் சீக்கிரமே பரமபதத்தை அடைந்தார். ராமானுஜரோ, இந்த நில உலகில் 120  ஆண்டுகள் வாழ்ந்திருந்தார். புருஷ குணங்கள் எல்லாவற்றிலும் சிறந்து விளங்கியவராய், ஜீவகாருண்யம், ஆச்சார்ய பக்தி, வைராக்கியம் , பாண்டித்தியம்  பெற்றவராய் விளங்கிய கூரத்தாழ்வான், வைணவத்துக்காகத் தன் கண்களையே இழந்தவர். இவர் ‘பஞ்ச ஸ்தவம்’ என்ற நூலை அருளிச் செய்துள்ளார்.

இவருக்கு 2010ல் ஆயிரமாவது ஆண்டு கொண்டாடப்பட்டது. இவர் பெருமாளைப் பற்றியும், அவரின் சிறப்புகள் பற்றியும் உலகம் முழுவதும் எடுத்துரைக்கும்,  நல்ல பல நூல்களை எழுதினார். அவர் காட்டிய வழியில் நாமும் செல்வதே, அவருக்கு நாம் செய்யும் தொண்டாகும். இவரின் அவதாரத் தலமான கூரம்,  காஞ்சியிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இவரின் அவதாரப் பெருவிழா, கூரத்திலும் மற்றும் மற்றைய திருமால் தலங்களிலும் விசேஷமாக  பிரதி வருடம் கொண்டாடப்படுகிறது. அன்பர்கள் அனைவரும், அவசியம் இந்த வைபவ விழாக்களில் கலந்துகொண்டு குருவருளைப் பெறவேண்டும்.

எம்.என். ஸ்ரீநிவாசன்